வகுப்பு பாகுபாடுகள் கொண்ட சமூகமானது – மனித இனத்தின் இலக்கை அடைவதற்கான ஒரு தளர்வற்ற வர்க்கப் போராட்டத்தை நடத்தி, அதன் மூலம் தனது சொந்த வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை அடைவதற்கு தேவையான அய்ந்து அடிப்படைக் கூறுகள் குறித்து தொடர்ந்து நடைபெறும் விவாதங்களுக்கு அப்பால், மார்க்சிய சித்தாந்தம் வெற்றி பெறுவதற்கு அவசியத் தேவையாக மேலும் பல முக்கியக் கூறுகள் உள்ளன. அவை : உழைக்கும் வகுப்பினரின் இயக்கத்திற்கு யார் பாதுகாவலராக இருக்க முடியும்? அப்படியான ஒரு தலைமை உருவாவதற்கான ஓர் அடிப்படைத் தேவை என்ன? உற்பத்தி வகுப்பினருடைய இயக்கத்தின் நம்பிக்கையான தலைவராக, பாதுகாவலராக ஆளும் வர்க்கத்தின் உறுப்பினரால் ஆக முடியுமா? சுரண்டப்பட்ட பெரும்பான்மை மக்களான தீண்டத்தகாத, தீண்டத்தகுந்த சூத்திரர்களின் விடுதலைக்கான மாபெரும் இயக்கத்தினை வழிநடத்துபவராக – ஒரு பார்ப்பனர் பங்காற்ற முடியுமா? சுரண்டுபவர்களே சுரண்டப்படும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுபவராக இருக்க முடியுமா? தனது அறிக்கையில் கார்ல்மார்க்ஸ் மிக கவனமாக இக்கேள்விக்கான பதிலை பதிவு செய்துள்ளார்.
“வரலாற்றில் இதற்கு முன் இருந்த அனைத்து இயக்கங்களும், சிறுபான்மையினரின் இயக்கங்களாகவோ, சிறுபான்மை நலன் சார்ந்த இயக்கங்களாகவோ தான் இருந்திருக்கின்றன. உழைக்கும் மக்களின் இயக்கம் மட்டுமே மிகப் பெரும்பான்மையான மக்களின் நலனுக்காக – மிகப் பெரும்பான்மையான மக்களால் நடத்தப்படும் சுய ஓர்மையுள்ள சுதந்திரமான இயக்கமாகும். நமது தற்போதைய சமூகத்தின் அடி நிலையில் இருக்கக்கூடிய உழைக்கும் மக்கள், நிலவக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட சமூகத்தை ஒட்டுமொத்தமாக தூக்கி எறியாமல் ஒரு கலகத்தை ஏற்படுத்தவோ, தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளவே இயலாது''
‘பணிபுரியும் ஆண்களின் சங்க'த்தின் சட்டதிட்டங்களில் இதே நிலைப்பாட்டை மார்க்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார் : “உழைக்கும் மக்களை அதிகாரப்படுத்துதல் என்பது, உழைக்கும் மக்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். உழைக்கும் மக்களை அதிகாரப்படுத்துவதற்கான போராட்டம் என்பது – வகுப்பு சலுகைகளுக்கோ, சர்வாதிகாரத்திற்கோ ஆன போராட்டம் அல்ல. மாறாக, சம உரிமைகள், கடமைகள் மற்றும் அனைத்து வகையான வகுப்பு ஆட்சியையும் ஒழிப்பதற்கானது. அந்த மாபெரும் இலக்கை அடைவதற்கான அனைத்து முயற்சிகளும், ஒவ்வொரு நாட்டிலும் பணிப் பாகுபாடுகளால் பிளவுபட்டிருக்கக்கூடிய மக்களிடையே ஒற்றுமை இல்லாததாலும், பல்வேறு நாடுகளில் பரவியிருக்கக்கூடிய உழைக்கும் மக்களிடையே ஒரு சகோதரத்துவ பிணைப்பு இல்லாததாலும் இதுவரையிலும் தோல்வியுற்றே இருக்கின்றன.''
மார்க்சின் அறிவுரைகள் எவற்றிலும், உழைக்கும் வர்க்கத்தை சாராத ஒருவரால் உழைக்கும் வர்க்கத்தை அதிகாரப்படுத்த முடியும் என்ற கருத்துக்கு ஆதரவாகவோ, முன்னிறுத்தியோ எதுவும் இல்லை. டாக்டர் அம்பேத்கரும் மிக உறுதியாகக் கூறுகிறார்: “உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்களை மட்டுமே, அவ்வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கு நம்ப இயலும்.''
மேற்கண்ட முடிவுகளின் அடிப்படையில் கம்யூனிஸ்டு இயக்கத்தின் பட்டயத்தை, உழைக்கும் மக்களின் அதிகாரப்படுத்துதலுக்கான போராட்டத்தை, உழைக்கும் மக்களின் ரத்தத்தையும், உணவையும் சுரண்டி வாழும் வகுப்பினரின் கையில் எவ்வாறு ஒப்படைக்க முடிவெடுக்க முடியும்? ஒரு நோய்க்கான காரணமே அதற்கு மருந்தாக முடியாது. “இழந்த உரிமைகள்ஒருபோதும் அதைப் பறித்தவர்களின் பரிசாக மீள் பெறப்படுவதில்லை'' என்று கூறும் டாக்டர் அம்பேத்கர் மேலும், “அதைத் தளர்வற்ற ஒரு போராட்டத்தின் மூலம் மட்டுமே பெற முடியும்'' என்கிறார்.
வடவங்காளத்தில் ஆற்றிய தனது உரையில், மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் அன்றைய பொதுச் செயலாளரான அனில் பிஸ்வாஸ் இவ்வாறு அறிவிக்கிறார்: “ஒரு மனிதரால் மட்டுமே கம்யூனிஸ்டு ஆக முடியும்.'' இம்முடிவு மிகச்சரியானது. தற்பொழுது நம் முன் இருக்கும் கேள்வியெல்லாம் ஒரு பார்ப்பனரோ, ஒரு சூத்திரரோ – தான் ஒரு மனிதர் என்று உரிமை கொண்டாட முடியுமா? டாக்டர் அம்பேத்கர் தனது முதல் பொதுப் போராட்டத்தில், தங்களின் ‘மனித நிலை'யை நிலைநிறுத்த , ‘சவுதார் தலாப்' என்று பெயரிடப்பட்ட ஒரு பொதுக் குளத்திலிருந்து நீர் எடுக்க சென்றார். இந்த ஒரே நோக்கத்திற்காகவே அப்போராட்டம் நடைபெற்றது.
ஏனெனில், இந்திய தீண்டத்தகாதோர், பிற இந்துக்கள் நீர் எடுக்கக்கூடிய ஒரு பொதுக் குளத்திலிருந்து நீர் அருந்த அனுமதிக்கப்படவில்லை. அந்தக் குளத்திலிருந்து நீர் எடுத்து அருந்திய பிறகு அம்பேத்கர், தீண்டத்தகாதோரும் மனிதர்களே என்பதை நிரூபிப்பதற்காகவே தான் சவுதார் குளத்திற்கு வந்ததாக அறிவிக்கிறார். உண்மையில் பைபிளில் குறிப்பிடப்படும் கடவுளானவர், தான் இந்த உலகத்தை உருவாக்கத் தொடங்கிய ஆறாவது நாளில் தன்னை ஒத்த பிம்பத்தில் மனிதனை உருவாக்கினார் என குறிப்பிடப்படுகிறது. ஆனால், அதைப்போல இந்துக்களின் கடவுள் எந்த மனிதனையும் உருவாக்கவில்லை.
மனிதர்களுக்கு மாறாக அப்பெரும் படைப்பாளி, ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் ‘விராத் புருஷா' – சூத்திரர்கள், ராஜ்னியர்கள், பார்ப்பனர்கள், வைசியர்கள் போன்ற உயிரினங்களை தனது உடம்பின் பல பாகங்களிலிருந்து வெளிப்படுத்துகிறார். இந்து வேதங்களின் அடிப்படையில் நோக்கினால், எந்த இந்துவும் மனிதர் அல்லர். பார்ப்பனர்கள் பூமியில் வாழும் கடவுளர்கள். அவர்கள் எவ்வாறு ஒரு கம்யூனிஸ்டாகவோ, மார்க்சியத் தலைவராகவோ ஆக முடியும்?
“இருப்பவர்களின் மனமாற்றம் இல்லாதவர்களை சுரண்டலிலிருந்து விடுவிக்கும்'' என்ற கருத்தையும், “ஏகாதிபத்தியம் தானாகவே அதிகாரத்தைப் பரவலாக்கி, ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடும்'' என்ற கருத்தையும் முன்வைத்ததற்காக, தோழர் வி.அய். லெனினின் ஒப்புதலுடன் 1926 இல் கம்யூனிஸ்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து எம்.என்.ராய் நீக்கப்பட்டதாகப் பிரச்சாரம் செய்யப்படுவது, ஆர்வமூட்டும் ஒரு செய்தியாகும். பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியவர்களை ஒழிப்பதற்காக, எந்தப் போராட்டத்தையும் நடத்த தேவையில்லை. இதுதான் அவருடைய புதுமையான கோட்பாடு.
இக்கோட்பாட்டின் நீட்சியாகவே இன்று ‘வகுப்பு நீக்கம்' செய்துகொண்ட பார்ப்பன கம்யூனிஸ்டுகள், புனித – அதிஉயர்ந்த – ஆட்சியாளர்கள், ஒட்டுமொத்த ஆதிக்கம் மற்றும் சுரண்டலில் ஆட்சி என்ற தங்களின் தெய்வீக நிலையிலிருந்து தாமாகவே முன்வந்து தங்களை இறக்கிக் கொண்டு, காலப்போக்கில் தங்களுடைய அக்கறையின் காரணமாக சூத்திரர்களையும், தீண்டத்தகாதவர்களையும், பழங்குடியின உழைக்கும் மக்களையும் – அவர்கள் பிணைக்கப்பட்டிருக்கக்கூடிய ‘தெய்வீக அடிமைத்தளை'யிலிருந்து விடுவிப்பார்கள் என கூறப்படுகிறது.
திரு. ராயின் இக்கருத்தானது, கார்ல் மார்க்ஸ் அளித்த ‘வர்க்கப் பற்று' மற்றும் ‘வர்க்கப் போராட்டம்' ஆகிய இரு அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்தும் நேர் முரண்பட்டு நிற்கிறது. இத்தகைய கோட்பாடு என்பது, தனது நிலைப்பாட்டிற்கு ஆதரவாக எவ்வித வரலாற்றுப் பூர்வமான ஆதாரங்களையோ, தர்க்க ரீதியான செய்திகளையோ அளிக்கவில்லை. வர்க்கப் பற்று என்ற கூற்றை ஒருபோதும் புறந்தள்ள முடியாது என்ற கருத்தில் மார்க்ஸ் உறுதியாக நின்றார். இக்கூறானது, நிலையானதாகவும் ஒரு குறிப்பிட்ட வகுப்பின் உறுப்பினரின் மனதில் சாத்தியமான உளவியல் சிந்தனையாகவும் இருக்கிறது. ஆனால் எம்.என். ராய், காலனிய அதிகார வர்க்க அதிகாரத்தின் நல்லெண்ணத்தால் சாத்தியமாகக்கூடிய ‘காலனியத்தை நீக்குதல்' என்ற கருத்தியலை முன்வைத்தார்.
இது, உண்மையில் தங்களின் நிலையை காப்பாற்றிக் கொள்ள பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட ஓர் உலகளாவிய வாதமாக இருந்தது. சரத்சந்திர சட்டோ பாத்தியா என்ற புகழ் பெற்ற வங்காள எழுத்தாளர், “கீழ்சாதி மக்கள் சாதிய அமைப்பில் உள்ள தவறுகளுக்கு எதிராகப் போராட வேண்டியது இல்லை. பார்ப்பனர்கள் அப்படி ஏதேனும் தவறுகளை செய்திருந்தால், அதை தாங்களாகவே சரிசெய்து கொள்வார்கள்'' என்று வாதிடுகிறார். தங்களது திட்டத்தில் மாற்றத்தை உருவாக்க, அடி நிலையில் இருக்கக்கூடிய உழைக்கும் சாதிகளின் அனைத்து முயற்சிகளையும் பார்ப்பனர்கள் தடுத்து வந்துள்ளனர்.
ஒடுக்குமுறைக்கு எதிரான வெற்றியை சுவைக்கும் அனுபவத்தையோ, தங்களது அணிதிரண்ட போராட்டம் மற்றும் உச்சபட்ச தியாகத்தின் பலனை உணரவோ – பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படக் கூடாது. இந்த நடைமுறைக்கு எல்லைகள் இல்லை. தவறுகள் பார்ப்பனர்களால் திருத்தப்படும்போது, அவர்கள் அப்போதும் கொடுப்பவர்களாக, உயர்ந்த பாதுகாவலர்களாக, கண்ணுக்குத் தெரியாத முதலாளிகளாகவே இருப்பார்கள். உழைக்கும் வர்க்கம் போராட்டத்தை விட்டு விலகி நின்றால், வெற்றியின் அமுதத்தை அவர்கள் ஒருபோதும் ருசிக்க முடியாது. லட்சியம் அல்லது மனித இச்சை என்ற கோட்பாட்டில் இருந்து விலக்கு பெற்றவர்களாக இருப்பார்கள். பார்ப்பனியத்தை பொருத்தவரையில், உழைக்கும் வகுப்பு அல்லது சாதியிலிருந்து ஒரு நாயகன் வரக்கூடாது. கம்யூனிஸ்டு கட்சியின் அறிக்கையின் முதல் வாக்கியமானது இவ்வாறு காணப்படுகிறது : “நிலவக் கூடிய சமூகத்தின் வரலாறு என்பது, வர்க்கப் போராட்டத்தின் வரலாறாகும்.''
சமூகக் கலப்பினைப் பொருத்தவரையில், வர்க்க வேறுபாட்டின் தனித்துவமான குணங்களை டாக்டர் அம்பேத்கர் ஓர் அடிப்படை உண்மையாக உணர்ந்திருந்தார். அதன் விளைவாக, பல்வேறு கோணங்களில் நடைபெற்ற விவாதங்களுக்குப் பிறகு ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டம், ஒடுக்குபவர்களின் தலைமையில் நடைபெற முடியாது என்பதை அவரும் உணர்ந்திருந்தார். பார்ப்பனர்கள் கல்வியின் பலத்தால் சிறந்த கல்விமான்களாக இருந்தார்களே ஒழிய அறிவாளிகளாக இல்லை. ஏனெனில், வால்டேரைப் போன்ற ஒரு சிந்தனையாளரை அவர்கள் உருவாக்க இயலவில்லை என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார். தங்களது சொந்த அடையாளத்திற்காகவே சாதிய நலன்களை பார்ப்பனர்கள் பாதுகாத்து வந்தனர். பார்ப்பன குணங்களின் தனித்துவமானது, மார்க்ஸ், பெரியார் அல்லது அம்பேத்கர் ஆகியோரின் பெயரால் உறுதி கூறுவதால் மட்டுமே மாறிவிடாது.
இதனால் அம்பேத்கர், தலித் இயக்கத்தின் செயல்திட்டம் மற்றும் அடிப்படைக் கொள்கைகளின் காரணமாக எந்த பார்ப்பனியத் தலைவர் அல்லது பார்ப்பனியக் கட்சியுடனும் ஒருபோதும் கைகோத்ததில்லை. ஏனெனில், அவர் சார்ந்திருக்கக்கூடிய ஒரு சமூக அமைப்பின் ஒடுக்குமுறையாளர்களாக அவர்கள் இருந்தனர். “விடுதலை என்பதை ஒடுக்குபவர்கள் அல்லது ஆதிக்கவாதிகளின் கருணைமிகு பிச்சையாகப் பெற முடியாது. விடுதலைக்கான சுயஓர்மையுள்ள சுதந்திரமான ஒரு போராட்டத்தின் வழியாக கடினமாகப் பெற்ற பலனே விடுதலையாகும்'' என்று அவர் அறிவுறுத்தியிருக்கிறார். இதனால்தான் அந்த பெரும் தலைவர், “ஓர் அடிமையிடம் அவன் ஓர் அடிமை என்று சொல்லுங்கள்; அவன் புரட்சி செய்வான்'' என்று கற்றுக் கொடுத்தார்.
அடிமைகளே புரட்சி செய்ய வேண்டும். அடிமைகளுக்காக அடிமைகள் நடத்தும் புரட்சியே அடிமைகளை விடுவித்து, தங்களைத் தாங்களே ஆட்சி செய்ய உதவும். அடிமைகளின் படையே அடிமைகளின் விடுதலையின் போரில் சண்டையிட முடியும்.
டாக்டர் அம்பேத்கர் தேர்தல்களில் தனது தொடர்ந்த தோல்விகளை ஏற்றுக் கொண்டார். ஆனால், அவர் ஒருபோதும் இந்திய தேசிய காங்கிரசில் சேரவில்லை. அதிலும் இந்திய தேசிய காங்கிரஸ் மிகப் பெரும் விலை கொடுத்தேனும் டாக்டர் அம்பேத்கரை தனது முகாமில் இணைத்துக் கொள்ள பெரும் ஆர்வம் காட்டியது. பாதிக்கப்பட்டவர்களுக்காக பாதிக்கப்பட்டவர்களின் அமைப்பு ஒன்றினை உருவாக்கி, அதன் மூலம் ஆளும் வர்க்கத்தினால் அல்லது குறிப்பாக சொல்ல வேண்டும் எனில், பார்ப்பனிய சமூக அமைப்பினால் பாதிக்கப்பட்டவர்களின் அடிமைத் தளையை உடைக்க வேண்டும் என அவர் கனவு கண்டார்.
1942 ஆகஸ்ட் 23 அன்று அம்பேத்கர், “இந்தியாவின் பிற சமூகங்களுடன் சமமான நிலையில் ஒடுக்கப்பட்ட வகுப்பினரை வைக்க நான் விரும்புகிறேன். பிற சமூகங்களின் அடிமையாக இருக்க நான் விரும்பவில்லை. மாறாக, அரசின் பொறுப்புகளை உங்கள் கரங்களில் வைக்க விரும்புகிறேன். இந்த நாட்டின் அரசியல் அதிகாரத்தை இஸ்லாமியர்களுடன் சமமாக நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்'' என்று கூறிய அவர் மேலும், “அனைத்து சமூக முன்னேற்றங்களுக்கும் அரசியல் அதிகாரமே திறவுகோலாக இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் சோஷியலிஸ்டுகள் என்ற இரு எதிரெதிர் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஓர் அதிகார சமநிலையை முன் வைக்கக்கூடிய மூன்றாவது கட்சியாக தங்களை அணிதிரட்டி, இந்த அதிகாரத்தை கைப்பற்றுவதன் மூலம் மட்டுமே பட்டியல் சாதியினர் தங்கள் இலக்கை அடைய முடியும்'' என்று கூறுகிறார்.
பெரியார் கூறுவது போல, பொதுவுரிமை அற்ற நிலையில், உயர்தட்டு இந்திய மார்க்சியவாதிகள், மார்க்சியத்தை ஒரு போராட்ட முறையாக ஏற்றுக் கொள்வதன் மூலம், மார்க்சின் பெயரால், தங்களது நிலையை தவிர்க்க இயலாத ஒன்றாகவும், தங்களது சொந்த வகுப்பு அல்லது சாதியின் நலன்களை மிகச் சரியாக பாதுகாத்துக் கொண்டும் உள்ளனர். இது, வழக்கத்திலும், நடைமுறை சார்ந்த அனுபவங்களின் ஊடாகவும் அறியப்படுகிறது. ஆளும் வகுப்பினர் உண்மையில், தங்களுக்கு எதிர் நிற்பவர்கள் அவர்களின் விடுதலைக்காக தங்களை எதிர்த்து பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஆயுதங்களை, அவர்களிடமிருந்து பறித்துக் கொண்டுள்ளனர்.
இந்தியாவின் கம்யூனிஸ்டு கட்சிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா போன்ற மாநிலங்களில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். அந்த மாநிலங்களில் உள்ள உழைக்கும் மக்களின் நிலையானது, அடித்தட்டு வகுப்பினரின் வேதனைகளை கூறக்கூடிய மிக சோகமான கதையாக இருக்கிறது. தாங்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள மாநிலங்களின் நிர்வாகத்தில் உழைக்கும் மக்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் மூச்சு விடுவதற்கு ஏற்ற சூழலை பார்ப்பனிய மார்க்சிய தலைவர்கள் உருவாக்கியுள்ளனரா?
தலித் வெகுமக்கள், ‘மிகப்பெரும்பான்மையினர்', அடித்தட்டு மக்கள், அதிகாரப்பூர்வமற்ற சமூகத்தினர் (பொது சமூகத்தைச் சாராத மக்கள்) எனப்படுபவர்கள், இந்நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் தங்களுக்கு உரிய பங்கை பெற்றுள்ளனரா? உற்பத்தி முறையின் சுமையைத் தாங்கக்கூடிய இச்சமூகத்தின் அடித்தட்டு மக்கள் – சுரண்டல், அலட் சியம் மற்றும் வெறுப்பின் மூலம் எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள், தங்களது துயரங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு, உயர்த்தப்பட்டு, அதிகாரப்படுத்தப்பட்டுள்ளனரா? உயர்கல்வி, அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுதல், பொருளாதார அதிகாரப்படுத்துதல் ஆகியவற்றைப் பொருத்தவரையில் – பிற மாநிலங்களில் உள்ள தலித் வெகுமக்கள், இவர்களைவிட மிக நல்ல மற்றும் உயர்ந்த நிலையில் இல்லையா?
உயர் தட்டு வகுப்பினராக உள்ள உயர் தட்டு (மூவர்ண) சாதி கம்யூனிஸ்டுகள், தங்களுடைய சொந்த சாதிய நிலைகளை காக்கப் போராடவில்லையா? தலித் வெகுமக்களை அவர்கள் ஏமாற்றவில்லையா? உழைக்கும் மக்களின் சர்வாதிகாரத்தை, மிகப்பெரும்பான்மையினரின் ஆட்சியை, பெரும்பாலும் ஏழைகளாக இருப்பவர்களின் ஆட்சியை நிறுவவே – மார்க்ஸ் கம்யூனிசத்தை முன்மொழிந்தார். மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் கேரளாவில் ஏழைகள் அல்லது சமூகத்தின் பெரும்பான்மை மக்கள்தான் ஆள்கின்றனர் என்பது உண்மையா?
- எஸ்.கே. பிஸ்வாஸ்
தமிழில் : பூங்குழலி