கடலூர் மாவட்டம் - நெய்வேலி, மந்தாரக்குப்பம் அருகே உள்ள தாண்டவன்குப்பம் கிராமத்தில், பழங்குடியின குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குடும்பம் குடும்பமாக வசித்து வருகின்றனர்.

கூடை, முறம் முடைவது, பன்றி வளர்ப்பது, பன்றிகளை வாங்கி விற்பனை செய்வது போன்ற தொழில்களை இவர்கள் செய்து வருகிறார்கள். பன்றி வளர்ப்பு, விற்பனை மற்றும் கூடை முறம் முடைவதற்கான பிரம்புகளைத் தேடி சேகரிப்பதற்காக - பல்வேறு இடங்களுக்கும் அலைகின்ற நாடோடிகள் போன்ற வாழ்க்கை முறையை இவர்கள் கொண்டிருக்கிறார்கள்.

இக்குடும்பங்களில் ஒன்றுதான் ரவியின் குடும்பம். இவர், மனைவி கஸ்தூரி (30), குழந்தைகள் சந்திரலேகா (11), முகேஷ் (8), சக்தி (7), பெரியநாயகி (2) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். ஆகஸ்ட் 16, 2010 அன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரவியை கடலூர் மாவட்ட போலிசார் அடித்து, இழுத்துச் சென்றுள்ளனர். தடுத்த அவருடைய மனைவியை மிரட்டி, கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயின், பீரோவில் இருந்த 2 பவுன் நகை, கால் கொலுசு, பன்றி விற்று வைத்திருந்த 40 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்து, திருடிச் சென்றுள்ளனர். ரவியை எங்கு அழைத்துச் செல்கிறார்கள் என்பது குறித்தும் எந்தவித தகவலும் கூறாமல் சென்றுள்ளனர்.

மீண்டும் ஆகஸ்ட் 18 அன்று இரவும் அதே போலிசார் ரவி வீட்டுக்குச் சென்று, அவருடைய மனைவி கஸ்தூரியிடம் வெள்ளைத்தாளில் மிரட்டி கையெழுத்து வாங்கியுள்ளனர். அதன் பிறகுதான், காவலில் இருந்த ரவி தப்பியோடும்போது, மரத்தில் மோதி இறந்து போனதாகவும், உடலை கடலூர் அரசு மருத்துவமனையில் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.

ரவியின் மனைவி கஸ்தூரி மற்றும் அவருடைய உறவினர்கள், கடலூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். உறவினர்கள் எவரிடமும் ஒப்புதல் பெறாமல், சடலக்கூராய்வு செய்யப்பட்டிருந்த ரவியின் உடலைப் பெற்று, அவர்களது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் - உளுந்தூர்பேட்டை வட்டம், பரிந்தல் கிராமத்தில் அடக்கம் செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் உள்ள கூட்டுறவு வங்கியில் 23.5.2010 அன்று சுமார் 2.72 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, விழுப்புரம் சரக டி.அய்.ஜி., பல்வேறு காவலதிகாரிகள் அடங்கிய சிறப்பு தனிப் படை அமைத்துள்ளார். பண்ருட்டி காவல் நிலைய துணைக்காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார், நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் பாண்டியன், உதவி ஆய்வாளர் சந்திரசேகர், புதுப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் திருவேங்கடம் உள்ளிட்ட காவலதிகாரிகள் இக்குழுவில் இருந்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் ரவி, அவருடைய தம்பி ரமேஷ் மற்றும் அவருடைய உறவினர்கள் சுந்தரமூர்த்தி, ஜெயராமன், பாலா, கொளஞ்சி, விஜயகுமார், ராமலிங்கம், ஆனந்தஒளி உள்ளிட்டவர்களை கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் வைத்து போலிசார் விசாரித்துள்ளனர்.

நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் வைத்து ரவியை அடித்தும், ஊசியால் கை, கால்களில் குத்தியும், நகங்களைப் பிடுங்கி யும் போலிசார் துன்புறுத்தியுள்ளனர். இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் ரவி மரணமடைந்துள்ளார். இப்படு கொலையை மறைக்க - சிறப்பு தனிப்படை காவலதிகாரிகள் குழு கூடி, ஒரு திரைக்கதை உருவாக்கியுள்ளனர். அதன் படி, 18.8.09 அன்று மாலை 3.30 மணியளவில் போலிஸ் காவலில் இருந்து ரவி தப்பி ஓடியதாகவும், வேகமாக ஓடும்போது மரத்தில் மோதி, கீழே விழுந்து ரவி இறந்துவிட்டார் என்றும் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் (கு.எண். 351/2000 பிரிவு : 176(1அ) இணூ.க.இ) வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ரவியை போலிசார் துன்புறுத்தி கொலை செய்த நிகழ்வை நேரில் பார்த்த கண்ணுற்ற சாட்சிகளான, அப்போது காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ரவியின் தம்பி ரமேஷ் உள்ளிட்ட 8 பேரையும் - ஏற்கனவே குற்றவாளிகள் கண்டறியப்படாமல் இருந்த வழக்குகளில் இவர்களை சேர்த்து, பல்வேறு பொய் வழக்குகளில் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் 22.8.10 மற்றும் 28.8.10 ஆகிய இரண்டு நாட்களும் இரண்டு போலிசார், எலவானசூர்கோட்டை பஞ்சாயத்து தலைவி திலகவதியின் கணவர் சேனாதிபதி என்பவர் மூலம், ரவியின் அண்ணன் தண்டபாணியிடம் "2 லட்சம் ரூபாய் கொடுக்கிறோம். இப்பிரச்சினை யில் மேற்கொண்டு எதுவும் செய்ய வேண்டாம்' என்று பேரம் பேசியுள்ளனர். ரவியின் அண்ணன் தண்டபாணி பேரத் திற்கு பணியாததால், போலிசார் கடலூர் மத்திய சிறைக்குச் சென்று, மனு எதுவும் போடாமல், சட்டவிரோதமாக உள்ளே சென்று, பொய்வழக்குகளில் அடைக்கப்பட்டிருந்த ரவியின் தம்பி ரமேஷ் உள்ளிட்ட 8 பேரையும் சந்தித்து, வெளியில் யாரிடமும் எதுவும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளனர்.

இதனிடையே, கடலூர் மாவட்ட காவலர்களால் ரவி அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, நீதித்துறை நடுவரைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என ரவியின் மனைவி கஸ்தூரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். இதனையேற்று, மாவட்ட ஆட்சியர் காவல் நிலைய மரணம் குறித்து பண்ருட்டி நீதித்துறை நடுவரிடம் விசாரணை அறிக்கை கேட்டுள்ளார். இதனையடுத்து பண்ருட்டி நீதித்துறை நடுவர் ஈஸ்வரன் அவர்கள், மரணம் நடைபெற்ற காவல் நிலையம், அடக்கம் செய்யப்பட்ட பரிந்தல் கிராமம் ஆகிய இடங்களை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும், தனது விசாரணையில் சாட்சியமளிக்க ரவியின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு அழைப்பாணை அனுப்பினார்.

இதனடிப்படையில், நீதித்துறை நடுவரிடம் 25.08.10 அன்று சாட்சியமளிக்க இருந்த ரவியின் மனைவி கஸ்தூரிக்கு, 24.08.10 அன்று இரவு காடாம்புலியூர் காவல் நிலையத்திலிருந்து தொலைபேசிமூலம் - “நாளை விசாரணை கிடையாது. வேறு தேதிக்கு மாறிவிட்டது. வரவேண்டாம்’ என்று கூறி, அவர் விசாரணைக்குச் செல் வதைத் தடுக்க போலிசார் முயன்றுள்ளனர். ஆனால், மறுநாள் விசாரணையில் சாட்சியமளித்த கஸ்தூரி, நீதித்துறை நடுவரிடம் போலிசார் தன்னை விசாரணைக்கு போகாமல் தடுக்க முயல் வதையும் சேர்த்து கூறியுள்ளார். மேலும், சிறையில் அடைக்கப்பட்டவர்களிடமும் சாட்சியங்களைப் பெற்றுள்ளார் நீதித்துறை நடுவர். அனைவரும் கொலை நடந்த விதத்தையும், கொள்ளையில் ரவிக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதையும் கூறியுள்ளனர்.

விசாரணையை முடித்த நீதித்துறை நடுவரின் அறிக்கை, மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாவட்ட ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அறிக்கையையும் வெளியிடாமல் வைத்திருப்பதன் நோக்கம்தான் இதுவரை வெளிப்படவில்லை.

விசாரணைக்கு அழைத்துச் சென்று, அடித்து துன்புறுத்தி, ரவியை படுகொலை செய்ததைக் கண்டித்தும், கொலை செய்த கடலூர் மாவட்ட போலிசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாகவும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இதனையொட்டி 9.9.10 அன்று கடலூரில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டுள்ளது. இவற்றை ஆல்பேட்டை பாபு (இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மய்யம்), ஜெயராமன் (மக்கள் கண்காணிப்பகம்) ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து நம்மிடையே பேசிய பாபு, “நீதித்துறை நடுவரின் விசாரணை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். சி.பி.சி.அய்.டி. விசாரணை கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். அதற்கு முன்பு, ரவியை அடித்துக் கொலை செய்த பண்ருட்டி காவல் துணைக் காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார், நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் பாண்டியன், உதவி ஆய்வாளர் சந்திரசேகர், புதுப்பேட்டை உதவி ஆய்வாளர் திருவேங்கடம் உள்ளிட்ட 10 போலிசார் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

“இந்தப் போலிசார் தங்கள் பதவியைப் பயன்படுத்தி, சாட்சியங்களை அழிப்பதும், கண்ணுற்ற சாட்சிகளை மிரட்டுவதுமான செயல்களை செய்து வருகிறார்கள். இவர்களின் இத்தகைய செயல்களைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு, மேற்படி போலிசார் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டு, உடனடியாக இவர்களைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். கொலை சம்பவத்தின் கண்ணுற்ற சாட்சிகளை பொய் வழக்கில் சிறையிலடைத்து, உண்மைகள் வெளியில் வருவதைத் தடுக்க முயலும் போலிசார் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.

“எட்டு சாட்சிகள் மீதான பொய் வழக்கினை அரசு திரும்பப் பெற்று, பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதற்குரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். கொலை செய்த போலிசாரை அடையாளம் காணும் பொருட்டு, சிறையிலிருக்கும் கண்ணுற்ற சாட்சிகளைக் கொண்டு உடனடியாக அடையாள அணிவகுப்பு நடத்தப்பட வேண்டும். இன்றுவரை தொடர்ந்து போலிசார் பெட்டியில் பணம் எடுத்துக் கொண்டு, வேறு வேறு நபர்கள் மூலம் ரவியின் மனைவி உள்ளிட்ட உறவினர்களிடம் கொலையைப் பெரிதாக்காமல் இருக்க பேரம் பேசி மிரட்டி, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்’ என்றார்.

இவரைத் தொடர்ந்து பேசிய ஜெயராமன் நம்மிடம், “ஒருவரைக் கைது செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என டி.கே. பாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ள 11 வழிகாட்டுதல்களில் ஒன்றைக்கூட போலிசார் கடைப்பிடிக்கவில்லை. இதற்கே இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேற்கண்ட போலிசாரில் தற்போது நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளராக உள்ள பாண்டியன் என்பவர், கடந்த 12 ஆண்டுகளாக கடலூர் மற்றும் பண்ருட்டி உட்கோட்ட எல்லையிலேயே பணியாற்றிக் கொண்டு, மிகுந்த ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இவர், தமிழக முதல்வருக்கு நெருக்கமாக உள்ள கவிஞர் வைரமுத்துவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

“இதை சாதகமாகப் பயன்படுத்தி, பல்வேறு முறைகேடான சம்பவங்களில் பாண்டியன் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2 மாதத்திற்கு முன்பு கடலூர் நீதிமன்றம், பாண்டியனின் முறைகேடான செயலைக் கண்டித்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு ஆய்வாளர் பாண்டியனை, கடலூர் மாவட்டத்திலிருந்து உடனடியாக மாற்ற வேண்டும். பொய்யான தகவலை அளித்து, ரவியின் மனைவி கஸ்தூரியை, நீதித்துறை நடுவர் விசாரணையில் பங்கேற்பதைத் தடுக்க முயன்ற காடாம்புலியூர் போலிசார் மீது உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

“திருட்டு வழக்குகளில் தமிழகப் போலிசார் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறியாமல், கேட்பதற்கு ஆதரவில்லாத, எண்ணிக்கையில் மிகவும் குறைவாக உள்ள பழங்குடியினரான இருளர், குறவர் உள்ளிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை குற்றவாளியாகக் கருதி விசாரணைக்கு அழைத்துச் சென்று துன்புறுத்தி, மேலிடத்தை சமாதானம் செய்வதற்காக, தொடர்பில்லாத பொய் வழக்குகளில் சிறையில் அடைக்கின்றனர். போலிசாரின் இதுபோன்ற முறையற்ற செயல்களை, அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். குறிப்பிட்ட ஒரு சமூகத்தையே குற்றவாளியாகக் கருதி நடத்துகின்ற போலிசாரின் போக்கு, மிகமோசமான மனித உரிமை மீறலாகும்.

“கொலை செய்யப்பட்ட ரவியின் குடும்பத்திற்கு அரசு உடனடியாக 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும். ஆதரவற்ற நிலையில் உள்ள ரவியின் மனைவி மற்றும் 4 குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ரவியின் மனைவி கஸ்தூரிக்கு அவரது திறமைக்கேற்ப அரசு வேலை ஒன்றை வழங்க வேண்டும்’ என்றார்.

கடந்த "தலித் முரசு' இதழில் "மனித உரிமையாளர்களைக் குறிவைக்கும் காவல்துறை' என்ற கட்டுரையில் கூறியுள்ளதுபோல், காவல் துறை தொடங்கப்பட்டதன் நோக்கமே இன்று முற்றிலுமாக மாறிவிட்டது என்பதைத்தான் ரவியின் மரணம் உணர்த்துகிறது. இன்று காவல் துறை எந்த வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றாமல், அரசை காப்பாற்றுகின்ற ஒரு நிறுவனமாகவே செயல்படுகிறது. இந்நிலை தொடருமானால், காவல் துறையின் கட்டுப்பாட்டில் அரசாங்கம் சிக்கிக்கொள்வதில்தான் அது முடியும். சட்டத்தின் ஆட்சிக்கு பதில் போலிசாரின் சர்வாதிகார ஆட்சியாக மாறும் ஆபத்தை, ஜனநாயக நாடு சந்திக்க வேண்டியிருக்கும். எச்சரிக்கை!

Pin It