மாற்றுப்பாதை - பாரதி நிவேதன் எழுத்து குறித்து

barathi_nivethanநவீன எழுத்தின் ஓர்மையை தன் எழுத்தில் வருவித்து, அதன் மூலம் புதிய ஆக்கவெளியினை உருவாக்கும் தன்மை பாரதி நிவேதனுடையது. பாரதி நிவேதன் தன்னுடைய கவிதைகளில் வைத்திருக்கும் பூடகமும் உட்பொருளும் - சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட "இறைச்சி', "உள்ளுறை', "உவமம்' ஆகியவற்றிற்கு ஒத்த பண்புடையவை. பாரதி நிவேதனுடைய கவிதைகளும் அவருடைய ஆக்கத் திறனும் பலராலும் பாராட்டப்படுகிற ஒன்று. அவருடைய இரண்டு தொகுப்புகள் "ஏவாளின் அறிக்கை', "வேறுகாலம் மறுத்து தாயம் போடுபவர்கள்' ஆகியன நவீன இலக்கிய வட்டத்தில் அறியப்பட்டவை.

பாரதி நிவேதன் குழந்தைகளுக்கான தனித்த உலகொன்றை உருக்கொள்ள வைத்து, அவர்களின் வாழ்வை அதில் பதியமிடுகிறார். குழந்தைகளின் மீதான அவருடைய பார்வையும், அதனை கவிதைக்காகப் பயன்படுத்தும் உத்தியும் மிகவும் சிறப்பானவை. அதிக பூடகத்தன்மையுடன் அவருடைய கவிதைகள் இருந்தாலும், அதனால் வெளிப்படும் கவித்துவமும் கவிதை உணர்வும் நம்மை மேலும் வாசிக்கத் தூண்டுகின்றன. செடிகள் அசைகின்றன / மேகங்கள் மடியிறக்கும் கதிர்வீச்சை / தூசுகளைப் பரப்பிய காற்று மன்றாடியிருக்கும் / என்னால் அந்தக் குழந்தையின் சிரிப்புக்கு / ஏதும் தர இயலவில்லை / என்று கூறும்போதும்,

கட்டுமரத் தடுப்புகளின் பின்னால் / ஒளிந்து பார்க்கும்போது / குழந்தைகள் விற்பனையாளர்களாக இருப்பதும் / குனிந்து நிமிரும் போதும் / குழந்தைகளின் எலும்புகளைக் கண்டு / கடல் திகைப்பதுமாக என்னும்போதும், பாரதி நிவேதனின் குழந்தைகள் குறித்த பார்வையை நம்மால் உணர முடிகிறது! சமச்சீர் கல்வி குறித்தும், அனைவருக்கும் கல்வி திட்டம்குறித்தும் பேசப்படும் இந்நாட்களில், இன்னும் வீச்சாக இருக்கும் குழந்தைத் தொழிலாளர் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பது ஒரு கேள்விக்குறியாகவேதான் நிற்கிறது.

ஓர் ஆக்கம் காலம் கடந்து நிற்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், அது அந்தக் காலத்தின் சிக்கலைப் பேசி இருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியமானது. பாரதி நிவேதனின் பல கவிதைகள், காலம் கடந்து, காலத்தைப் பேசியும் நிற்கக் கூடியன. பாரதி நிவேதனின் இன்னொரு சிறப்பு அவருடைய மொழியாளுமை. கவிதையில் மொழியை அழகியலோடு பயன்படுத்தும்போது, கவிதை அதற்கான அடைவுகளை அடைந்து விடுகிறது. அவருடைய கல்விப் பின்புலம் அவருடைய மொழியாளுமைக்கு பக்கபலமாக இருக்கிறது. செவ்வியல் மொழியை அவர் பயன்படுத்தும் விதம் நவீன கவிதைக் கட்டுமானத்தில் புதிய வெளிகளைத் திறக்கிறது.

சுனை மழை போற்றுதும் / சுயமுள்ள காற்று போற்றுதும் / பருவமெல்லும் பச்சையம் போற்றுதும் / அனைத்துக் கவியும் நேசம் போற்றுதும் என்று அவர் எழுதும்போது, இயற்கை மீதான அவருடைய அன்பும் மொழியும் புலனாகும். வண்டலாக ஓடத்துவங்கும் பகற்பாலை / தரைமட்டமாக்குகின்றன உறக்கத்தின் தாதுவளத்தை எனும் அவரது மொழியாக்கம் - அழகியலின் காரணங்களையும், தலித் கவிதையை அடுத்த கட்டத்திற்கும் எடுத்துச் செல்கின்றன. தலித் எழுத்து குறித்த அவருடைய பதில் : தலித் கவிதை என்பது வானம்பாடிகளின் எச்சமாக இருக்கிறது. அவர்களின் மொழியை எடுத்துக் கொண்டு நம் வலியை நாம் கூறுகிறோம். அதனால் அரசியல் இயக்க ரீதியான உந்துதல் எற்படலாம். ஆனால், இலக்கிய அரசியலை உருவாக்க முடியாது. ஆகவே "எழுத்து', "ககடதபற' போன்ற இதழ்களின் மொழியைப் போல, தலித் எழுத்தும் அழகியலுடையதாக இருக்க வேண்டும்.

“அதற்கான புதிய உரையாடலை நாம் தொடங்க வேண்டும். மய்யத்தை நோக்கிய தலித் அரசியலை உருவாக்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில், இன்று அனைத்து சாதிகளும் இத்தகைய ஓர் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளும் போக்கினை தற்பொழுது பார்க்க முடிகிறது. தலித்துகள் இடஒதுக்கீடு கேட்ட சூழல் போய் இன்று அனைவரும் இடஒதுக்கீடு கேட்கின்றனர். இதனால் தலித்துகளுக்கு மட்டுமான மய்யத்தை கட்டமைக்க முடியாது. “ஆனால் அதே நேரத்தில், வட்டார வழக்கு என்று சொல்லி இலக்கிய பிதையின் இலக்கியத் தன்மையை நாம் மேலும் இழக்க முடியாது. எனவே, மய்யத்தை நோக்கிய புதிய வகைமையை உருவாக்க வேண்டும். அதற்கான உரையாடலை ஏற்படுத்தும் தளத்தை உருவாக்க வேண்டும்.''

barathi_nivethan_bookமாரிமுத்துவை விட்டு விடுங்கள் / தாண்ட முடியாத முனைகள் / எழுத விடாது / பேச விடாது / பேலவிடாது / தேங்கி நிலைக்குத்தும் அவன் மெதுவான பெருமூச்சை / கலைக்காத மின்விசிறியால் / வருடப்படுதலற்று கனத்த பிடரியை / குழல் விளக்கில் ஊற்றி / தெருமுனையில் உடைத்துவிட்ட மாரிமுத்துவை / விட்டுவிடுங்கள் என்பது "மின்விசிறி' என்னும் தலைப்பிலான அவருடைய கவிதை. நிவேதன் கூறுவதைப் போல, தலித் கவிதை என்பது ஒற்றைச் சுவையுடையதாக இருக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் ஏதோ ஒரு சுவையைத் தரக்கூடியதாக இருந்தால் போதும். அந்தச் சுவையை வாசிப்பவரிடம் கொடுத்து அது மறைந்தால் போதும். இதுதான் பிரச்சினை என்று நான் சொல்லி, என்னுடைய ஆசிரியன் என்னும் அதிகாரத்திலிருந்து விலகிக் கொள்கிறேன். அதன் மேல் செயலாற்ற வேண்டியது வாசிப்போரின் கடமை.

ஆக, இக்கவிதையில் மாரிமுத்துவின் வலி நம்மீது கடத்தப்படுகிறது. ஆசிரியன் பிரதியின் அதிகாரி என்னும் தளத்திலிருந்து இறங்கி வந்துவிடுகிறார். நமக்குக் கிடைப்பது, அவலங்கள் நிறைந்த மாரிமுத்துவின் வாழ்க்கை. இது நடத்துகின்ற அரசியல்தான் மய்யத்தை உடைக்கும் தன்மை வாய்ந்த இலக்கிய அரசியல். இதைத்தான் நிகழ்த்த வேண்டும் என்கிறார் பாரதி நிவேதன். காத்திரமாகவும் வெளிப்படையாகவும் எழுதுவது எல்லாம் நமக்கு கோபத்தை வரவழைக்கலாம். ஆனால், அதற்குப் பிறகான அரசியலை நாம் கட்டமைக்க முடியாது. ஆனால் பாரதி நிவேதனு டையதைப் போன்ற கவிதைகள், மொழியின் அழகிய லையும் கவிதையின் செம்மாந்த நிலையையும் அடையும் போது, அவை மறுவாசிப்பையோ கீழ்மேல் வாசிப்பையோ கோருகின்றன.

இலக்கிய அரசியலையே தன் எழுத்தின் நோக்கமாக அறிவிக்கிறார் பாரதி நிவேதன். இயக்கத்தில் வேலை செய்வது, தற்போதைய சூழலில் தன்னால் ஆகாது. ஆனால், இலக்கிய அரசியலை நிகழ்த்த தன்னால் ஆகும் என்கிறார். தலித் இலக்கியத்தை பொதுத்தன்மைக்குக் கொண்டு செல்லும் ஆக்கங்களை உருவாக்குவதும், அதற்கான உரையாடல்களை நடத்துவதும் தன்னுடைய வேலையாக அவர் அறிவித்திருப்பது முக்கியமான செயல் திட்டமாகும். தலித் சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் இதற்கான ஒரு சந்திப்பை நிகழ்த்த வேண்டும் என்பது அவருடைய அவா. அவருடைய முதல் தொகுப்பு "ஏவாளின் அறிக்கை.' இந்தப் பெயர் சூட்டலும் கவிதையும் புதிய தொன்மத்தினை

தமிழுக்குத் தருகின்றன. இந்துத்துவ தொன்மங்களான கண்ணகி, சீதை போன்ற பெயர்களை விடுத்து, ஏவாள் என்னும் பெயரை தொன்மமாகப் பயன்படுத்தும் அவருடைய நுண்ணரசியல், தமிழுக்கான எல்லா இயங்களையும் பெண்ணியம் உட்பட வெளியிலிருந்துதான் பெறப்பட்டுள்ளது. அதைப் போல இந்தத் தொன்மத்தையும் தான் வைத்ததாகக் கூறுகிறார். அந்தக் கவிதையின் இறுதிப் பகுதி / நரம்பறுந்தவர்களின் அருகாமையில் / சமையலறை நிசிவழிசலில் / பிணவறைக் கொட்டகையில் / அவளின் அறிக்கைகளை விழுங்க / அருவாள்கள் ஒளியுடன் தொடர்கின்றன என்று முடியும். பெண்ணிய அரசியலின் குறியீடாக இந்துத்துவ சூழலில் ஏவாளை உருவாக்குவது என்பதே கலைத்தல் என்னும் கலகச் செயல்பாடாகத்தான் இருக்கும்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் பிறந்து, அங்கேயே படித்த அவருக்கு, தன்னுடைய ஆக்கத் திறனுக்கு அந்தப் பகுதியும் ஒரு காரணம் என்கிறார். தன்னுடைய முனைவர் பட்டத்திற்காக மதுரை வந்த பிறகு தன்னுடைய எழுத்தில் தீவிர மாற்றங்கள் ஏற்பட்டதாகக் கூறும் இவர், தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். நிவேதனின் தந்தையும் ஒரு கவிஞர். தந்தை மார்க்சியவாதியாக இருந்து திராவிடர் கழகத்திலும், பின்பு திராவிட முன்னேற்றக் கழகத்திலும் பணியாற்றியவர். இதன் பாதிப்பால் தெõடக்க காலங்களில் பாரதி நிவேதன் மரபுக் கவிதைகளை எழுதியுள்ளார். பின்பு அதிலிருக்கும் சிக்கல்களினால் புதுக் கவிதைதான் தனக்கு ஏற்புடையது என்று எழுதத் தொடங்கி, நவீன எழுத்தையும் குன்னூரில் கல்லூரியில் படிக்கும்போதே எழுதத் தொடங்கியிருக்கிறார்.

பாரதி நிவேதன் என்னும் வைணவப் பெயரை அவர் வைத்திருந்தாலும், தீவிரமாக தலித் கவிதைகளை மாற்றுச் சூழலுக்குக் கொண்டு செல்லும் சிந்தனையுடையவராகவே எந்நேரமும் செயல்படுகிறார். எதார்த்தம், முழக்கத்தன்மை என்று தலித் அரசியல் எழுச்சிக்காக மட்டும் இருக்கக்கூடிய தலித் எழுத்து, இலக்கிய ஆளுமை மிக்கதாக மாற வேண்டும் என்னும் பாரதி நிவேதனுடைய குரலை தலித் அறிவுலகம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

பாரதி நிவேதன் தொடர்பு கொள்ள : 98428 51772

- யாழன் ஆதி

Pin It