அம்பேத்கர் யாருக்கானவராக தன் வாழ்நாளில் வாழ்ந்தார் என்பதும், தன் இறுதி மூச்சு உள்ளவரை யாரை எதிர்த்தார் என்பதும் மிக எளிதாகப் புறந்தள்ளப்பட்டு, அவரை தலித்துகளின் தலைவர் என்றும், மேட்டுக்குடிவாதி என்றும், கம்யூனிச எதிர்ப்பாளர் என்றும், குழப்பவாதி என்றும் அவரை கொச்சைப்படுத்தும் போக்குகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இதை எல்லாம் செய்பவர்கள் பிற்போக்கு முகாமைச் சார்ந்தவர்களாக இருந்தால், அவர்களின் நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இதைச் செய்பவர்கள் கம்யூனிஸ்ட்கள் என்று தம்மை சொல்லிக் கொண்டால்?

ambedkar 286தேர்தல் பாதையில் நிற்கும் CPI, CPM போன்றவையும், தேர்தல் பாதையைப் புறக்கணித்த சில கம்யூனிச இயக்கங்களும் கூட பெரியார், அம்பேத்கர் எதிர்ப்பை கைவிட்டு, தற்போது இந்த அமைப்புகளோடு ஓர் இணக்கமான போக்கை கடைப்பிடிப்பதோடு, இந்துத்துவ எதிர்ப்பில் அனைவரும் கரம்கோர்த்து செயல்படும் நல்ல சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் இந்தச் சூழ்நிலையை சீர்குலைக்க வேண்டும் என்று சிலர் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். அவர்களின் ஒரே வேலை தொடர்ச்சியாக அம்பேத்கரை அம்பலப்படுத்துகின்றேன் என்ற போர்வையில் தலித் மக்களை கம்யூனிச இயக்கங்களிடம் இருந்து பிரித்து தூர விரட்டி விடுவதே ஆகும். இதற்காக அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

அம்பேத்கரின் எழுத்துக்களை வரிக்கு வரி கேள்விக்கு உட்படுத்தி அவரை குழப்பவாதி, சந்தர்ப்பவாதி என்று முத்திரை குத்துவதன் வாயிலாக அடையாள அரசியல் இயக்கங்களின் பணியை கையில் எடுத்திருக்கின்றார்கள். ஒரு பக்கம் இந்துத்துவவாதிகள், அம்பேத்கரை தன்வயப்படுத்தி தலித் மக்களை ஆதிக்க சாதிகளின் அடியாள் படையாக மாற்ற முயன்றுகொண்டு இருக்கும் போது, இவர்கள் தங்களுடைய அதிமேதாவித்தனமான செயல்பாட்டால் அதை இன்னும் விரைவுபடுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். இதனை நன்கு தெரிந்தே கம்யூனிசப் போர்வையில் திட்டமிட்டு செய்துகொண்டு இருக்கின்றார்கள். இப்படி செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் எந்த அமைப்புகளிலும் சேர்ந்து நடைமுறை வேளைகளில் பங்களிப்பு செய்தவர்கள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மக்கள் தொகையில் ஏறக்குறைய 20 கோடி தலித் மக்கள் உள்ளார்கள். இயல்பாகவே முதலாளியத்துவத்தாலும், சனாதன சாதி வெறியாலும் பெருமளவிற்கு தங்கள் வாழ்க்கையை இழந்தவர்கள்; இன்னும் இழந்துகொண்டிருப்பவர்கள் இந்த மக்கள் தான். அடிப்படையில் கம்யூனிஸ்ட்கள் முதலில் வென்றெடுக்க வேண்டியதும் இவர்களைத்தான். ஆனால் எப்படி வென்றெடுப்பது? இருக்கும் பாதையைப் பயன்படுத்தியா அல்லது புதிய பாதையைப் பயன்படுத்தியா? அந்த மக்களின் மனங்களில் மிக நெருக்கமாக மார்க்ஸ் இருக்கின்றாரா? இல்லை அம்பேத்கர் இருக்கின்றாரா? என்ற கேள்வியே போதும், கள எதார்த்தத்தை அறிந்து கொள்வதற்கு. அவர்கள் மார்க்சால் பயன் அடைந்தைவிட அம்பேத்கரால்தான் அதிகம் பயனடைந்து இருக்கின்றார்கள். இன்று அந்த மக்கள் குறைந்தபட்ச வளங்களையாவது துய்க்க முடிகின்றது என்றால், அதற்குக் காரணம் அம்பேத்கர்தான். அதனால் மிக இயல்பாகவே அவர்களின் மனங்களுக்கு மிக நெருக்கமான இடத்தில் அம்பேத்கர் இருக்கின்றார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டும் அல்லாமல் பிற்படுத்தப்பட்ட மக்களும் இட ஒதுக்கீட்டால் பயன் அடைந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அம்பேத்கருக்கு எதிராக விஷத்தைக் கக்கும் பேர்வழிகள் கூட அவராலேயே படித்தார்கள். அதுமட்டுமல்ல இன்று வயதுவந்த அனைவருக்கும் ஓட்டுரிமை இருப்பதற்குக் காரணமே அவர்தான். அரசுப் பணியாளர் தேர்வாணையங்களும், வேலைவாய்ப்புப் பதிவு அலுவலகங்களும் அவரின் முன்மொழிவின் மூலமே உருவாக்கப்பட்டன. இன்று தொழிலாளர்கள் அனுபவித்து வரும் தொழிலாளர் காப்பீட்டுத் திட்டம், அகவிலைப்படி அறிமுகம், ஆழ்துளைச் சுரங்கங்களில் பெண் தொழிலாளர்களைப் பணி செய்ய வைப்பதற்குத் தடை, மகப்பேறு விடுப்பு போன்றவையும் அவர் வழியாக வந்தவைதான். அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்தபோது கொண்டுவந்த ‘இந்து சட்ட மசோதா’வில் பெண்களுக்கு சொத்துரிமை உள்ளிட்ட முக்கிய அம்சங்களைச் சேர்த்திருந்தார். காங்கிரஸில் இருந்த சனாதனவாதிகளின் எதிர்ப்பால் அந்த மசோதா நிறைவேறாமல் போனபோது, தனது பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியேறினார். பின்னாளில் அது சட்டமாவதற்கு அடிப்படைக் காரணமே அம்பேத்கர்தான். அம்பேத்கரை தலித் தலைவராகவே மட்டுமே சுருக்கிப் பார்க்கும் கோணல்புத்திக்காரர்கள் இதை பற்றி எல்லாம் பேசுவதே கிடையாது.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டு ஏறக்குறைய 100 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் பெரிய அளவில் பட்டாளி வர்க்கத்தை அவர்களால் வென்றெடுக்க முடியவில்லை என்பதை எந்தவித சுயவிமர்சனத்துக்கும் உட்படுத்திக் கொள்ளாத பேர்வழிகள்தான், தொடர்ச்சியாக இது போன்ற தாக்குதல்களை நிகழ்த்திக் கொண்டு இருப்பவர்கள். மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், மாவோ என யாருமே மார்க்சியத்தை வறட்டுத்தனமாக பயன்படுத்தச் சொல்லி எந்த இடத்திலும் சொல்லவில்லை. அந்த அந்த நாடுகளில் பிரத்தியோக நிலைமைகளுக்கு ஏற்பவே மார்க்சியத்தை பயன்படுத்தச் சொல்லியிருக்கின்றார்கள். லெனின், மாவோ போன்றவர்கள் அப்படித்தான் தங்கள் நாடுகளின் பிரத்தியோக நிலைமைகளை உள்வாங்கிக் கொண்டு புரட்சியை வெற்றிபெறச் செய்தார்கள். ஆனால் இங்கிருக்கும் சில மண்டைவீங்கி மார்க்சியர்கள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் நூல்களை பக்கம் பக்கமாக மனப்பாடம் செய்து, அதை அப்படியே வாந்தி எடுப்பதை மட்டுமே தொடர்ச்சியாக செய்து வருகின்றார்கள். இவர்களிடம் இந்திய சமூகத்தைப் பற்றிய எந்தப் புரிதலும் இல்லை. மக்களை கீழ், மேல் எனப் பிரித்து அவர்களை எதிர் எதிராக நிறுத்தி வைத்திருக்கும் பார்ப்பனியத்தைப் புரிந்துகொள்ளாமலேயே வறட்டுத்தனமாக மார்க்சியத்தைப் பேசிக் கொண்டு இருக்கின்றார்கள்.

மார்க்ஸ் தன்னுடைய தத்துவத்தை ஹெகல், பாயர்பாக், மார்கன், டார்வின் என அனைவரையும் உள்வாங்கி, அதில் இருந்த குறைபாடுகளை எல்லாம் நீக்கி செழுமைப்படுத்தினார். லெனின் மார்க்சியத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தினார். மாவோ சீன சமூகத்தில் தனக்கு முன்பிருந்த தத்துவவாதிகளை எள்ளி நகையாடாமல், அவர்களிடம் இருந்த முற்போக்கான கூறுகளை பயன்படுத்திக் கொண்டார். காரணம் மார்க்சியம் என்பது தன்னைச் சுற்றி இருக்கும் முற்போக்குக் கூறுகள் அனைத்தையும் காந்தம் போல இழுத்து தன்வயப்படுத்திக் கொள்வது; அதை எதிர்த் திசையில் விலக்கி விடுவதல்ல.

ஆனால் மார்க்சியத்தை முழுமையாகக் கற்காதவர்கள், தொடர்ந்து ஆய்வு செய்கின்றேன் பேர்வழி என்று 'அம்பேத்கர் புரட்சிக்கு உத வமாட்டார், பெரியார் உதவமாட்டார்' என நான்கு சுவற்றுக்குள்ளாக உட்கார்ந்து தங்களை ஆசை தீரும்வரை சொறிந்து கொண்டு இருக்கின்றார்கள். அடிப்படையில் புரட்சிக்கு உதவுவதில்லை இவர்களின் நோக்கம், அப்படியான ஒன்று என்றுமே இந்திய சமூகத்தில் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதுதான் இவர்களின் நோக்கம்.

அம்பேத்கர் கோட் போட்டிருந்தார், தொப்பி போட்டிருந்தார், ஆடம்பரமாக வாழ்ந்தார் இது எல்லாம் கூட ஒரு வாதமாக வைக்கும் அளவுக்கு அவர்கள் மூளைப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஒருவேளை அம்பேத்கர் பிச்சை எடுத்து சோறு தின்றிருந்தால் இவர்கள் அவரைப் புரட்சிக்காரராக ஏற்றுக் கொண்டிருப்பார்களா என தெரியவில்லை. இப்படி சொல்லும் பேர்வழிகள் எல்லாம் சொகுசு வாழ்க்கை வாழும் பேர்வழிகள் என்பதுதான் வேடிக்கையானது. சாதி ஒழிப்புக்காக சிறு துரும்பைக் கூட தூக்கிப் போடாத, சொந்த சாதியில் பார்ப்பன முறைப்படி திருமணம் செய்து, குழந்தைக்கு ஜாதகம் பார்த்து பெயர் வைத்த கூட்டம், கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் அம்பேத்கரை இழித்துரைக்கின்றது.

அம்பேத்கரிடம் சில குறைபாடுகள் இருக்கலாம், அதைக் களைந்து அதை நேர் செய்வதுதான் உண்மையான மார்க்சியவாதிகளின் கடமை. நோயை அறிந்து அதை குணப்படுத்துபவனே உண்மையான மருத்துவன். நோயாளியிடம் ‘நீ எதற்கும் தேற மாட்டாய்’ எனச் சொல்லி சாகடிப்பவனல்ல.

அம்பேத்கருக்கு கம்யூனிஸ்ட்கள் மீது விமர்சனம் இருந்ததற்கு முக்கிய காரணமே அப்போது இருந்த கம்யூனிஸ்ட்கள் சாதியை எதிர்கொண்ட விதம்தான். அம்பேத்கர் கம்யூனிஸ்ட்களையோ, கம்யூனிசத்தையோ ஏற்றுக்கொள்ளவில்லை என்பது ஒரு பிரச்சினையே இல்லை. அது அவரது தனிப்பட்ட உரிமை. நம்மைச் சுற்றி இருக்கும் அனைவருமே கம்யூனிசத்தை ஏற்றுக் கொண்டவர்களாக இருக்க வேண்டும், இல்லை என்றால் ஏற்காத அனைவருமே முட்டாள்கள் என்பது அராஜகவாதிகளின் கருத்தாகும். ‘நூறு பூக்கள் மலரட்டும், நூறு சிந்தனைகள் மலரட்டும்’ என்றார் மாவோ. அனைவருக்கும் அவரவர் கருத்தைச் சொல்வதற்கு உரிமையுள்ளது. அதைப்போல அதை மறுப்பதற்கும் உரிமையுள்ளது.

அம்பேத்கர் அவரால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தார். அதனால் கோடிக்கணக்கான தலித் மற்றும் பிற்பட்ட மக்களின் வாழ்க்கை இன்று மாறியிருக்கின்றது. அவரது கருத்துக்கள் இன்னும் பார்ப்பனியத்துக்கு அச்சமூட்டுவதாக இருக்கின்றது. இது ஒன்றே போதாதா அம்பேத்கரை மார்க்சியர்கள் கொண்டாடுவதற்கு? அம்பேத்கரை உள்வாங்கிக் கொள்வதால் மார்க்சியம் ஒன்றும் தீட்டுபட்டு விடாது என்பதை மார்க்சியத் தூய்மைவாதம் பேசுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அம்பேத்கரை எதிர்ப்பவர்கள் திட்டமிட்டே தலித் மக்களை காவிப் பயங்கரவாதிகளை நோக்கித் தள்ளுகின்றார்கள். அதன் மூலம் இயல்பாகவே கம்யூனிஸ்ட்களின் நட்பு சக்தியாக இருக்க வேண்டிய தலித் மக்களை பகையாளிகளாக மாற்றப் பார்க்கின்றார்கள். புரட்சி என்பது நேர்க்கேட்டுப் பாதையில் செல்வதல்ல; அது வளைவு நெளிவான பாதையில் பயணிப்பது என்பதை சரியாகப் புரிந்து கொண்டால் நிச்சயம் அவர்கள் அம்பேத்கரைப் புறக்கணிக்க மாட்டார்கள். இன்றைய காலத்தின் தேவை என்பது பொது எதிரியான முதலாளித்துவத்தையும், பார்ப்பனியத்தையும் வீழ்த்துவதே. அதற்கு நேச கக்திகளாக இருக்கும் அனைவரையும் ஒருங்கிணைத்துப் போராடி எதிரியை வீழ்த்துவதுதான் சரியான திசைவழி. அதைச் செய்யத் துப்பில்லாமல் ஒன்றாகப் பயணிக்கும் இயக்கங்களுக்குள் சிண்டு முடிந்துவிட்டு கலகத்தைத் தூண்டி விடுவது அற்ப சுகம் காணும் அயோக்கியர்களின் செயலாகும்.

- செ.கார்கி

Pin It