திரு. காந்தியவர்கள் இங்கிலாந்தில், வட்ட மேஜை மகாநாட்டிலும் மற்றும் வெளியிடங்களிலும், இந்தியாவின் நிலைமையைப் பற்றிச் செய்து வந்த பிரசங்கங்களை நாம் அவ்வப்போது பத்திரிகைகளிற் படித்து வந்திருக்கிறோம். அவர் இந்தியாவில் உள்ள சாதி வேற்றுமைகளை வெளிப்டுத்தாமல் கூடிய வரையிலும், மறைத்துக் கொண்டே வந்தார். இந்தியாவில் சமூக ஒற்றுமை ஏற்பட்டு விட்டதென்றும், ஆகையால் பூரண சுயேச்சை கொடுத்து விட வேண்டுமென்றும் ஆரவாரம் பண்ணினார். தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றிப் பேசும்போது, “அவர்களுக்குக் காங்கிரஸ்தான் பிரதிநிதி, அம்பெட்கார் முதலானவர்கள் பிரதிநிதிகள் அல்லர். தாழ்த்தப்பட்டவர்களை இந்துக்கள் அவ்வளவாகக் கொடுமைப்படுத்தவில்லை. ஆகையால் அவர்களுக்குத் தனித்தொகுதி வேண்டிய அவசியமில்லை. பொதுத்தொகுதிகளிலேயே தாழ்த்தப்பட்டவர்களும் தேர்ந்தெடுக்கப்படலாம். கொஞ்ச நஞ்சம் உள்ள வேற்றுமைகளும் சுயராஜ்யம் கொடுத்துவிட்டால் நீங்கிப் போய்விடும்” என்று பேசிக் கொண்டிருந்தார்.
திரு. காந்தி, இவ்வாறு முழுப்பூசனிக்காயை சோற்றுக்குள் வைத்து மூடிக் கொண்டு இங்கிலாந்தில் இருந்து கொண்டிருக்க இங்குள்ள அவருடைய வாலர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அம்பெட்கார் தேசத்துரோகி யென்றும், முஸ்லீம்கள் அரசாங்கத்தைத் தாங்குகிறவர்களென்றும், அம்பெட்காரின் விஷமத்தனமென்றும், அம்பெட்காரின் மேல் நம்பிக்கையில்லை யென்றும் பத்திரிகைப் பிரசாரங்களும், மேடைப்பிரசாரங்களும் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால், தாழ்த்தப்பட்டவர்களும் பல மகாநாடுகளும், கூட்டங்களும் கூட்டி, அம்பெட்காரே தங்கள் பிரதிநிதி யென்றும், காந்தி தங்களுக்குப் பிரதிநிதியல்ல வென்றும் கண்டித்துத் தீர்மானங்கள் பல செய்து கொண்டுதான் இருந்தார்கள்.
கடைசியில் திரு. காந்தி இங்கிலாந்து சென்று, வட்டமேஜை மகாநாட்டை ஒரு முடிவும் செய்யவொட்டாமல் பண்ணிவிட்டு இந்தியாவுக்குச் சென்ற 28-12-31ல் திரும்பி வந்தார். அப்போது அவரை அவர்பால் பக்தியுடைய மக்கள் திரளாகக் கூடி பம்பாயில் வரவேற்றனர். அச்சமயத்தில் நடந்த மற்றொரு சம்பவம் குறிப்பிடத் தகுந்ததாகும். 1000 தொண்டர்கள் தீண்டா வகுப்பினர் கறுப்புக்கொடி பிடித்துக் கொண்டு வந்து திரு. காந்திக்குத் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். 1000 தொண்டர்கள் என்பது தேசீயப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ள கணக்குத் தான் ; ஆனால், உண்மையில் ஆயிரத்திற்கு மேலான தொண்டர்கள் இருந்திருக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட தொண்டர்கள் கருப்புக் கொடி பிடித்ததோடு மட்டும் விடவில்லை, காங்கிரஸ் தொண்டர்களுக்கும், இவர்களுக்கும் பெரிய சச்சரவுகளும் நடைபெற்றது. அடிதடிகளும் நடந்தன. கடைசியில் போலீசார் தலையிட்ட பின்னரே கலகம் அடங்கிற்று. இவ்வாறு காந்தியின் வருகையின்போது கலகம் நடந்த செய்தியை யாரும் மறைக்க முடியாது. அதில் உள்ள ரகசியமும் வெளிப்படையானதேயாகும்.
இவ்வாறு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தொண்டர்கள், கறுப்புக் கொடி பிடிக்க வேண்டிய காரணந்தான் என்ன? திரு. காந்தி, தானே இந்தியா முழுவதற்கும் பிரதிநிதி; தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிரதிநிதி. ஆகையால் தான் சொல்லுவதையே கேட்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தது பொருத்தமற்ற வார்த்தை - அர்த்தமற்ற சொற்கள். அவர் எங்களுடைய பிரதிநிதி அல்ல; அம்பெட்கார் தான் எங்கள் பிரதிநிதி என்பதைத் தெரிவிப்பதற்கே யாகும். இதன் மூலம் தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் உண்மையான மனப்பான்மையையும், உணர்ச்சியையும் வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியைக் கொண்டு திரு. காந்தி இங்கிலாந்தில் பேசிய பேச்சுக்களின் உண்மை விளங்கும்.
இந்த சம்பவத்தை, நமது நாட்டு தேசீயப் பத்திரிகைகள் குறிப்பிடும் போது, “அம்பெட்கார் கட்சியாரின் அமளி’’ என்றும் “அம்பெட்கார் கூட்டத்தாரின் அயோக்கியத்தனம்’’ என்றும் “அம்பெட்கார் கோஷ்டியாரின் ஆர்ப்பாட்டம்’’ என்றும், பெரிய தலைப்பெயர்கள் கொடுத்துப் பிரசுரித்தன. தாழ்த்தப்பட்டவர்கள், தங்கள் உணர்ச்சியைக் காட்டுவதற்காகச் செய்த காரி யத்தை ஏன் இவர்கள் இவ்வாறு விவேகமின்றிக் குறை கூற வேண்டும்? இதற்காகத் திரு. அம்பெட்காரின் பெயரையும் ஏன் இழுக்க வேண்டும்?
தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் திரு. காந்தியின் மேல் நம்பிகை இல்லை என்பதற்கும், தனித் தொகுதி வேண்டுமென்பதை ஆதரித்தவர்களிடத்தில் தான் நம்பிக்கை யுண்டென்பதற்கும் மற்றொரு உதாரணத்தையும் காணலாம். சென்ற 27-12-31 ல் சென்னைக்கு வந்து சேர்ந்த, திருவாளர்கள் எ.டி. பன்னீர்செல்வம், எ. ராமசாமி முதலியார், ஆர், சீனிவாசன், பொப்பிலிராஜா முதலியவர்களைக் குதூகலமாக வரவேற்ற கூட்டத்தில் மிகுதியாக இருந்தவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்புப் பிரதிநிதிகளும், அவ்வகுப்புத் தொண்டர்களுமே யாவார்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பினர்கள் இவ்வாறு ஏராளமாகக்கூடி வரவேற்றது ஏன்? திரு. அம்பெட்காரின் துணையாக இருந்த திரு. ஆர். சீனிவாசன் அவர்களிடம் தங்களுக்குள்ள நம்பிக்கையை காட்டுவதற் கேயாகும். திரு. அம்பெட்காரின் கொள்கையை ஆதரித்த திருவாளர்கள். பன்னீர் செல்வம், பொப்பிலிராஜா, ராமசாமி முதலியார் ஆகியவர்களிடமும், தமக்குள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்கேயாகும்,
இவ்வாறு இந்தியா முழுவதும் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் எல்லோரும் திரு. காந்தியாரின் அபிப்பிராயத்திற்கு விரோதமாகவும், அம்பெட்கார் அபிப்பிராயத்தில் நம்பிக்கை யுடையவராகவும் இருப்பது மலைமேல் ஏற்றிய விளக்கைப்போல் தெரிகிறது. இப்படியிருந்தும், திரு. காந்தியும், அவருடைய பக்தர்களும், இன்னும் பழய பல்லவியையே பாடுவதில் என்ன பயன் என்று கேட்கிறோம். நமது நாட்டுப் பத்திரிகைகளும் உன்மையை மறைத்துவிட்டுத் தாழ்த்தப்பட்ட வகுப்புத் தலைவர்களின் மேல் பழியைச் சுமத்துவது எவ்வளவு அயோக்கியத்தனம்? தாழ்த்தப்பட்டவர்களை உயர்ந்த ஜாதி இந்துக்களால் நசுக்கப்படுகிறவர்களாகவே இன்னும் வைத்துக் கொண்டு, “அவர்களும் இந்துக்கள் தான் அவர்களை பிரிக்கக்கூடாது. அவர்களுக்குத் தனிப் பிரதிநிதித்துவம் கொடுத்தால் அவர்கள் எப்பொழுதும் தீண்டாதார்களாகவே இருந்து விடுவார்கள்’’ என்று வீண் பிடிவாதம் பேசுவதில் என்ன பிரயோசனம்?
திரு. காந்தி அவர்கள் வந்து இறங்கும் போதே - அவரை வரவேற்கக் கூடியிருந்த கூட்டத்திலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உயர்த்திக் கொண்டிருப்பவர்களுக்கும் சண்டை சச்சரவு நடந்தது. அவர் வரும்போதே இப்படி யிருந்தால், இனி காரியங்களைச் செய்யத் தொடங்கும் போது என்னென்ன காரியங்கள் நடக்கப் போகின்றனவோ? என்பதைப்பற்றி இப்பொழுது நாம் என்ன சொல்லுவது? எல்லாம் போகப் போகத்தான் தெரியும்.
('தேசீயத்துரோகி' என்ற பெயரில் பெரியார் எழுதியது; குடி அரசு - கட்டுரை - 10.01.1932)