இந்தியாவில் உருவான தேசிய இயக்கம் (காங்கிரஸ்) பொதுவுடமை இயக்கம், முஸ்லிம் லீக், பார்ப்பனரல்லாதார் இயக்கம், தனித்தமிழ் இயக்கம், இந்துத்துவ இயக்கங்கள் (ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை) எல்லாவற்றையும் போலவே தலித் இயக்கத்திற்கும் ஒரு நூற்றாண்டு வரலாறு உண்டு. டாக்டர் அம்பேத்கர் அவர்கள் 1920களில் தனது வெளிநாட்டுப் படிப்புகளை முடித்துக்கொண்டு இந்தியா வந்தபின் ஒரு தெளிவான கோட்பாட்டுப் பார்வையையும் இயக்க வடிவத்தையும் அதற்கு அளித்தார்.
முன்னதாக அதற்குரிய சூழல் மகாராஷ்டிரத்தில் ஓரளவு கனிந்திருந்தது. தலித் சமூக முன்னோடிகள் தவிர பார்ப்பனர் உள்ளிட்ட சில உயர்சாதி சீர்திருத்தவாதிகளும் இதில் பங்கு பெற்றனர் என்ற போதிலும் ஒரு தெளிவான பார்வையுடன் அவர்கள் களத்தில் இறங்கவில்லை. உயர்சாதிச் சீர்திருத்தவாதிகளைப் பொருத்தமட்டில் தலித்கள் சந்தித்துக் கொண்டிருந்த சமகால அநீதிகளுக்கெல்லாம் வரலாற்று ரீதியாக என்ன காரணங்கள் என்கிற கேள்விக்குள் அவர்கள் செல்லவில்லை. ஏதோ தலித்களே அவர்களது இரங்கத்தக்க நிலைக்குக் காரணம் என்பதுபோல அவர்களைச் சீர்திருத்துதல், தீயபழக்கங்களை அவர்களிடமிருந்து அகற்றி நல்ல தூய்மையான வழக்கங்களைப் பயிற்றுவித்தல், கல்வி கற்பித்தல் ஆகியவற்றின் மூலமாகவே தலித்களை முன்னேற்றி விடலாம் என்கிற பார்வையே இருந்தது.
அம்பேத்கரும் கூடத் தொடக்கத்தில் இத்தகைய பார்வையுடன்தான் களத்திற்கு வருகிறார். நல்ல பழக்கங்கள், பேச்சுத்திறன், செத்த பிராணிகளை உண்ணுதலைத் தவிர்த்தல் முதலானவற்றிற்கு அழுத்தம் கொடுத்தார். ஆனால் அவர் அத்துடன் நிற்கவில்லை. தலித்துகளுக்கெதிராக இந்து மதம் உருவாக்கியுள்ள சமூகக் கொடுமைகளுக்கு எதிராக மக்களைக் களத்தில் இறக்கினார்.
அந்த நோக்கில் அவரது அமைப்பு (பஹிஷ்கரித் ஹிதகரிணி சபா) உருவாகியது. இந்த சமூகக் கொடுமைகளையும் அவர் இரண்டாகப் பார்த்தார். கோயில், குளம் முதலான பொது இடங்கள் தலித்களுக்கு மறுக்கப்படுவது ஒருபக்கம் என்றால் பொருளாதார ரீதியாக, சாதியை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் கட்டாய இலவச உழைப்பு (“மஹர் வாட்டன்முறை”) முதலான செயற்பாடுகளுக்கு எதிராகவும் அவர் இயக்கங்கள் நடத்தினார்.
மூன்றாவதாக, பிரிட்டிஷ் அரசு உருவாக்கியிருந்த புதிய நிறுவனங்களினூடாக தலித்களை அதிகாரப்படுத்துதல் (empowering) பற்றியும் அவர் சிந்தித்தார். கல்வி, அரசு வேலை வாய்ப்பு ஆகியவற்றின்பால் அவர் கவனம் திரும்பியது. இந்தக் கல்வியையும்கூட அவர் இருவகைப் பட்டதாகவே அணுகினார். இருக்கும் கல்வி அமைப்பைப் பயன்படுத்தி அவை வழங்கும் சான்றிதழ்கள், பட்டங்கள் வாயிலாகத் தலித்கள் தம்மை அதிகாரப்படுத்திக் கொள்ளுதல் ஒரு பக்கம். ஆனால் தலித்கள் விழிப்புப்பெற, சமூகப் பிரக்ஞை பெற இந்தக் கல்வி போதாது.
இந்த நோக்கிலேயே அவர் ஆரம்பம் முதற்கொண்டு தலித்களுக்கான இதழ் (“மூக் நாயக்” முதலியன)கள் முதலானவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தார். தலித்களுக்கான ஒரு பல்கலைக் கழகம் அமைப்பதென்பது கூட அவரின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. தலித்களை அவர்கள் மீதான சமூகக் கொடுமைகளிலிருந்து விடுவித்து ஆற்றல்படுத்துவதற்கு எல்லா மட்டங்களிலும் இந்து மதம் பெருந்தடையாக இருந்ததை அவரது அனுபவங்களும் ஆய்வுகளும் உணர்த்தின.
இந்து மதத்துடன் போராடி அதைத் திருத்தி அமைப்பதன் சாத்தியமின்மையையும் அவர் வெகு விரைவில் உணர்ந்தார். இந்து மதத்திலிருந்து வெளியேறுவது என்கிற முடிவுக்கு அடுத்த சில ஆண்டுகளிலேயே (1930களில்) அவர் வந்தடைந்தார். ஆலய நுழைவு முதலான போராட்ட வடிவங்களில் அவரது நாட்டம் குறைந்தது. மாறாக இந்துக் கோயில்களை, தலித்களின் வணக்கத்திற்கு உரியதாக இருந்த சொக்கோபா ஆலயம் உட்படப் புறக்கணிக்கச் சொன்னார். காலங்காலமாக இந்தக் கோயிற்படிகளில் உங்களின் நெற்றியைத் தேய்த்துத் தேய்த்து என்னத்தைக் கண்டீர்கள் என சக தலித் மக்களிடம் மன்றாடினார்.
1935ல் இந்திய அரசுச் சட்டத்தை பிரிட்டிஷ் அரசு உருவாக்கி பரவலாகத் தேர்தலை அறிமுகம் செய்தபோது தலித்களுக்கு அரசியலதிகாரம் என்பதை நோக்கி அவர் நகர்ந்தார். தனது இயக்கத்தை அரசியற் கட்சியாக மாற்றினார். சுதந்திரத் தொழிலாளர் கட்சி (ILP) எனப் பெயரிட்டார். டாங்கே முதலான பொதுவுடைமையாளர்களுடன் இணைந்து வேலை நிறுத்தப் போராட்டங்களை எல்லாம் மேற்கொண்டார். வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் பிரிட்டிஷ் ஆட்சியிலும், பிந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும் அமைச்சரவைகளில் பங்கேற்றார். இந்து சட்டத் திருத்தத்திற்கு முயன்றார். அரசியல் சட்ட அவையில் பங்கேற்று இந்திய அரசியல் சட்ட உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார்.
தலித்களுக்கான தனி வாக்காளர் தொகுதி, தனிக் குடியிருப்பு ஆகியவை குறித்துப் பேசினார். தனி வாக்காளர் தொகுதிக்கென அவர் நடத்திய போராட்டமும் காந்தி அதை முறியடித்ததும் எல்லோரும் அறிந்த கதை. காந்தி இதைச் செய்து முடித்தார் என்கிற போதிலும் அன்றைய ஒட்டுமொத்தச் சமூகமும், அனைத்து அரசியல் கட்சிகளும், சக தலித் தலைவர்களும்கூட அதற்கு எதிராக இருந்தனர். தொடர்ந்து அம்பேத்கர் இந்து மத ஊழல்கள் குறித்தும் சாதி அமைப்பு குறித்தும் மிக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார். இறுதிக் காலத்தில் அவரது ஆய்வு பவுத்தம் குறித்ததாக அமைந்தது.
இடையில் அவர் தனது சுதந்திரத் தொழிலாளர் கட்சி முயற்சியை நிறுத்திவிட்டு “பட்டியல் சாதியினர் கூட்டமைப்பை (SCF)” உருவாக்கினார். இறுதியில் அவர் மீண்டும் தலித்களுக்கான ஒரு அரசியல் கட்சியை (“குடியரசுக் கட்சி”) உருவாக்க முனைந்தார். பெரியாரைப் போலல்லாமல் இந்து மதத்திலிருந்து வெளியேறுவது என தான் சொல்லி வந்த கருத்தை வாழ்நாளில் நிறைவேற்றி, பவுத்தத்திற்கு மாறி, மரணமடைந்தார்.
அம்பேத்கரின் வாழ்வும் எழுத்துக்களும் தலித்தியத்திற்கான செய்தியாக, வழிகாட்டலாக இன்றும் இருப்பதால் இன்றைய சவால்களை நாம் யோசிப்பதற்கு முன்னதாக இவற்றைச் சற்று விரிவாகப் பேச வேண்டியதாயிற்று.
அம்பேத்கருக்கு பிந்திய தலித்திய இயக்கங்களின் செயற்பாடுகள் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கதாக இல்லை. பெரிய அளவில் தேக்கத்தையும் பிளவுகளையும் அவை சந்தித்தன. இதன் பொருள் பிந்தைய தலைவர்களின் பங்களிப்புகளையும், போராட்டங்களையும் மறுப்பதல்ல. எனினும் 1990களில் மீண்டும் ஒரு பெரிய எழுச்சி உருவானது. அம்பேத்கார் நூற்றாண்டை ஒட்டி இது ஏற்பட்டது. உலகளாவிய மாற்றங்களுடன் இதை நாம் புரிந்து கொள்வது அவசியம்.
உலகமயம், தாராளமயம், சந்தைத் திறப்பு, சோஷலிசக் கட்டுமானங்களின் தோல்வி ஆகியவை பின்னணியில் இருந்தன. புரட்சி என்கிற கருத்தாக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டு “அதிகாரப்படுத்துதல்” என்கிற சொல்லாடல் முன்னுக்கு வந்தது. சமூக நீதி என்பதுகூட வலுவான அரசதிகாரத்தின் துணையோடு சட்டபூர்வமாக்கப்படுதல் என்கிற நிலைக்கு மாறாக விருப்ப பூர்வமானதாக (“கார்ப்பரேட் சமூக நீதி”) ஆக்கப்படுதல் என்கிற நிலைபாடுகள் முன்வைக்கப்படும் நிலை உருவாயிற்று.
இட ஒதுக்கீடு என்பதற்கு பதிலாக ‘சமவாய்ப்பு ஆணையங்களை’ உருவாக்குதல் பற்றி இன்று பேசப்படுகிறது, இதுகாறும் பிற்போக்குக் கருத்துக்களாகக் கருதப்பட்டவை ஒரு நியாயபூர்வத் தோரணையுடன் தம்மை முன்னிறுத்திக் கொள்ளத் தொடங்கின.
இந்தப் பின்னணியில் மேலுக்கு வந்த தலித்தியம் அரசியல் தளத்திலும் கருத்தியல் தளத்திலும் பதித்த சுவடுகள், நிகழ்த்திய சாதனைகள் குறிப்பிடத்தக்கவை. இதுகாறும் தலித்கள் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தே இயங்க வேண்டிய நிலைமாறி தமக்கான தனித்துவத்துடன் அரசியலமைப்புகளை உருவாக்கியதன் மூலம் தலித் மக்கள் மத்தியில் உருவான தன்னம்பிக்கை இதில் முதன்மையாகச் சொல்லப்பட வேண்டிய ஒன்று.
அரசியல், ஊடகம் எல்லாவற்றிலும் இதுகாறும் இருப்பு மறுக்கப்பட்டு வந்த தலித்கள், இன்று எல்லாத்துறைகளிலும் தங்கள் இருப்பை உறுதி செய்யும் நிலை குறிப்பிடத்தக்கது. எந்த அரசியல் கட்சியும் இன்று தலித்தியம் பேசாதிருக்க இயலாது. இன்று எந்தப் பல்கலைக் கழகமும் தலித்தியத்தைப் புறக்கணித்துவிட்டு கருத்தரங்குகள் நடத்த இயலாது. எந்தக் கருத்தரங்குகளிலும், விவாதக் களங்களிலும் தலித் இளைஞர்கள் தமது குரலை இறுமாப்புடன் ஒலிக்கும் நிலையை நாம் காண முடிகிறது. இறுமாப்பு என்பதை நான் இங்கு போற்றத்தக்க பொருளிலேயே குறிப்பிடுகிறேன்.
ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். சென்ற ஆண்டு (2007) பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நடந்த மிகப்பெரிய முதல் எழுச்சியான 1857 மக்கள் போரின் 150ம் ஆண்டு விழா இந்தியா முழுமையும் கொண்டாடப்பட்டது. நல்ல பல ஆய்வுகளும், கட்டுரைகளும் அதை ஒட்டி எழுதப்பட்டன. 1857 எழுச்சி குறித்து சமகால அறிஞர்கள் (எடு: கார்ல் மார்க்ஸ்) தொடங்கி இந்த 150 ஆண்டு காலம் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. இது குறித்து நான் சற்று விரிவாக இதழொன்றில் எழுதியுள்ளேன் (தீராநிதி, பிப்ரவரி, மார்ச் 2007). இங்கே ஓரம்சம் மட்டும்.
இந்த எழுச்சியை சிப்பாய் கலகமாய் பார்ப்பதா, விவசாயிகள் எழுச்சியா? இந்து முஸ்லிம் ஒற்றுமையின் ஆகச் சிறந்த வெளிப்பாடு என்பதா? அதிகாரமிழந்த நிலப்பிரப்புத்துவத்தின் எதிர்ப்பு என்பதா? முதல் சுதந்திரப் போராகப் பார்ப்பதா? என்றெல்லாம் பொருட்செறிந்த மிக ஆழமான விவாதங்கள் இந்த 150 ஆண்டுகளிலும் நடைபெற்றுள்ளன. எனினும் இந்த விவாதங்கள் அனைத்திலும் இந்த எழுச்சியில் தலித்கள், விளிம்பு நிலையினர், அரசவை நடனமாதுகள் முதலானோரின் பங்கு குறிப்பிடப்பட்டதே இல்லை.
1907ல் 50ம் ஆண்டு நினைவுகளின்போது அதுகாறும் பிரிட்டிஷாரால் சிப்பாய் கலகமாகப் பார்க்கப்பட்டு வந்த எழுச்சி சுதந்திரப் போராகப் பார்க்கப்பட வேண்டிய அவசியம் சுட்டப்பட்டது. 100ம் ஆண்டு நினைவுகளின்போது, இந்தியா புதிதாய்ச் சுதந்திரமடைந்த பின்னணியில் எழுச்சியின் தேசியப் பரிமாணத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இடையில் மார்க்சியர்கள் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க பங்களிப்புகளைச் செய்திருந்தனர். எனினும் இந்த 150ம் ஆண்டு நினைவுகளின்போதுதான் எழுச்சியில் தலித்கள் மற்றும் விளிம்பு நிலையினரின் பங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான எந்த ஆய்வுத் தொகுப்பை எடுத்துக் கொண்டாலும் தலித்களின் பங்கு குறித்த கட்டுரைகள் முக்கியமாய் பளிச்சிடுகின்றன. இதுகாறும் யாரது கவனத்திலும் படாதிருந்த தலித் கதையாடல்கள், கண்ணில் படாதிருந்த தலித் தியாகிகளின் நினைவுச் சின்னங்கள் எல்லாம் முதன் முதலாக இன்றுதான் பதிவு கண்டுள்ளன. 1857 என்றால் தாந்தியாதோபே, பஹதூர்ஷா, மங்கள் பாண்டே, ஜான்சிராணி என்றிருந்த நிலை மாறி முதன் முதலாக ஜல்ஹரிபாய், அவந்திபாய், பண்ணாதாய், உதாதேவி, மதாதின் பங்கி ஆகியோரின் பெயர்கள் இன்று பதிவு காண்கின்றன. வெறும் பதிவுகள் மட்டுமல்லாது வரலாறெழுதியலுக்கு இதன் மூலம் கிடைத்த பங்களிப்பு இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.
அதேபோல அயோத்தி தாசர் குறித்த மறுகண்டுபிடிப்பு, பவுத்தம் குறித்த புதிய பார்வைகள், பவுத்த நோக்கிலிருந்து அணுகுதல், தலித் இலக்கியம் என்கிற புதிய இலக்கியப் பரிமாணம் ஆகியன தலித்தியம் அளித்த கொடைகள்.
தலித்தியம் எதிர்நோக்கும் சமகாலச் சவால்களைப் பற்றி யோசிக்கும் முன் இவற்றையெல்லாம் நாம் ஒருமுறை மனதிற்குள் கூட்டிக் கழித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. எந்த அரசியலும் சவால்களைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும். சவால்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். சவால்களைப் பற்றிப்பேசுவது ஒன்றைக் குறைத்து மதிப்பிடுவதாகாது. சொல்லப்போனால் சவாலைச் சந்திப்பதே நாம் உயிருடன் இருப்பதன் அடையாளம். வலுவுடன் இருப்பதன் அடையாளம். தலித்தியம் சந்திக்கும் சவால்களை நாம் இரு தளங்களிலிருந்து இங்கே ஆராய்வோம். அரசியல் மற்றும் கருத்தியல் தளங்களை மட்டும் இங்கே எடுத்துக் கொள்வோம். கலாச்சாரம், இலக்கியம் தொடர்பாகத் தனியே ஒரு உரை இருப்பதால் இங்கே அதைத் தவிர்க்கிறேன்.
தலித் அரசியல் என்பது ஆரம்பம் முதற்கொண்டே பாராளுமன்ற அரசியலைச் சார்ந்தே இருக்கிறது. அப்படித்தான் இருக்க முடியும். பாராளுமன்றத்தின் ஊழல்களையும், பொய்மைகளையும் கருத்திற்கொண்டு அதைப் புறக்கணித்துவிடும் சாத்தியம் அதற்குக் கிடையாது. தவிரவும் அது குறிப்பிட்ட அளவிற்கு அரசைச் சார்ந்தும் உள்ளது. அரசின் கொடூரங்களைக் காட்டிலும் சமூகத்தின் கொடூரத்தை அது உடனடியாகச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. எனவே சமூகக் கொடுமைகளுக்கு எதிரான ஒரு Arbitrator ஆக அரசை அது அணுகுகிறது.
நடுநிலை என்கிற சொல்லைக் காட்டிலும் Arbitrator என்கிற ஆங்கிலச் சொல்லே பரவாயில்லை என்பதால் அப்படியே பயன்படுத்தியுள்ளேன். எனவே பெரியார், அம்பேத்கர் போன்ற வித்தியாசங்களின் அரசியலைப் பேசியவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு அரசு வலிமையாக இருப்பதையே விரும்பினர். மாறாக காந்தியோ அரசு வலுவற்று இருக்க வேண்டும் என்றார். எந்த அளவுக்கு அரசு குறைவாக உள்ளதோ அந்த அளவு மக்களுக்கு நல்லது என்றார். பதிலாக உள்ளுர் அரசுகள் (பஞ்சாயத்துகள்) வலுவாக இருக்க வேண்டும் என்றார் காந்தி. உள்ளுர் அரசுகள் வலுவடைவது சாதி ஆதிக்கத்திற்கே வழிவகுக்கும் என்றார் அம்பேத்கர்.
உலகமயம் இன்று தேசிய அரசுகளை வலுவிழக்கச் செய்துள்ளது. உலக முதலாளியத்தின் உள்ளூர் முகவர்களாகவே இன்று தேசிய அரசுகள் உள்ளன. தேசப் பாதுகாப்பு மட்டுமே அரசின் பணி. தேசப் பொருளாதாரம், சமூக நீதி என்பன அரசின் அதிகார எல்லைக்குள் வரா. சமூக நீதியின் இடத்தில் இப்போது சந்தையின் நீதி வந்துவிட்டது. அரசின் எந்தக் கட்டுப்பாடுகளையும் “இடஒதுக்கீடு” உட்பட இன்று கார்ப்பரேட்கள் சகித்துக் கொள்ளத் தயாராக இல்லை. சந்தையே சமத்துவத்தை உருவாக்கிவிடும். கார்ப்பரேட்கள் சமூக நீதியுடன் செயல்படுவர். மக்கள் நல அரசு என்பது இனி சாத்தியமில்லை. கல்வி, மருத்துவம் என எல்லாம் தனி நபர்களின் பொறுப்பு. அரசுக்கு அங்கே இடமில்லை.
தலித்தியம் சந்திக்கும் முதல் சவால் இது. சமூக நீதியைச் சாதிக்க அரசு வலுவாக இருக்க வேண்டும் என்கிற நிலைக்கு நேர்மாறான சூழலை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?
உலகமயத்தைப் பற்றி நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. உலகமயத்தின் மூலம் உருவாகியுள்ள புதிய வாய்ப்புகளில் தலித்களின் பங்கைக் கோருவதே நமது பணியாக இருக்க இயலும் என்றொரு கருத்து சில ஆண்டுகள் முன்பு இங்கே முன் வைக்கப்பட்டது. கெய்ல் ஓம்வெத் போன்றோர் இதை முன்வைத்தனர். சந்திரபான் பிரசாத் போன்ற தலித் அறிவுஜீவிகளின் முயற்சியால் 2002ல் “போபால் பிரகடனம்” ஒன்று உருவாக்கப்பட்டது. நாங்கள்கூட அதைத் தமிழில் பெயர்த்துப் பரவலாகப் பிரச்சாரம் செய்தோம். தனியார் துறையில் இடஒதுக்கீடு, சந்தையில் ஒதுக்கீடு அதாவது பொருட்களின் வினியோகத்தில் ஒதுக்கீடு ¬தலியவை கோரிக்கைகளாக்கப்பட்டன. “தலித் மூலதனம்” குறித்தும் பேசப்பட்டது.
நீர்வளம், கனிமவளம் ஆகியவற்றை கார்ப்பரேட்களுக்குத் தாரை வார்ப்பது பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? இதுகாறும் நமக்கு மறுக்கப்பட்ட தண்ணீரை கொகோ கோலாக்காரன் உறிஞ்சிக் கொண்டால் நாம் ஏன் போராட வேண்டும் என்றும் கூடச் சிலர் கேள்விகள் எழுப்பினர். தலித்கள், விவசாயிகள் பிரச்சினை குறித்துத் தொடர்ந்து எழுதி வருபவரும் மகாசேசே பரிசு பெற்றவருமான சாய்நாத் இதற்கொரு பதிலைச் சொன்னார். முன்னெல்லாம் கிராமத்திலுள்ள ஊரணியில் தலித்கள் தண்ணீர் எடுக்க முடியாதபோது இரண்டு மைல் நடந்து சென்று ஆற்றிலாவது எடுக்க முடிந்தது. இன்று அந்த ஆற்று நீரும் கொள்ளை போகும்போது முதலில் பாதிக்கப்படுவது தலித்களும் பழங்குடியினரும் தானே என்றார்.
இதன் பொருள் உலகமயம் ஒழிக எனச் சொல்லிவிட்டு அதை எதிர்த்துப் போராடிக் கொண்டு மட்டுமே இருந்து விடவேண்டும் என்பதல்ல. வேறெப்போதும் இல்லாத பல புதிய தேர்வுகள் உலகமயத்தால் உருவாகியுள்ளன. தொழில்நுட்பம் பல சாத்தியங்களைப் படைத்துள்ளது. இவற்றில் தலித்களுக்கான பங்கைக் கோருவது அவசியம். அதே நேரத்தில் உலகமயத்தைத் தலித்களின் விடிவாகவும் நாம் பார்க்கத் தேவையில்லை.
உலகமயத்தின் பலன்களைக் கோருவதுகூட ஓரளவு தலித்களில் படித்த வர்க்கத்தினர் மற்றும் நகர்ப்புறத்தார்களுக்கே சாத்தியம். இவை குறித்தெல்லாம் அறிந்தே இல்லாத எண்பது சதத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய, கிராமப்புறங்களைச் சார்ந்த தலித்களுக்கு அரசு தனது மக்கள் நலத் தன்மையை இழப்பது பெருங்கேடாகும். கல்வியும் மருத்துவமும் ¬ற்றலும் வணிகமயமாகும்போது அதன் பெரும் இழப்புகளை அவர்களே சுமக்க நேரிடுகிறது.
ஏகாதிபத்திய எதிர்ப்பை தலித்திய அரசியலில் இணைப்பது குறித்த பிரக்ஞை இன்று தலித் முன்னோடிகள் மத்தியில் உருவாகத் தொடங்கியுள்ளது. இது தொடர்பான ஆனந்த் டெல்டும்டேயின் நூல் தமிழில் பெயர்க்கப்பட்டு தலித் இளைஞர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்புப் பெறத் தொடங்கியுள்ளது இதற்கொரு எடுத்துக்காட்டு. எனினும் தலித் முன்னோடிகள், அரசியல் தலைவர்கள் இதற்கு முக்கியவத்தும் அளிக்கும் நிலை உருவாகாதது கவலைக்குரியது.
அரசியல் தளத்தில் தலித்கள் சந்திக்கும் இரண்டாவது சவாலாக அதன் பாராளுமன்றப் பாதையில் அது சந்திக்கும் ஒரு சிக்கலை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தலித் என்பது குறித்து நாம் எவ்வளவுதான் விரிந்த பொருளைக் கொண்ட போதும் அது தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களின் அரசியலாகவே உள்ளது. எனவே அதன் ஆதரவுத் தொகுதி (constituency) அதாவது எண்ணிக்கைக்கு ஒரு எல்லை உண்டு. தமிழகத்தை எடுத்துக் கொண்டால் அது சுமார் 20 சதம். அதற்குள்ளும் ன்று பெரும் பிரிவுகளும் (பறையர், பள்ளர், அருந்ததியர்) தனித்தனியே.
பாராளுமன்ற அதிகாரத்தை நோக்கிச் செல்வதற்கு ஆதரவு பெருக்கப்பட வேண்டும். அப்போது அது தலித் அரசியலைத் தாண்டி வேறு அரசியலைப் பேசியாக வேண்டும். இதனால் தலித் அரசியல் பலவீனப்படுவது ஒரு பக்கம். வேறு என்ன அரசியலைத் தலித்தியம் தேர்வு செய்வது என்பது இன்னொரு கேள்வி. தலித்தியம் சந்திக்கும் இரண்டாவது முக்கிய சவால் இதுவே.
அம்பேத்கரும் இச்சிக்கலைச் சந்திக்கவே செய்தார். பஹிஷ்கரித் ஹிதகரிணிசபா - சுதந்திரத் தொழிலாளர் கட்சி - பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு - குடியரசுக் கட்சி என்பதாக அவரது இயக்கம் இருந்தது. அதாவது, தலித்களுக்கான தனி அமைப்பு - கட்சி - தனி அமைப்பு - கட்சி என்பதாக இருந்தது. கட்சி என ஆகும்போது பெயரைக்கூட தலித் என்கிற வட்டத்தைத் தாண்டி அமைக்க வேண்டியிருந்தது. பரந்த அடையாளம் என்கிற போது அம்பேத்கர் “தொழிலாளர் குடியரசு” முதலானவற்றை தேர்வு செய்தார். கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள் ஆகியோரை அணுகினார்.
கன்ஷிராம் “பகுஜன் சமாஜ்” என்கிற கருத்தை முன்வைத்தார். தலித்கள் + பிற்படுத்தப் பட்டோர் + முஸ்லிம்கள் என்பதாக அவரது அணி சேர்க்கை இருந்தது. பார்ப்பனர், சத்திரியர் முதலான உயர் சாதியினரை அவர் வெளியே நிறுத்தினார்.
தொல்.திருமாவளவன் தமிழ்த்தேசியம் பேசி தமிழர்கள் என்னும் பேரடையாளத்தின் கீழ் தனது ஆதரவுத் தொகுதியை விரிக்க முயல்கிறார். இது குறித்து நான் விரிவாக வேறு சந்தர்ப்பங்களில் பேசியுள்ளேன். இங்கே தவிர்க்கிறேன். ஒன்றை மட்டும் சொல்ல வேண்டும். தமிழ்த் தேசியத்தின் இன்னொரு பக்கமாக விடுதலைப் புலிகளை முழுமையாக ஆதரிப்பதன் விளைவாகவே அவரும், அவரது கட்சியினரும் ஈழத்துத் தலித்களின் பிரச்சினையைப் பேசுவதேயில்லை. தலித் இலக்கிய முன்னோடியான கே.டேனியலும் இவ்வாறே புறக்கணிக்கப்பட நேர்கிறது. இதை நான் குறையாகவோ, விமர்சனமாகவோ அன்றி தலித்தியம் எதிர்கொண்டுள்ள ஒரு பிரச்சினையாகவே பார்க்கிறேன்.
மாயாவதி சமீபத்திய உ.பி. தேர்தலில் வைத்து வெற்றி பெற்ற அரசியல் சூத்திரம் பகுஜன் என்கிற வரையறையைத் தலைகீழாக மாற்றியது. பார்ப்பனர்களை அவர் உள்ளடக்கினார். உயர்சாதியினருடனான சகோதரத்துவம் சங்கங்களை ஊர்தோறும் உருவாக்கினார். “பகுஜன்” என்பதற்குப் பதிலாக “சர்வஜன்” என்கிற கருத்தாக்கத்தை முன்வைத்தார். உ.பி. வெற்றியைத் தொடர்ந்து தமிழகத்திலும் இப்படியான ஒரு கூட்டணி குறித்து தலித் அறிவுஜீவிகளில் சிலர் பேசினர்.
இந்தியாவைப் பொருத்தமட்டில் சாதி அமைப்பு முறை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை. தமிழகச் சாதி முறைக்கும் ஈழத்து சாதி முறைக்குமுள்ள வித்தியாசம் அப்படியே. ஓரிடத்திற்குப் பொருந்தும் சூத்திரம் அப்படியே இன்னொரு இடத்திற்குப் பொருந்தாது. இந்தியாவின் வட மாநிலங்களில் சத்திரிய வருணம் உள்ளது போல தமிழ்நாட்டில் கிடையாது. உ.பி.யில் பார்ப்பனர்கள் சுமார் 10 சதம். தமிழ்நாட்டில் வெறும் 2 சதம் மட்டுமே. உ.பி.யில் பிற உயர்சாதியினரும் கூட அப்படியே. எல்லோரும் மாயாவதிக்கு வாக்களிக்கவில்லை. பெரும்பாலோர் இம்முறையும் பாரதீய ஜனதாவிற்கே வாக்களித்தனர். மாயாவதிக்கு வாக்களித்த பார்ப்பனர்களும்கூட அப்படிச் செய்ததற்கான அடிப்படை மாயாவாதி ஏற்கனவே அங்கிருந்த சுமார் 22 சதத்திற்கும் மேற்பட்ட தலித்களை முழுமையாக ஒன்றிணைத்திருந்தார். தமிழகத்தில் இந்நிலை இல்லை.
இது தலித்தியம் சந்திக்கும் மூன்றாவது சவால். தலித் ஒற்றுமையைக் கட்டுவது எப்படி? தமிழக தலித் வரலாற்றைப் பார்த்தால் தொடர்ந்து தலித் உட்சாதிகளுக்கிடையே, குறிப்பாக அதன் உட்பிரிவுகளுக்கிடையே ஒரு பகை முரணே இருந்து வந்துள்ளது. அம்பேத்கரைப் பொதுத் தலைவராகவும் வழிகாட்டியாகவும் ஏற்பது, பெரியாரை அணுகுவது முதலான அம்சங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன. இன்று மூன்றில் ஒரு பங்கினரான அருந்ததியர்கள் உள் ஒதுக்கீடு கோருகின்றனர். அவர்களின் கோரிக்கை முற்றிலும் நியாயமானது என்பது பரவலாக உணரப்படுகிறது. அதே போல தலித் கிறிஸ்தவர்களும் கேட்கின்றனர். அதுவும் நியாயமானதே. எனினும் இதற்கு பிற பிரிவுத் தலைவர்களிடம் எதிர்ப்புள்ளது.
தலித் ஒற்றுமை தமிழகத்தைப் பொருத்தமட்டில் இன்று ஒரு கனவாகவே உள்ளது. தலித்தியம் சந்தித்துக் கொண்டிருக்கும் கவலைக்குரிய சவால் இது. பொதுவாக ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கிடையே ஒற்றுமை ஏற்படாதது குறித்து டாக்டர் அம்பேத்கர் சொன்ன காரணம் இங்கே சிந்திக்கத்தக்கது. படி நிலையான அசமத்துவம். அது இங்கேயும் செயல்படுகிறது. தலித்தியம் என்பது ஒரு வித்தியாச அரசியல். அது, தனக்குள்ளும் உள்ள வித்தியாசங்களை ஏற்கத்தக்கதாக இருக்க வேண்டும். அதை ஏற்று, அதன் தேவைகளையும் கோரிக்கைகளையும் அங்கீகரித்து இந்த ஒற்றுமை அமைய வேண்டும்.
இனி கருத்தியல் தளத்தில் தலித்தியம் சந்திக்கும் சவால்களில் சிலவற்றைப் பார்ப்போம். அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி இங்கே தலித்தியம் புத்தெழுச்சி கண்டபோது அத்துடன் பல தளங்களிலிருந்து எதிர்ப்புகள் உருவாகாமலும் இல்லை. தலித்தியத்திற்குத் தத்துவப் பின்புலமில்லை என்பது இவ்வாறு எழுந்த குரல்களில் ஒன்று. நாங்கள் எல்லாம் போஸ்ட் மார்டனிசம் குறித்து எழுதிக் கொண்டிருந்த காலம் அது. பெருங் கதையாடல்களின் சிதைவு, வித்தியாசங்கள் மற்றும் சிதறல்களின் முக்கியத்துவம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த நாங்கள் அந்தக் குற்றாட்டை எதிர்கொண்டோம்.
அதே நேரத்தில் மகராஷ்டிர தலித் எழுத்தாளர் அர்ஜுன் டாங்கே எழுதிய தலித் இலக்கியம் குறித்த நூலொன்று மொழியாக்கப்பட்டு வெளிவந்தது. இதுகாறும் சொல்லப்பட்ட வரலாறுகள், எழுதப்பட்ட இலக்கியங்கள் யாவும் தலித்களைப் புறக்கணித்து, அவர்களின் இருப்பை மறுத்து ஆதிக்க சாதியினரால் எழுதப்பட்டவை. அவை முன்வைக்கும் மதிப்பீடுகள், மொழி எல்லாமே தலித்தியத்தை மறுப்பவை. எனவே தலித்தியம் இந்த எல்லா மதிப்பீடுகளையும் மறுக்க வேண்டும் என்கிற (Negation) கருத்து இங்கே தலித்தியம் பேசியவர்களால் முன்வைக்கப்பட்டது.
பெரியாரின், “நமது இலக்கியம், மொழி, சட்டம், அரசு எல்லாமே சாதி காப்பாற்றுபவை. இதுகாறும் வந்த சீர்திருத்தவாதிகள் எல்லாரும் இந்த அடித்தளத்தை அப்படியே வைத்துவிட்டு மேற்தளத்தில் இருந்த ஓட்டை உடைசல்களை மட்டுமே பூசிக் கொண்டிருந்தனர். நான் மட்டுமே அடித்தளத்தையே தகர்க்க வேண்டுமென்கிறேன். எனவே தான் எல்லோராலும் நல்லது எனக் கூறப்பட்டவற்றை நான் கெட்டது என்கிறேன். எல்லோரும் கெட்டது என்பதை நல்லது என்கிறேன். எல்லோரும் உண்டு என்பதை நான் இல்லை என்பேன். எல்லோரும் இல்லை என்பதை நான் உண்டு என்பேன்.....” என்கிற ரீதியில் சொல்லப்பட்ட வாசகங்கள் எல்லாவற்றையும் மறுத்தல் என்பதற்கான ஒரு வரையறையாகவே அமைந்தது.
தலித்களின் அனுபவங்கள் எல்லாம் எந்த உயர் இலக்கியத்தைக் காட்டிலும் குறைந்தவையல்ல என்பது நிரூபணமாகியது. தலித் அனுபவப் பதிவுகள், அவர்களின் மொழிப் பதிவுகள் எல்லாம் பெரிய அளவில் வரவேற்புக்குள்ளாயின. மாற்று வரலாற்றொன்றைக் கட்டமைப்பது என்கிற பார்வைக்கு அயோத்திதாசர் குறித்த மறுகண்டுபிடிப்பு பெரிதும் உதவியது. தலித்களின் ஆய்வுப் பணிகள், பதிப்பு முயற்சிகள் எல்லாம் முதன் முதலில் கவனிப்பிற்குள்ளாயின. நவீன தமிழிலக்கியத்திற்கு தலித் இயக்கம் மூலம் கிடைத்த பங்களிப்பு குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியதாக இருந்தது.
எனினும் இன்று இந்த வளர்ச்சிப் போக்கிலும் ஒரு சிறிய தேக்கம் ஏற்படவே செய்துள்ளது. தலித்தியம் குறித்த வரையறையில் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் கூட இதற்கொரு காரணம் என்றால் மிகையல்ல. மறுப்பின் மறுப்பு என்கிற அணுகல் முறை இடையில் தலித் அறிவுஜீவிகள் சிலரால் புறக்கணிக்கப்பட்டது. அதேபோல தலித் மொழியை, அது நிகழ் மதிப்பீடுகளால் கொச்சை எனக் கருதப்படுவதால் அதை அப்படியே பதிவு செய்வது என்பதும் கூட மறுக்கப்பட்டது. சொல்லப்போனால் இன்று செல்வாக்குடன் இயங்குகிற ஒரு தலித் அரசியல் கட்சியின் இலக்கியப் பிரிவு சார்பாக வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை இவற்றை வெளிப்படையாகவே கண்டித்தது.
தலித் அரசியல் தொடர்பாக ஒரு அறிக்கை தலித் முன்னோடிகள் பலருடைய பங்களிப்புடன் இங்கு உருவாக்கப்பட்டது நினைவிருக்கலாம். அதே போன்ற ஒரு தலித் இலக்கியப் பிரகடனம் வெளியிடப்பட வேண்டும் எனச் சொன்னபோது அது தேவையில்லை என்கிற கருத்து முதலில் முன்வைக்கப்பட்டது. பின் அவர்களே சற்று முன்சொன்ன அறிக்கையை வெளியிட்டபோது தொடக்கத்தில் பேசி வந்த பல கருத்துக்கள் மறுக்கப்பட்டன.
ஒரு இறுக்கமான கொள்கைப் பிரகடனம் தேவை என நான் சொல்ல வரவில்லை. மேற்குறித்த இரு பார்வைகளில் ஏதொன்று மட்டுமே சரி எனவும் கூறவில்லை. மாறாக இத்தகைய ஆரோக்கியமான விவாதங்கள் தொடர்ந்து மேலெடுத்துச் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அது நடைபெறவில்லை. வலுவான ஒரு கோட்பாட்டுப் பின்புலம் இன்றும் உருவாகாதிருப்பது கருத்தியல் தளத்தில் தலித்தியம் சந்திக்கும் சவால்களில் ஒன்று.
மார்க்சியம், அடித்தள ஆய்வுகள் விளிம்புகளை முன்னிலைப்படுத்தும் நவீன சிந்தனைகள் எல்லாம் தலித்தியத்திற்கு மிகவும் நெருக்கமானவை. இதன் பொருள் அவற்றில் குறைபாடுகள் இல்லை என்பதோ அவை விமர்சனத்திற்குரியவை அல்ல என்பதோ அல்ல. சொல்லப்போனால் மார்க்சியத்திலும், மார்க்சிய நடைமுறையிலுமிருந்த பல குறைபாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது தலித்தியத்தின் மிகவும் ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளில் ஒன்று.
இந்தியச் சமூகத்தில் சாதியின் முக்கியத்துவம், அடித்தளம் மேற்கட்டுமானம் என்கிற செவ்வியல் மார்க்சிய வரையறையே அப்படியே இங்கு பிரயோகிப்பதிலுள்ள சிக்கல்கள், மேற்கட்டுமானமாகக் கருதப்படும் சாதியை ஒரு உற்பத்தி உறவாக, அடிக்கட்டுமானக் கூறுகளில் ஒன்றாகப் பார்ப்பது என்கிற அதிரடியான அணுகல்முறை, மார்க்ஸ் முன்வைத்த ஆசிய உற்பத்தி என்கிற கருத்தாக்கத்தின் மீது கவனம் ஆகியவை தலித் அறிவுஜீவிகள் மூலம் கிடைத்த கொடைகள். இன்று இடதுசாரிக் கட்சிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள பார்வை விசாலிப்பிற்கு இவையே காரணம்.
ஆனாலுங்கூட மார்க்சியம், பெரியாரியம் முதலியன தலித்தியத்திற்கான பகைச் சிந்தனைகள் அல்ல. முற்றாக மறுதலிக்கப்பட வேண்டியவைகள் அல்ல. ஆனால் அதுபோன்ற ஒரு போக்கு இடையில் ஏற்பட்டது. இன்று அந்தப்போக்கு குறித்த மறு பரிசீலனை சகல மட்டங்களிலும் உருவாகியிருப்பது வரவேற்கத்தக்கது. மார்க்சியம், பெரியாரியம், அடித்தள மக்கள் ஆய்வுகள், நவீன சிந்தனைகள் ஆகியவற்றில் எந்தெந்தக் கூறுகளை நாம் இன்று உயர்த்திப் பிடிக்க வேண்டும்? எவற்றை விமர்சிக்க வேண்டும்? எவற்றையெல்லாம் முற்றாக மறுதலிக்க வேண்டும்? இவையும் நம்முன் உள்ள கேள்வி. கடும் உழைப்பையும் அதே நேரத்தில் விசாலமான பார்வையையும் கோரும் பணி இது.
தமிழ்ச் சூழலில் தேசிய இனப் பிரச்சினை முக்கியமான ஒன்று என்பதை விளக்க வேண்டியதில்லை. தேசம், இனம், மொழி, சாதி, மதம் சார்ந்த பற்றுக்களையும் அரசியல்களையும் கடுமையாக விமர்சித்த பெரியாரியப் பாரம்பரியம் தமிழகத்திற்கு உண்டு. அம்பேத்கர் இது குறித்து சில முக்கியப் பங்களிப்புகளைச் செய்துள்ளார். தமிழ்த் தேசியத்தைப் பொருத்தமட்டில் அதன் வரையறையில் தமிழ்நாட்டிலும் சரி, ஈழத்திலும் சரி பார்ப்பனிய சைவச் சிந்தனைகளின் கறை படிந்ததாகவே தேசியம் உருவாகியுள்ளது.
தலித்கள் இந்தத் தேசத்திற்குரியவர்கள், மொழிக்குரியவர்கள், மரபுகளுக்குரியவர்கள் என்கிற அம்சத்தை உயர்த்திப் பிடித்து அதனடிப்படையில் இன்றைய தமிழ்த் தேசியத்துடன், அந்த நீரோட்டத்துடன் வித்தியாசமின்றி இணைந்து கொள்ளும் போக்கும் இங்கே சில தலித் அமைப்புகளிடம் உள்ளதை விரிவாக விளக்க வேண்டியதில்லை. தேசியம் குறித்த நமது அணுகல்முறை என்ன? எவ்வளவு தூரம் அந்த நீரோட்டத்தில் இணைந்து நிற்பது? எவ்வளவு தூரம் விலகி நிற்பது?
ஈழ மக்களின் போராட்டத்தையும் அவர்களின் உரிமை வேட்கையையும் ஆதரிப்பதும், பேரினவாத அரசென்றால் கட்டவிழ்த்துவிடப்படும் கொடூரமான மனித உரிமை மீறல்களை எதிர்ப்பதும் விடுதலைப் புலிகளைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பதும் ஒன்றா? இது ஏதோ விடுதலைப் புலிகள் தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல. தமிழ்நாட்டில் செயல்படும் தமிழ்த் தேசியச் சிந்தனைகள் மற்றும் இயக்கங்கள் குறித்த தலித்திய அணுகல்முறை தொடர்பான பிரச்சினையும்கூட. இது குறித்த ஒரு தெளிவான அணுகல் முறையை உருவாக்குவது நம்முன் உள்ள அடுத்த சவால்.
தேசிய வரையறையிலிருந்து எப்போதும் நழுவ விடப்படுபவர்கள் தலித்கள் மட்டுமல்ல. சிறுபான்மையினரும் கூடத்தான். மொழி, மதச் சிறுபான்மையினரைச் சொல்கிறேன். தேசிய அரசியலின் வீச்சுகல் பாதிக்கப்படுபவர்கள் இவர்கள்.
தொண்ணூறுகளுக்குப்பின் மறு உயிர்ப்பு கொள்ளும் பாசிச அரசியலாலும் பாதிக்கப்படுபவர்கள் இவர்கள். இவர்களுடனான தலித்தியத்தின் அணுகல் முறையையும் வரையறுத்தாக வேண்டும்.
இதுகாறும் மறுக்கப்பட்ட பொது நீரோட்டத்தில் நமக்கொரு பங்கு என்கிற நோக்கு சிறுபான்மையிடமிருந்து விலகி நிற்க வழி வகுத்துவிடும். அவ்வப்போதைய பிரச்சினைகளிலிருந்து முடிவெடுப்பது மட்டும் போதாது. இதுவரைக்கும் சிறுபான்மை மக்களிடமிருந்து தலித் அரசியல் பெரிய அளவில் விலகிவிடவில்லை. இந்தப்போக்கு தொடர்வதற்கு இது தொடர்பான ஒரு தெளிவான பார்வை தேவை. இதுவும் நம்முன் உள்ள சவாலே.
இந்து மதத்திலிருந்து வெளியேறுதல் என்பதை அம்பேத்கர் உறுதியாகவும், இறுதியாகவும் உரைத்துச் சென்றார். வாழ்ந்தும் காட்டினார். பெரிய அளவில் வடமாநிலங்களில் பவுத்தத்திற்கு மாற்றம் ஏற்பட்டது. இன்றும்கூட ஆங்காங்கு பவுத்த மத மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளன. பவுத்தத்திற்கு மாறுதல் குறித்து இந்துத்துவ பாசிசம் கவலை கொள்ளவில்லை என்ற போதிலும் அது இந்து மத்தின் மீதான வெறுப்பை வெளிக்காட்டும், தீண்டாமைக்கான கண்டனத்தை உமிழும் ஒரு செயல்பாடாக இருந்தது, இருக்கிறது. ஆனால் இதுவும்கூட தமிழகத்தில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவில் நடைபெறவில்லை.
தொண்ணூறுகளுக்குபின் தலித்தியம் மேலெழுந்தபோது அயோத்திதாசர் ஊடாக இங்கே பவுத்த நோக்கிலான ஒரு வரலாறு கட்டமைக்கும் முயற்சி பாராட்டத்தக்க அளவில் மேற்கொள்ளப்பட்டபோதும் கூட இந்து மதத்திலிருந்து வெளியேறுதல் என்கிற முழக்கம் பெரும்பான்மையாக உள்ள இயக்கங்களால் முன்வைக்கப்படவில்லை. “தலித் முரசு” முதலான சில அமைப்புகள் இதைச் செய்த போதிலும் வலுவான அரசியல் இயக்கங்கள் அதைச் செய்யவில்லை.
மைய நீரோட்ட அரசியலில் பங்கு பெறுவதற்கு இத்தகைய விமர்சனங்கள் தடையாக இருக்கும் என்பது ஒரு நியாயமான அச்சமே. இந்த முரண் சூழலை நாம் எவ்வாறு கையாளப் போகிறோம்? இதுவும் நம்முன் உள்ள சவாலே. தலித்தியம் இதிலும் கவனம் செலுத்த வேண்டும். இந்துத்துவ பாசிசத்துடன் கைகோக்கும் தவறை, தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் தலித்தியம் இதுவரை செய்யவில்லை. இந்நிலை தொடர இந்தத் தெளிவு தேவை.
அயோத்திதாசரின் ஊடாக ஒரு மாற்று வரலாற்றைக் கட்டமைக்கும் பணி இங்கு மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனினும் இது தொடர்பாகவும் ஒரு சில பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது. 19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் 20ம் நூற்றாண்டின் முதற்பகுதியிலும் இயங்கியவர் அயோத்திதாசர். எவையெல்லாம் சங்க இலக்கியங்கள் என்பதெல்லாம்கூட இன்றைய தெளிவுடன் வரையறுக்கப்படாத காலம் அது. அதற்குப் பிந்தைய காலங்களில் பல வரலாற்றுண்மைகள் வெளிப்பட்டுள்ளன.
வரலாறெழுதியலும் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. இவற்றை எல்லாம் புறக்கணித்துவிட்டு அயோத்திதாசரை முற்று முழுதாக ஏற்று, ஒரு திருஉருவாகக் கட்டமைக்கும் போக்கு எந்த அளவிற்குச் சரியாக இருக்கும்? அயோத்திதாசர், கர்னல் ஆல்காட், தியாசபிகல் சொசைடி, அன்னிபெசன்ட் ஆகியோரின் உறவும் இந்த வகையில் ஆராயப்பட வேண்டிய ஒன்று. இந்து மதத்தின் பல கூறுகளை அவர் பவுத்தம் என ஏற்றுக்கொள்ளும் போக்கையும் ஒருவர் காண முடியும். தலித் பிரிவுகளுக்கிடையேயுள்ள உட்சாதி ஏற்றத்தாழ்வுகளையும் கூட அவர் இந்த வகையில் நியாயப்படுத்த நேரிடுகிறது.
இவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு அவரைத் திருஉருவாகக் கட்டமைக்கும் போது தலித் உட்பிரிவுகளின் ஒற்றுமைக்கும் அது இடையூறாகிவிடும். தவிரவும் சமணத்தையும் பவுத்தத்தையும் அவர் ஒன்றெனக் குழப்புவது வரலாற்றுண்மைகளுக்கு எதிரானது. என்ன பெரிய வரலாற்றுண்மைகள் என்கிற ரீதியில் இவற்றை உதறித் தள்ளிவிடுவதும், அயோத்திதாசர் சொல்லிவிட்டாரே என்கிற ரீதியில் அதுவே சரியானது என நியாயப்படுத்துவதும் வேறு பல பிரச்சினைகளுக்கும் வரலாற்று முரண்கட்டும் இட்டுச் செல்லும். இதுவும் இன்று தலித்தியம் சந்தித்துக் கொண்டுள்ள ஒரு மிகப்பெரிய சவாலே.
வரலாற்று ரீதியாக அடித்தள மக்களின் இயக்கங்களை நாம் உயர்த்திப் பிடிக்கும்போது கிராம்சி குறிப்பிட்ட எச்சரிக்கையை நாம் மறந்துவிடக்கூடாது. அடித்தள மக்களிடம் மோதற் கூறுகள் உள்ளது போலவே சமரசக் கூறுகளும் மிகுந்திருக்கும். உடனடி எதிரியைப் பெரிதாக எண்ணி தொலைவில் உள்ள இன்னும் ஆபத்தான எதிரியை நட்பு சக்தியாகப் பார்க்கும் பார்வையும் அதற்குண்டு. அடித்தள மக்களின் சிந்தனை, செயற்பாடுகள் அனைத்தும் சரியாகவே இருக்கும் என்கிற பார்வை பல பிரச்சினைகளுக்குக் காரணமாகும்.
இந்த சமரசக் கூறுகளைப் பயன்படுத்தி இந்துத்துவ பாசிச சக்திகள் குஜராத், கோவை முதலான இடங்களில் தலித் பிரிவினரை சிறுபான்மையினருக்கு எதிராகப் பயன்படுத்தியதை நாம் மறந்து விடலாகாது. அடித்தள மக்கள் எல்லா அம்சங்களிலும் சரியாக இருப்பார்கள் என்கிற Political Correctness பார்வை அரசியல் செயலின்மைக்கும் இட்டுச் செல்லும். அவர்கள் மத்தியில் கருத்தியல் ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளைப் பின்னுக்குத் தள்ளிவிடும். இதுவும் தலித்தியம் சந்தித்துக் கொண்டிருக்கும் இன்னொரு பெரிய சவால்.
தலித்தியம் எல்லாவற்றிலும் கருத்துச் சொல்லக் கூடியதாக இருக்க வேண்டும். அமெரிக்காவுடன் ஏற்படுத்தப்படும் அணு ஒப்பந்தமாயினும் சரி, ஈராக் படை எடுப்பாயினும் சரி. கார்ப்பரேட்களின் செயல்பாடுகளாயினும் சரி எல்லாவற்றையும் பற்றி விமர்சிக்கத்தக்க வல்லமை அதற்குண்டு. அந்த வல்லமையை அது தன் அணிகளுக்குக் கையளிக்க வேண்டும். தானாகவே அடித்தள மக்களிடம் அது வந்துவிடும் என எதிர்பார்க்க முடியாது.
அறிவுச் செயல்பாடுகளுக்கு அம்பேத்கர் அளித்த முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கது. ஏராளமான அறிவுச் செல்வத்தை அம்பேத்கர், மார்க்ஸ், பெரியார் முதலியோர் நமக்குக் கையளித்துச் சென்றுள்ளனர். இவற்றை தலித் மக்களிடம் கொண்டு செல்லும் பணி இங்கு மேற்கொள்ளப்படவே இல்லை. பவுத்தத்தின் அற மதிப்பீடுகளும் மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை. தலித்தியத்திற்கு மிகப்பெரிய கருத்தியல் வளம் இருந்தும் கூட தலித் மக்களின், தலித் அரசியலின் கருத்தியல் பலமாக அது மாற்றப்படாதது தலித்தியம் சந்தித்துக் கொண்டிருக்கும் சவால்களிலெல்லாம் பெரிது.
தொடக்கத்தில் சொன்ன ஒன்றைச் சொல்லி முடிக்க விரும்புகிறேன். இந்தச் சவால்களை இங்கே முன்வைப்பது தலித்தியத்தைக் குறைத்து மதிப்பிடுவதோ, அதன் மகத்தான பங்களிப்புகளை மறுப்பதோ ஆகாது.
புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் தலித்தியத்திற்கு ஏற்பட்டிருக்கும் ஆர்வம் தலித்தியத்தின் மூன்றாவது எழுச்சியாகக் காணத்தக்கது. தேசியம், ஏகாதிபத்தியம், இலக்கியம் ஆகியவை குறித்த வளமான தலித்தியப் பார்வையை விட்டுசென்ற கே.டானியலின் பாரம்பரியம் உங்களுக்குண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக தேசம் மறுக்கப்பட்டு, பல்வேறு இடர்களையும், சவால்களையும் சந்தித்து எங்களைக் காட்டிலும் பல மடங்கு விசாலமான பார்வைச் சாத்தியத்தை அனுபவபூர்வமாகப் பெற்றவர்கள் நீங்கள். உங்களின் பங்கேற்பும், பங்களிப்பும் தலித்தியத்திற்கு எதிர்காலத்தில் பெரும்வளம் சேர்க்கும். தலித்தியம் சமகாலத்தில் சந்தித்துக் கொண்டுள்ள சவால்களை எதிர்கொள்ள அது பெரிதும் உதவும்.
(லண்டன் தலித் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
தலித்தியம் எதிர்கொள்ளும் சமகாலச் சவால்கள்
- விவரங்கள்
- அ.மார்க்ஸ்
- பிரிவு: கட்டுரைகள்