புதுச்சேரி என்றால், அரவிந்தர் ஆசிரமம், காந்தி சிலையுடன் கூடிய கடற்கரை என்பவை உள்ளிட்ட அழகும், அமைதியும் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். வெளித்தோற்றத்தில் அப்படியுள்ள புதுச்சேரிக்குதான் மற்றொரு பக்கமும் உள்ளது. அண்மைக் காலமாக, தமிழகத்தின் வடமாவட்டப் பகுதிகளில் நிகழும் பெரும்பாலான நிகழ்வுகளில், புதுச்சேரியில் உள்ள ரவுடிகளும், இளைஞர்களும் கூலிப்படையினராக செயல்படுவதாக பத்திரிகைகளும், அரசும் கூறின. இதைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள உயர் காவல் அதிகாரிகள் கூடி, குற்றங்களைக் குறைப்பதற்காக கூட்டாக செயல்படுவதாகக் கூறி பல கூட்டங்களை நடத்தி முடிவெடுத்தார்கள். ஆனால், இந்திய அளவில் குற்ற நிகழ்வுகள் அதிகம் நிகழும் மாநிலம் புதுச்சேரிதான் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதையெல்லாம் பார்க்கும்போது, குற்ற நிகழ்வுகளில் சாதாரண மனிதர்கள்தான் ஈடுபடுகிறார்கள் என்ற முடிவிற்கு வந்துவிட வேண்டாம். அங்குள்ள காவல் அதிகாரிகளே குற்றங்களை செய்பவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்த மூன்று நிகழ்வுகளும் சான்று பகர்கின்றன.
கொடுமை : 1
விழுப்புரம் வளவனூர் அருகே பக்கமேடு கிராமத்தில், மனைவி காமாட்சியுடன் வாழ்ந்து வருபவர் சிவா என்கிற சிவகாசி. இவர்கள் பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். செங்கற்சூளை, கரும்பு வெட்டுதல் போன்ற வேலைகள் கிடைக்குமிடங்களுக்குச் சென்று தங்கி வேலை செய்து வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் கரும்பு வெட்டும் வேலை முடிந்து, வளவனூரில் செங்கற்சூளையில் வேலையிருப்பது அறிந்து 31.5.09 அன்று விசாரிக்கச் சென்றுள்ளார். அப்போது புதுச்சேரி போலிசார் செய்த சித்திரவதைகளை அவரே கூறுகிறார்:
நானும், என்னோட சொந்தக்காரன் அய்யப்பனும்தான் வளவனூர் போய் வந்தோம். கையில் வெறும் 20 ரூபாய்தான் இருந்தது. இரண்டு பேருக்கும் நல்ல பசி வேற. அதனால் நான் வில்லியனூர் பஸ்டாண்டில் படுத்துக் கொண்டு, 20 ரூபாயை அவனிடம் தந்து, நீ ஊருக்குப் போயிட்டு காலையில பணத்தோட வந்து என்னை அழைச்சிட்டுப் போ என்று கூறி, அவனை அனுப்பிவிட்டு, நான் படுத்து தூங்கினேன். ராத்திரி 12 மணி இருக்கும். இரண்டு போலிசார் வந்து என் சட்டையைப் பிடித்து எழுப்பி, வில்லியனூர் காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்று, என்னை கையை நீட்டச் சொல்லி அடித்தார்கள். “எதுக்குடா இந்த நேரத்தில் படுத்திருக்க. திருடத்தானே வந்திருக்க'' என்று கூறி தொடையில் லத்தியால் அடித்தார்கள். இல்லை என்று நடந்ததைக் கூறினேன். பிறகு என்ன சாதி என்று கேட்டதும், இருளச் சாதி என்றேன்.
“மறுநாள் 1.6.09 அன்று காலை எனது கைரேகையை எடுத்தார்கள். அங்கிருந்த ஒரு காவலர் சாயங்காலம் விட்டுவிடுவதாகச் சொன்னார். மாலையில், காவல் நிலையத்திலிருந்து மாடிக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். திடீரென்று “எங்கடா திருடின'' என்று கேட்டு என் முதுகில் லத்தியால் அடித்தார்கள். சட்டையை கழட்டச் சொல்லி மீண்டும் அடித்தார்கள். நான் எதுவும் திருடவில்லை. நான் திருட்டுத் தொழில் செய்ய மாட்டேன் என்று கூறினேன். அப்போது, “இவன இப்படி கேட்டா சொல்ல மாட்டான். இரு...'' என்று கூறி என்னுடைய கையை முதுகிற்குப் பின்புறமாக வைத்து கயிற்றால் கட்டி, அதை ஒரு கொக்கியில் மாட்டி என்னை மேலே ஏற்றி தொங்கவிட்டார்கள். தோள்பட்டையெல்லாம் கடுமையான வலியெடுத்தது. எவ்வளவோ கத்தியும் போலிசார் என்னை கீழே இறக்கவில்லை. தொங்கவிட்ட நிலையில், என் கடுங்காலில் லட்டியால் அடித்தார்கள். முதுகில் கைகளால் குத்தினார்கள். என்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற இரு போலிசார்தான் என்னை இவ்வாறு செய்தார்கள்.
உன்னுடன் யார், யார் திருட வந்தார்கள் என்ற உண்மையைச் சொன்னால்தான் உன்னை அடிக்க மாட்டோம் என்று கேட்டு அடித்துக் கொண்டே இருந்தார்கள். வலி தாங்க முடியாத நான், என்னுடன் கரும்பு வெட்ட வந்த சங்கர் என்பவரைச் சொன்னேன். மீண்டும் என்னை கடுமையாக அடித்தார்கள். வலி தாங்க முடியாமல் கீழே விழுந்தேன். அதன் பிறகு என்னை மாடியிலிருந்து கீழ் அறையில் கொண்டு வந்து என் இரு கைகளிலும் விலங்கு போட்டு, ஜெயில் கம்பியில் மாட்டிவிட்டார்கள். அடுத்த இரண்டு நாளும் என்னை விலங்கு மாட்டி வைத்திருந்தார்கள். எந்தத் தவறும் செய்யாத என்னை போலிசார் அடித்து, சித்திரவதை செய்து, விலங்கு மாட்டி வைத்திருந்ததை நினைக்க நினைக்க என்னால் தாங்க முடியாமல் இருந்தது. மேலும், காவல் நிலையத்திற்கு வந்து செல்பவர்கள் பார்க்கும் பார்வை வேறு என்னை இன்னும் கொடுமைப்படுத்தியது.
3 ஆம் தேதி இரவு 9 மணிக்கு என்னை அடித்து, காலில் விலங்கு மாட்டி ஒரு டாடா சுமோ வண்டியில் ஏற்றினார்கள். வில்லியனூரில் உள்ள பல வீடுகளுக்கு அழைத்துச் சென்று எங்கு திருடினாய் காட்டு என்று மிரட்டினார்கள். நான் எங்கயும் திருடல. நான் அந்த மாதிரி வேலையே செய்ய மாட்டேன் என்றேன். உடனே, “பொய் சொல்றியா நாயே...'' என்று கூறி அடித்தார்கள். என்னுடன் கரும்பு வெட்ட வந்த சங்கரின் ஊரான தென்சுருளுக்கு அழைத்துச் சென்றார்கள். என்னிடம், “சங்கர் வீட்டை காட்டலன்னா இங்கேயே கொன்னு புதைச்சிடுவோம்'' என்று மிரட்டினார்கள். பயந்துபோன நான் காட்டினேன். தூங்கிக் கொண்டிருந்த சங்கரை இழுத்து வந்து வண்டியில் ஏற்றினார்கள்.
மீண்டும் எங்கள் இருவரையும் வில்லியனூர் காவல் நிலையம் கொண்டு வந்தார்கள். அப்போது இரவு மணி 2 இருக்கும். சங்கரை முழு நிர்வாணப்படுத்தி தனி அறையில் உட்கார வைத்தனர். என்னை காலில் விலங்கிட்டு வெளி கேட்டில் கட்டிப் போட்டார்கள். எங்கெல்லாம் திருடினீங்க, பொருள் எல்லாம் எங்க என்று சங்கரிடம் கேட்டார்கள். சங்கர் தனக்கு திருடுகிற பழக்கம் கிடையாது என்று கூறியதும், போலிசார் அவரை அடித்தார்கள். என்னையும் கேட்டு அடித்தார்கள். நான் மறுத்தபோது, “நீதான்டா சொன்ன'' என்றார்கள். அப்போதுதான் நான், வலிதாங்க முடியாம பொய் சொன்னேன் என்று கூறினேன். மறுநாள் 4 ஆம் தேதி, மதியம், சங்கரிடம் கைலியை கொடுத்து கட்டச் சொல்லி, மேலே மாடிக்கு அழைத்துச் சென்றார்கள். கொஞ்சம் நேரம் கழித்து, கீழே அழைத்து வந்து, மீண்டும் முழு நிர்வாணப்படுத்தி லாக்கப் அறையில் அடைத்தார்கள். தொடர்ந்து 3 நாட்கள் சங்கரை லாக்கப் அறையிலும், என்னை விலங்கிட்டு கம்பியிலும் கட்டிப் போட்டு விசாரித்தார்கள்.
பின்பு 6 ஆம் தேதி சனிக்கிழமை பகல் 12 மணியளவில் சங்கருக்கு அவருடைய கைலி, பனியன், ஜட்டி ஆகியவற்றை கொடுத்து போட்டுக் கொள்ளச் சொன்னார்கள். பின்பு, எங்கள் இருவருடைய பெயர், முகவரி, அங்க அடையாளம் எல்லாம் கேட்டு எழுதினார்கள். 1 மணியளவில் எங்களை ஜட்ஜ் வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்தி, எங்கள் இருவரையும் புதுச்சேரி காலாபட்டு சிறைச்சாலையில், வெவ்வேறு அறைகளில் அடைத்தார்கள். அதன் பிறகு 19.6.09 வெள்ளிக்கிழமை என்னை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அதன் பிறகு மூன்று நாட்கள் கழித்து 22 ஆம் தேதியும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். என்னைப் பார்த்த ஜட்ஜ், என்ன செய்தாய் என்று கேட்டார். நான் ஒன்னும் பண்ணலீங்க அய்யா, பஸ் ஸ்டாண்டில் படுத்திருந்தேன் என்று சொன்னேன். அதற்கு ஜட்ஜ், “என்ன பிடிக்கும்போது, பக்... பக்...ன்னு முழிச்சியõ'' என்று கேட்டார். நான் ஆமாங்க அய்யா என்று சொன்னேன். உடனே, ஜட்ஜ் என்னைப் பார்த்து “விடுதலை... நீ போகலாம்'' என்றார்.
அதன் பிறகு அன்று இரவு 8 மணிக்கு காலாபட்டு சிறையில் இருந்து என்னை வெளியே அனுப்பி விட்டார்கள். பஸ் டிக்கட்டுக்குகூட காசில்லாமல், என்னைப் போன்று அப்போது விடுதலையான ஒருவரிடம் கெஞ்சினேன். அவர் எனக்கு வில்லியனூர் வரை டிக்கெட் எடுத்து, 10 ரூபாய் வாங்கிக் கொண்டு எங்களுடைய ஊருக்கு சென்றேன். என்னையும், சங்கரையும் சித்திரவதை செய்து, சட்டவிரோதக் காவலில் வைத்திருந்த வில்லியனூர் போலிசார் மேல நடவடிக்கை எடுக்கச் சொல்லி எல்லாருக்கும் புகார் அனுப்பியிருக்கோம். எனக்கு நடந்த மாதிரி இனிமே யாருக்கும் நடக்கவே கூடாது.''
கொடுமை: 2
ஒன்றுமறியாதவர்கள் மட்டுமல்ல; நல்ல நிலையில் உள்ள, சுய தொழில் செய்கின்றவர்கள்கூட இனி புதுச்சேரி செல்வதற்கு அச்சமடையக்கூடிய, திரைப்படத்தின் கற்பனைக் காட்சிகளையும் மிஞ்சும் சம்பவங்களை எதிர்கொண்ட மணிகண்டன், பெரியகடை காவல் துறையினரால் பாதிக்கப்பட்டது குறித்து அவரே கூறுகிறார் :
“நான் திண்டிவனம் நல்லியக்கோடன் நகரில், எனது அப்பா, அம்மாவுடன் வாழ்ந்து வருகிறேன். எனது அப்பா அரசுப் போக்குவரத்து கழக ஓட்டுநராக உள்ளார். நான் அய்.டி.அய். மோட்டார் மெக்கானிக் முடித்துள்ளேன். கடந்த 6 வருடங்களாக ஸ்டிக்கர் ஒட்டும் தொழில் செய்து வருகிறேன். இதற்கான பொருட்கள் பாண்டிச்சேரியில்தான் கிடைக்கும். தேவைப்படும்போது போய் வாங்கி வருவேன். திண்டிவனம் கிடங்கல் பகுதியைச் சேர்ந்த நிர்மலா என்கிற பெண்ணும் நானும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வருகிறோம். இவர் வேலூர் ஆக்சீலியம் கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வருகிறார். நாங்கள் காதலிப்பது எங்கள் இரு வீட்டாருக்கும் நன்கு தெரியும்.
இந்நிலையில் 15.3.09 அன்று, புதுச்சேரி சென்று என் தொழிலுக்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொண்டு, புதுவை அரசு மருத்துவமனை அருகில் வரும்போது, நிர்மலாவிடம் இருந்து போன் வந்தது. நான் அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, சுமார் 35 வயசுல ஒரு நபர் என்னிடம் வந்து “டேய் நீ யாருடா? உன் பெயர் என்ன?'' என்று கேட்டார். அதற்கு நான் “மணிகண்டன்'' என்றேன். அவர் எந்த ஊர் என்றார். நான் திண்டிவனம் என்றேன். “இங்க என்னடா செய்ற? யார்கிட்ட பேசிகிட்டு இருக்க?'' என்று அவர் கேட்ட பிறகுதான், நான் “நீங்க யாரு'' என்று கேட்டேன். உடனே அவர் நான் வைத்திருந்த செல்பேசியை பிடுங்கி, “யார் நீ? இவனோட என்ன பேசுற'' என்று கேட்டார். அதற்கு நிர்மலா, “நீங்க யாரு?'' என்று கேட்டுள்ளார். உடனே அவர் என் செல்பேசியை ஆப் செய்துவிட்டு, “டேய் யாருடா இவ, திமிரா பேசுறா'' என்று கேட்டார். அதற்கு நான், மரியாதையாக பேசுங்க. நீங்க யாரு இதைக் கேட்பதற்கு'' என்று கேட்டேன்.
அதற்கு அவர் இங்க வாடா என்று கூறி, என் சட்டையைப் பிடித்து இழுத்தார். உடனே நான் அவரிடம், “நீ யார்? என் சட்டையைப் பிடிப்பதற்கு, உனக்கு என்ன உரிமை இருக்கிறது'' என்று கேட்டு, அவருடைய கையைப் பிடித்துத் தள்ளினேன். உடனே அவர், “ஓத்தா, என் மேலேயே கை வச்சிட்டீயா, நான் யார் என்று உனக்கு காட்டுகிறேன்'' என்று கூறி, என் மோட்டார் சைக்கிளின் சாவியை வண்டியிலிருந்து பிடுங்கிக் கொண்டு, இன்னொரு நபரை செல்பேசியில் தொடர்பு கொண்டு வரவழைத்தார். பின்பு என்னை இருவரும் என் சட்டையைப் பிடித்து மோட்டார் சைக்கிளில் உட்கார வைத்து, புதுச்சேரி பெரியகடை காவல் நிலையத்திற்கு இரவு 8 மணியளவில் அழைத்துச் சென்றனர்.
அங்கு சென்றதும், என்னுடைய செல்பேசி, நான் அணிந்திருந்த வெள்ளி கைசெயின், 3 கிராம் தங்க மோதிரம், 1450 ரூபாய் பணம், தொழிலுக்காக வாங்கியிருந்த ஸ்டிக்கர் உள்ளிட்ட பொருட்கள், புதுப் பேண்டு துணி ஆகியவற்றை பிடுங்கிக் கொண்டு என்னை ஒரு அறையில் உட்கார வைத்தனர். கொஞ்ச நேரத்தில் என்னை எழுத்தர் அறைக்கு கூட்டிச் சென்றனர். அப்போது அங்கிருந்த உதவி ஆய்வாளர்கள் தனசேகர், பழனிவேல், காவலர்கள் ஜான், சண்முகம், ஜனார்த்தனன் உள்ளிட்ட அனைவரும் என்னைச் சுற்றி பெஞ்ச், நாற்காலியில் உட்கார்ந்தனர். உதவி ஆய்வாளர் தனசேகர் என்னைப் பார்த்து, “போலிஸ்காரன் மேலேயே கைய வச்சிட்டியா, இப்ப நாங்க கை வைக்கிறோம் என்ன ஆகுதுன்ன பாரு'' என்று கூறியபடியே அவர் கையில் வைத்திருந்த லத்தியால் என்னை சரமாரியாக அடித்தார்கள். வலி தாங்க முடியாமல் கதறி அழுதேன். ஆனாலும் அனைவரும் மாற்றி, மாற்றி சுமார் 1.30 மணி நேரம் அடித்தார்கள். அதில் எனக்கு முதுகு, கை, கால் என உடலின் அனைத்து இடத்திலும் கடுமையான வீக்கமும், வலியும் ஏற்பட்டது. பின்னர் என்னை அதே அறையில் விட்டுச் சென்றனர். நான் முடியாமல் கீழே சாய்ந்தேன்.
அதன் பிறகு சுமார் 12.30 மணியளவில் என்னை இந்த 5 போலிசாரும் ஜீப்பில் ஏற்றி, சோலைநகர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த உதவி ஆய்வாளர் பவித்ரன், காவலர்கள் விநாயகம், கருணாநிதி ஆகியோருடன் இந்த 5 போலிசாரும் சேர்ந்து என்னை கண்மூடித்தனமாக அடித்தார்கள். என்னை உட்கார வைத்து, இரு கால்களையும் விரித்து லட்டியை வைத்து கொடுமையாக தாக்கினார்கள். அப்போது எனது வலது காது கிழிந்து ரத்தம் வர ஆரம்பித்தது. அப்போது உதவி ஆய்வாளர் பவித்ரன், “எவ்வளவு தைரியம் இருந்தா போலிஸ்காரன் மேலேயே கையை வைத்து தள்ளிவிடுவாய். உன்ன இங்க கொண்டு வந்தது யாருக்கும் தெரியாது. இங்கேயே உன்னை அடித்துப் பிணமாக்கி கடலில் வீசி விடுவோம்'' என்று மிரட்டிய படியே மேலும் அடித்தார். பின்பு, மோட்டார் சைக்கிள் யாரோடது, எங்க திருடின என்று கேட்டார்கள். என்னுடையது என்றேன். ஆர்.சி. புக் இருக்கா என்றார்கள். வண்டியில் உள்ளது என்றேன். அதை எடுத்து வந்து பார்த்துவிட்டு ஒரிஜினல் புக் எங்கடா என்று கேட்டார்கள். நான் வீட்டில் உள்ளது என்றேன். “திரும்பவும் பொய் சொல்றியா. இது உன் வண்டி இல்லடா. திருட்டு வண்டிதானே'' என்றார்கள். நான் மறுத்தும் தொடர்ந்து அனைவரும் சேர்ந்தும், தனித்தனியாகவும் அடித்துக் கொண்டே இருந்தார்கள். அதில் நான் சுய நினைவை இழந்தேன்.
மறுநாள் 16.3.09 திங்கள் அன்று காலை 4.30 மணியளவில் என்னை பெரிய கடை காவல் நிலையத்தில் விட்டு, அங்கிருந்த எழுத்தரிடம், இவனை தூங்க விடாதே, தண்ணீரும் கொடுக்காதே என்று கூறிவிட்டு, கையில் விலங்கு போட்டு கேட்டில் கட்டிவிட்டு சென்று விட்டனர். அங்கிருந்து காலை 9.30 மணிக்கு முத்தையால்பேட்டை காவல் நிலையத்திற்கு காவல் வாகனத்தில் கொண்டு சென்றார்கள். அங்கு மீண்டும், வண்டிக்கு ஆர்.சி. புக் கேட்டார்கள். நான் ஜெராக்ஸ் இங்க இருக்கு, ஒரிஜினல் வீட்ல இருக்கு என்றேன். அதற்கு அங்கிருந்த உதவி ஆய்வாளர் தனசேகர், ஏட்டு விநாயகத்திடம், “சார் இவன் இப்படி கேட்டால் சொல்ல மாட்டான். மேலே கொண்டுபோய் விடலாம்'' என்று கூறி, என்னை காவல் நிலையத்தில் இருந்த மாடிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு, எனது கையை பின்னால் மடக்கி வைத்து கட்டி கயிற்றின் மூலம் தொங்கவிட்டனர். தொங்கவிட்டபடியே என்னை பலமாக லத்தியால் அடித்தனர். எனது உடம்பில் வலது கை, இடது பக்க இடுப்பு, கால்கள், காது, உதடு என அனைத்து பாகத்திலும் ரத்தம் சொட்ட ஆரம்பித்தது.
அதன் பிறகு சுமார் 11 மணியளவில் எழுதியிருந்த ஒரு படிவத்தில் என்னை கையெழுத்துப் போடச் சொன்னார்கள். போலிசாரின் அடியில் மயங்கியிருந்த என்னால், என்ன எழுதியிருந்தது என்பதை படிக்க முடியவில்லை. ஆனாலும், கையெழுத்துப் போட மறுத்தேன். அப்போது போலிசார், “கையெழுத்துப் போடு, இல்லையென்றால், இரண்டாவது கட்ட ட்ரீட்மெண்ட் கொடுப்போம்'' என்று மிரட்டினார்கள். அப்போதும் நான் கையெழுத்திட மறுத்தேன். அதனால் ஆத்திரமடைந்த அவர்கள், என்னை அங்குள்ள பெஞ்சில் நிமிர்ந்து படுக்கச் சொல்லி, லத்தியால் என் முழங்கையை முதுகுப்புறம் வைத்து அடித்தனர். வலி தாங்க முடியாமல் கத்தியதும், என் வாயில் லத்தியை வைத்து அழுத்தினர். காவலர் சண்முகம் என் இரண்டு கால்கள் மீது ஏறி நின்றவுடன், காவலர் ஜனா என் நகத்தைப் பிடுங்கி என்னை சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தினார். உடலின் அனைத்துப் பாகங்களும் செயலிழக்கும் நிலைக்குச் சென்றது. பின்பு, அன்று மாலை பெரிய காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த நிலைமையில்தான், 15 ஆம் தேதி இரவே என்னுடைய செல்பேசிக்கு தொடர்பு கொண்ட நிர்மலா, அது ஸ்விச் ஆப் செய்யப்பட்டிருந்த நிலையில், உடனடியாக எனது தந்தைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “மணிகண்டனுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது, ஒருவர் மிரட்டும் விதமாகப் பேசினார். அதன் பிறகு அவரோட செல்பேசி வேலை செய்யவில்லை, எனக்குப் பயமாக உள்ளது'' என்று கூறியிருக்கிறார். உடனே எனது தந்தை திண்டிவனம் காவல் நிலையம் சென்று புகார் தர முயற்சித்துள்ளார். அப்போது அங்கிருந்த காவலர்கள், உங்கள் உறவினர், நண்பர் வீடுகளில் தேடிப்பாருங்கள் என்று கூறியுள்ளனர். அதன் பிறகு மறுநாள் 16.3.09 அன்று 2 மணிக்கு என் தந்தை திண்டிவனம் காவல் நிலையம் சென்றபோது, போலிசார், உங்கள் மகன் மணிகண்டன் புதுச்சேரி காவல் நிலையத்தில் இருக்கிறான். அங்கு சென்று பாருங்கள் என்று கூறியுள்ளார்கள். அதன் பிறகு அன்று மாலை 4.45 மணியளவில் புதுச்சேரி வந்து பெரியகடை காவல் நிலையத்தில் எனது தந்தை என்னைப் பற்றி விசாரித்துள்ளார்.
அன்று மாலை 6 மணிக்கு என்னை மீண்டும் சோலை நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, நிரப்பப்பட்ட படிவத்தில் என்னை கையெழுத்துப் போடுமாறு மிரட்டினார்கள். நான் மறுத்தேன். அப்போது அங்கிருந்த காவலர் விநாயகம், “நீ இப்ப போடலன்னா, உன்னை பார்க்க வந்துள்ள உன்னோட அப்பா, அம்மா மேல கேச போட்டு, குடும்பத்தையே அசிங்கப்படுத்தி விடுவோம்'' என்று மிரட்டினார். அப்போதும் நான் கையெழுத்துப் போடாமல் அழுதேன். பின்னர் இரவு சுமார் 9 மணிக்கு முத்தையால்பேட்டை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அரைமணி நேரம் கழித்து, தூரத்தில் இருந்த எனது தந்தையிடம் என்னை காண்பித்துவிட்டு அவரை அழைத்துச் சென்றார்கள். அன்று இரவு முழுவதும் என்னிடம் கையெழுத்து கேட்டு மிரட்டினார்கள். போடவில்லை. குடும்பத்தினர் மீது வழக்குப் போடுவதாக அச்சுறுத்தினார்கள். அத்துடன் இல்லாமல் இரவு முழுவதும் தூங்கவிடாமல் அடித்து, மிரட்டி சித்திரவதை செய்தனர்.
போலிசாரின் சித்ரவதை, அச்சுறுத்தல், மிரட்டலை தாங்க முடியாமல் மறுநாள் 17.3.09 அன்று காலை 9.30 மணியளவில் கையெழுத்திட்டேன். என்ன எழுதியிருந்தார்கள் எனத் தெரியவில்லை. எனது பெற்றோரிடம் பேச வேண்டும் என்பதற்கும் மறுத்தார்கள். பின்பு சோலைநகர் காவல் நிலையம் அழைத்துச் சென்று அடைத்தனர். அதன் பிறகும் என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லவில்லை. மாறாக, அவர்கள் அடித்து சித்திரவதை செய்ததால் ஏற்பட்ட காயங்கள், வீக்கங்கள் குறைய தைலம், மருந்துகள் கொண்டு வந்து கொடுத்து போட்டுக் கொள்ளச் செய்தனர். மறுநாள் 18 ஆம் தேதியும் எனக்கு தைலம் கொண்டு வந்து கொடுத்து வீக்கம், காயங்களுக்கு தடவச் சொன்னார்கள்.
பின்பு, மறுநாள் 19 ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு மருத்துவரிடம் காட்டுவதற்கு முன்பு, என்னிடம் உதவி ஆய்வாளர் பழனிவேல், காவலர் ஜான் ஆகிய இருவரும், “டாக்டரிடம் இந்த காயம், வீக்கம் எல்லாம் எப்படி ஏற்பட்டது என்று கேட்டால், பைக்கிலிருந்து விழுந்துவிட்டதாகவும், விழுந்து ஒரு வாரமாகி விட்டதாகவும் சொல்லு. உனக்கு பெயில் கையெழுத்து நான் தான் போடனும். என் பேச்ச கேக்கலன்னா நீ அவ்வளவுதான்'' என்று மிரட்டினார்கள். பின்பு அங்கிருந்து மாலை 4.30 மணியளவில் நீதிமன்றம் அழைத்துச் சென்றனர். ஜட்ஜிடமும் அடித்ததை சொல்லக் கூடாது என்று மிரட்டினார்கள். ஆஜர்படுத்தும்போது, “கைது செய்தபோது மீட்ட பொருட்கள் எங்கே?'' என்று ஜட்ஜ் கேட்டதும், காவல் நிலையத்தில் இருப்பதாக கூறினார்கள். எடுத்து வருமாறு ஜட்ஜ் கூறினார். அதன் பிறகு மாலை 5.30 மணிக்கு ஏதோ ஒரு நகையை காட்டி, என்னை ரிமாண்டு செய்து, புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைத்தார்கள்.
பின்பு, என்னை 23 ஆம் தேதி புதுவை போலிசார் கஸ்டடி எடுத்து, இரவு 12.30 மணிக்கு திண்டிவனத்தில் உள்ள என் வீட்டிற்கு அழைத்துச் சென்று, வீட்டிலிருந்த அனைத்துப் பொருட்களையும் கலைத்துவிட்டு, நான் ஸ்டிக்கர் டிசைன் செய்கின்ற கம்ப்யூட்டரை எடுத்துக் கொண்டு, என்னை பெரியகடை காவல் நிலையத்தின் ஒரு அறையில் பூட்டி விட்டனர். அதன் பிறகு என்னை எதுவும் விசாரிக்காமல், 27.3.09 அன்று மாலை என்னை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெயில் கிடைக்காமல் சிறையில் இருந்த என்னை, ஒரு மாதம் கழித்து 23.4.09 அன்று தமிழ் நாடு விழுப்புரம் தாலுகா காவல் நிலைய அதிகாரிகள், என்னை காவல் வாகனத்திலேயே அழைத்துச் சென்றனர். உதவி ஆய்வாளர், “ஏண்டா அந்தப் பெண்ணை கற்பழித்தாய்?'' என்று கேட்டார். அதற்கு “நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நீங்கள் தவறான நபரை கைது செய்து விட்டீர்கள்'' என்று கூறி அழுதேன். அப்போது அவர்கள் வாகனத்திலேயே லத்தியால் என்னை அடித்தனர்.
விழுப்புரம் ஜே.எம். நீதிமன்றத்திற்கு என்னை அழைத்துச் சென்றனர். அங்கு போன பிறகுதான், வினோதினி என்கிற பெண்-லட்சுமியின் மகனும், சித்ராவின் தம்பியுமான மணிகண்டன் உள்ளிட்ட பலர்-தன்னைக் கெடுத்ததாக தந்த புகாரில் வழக்குப் பதிவு செய்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலிசார், பெயரை வைத்து என்னை தவறாக கைது செய்தது புரிந்தது. என்னுடைய தந்தை பெயர் தேவதாஸ். தாயார் பெயர் பிரகன்நாயகி. நீங்கள் நினைக்கின்ற மணிகண்டன் நான் கிடையாது என்று எவ்வளவு சொல்லியும் போலிசார் கேட்கவில்லை. என்னை ரிமாண்டு செய்து மீண்டும் புதுவை மத்திய சிறையில் அடைத்தனர். பின்பு நான் 28.5.09 அன்று ஜாமீனில் வெளியில் வந்தேன்.
நான் போலிசாரால் சட்ட விரோதக் காவலில் வைத்து சித்திரவதைக்கு ஆளான நேரத்தில், என்னைத் தேடி வந்த எனது தந்தையிடம் ஆய்வாளர் வீரவல்லபன், “உனது மகன் 15 பவுன் நகை திருடி வித்துவிட்டான். ஒன்று அந்த நகையைக் கொடு; இல்லை என்றால் 15 பவுனுக்கான பணத்தைக் கொடு. உன் பையன் பேர்ல எதுவும் கேஸ் இல்லாம பார்த்துக் கொள்கிறேன். இல்லன்னா உங்க மொத்த குடும்பத்தையும் திருட்டு கேசுல தூக்கி உள்ள போட்டுடுவோம்'' என்று மிரட்டியுள்ளார். அதற்கு என் தந்தை, “என் பையன் அந்த மாதிரி பையன் இல்லை. எங்களிடம் அவ்வளவு பணமும் இல்லை'' என்று கூறியுள்ளார். இரண்டு நாள் கழித்து ஆய்வாளர் எனது தந்தைக்கு தொலைபேசி செய்து, “பணம் ரெடியாயிடுச்சா'' என்று கேட்டு மிரட்டியுள்ளார். என்னைப் பணையம் வைத்து, எனது பெற்றோரை மிரட்டிப் பணம் பறிக்க நினைத்த போலிசாருக்கு, பணம் கிடைக்காத நிலையில், திருட்டு வழக்கில் என்னைப் பிடித்து விசாரித்துக் கொண்டிருப்பதாக, அன்று மாலையே பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டனர்.
போலிசார் என்று தெரியாத நிலையில், என்னிடம் ரவுடித்தனமாக நடந்து கொண்டவரிடம் "யார் நீ?' என்று கேட்டதற்காக என்னை சித்தரவதை செய்து, பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்து, குடும்பத்துடன் அவமானத்தைச் சந்தித்து-பொய் வழக்கிற்காக தினம் தினம் நீதிமன்றமும், நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட புதுவை போலிஸ் நிலையமும் அலைந்து கொண்டிருக்கின்ற எனக்கு நீதி கிடைக்குமா?' இது குறித்து "இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மய்ய'த்தின் ஒருங்கிணைப்பாளர் மோகன் நம்மிடம் கூறும்போது, “அரசாங்கம்தான் இப்படியென்றால் மனித உரிமை ஆணையங்கள் அதைவிட மோசமாக உள்ளன. புதுச்சேரியில் மனித உரிமை ஆணையம் இல்லை. மனித உரிமைக்குழுதான் உள்ளது. மணிகண்டனை அவர் அனுப்பிய புகாரின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என்று அழைத்து விசாரிக்காமல், “நீங்கள் இதை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் எதுவும் செய்ய முடியாது'' என்று கூறி அனுப்பியுள்ளனர். அப்புறம் எதற்கு, யாரை ஏமாற்ற இந்த மனித உரிமைக் குழுவை வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை'' என்றார்.
கொடுமை : 3
கூடை, முறம் செய்து விற்பனை செய்யும் பழங்குடியின குறவர் சமூகத்தைச் சேர்ந்த சரவணன், தன்னுடைய தொழிலை செய்யாமல் அன்றாடக் கூலியாக கட்டட வேலையை, சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வந்துள்ளார். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் கட்டட வேலை செய்தபோது, திண்டிவனம், செஞ்சி ரோட்டில் உள்ள சரோஜா-ஏழுமலை ஆகியோரின் மகள் ஆரியமாலாவிற்கும், சரவணனுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு இருவரும் திண்டிவனத்தில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு வினோத் (10), வித்யா (7), விக்னேஷ் (3) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.
சென்னை, புதுச்சேரி போன்ற இடங்களுக்குச் சென்று அங்கேயே தங்கி வேலை செய்த சரவணன், வாரம் ஒரு முறையோ, இரண்டு வாரத்திற்கு ஒருமுறையோ திண்டிவனம் வந்து குடும்பத்தைப் பார்த்து விட்டுச் சென்றுள்ளார். அவ்வப்போது செல்போனிலும் பேசியுள்ளார். தற்பொழுது சில நாட்களாக பாண்டிச்சேரியில் கட்டட வேலை செய்து வந்துள்ளார். சென்ற சூன் மாதம் வீட்டிற்கு வந்து, மனைவி குழந்தைகளிடம் பாண்டிச்சேரிக்கு வேலைக்குப் போகிறேன் என்று சொல்லி சென்றுள்ளார். இரண்டு நாள் கழித்து போனும் செய்துள்ளார். அதற்குப் பிறகு தொலைபேசியும் இல்லை, ஊருக்கும் வரவில்லை. வேலை அதிகமிருக்கும்; அடுத்த வாரம் வந்து விடுவார் என்றிருந்தனர் குடும்பத்தினர்.
இந்நிலையில் 25.6.09 அன்று காலை 9 மணியளவில் சரவணன் வீட்டைத் தேடிச் சென்ற இரண்டு பாண்டிச்சேரி போலிசார், சரவணனை சந்தேக கேசில் கைது செய்து, சிறையில் அடைத்திருந்ததாகவும், உடல் நிலை சரியில்லாமல் பாண்டிச்சேரி பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது இறந்துவிட்டதாகவும் கூறிவிட்டு போலிசார் சென்றுள்ளார்கள். கணவனின் உடலைப் பார்க்க உறவினர்களுடன் கிளம்பிக் கொண்டிருந்த ஆரியமாலாவிற்கு, புதுச்சேரி காலாபட்டு சிறைச்சாலையிலிருந்து தந்தி வந்துள்ளது. அதில், “கைது செய்யப்பட்டிருந்த தங்கள் கணவர் உடல் நிலை சரியில்லாமல் புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக'' இருந்தது. அதன் பிறகு உறவினர்களுடன் பகல் 12-30க்கு புதுச்சேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
போலிசார் உடலைப் பார்க்க அனுமதிக்காத நிலையில், போலிசாருடன் சண்டையிட்டுள்ளனர். அதன் பிறகு மாலை 5 மணிக்கு சரவணன் உடலைப் பார்க்க அனுமதித்துள்ளார்கள். பிண அறையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலில் சுற்றியிருந்த துணிகளை அவிழ்த்து முழு உடலையும் பார்த்துள்ளார்கள். காதிலும், மூக்கிலும் ரத்தம் ஒழுகியிருந்துள்ளது. தலையில் கடுமையான அடிபட்ட ரத்த காயம் இருந்ததுள்ளது. இரண்டு கால்களிலும் அடிபட்ட நிலையில், ரத்தம் கட்டியிருந்த இடத்தில் பேன்டேஜ் போடப்பட்டிருந்தது. மேலும், இடது பக்க பல்லும் உடைந்திருந்தது. தகவல் அறிந்த சரவணனின் உறவினர்கள் பலர் மறுநாள் மருத்துவமனையில் கூடியுள்ளனர். எந்தவித குற்றச் செயலிலும் ஈடுபடாத சரவணனை சித்திரவதை செய்து சாகடித்த புதுச்சேரி போலிசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மருத்துவமனை எதிரில் சாலை மறியலும், ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளனர். அதன் பிறகுதான் அது போலிசின் சித்திரவதை கொலை என்பது தெரியவந்தது.
சரவணன் இறந்துவிட்டதாக 25 ஆம் தேதி காலை புதுச்சேரி போலிசார் கூறி விட்டு சென்றபிறகு, சரவணன் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தந்தி ஒன்று வந்திருக்கின்றது. அதைப் பெற்றுக் கொண்டு அவர்கள் புதுச்சேரி சென்றனர். அதன் பிறகு ஒதியஞ்சாலை போலிஸ் ஸ்டேஷனில் இருந்து சரவணன் 24.6.09 அன்று வழக்கு எண் 296/2009ன் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக கடிதம் வந்துள்ளது. பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் வாங்கி வைத்துள்ளார்கள். அதன் பிறகு, சரவணின் மாமனார் ஏழுமலை அவர்களிடம் புதுச்சேரி போலிசார், காலாபட்டு காவல் நிலைய முதல் தகவல் அறிக்கை எண் 101/2009, நாள் 26.06.09 இன் கீழ் சரவணன் கைது செய்யப்பட்டதாக அதன் நகலை தந்துள்ளனர்.
ஒரு கொலையை மறைக்க தொடர்ந்து தவறு மேல் தவறிழைத்து வரும் புதுச்சேரி போலிசாரின் வன்செயல் இத்துடன் முடிந்து விடவில்லை. கொலையான சரவணன் உடன் வேலைக்குச் சென்ற அவரது உறவினர் திண்டிவனத்தைச் சேர்ந்த அய்யனார் (28) இதுவரை எங்கிருக்கிறார் என்பது குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை. புதுச்சேரி போலிசாரால் அவருக்கும் ஏதேனும் நிகழ்ந்திருக்குமோ என்ற அச்சத்தில் அய்யனாரின் மனைவி சுகுணா, 16.07.09 அன்று திண்டிவனம் ரோசனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
சரவணனின் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் செய்தபோது வந்திருந்த புதுவை அரசு அதிகாரிகள், சரவணனின் குடும்பத்திற்கு நிவாரணம் அளிப்பதாக உறுதியளித்தனர். ஆனால், இதுவரை அது குறித்த எந்த நடவடிக்கையையும் அரசு தொடங்கியதாகத் தெரியவில்லை. இந்த சாவிற்கு நீதி விசாரணை கேட்டு, காலாபட்டு சிறைக் கைதிகள் 3 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் நடத்திய சம்பவம் முக்கியமானதாகும். ஆனால் இதற்கும் அரசு அசைந்து கொடுக்கவில்லை. முதலிரண்டு சம்பவங்களைப் பார்க்கும் நிலையில் சரவணனுக்கு என்ன நடந்திருக்கும், எப்படி நிகழ்ந்திருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. ஏழை என்றால் அரசின் நிவாரணம் பெறக்கூட தகுதியில்லாதவர்கள் என்றாகி விட்டதோ? சரவணன் எந்தவொரு அரசியல் கட்சியிலோ, சாதி அமைப்பிலோ இல்லாததால், அவர் கொலை செய்யப்பட்டது கண்டுகொள்ளப்படாமலே போய்விட்டது.
புதுச்சேரியில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப இருக்க வேண்டியதைவிட, தேவைக்கு அதிகமாக போலிசார் புதுவையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனால்தான் புதுவை போலிசார் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இது குறித்து காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசுகள், தவறு செய்யும் போலிசார் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களைப் பாதுகாக்கின்றன. போலிசாரின் இந்தக் குற்றச் செயல்களுக்கு எல்லாம் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
காவல் நிலைய சித்திரவதைக் கூடங்களை அகற்ற வேண்டும்
புதுச்சேரி போலிசாரின் இதுபோன்ற கொடுமைகளை எதிர்த்து பல்வேறு இயக்கங்களை நடத்தி யுள்ள பேராசிரியர் கல்விமணி அவர்களிடம், புதுவை போலிசாரின் சித்திரவதை குறித்து கருத்து கேட்டோம். அவர் பின்வருமாறு கூறினார் :
“மனித உரிமைக்கு என முதலில் 1993இல் தனியாக சட்டம் வந்தது. அதன் பிறகு டி.கே. பாசு கொலை வழக்கில் போலிசாருக்கு எனத் தனியாக வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டன. வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளில் கூட, தமது கடமையை புறக்கணிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, போலிசார் மீது மட்டுமே 90 சதவிகிதம் புகார்கள் அளிக்கப்படுகின்றன. சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய போலிசார்தான், சட்ட மீறலைச் செய்து வருகிறார்கள். காவல் நிலையத்திற்கு மட்டும்தான் எந்த ஒரு மனிதனும் துணையில்லாமல் தனியாக போகத் தயங்குவான். போலிசார் மீதான நம்பிக்கையின்மையைத்தான் இது காட்டுகிறது.
இதே புதுச்சேரியில்தான் 1993 ஆம் ஆண்டு ஒதியஞ்சாலை, 1998 இல் கிரும்பாக்கம் காவல் நிலையத்தில் "லாக் அப் டெத்' நடந்தது. இது மட்டுமில்லாமல், பெரியகடை போலிசார்தான் 1991 இல் அத்தியூர் விஜயா என்கிற பழங்குடி இருளர் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்தனர். இந்த வழக்குகளில் எல்லாம் போலிசார் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், போலிசாரின் குற்றங்கள் குறைந்தபாடில்லை. புதுச்சேரி போலிசார், முதல் சம்பவத்தில், திருட்டு வழக்கை ஒத்துக்கொள்ளச் சொல்லி அடிக்கிறார்கள். இரண்டாவது சம்பவத்தில், 15 பவுன் நகை அல்லது அதற்கான பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். பணம் இல்லை என்றதும், பொய்வழக்கில் கைது செய்கிறார்கள். மூன்றாவது நிகழ்வில், சரவணனை திருட்டை ஒத்துக்கொள்ளச் சொல்லி போலிசார் செய்த சித்ரவதையால் அவர் இறந்திருக்க வேண்டும்.
புதுச்சேரியில் உள்ன அனைத்து காவல் நிலையங்களையும் உயர் நீதிமன்றத் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும். காவல் நிலைய மாடிகளில் உள்ள சித்திரவதைக் கூடங்களை கண்டறிந்து, உடனடியாக அகற்றி, அதற்குக் காரணமான காவலதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மூன்று சம்பவத்திலுமே பாதிக்கப்பட்டவர்கள், சித்திரவதை செய்த போலிசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அனுப்பப்பட்டுள்ளது. சரவணன் கொலை சம்பவத்தில் சி.பி.அய். விசாரணை கேட்டு புகார் அனுப்பப்பட்டுள்ளது. எதிலும் இதுவரை எந்த நடவடிக்கை யும் இல்லை. சரவணன் கொலையானது குறித்து நடவடிக்கை கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட உள்ளோம். சரவணனின் மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்க்கும்போது அவ்வளவு பரிதாபமாக உள்ளது. தமிழக அரசாவது இவர்கள் குடும்பத்திற்கு உதவிட வேண்டும்.''
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
தலித் முரசு - ஜூலை 2009
‘‘எங்களுக்கு நீதி கிடைக்குமா?''
- விவரங்கள்
- ரா.முருகப்பன்
- பிரிவு: தலித் முரசு - ஜூலை 2009