இந்த சமூகத்தில் சாதிவெறி அனைத்து மட்டங்களிலும் ஆழமாக வேர்பிடித்து பரவியிருக்கின்றது. ஒரு 13 வயது சிறுமி, முதலியார் சாதிவெறியனால் துள்ளத் துடிக்க கழுத்தறுத்து கொல்லப்பட்டிருக்கின்றாள். ஆனால் அந்தச் சம்பவம் பெட்டி செய்தி அளவிற்கே பெரும்பாலான பத்திரிகையில் வெளி வந்திருக்கின்றது. ஊடகங்கள் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் அப்பட்டமாகவே தங்களின் சாதிய சார்பை வெளிப்படுத்துகின்றன. எந்தச் செய்தியை முதன்மை செய்தியாக மாற்றி, ஆளும்வர்க்கத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்வது என்ற குறைந்தபட்ச தார்மீக அறம் கூட இல்லாத கீழ்த்தரமான நபர்கள்தான் இன்று பல ஊடகங்களில் ஆசிரியர்களாக இருக்கின்றார்கள். சாதி இந்துக்களின் பிரச்சினை என்றால் அதை உள்ளூர் செய்தியாக இருந்தாலும் உலகச் செய்தியாக மாற்றுவதும், தலித்துகளின் பிரச்சினை என்றால் அதை செய்தியாக வெளியிடுவதற்குக் கூட தகுதியற்றதாக பார்ப்பதும் ஊடக சாதிய மன நோயாளிகளின் வழக்கமாக இருக்கின்றது.
சேலம் ஆத்தூரிலிருந்து 5 கி.மீ தொலைவிலுள்ள தளவாய்பட்டியில் தன்னுடைய பாலியல் வெறிக்கு ஒத்துக்கொள்ள மறுத்த ஒரே காரணத்திற்காக தினேஷ்குமார் என்ற முதலியார் சாதி வெறியன், 13 வயதான சிறுமி ராஜலட்சுமியின் கழுத்தை அரிவாளால் வெட்டி துண்டித்திருக்கின்றான். தடுக்கப்போன ராஜலட்மியின் தாய் சின்னப்பொண்ணுவை ‘தள்ளிபோடி பறத் தேவிடியா’ என்று சொல்லி கீழே தள்ளிவிட்டு சாதிய வன்மத்தோடு இந்த அப்பட்டமான சாதியப் படுகொலையை நிகழ்த்தி இருக்கின்றான். பின்பு துண்டிக்கப்பட்ட சிறுமியின் தலையை ஆத்தூர்-தளவாய்பட்டி சாலையில் வீசிவிட்டு காவல்நிலையத்தில் சரணடைந்திருக்கின்றான்.
காவல்நிலையத்தில் சரணடைந்த முதலியார் சாதிவெறியனான தினேஷ்குமார் தனக்கு முனி பிடித்திருப்பது போல நாடகமாடி இருக்கின்றான். தினேஷ்குமாரின் இந்த நாடகத்திற்கு அவனது மனைவி சாரதாவும் உதவியிருக்கின்றார். தன்னுடைய கணவனுக்கு முனி பிடித்ததால்தான் இது போன்று நடந்துகொண்டதாகக் கூறி கொலையை நியாயப்படுத்தி இருக்கின்றார். இந்தக் கொலையில் தினேஷ்குமாரின் தம்பி சசிகுமாருக்கும் தொடர்பிருப்பதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் காவல்துறை இதுவரை தினேஷ்குமாரின் மனைவியையும், தம்பியையும் கைது செய்யாமல் சாதிவெறியர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தலை துண்டிக்கப்பட்ட சிறுமி ராஜலட்சுமியின் உடல் பெரும் வலியை உருவாக்குகின்றது. எதுபோன்ற சமூகத்தில் வாழ்கின்றோம் என நினைக்கும் போது உடல் முழுவதும் அருவருப்பு உணர்வு தொற்றிக் கொள்கின்றது. நம்மைச் சுற்றி வாழும் ஒவ்வொரு நபரின் மூளைக்குள்ளும் சாதிய மிருகங்கள் இன்னும் உயிர்ப்போடுதான் வாழ்ந்து வருகின்றன. நவீன தொழில்வளர்ச்சியும், அது உருவாக்கிய நாகரிகமும் எந்த வகையிலும் இந்த சாதிய வன்மத்தை ஒழித்துவிடவிலை. அது இன்னும் முன்பைவிட அதிபயங்கரமானதாகவே மாறியிருக்கின்றது. ஒவ்வொரு சாதியும் தன்னுடைய தனித்தன்மையை தக்க வைத்துக் கொள்ள இங்கே மிகத் தீவிரமாக சாதிய அணிசேர்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றன. படித்தவர்கள் கூட சுய சாதிப் பெருமை பேசுவதை இங்கே கவுரவமாக கருதும் போக்கு வேகமாக வளர்ந்து வருகின்றது. தங்களை ஆண்ட பரம்பரையாக காட்டிக்கொள்ள அவர்கள் இறந்த காலத்தில் இருந்து மட்டும் அல்லாமல், நிகழ்காலத்திலேயே ரத்தம் சொட்டும் வரலாறுகளை உருவாக்குகின்றார்கள்.
தலித்துகளின் உடல் மீது ஆண்டாண்டு காலமாக அதிகாரம் செலுத்தி வரும் சூத்திரர்கள், அந்த அதிகாரம் தங்களுக்கு ஆதி அந்தம் இல்லாதது என்று உறுதியாக இன்னும் நம்பிக் கொண்டு இருக்கின்றார்கள். அந்த அதிகாரத்தை மறுக்க தலித்துகளுக்கு ஒருபோதும் அனுமதி கிடையாது என உறுதியாக நம்புகின்றார்கள். அந்த அசிங்கம் பிடித்த கீழ்த்தரமான எண்ணம் தான் இன்று ராஜலட்சுமியைக் கொலை செய்ய தினேஷ்குமாரைத் தூண்டியிருக்கின்றது. நிச்சயமாக ராஜலட்சுமி தலித்தாக இல்லாமல், பெரும்பான்மை சாதியைச் சேர்ந்தவராக இருந்திருந்தால் ராஜலட்சுமியின் தலையைத் துண்டித்து கொலை செய்யும் அளவிற்கு தினேஷ்குமார் போன்றவர்களுக்குத் துணிவு வந்திருக்காது. தலித்துகள் தானே, என்ன செய்தாலும் யாரும் வந்து கேட்கமாட்டார்கள் என்ற சாதிவெறிக் கொழுப்பில் இருந்தே இது போன்ற சிந்தனைகள் பிறக்கின்றன.
இன்று தங்களுக்குக் கிடைத்திருக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி தலித்துகள் இந்த சமூகத்தில் என்னவாக வேண்டுமானாலும் மாறியிருக்கலாம். ஆனால் அவர்கள் ஒருபோதும் தன்னுடைய பழைய சாதிய நிலையில் இருந்து மாறக்கூடாது என சூத்திரர்கள் எதிர்பார்க்கின்றார்கள். அவர்கள் இன்னும் ஆண்ட பரம்பரைக் கனவில் இருந்து மீள மனமில்லாமல் தூக்கத்திலேயே இருக்க விரும்பிகின்றார்கள். ஆனால் காலம் கடந்து ஓடிக்கொண்டே இருக்கின்றது. இன்னும் தங்களின் சுய சாதி வெறியை மாற்றிக் கொள்ளாமல் கையில் அருவாளோடு வலம் வருபவர்கள் அதே அருவாளுக்குப் பலியாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை உணர வேண்டும். ஆண்ட பரம்பரையின் அருவாளைவிட அடிமைகளின் அருவாள் கூர்மையானது என்பதை சாதி வெறியர்களுக்கு வரலாறு கூடிய விரைவில் உணர்த்தத்தான் போகின்றது.
தலித் பெண்களுக்கு ஒரு நீதியும், மற்ற சாதிப் பெண்களுக்கு ஒரு நீதியையும் இந்த சமூகம் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றது. தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் படி மற்ற உயர்சாதிப் பெண்களின் மரண வயது 54.1 என்றால், தலித் பெண்களுக்கு அது 39.5 ஆக உள்ளது. ஆனால் ராஜலட்சுமி போன்றவர்களுக்கோ அது இன்னும் 13 வயதாக சுருங்கி இருக்கின்றது. தமிழ்நாட்டில் தலித் பெண்கள் படுகொலை செய்யப்படுவது கேட்க நாதியற்ற போக்காக நீடித்து வருகின்றது. 2006 ஆம் ஆண்டு 515 தலித் பெண்களும், 2007 இல் 604 பேரும், 2008 இல் 624 பேரும், 2009 இல் 587 பேரும், 2010 இல் 629 பேரும், 2011 இல் 625 தலித் பெண்களும் கொல்லப்பட்டிருப்பதாக எவிடென்ஸ் அமைப்பு தெரிவிக்கின்றது. இவர்களில் 60 சதவீத பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
தலித்துகள் ஒரு பெரும் மக்கள் திரள் அமைப்பாக உருவாக வேண்டியது காலத்தின் தேவை என்பதையே இது உணர்த்துகின்றது. தங்களுக்குள்ளான உட்சாதி வேறுபாடுகளை ஒழித்து அவர்கள் பெரும்பான்மை உழைக்கும் வர்க்கம் என்ற அடிப்படையில் ஒரே அமைப்பாக, ஒரே இயக்கமாக மாறும்போதுதான் சாதி வெறியர்களின் அருவாளுக்கு நிச்சயமாக பதில் சொல்ல முடியும்.
- செ.கார்கி