trichy_562

திருச்சி மேலப்புதூர் கல்லறையில் உள்ள தீண்டாமைச் சுவரை, 30.10.2010 அன்று, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தினர் இடிக்கத் தொடங்கியவுடன், காவல் துறையினர் விரைந்து சென்று தடுத்து, தீண்டாமையை நிலைநாட்டினர். 

ஒரு தலித்தான டாக்டர் அம்பேத்கர், எவ்வாறு தன்னை உயர்த்திக் கொண்டு, அனைத்து இந்தியர்களின் உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஓர் அர சமைப்புச் சட்டத்தை இயற்றினாரோ - அதேபோல, நீங்கள் யாராகவும் இருக்கலாம், நீங்கள் எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம்; அது ஒரு பொருட்டல்ல. ஒவ்வொரு மனிதரும் கடவுள் கொடுத்த ஆற்றலை நிறைவாகப் பயன்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

- அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்திய நாடாளுமன்றத்தில் (8.11.2010) ஆற்றிய உரையில்

ஆதிக்கத்தை உள்ளடக்கிய சமூக நீதி!

தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் - "எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் - 1989' இன் கீழ் பதிவு செய்யப்படுகின்றன என்று தமிழக அரசு (3.11.2010) அறிவித்துள்ளது. இவ்வழக்கின் விசாரணை நடைமுறைகளில் 13 கட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு கட்டத்தையும் கடப்பதற்கு ஒரு மாத காலம் ஆகிறது. இச்சூழலில் சாட்சிகள் சம்பவத்தை மறந்துவிடும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கருதுகிறார்கள்! ஆதிதிராவிடர் நலத்துறையின் "சமூக நீதி மற்றும் மனித உரிமைகள்' பிரிவு தயாரித்துள்ள இந்த ஆவணம், 2,822 வழக்குகள் நீதிமன்றங்களிலும், சிறப்பு நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கிறது. 2006 ஆம் ஆண்டிலிருந்து, இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 1.5 கோடி ரூபாய் நிவாரணத் தொகை அளிப்பதற்காக, ஒவ்வொரு ஆண்டும் அரசு அனுமதிக்கிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் மட்டும் தலித் மக்களுக்கு எதிரான 353 வழக்குகள் உள்ளன; சிவகங்கை : 310; திருநெல்வேலி : 220; விழுப்புரம் : 220; விருதுநகர் : 205; திண்டுக்கல் : 158; தஞ்சாவூர் : 136; ராமநாதபுரம் : 131; நீலகிரி : 7; சென்னை : 18, கோயம்புத்தூர் : 10. இவ்வாண்டு நடைபெற்ற ஆய்வின்போது, 174 கிராமங்களில் அதிகளவில் வன்கொடுமை நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

சமூக நீதிக்குப் பெயர் பெற்ற மண்ணாக, திராவிட இயக்கங்களால் போற்றப்படும் மண் தமிழ் மண். ஆனால், பாரம்பரியமிக்க இம்மண்ணில்தான் ஒவ்வொரு ஆண்டும் 1000 சேரித் தமிழர்கள் மீது வன்கொடுமைத் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. அந்நியர்கள் எவரும் இத்தாக்குதலுக்கு காரணமில்லை. (ஊர்த்) தமிழர்கள்தான் காரணம்! தமிழகத்தின் அத்துணை கிராமங்களும் ஊர் என்றும் சேரி என்றும் பிரிந்திருப்பதை ஓர் வன்கொடுமையாக அரசும் பதிவு செய்வதில்லை; தமிழர்களுக்கான இயக்கங்களும் இப்பாகுபாட்டை கண்டு கொள்வதில்லை. ஏனெனில், அது இயற்கையானது - "சகோதர சண்டை.' சண்டை என்றால், இருபுறமும்தானே இழப்புகள் இருக்க வேண்டும்? ஆனால், இங்கு சேரிப்பக்கம் மட்டும்தானே காலங்காலமாக இழப்புகளும் இழிவுகளும் தொடர்கின்றன. எனவே இது, சண்டை அல்ல; ஆதிக்கம். ஏகாதிபத்தியம், அந்நியர் ஆதிக்கம், தேசியம் பற்றி எல்லாம் வாய்கிழியப் பேசுபவர்கள், இந்த "சகோதர/சக ஆதிக்கம்' பற்றி மட்டும் வாய் திறப்பதில்லை. ஒருவேளை, இந்த ஆதிக்கத்தை உள்ளடக்கிய மநு நீதியைதான் சமூக நீதி என்கிறார்களோ என்னவோ! 

தீண்டாமையின் உயரம் 15 அடி

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 40ஆவது வார்டு எடமலைப் பட்டிப்புதூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவில், சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலித் மக்கள் வசித்து வருகின்றனர். தமிழக அரசால் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட இந்த இடத்தில் வசித்து வரும் இவர்கள், நீண்ட காலமாக சக்திவேல் காலனி வழியாகத்தான் திருச்சி - மதுரை சாலை வழியாக சென்று வந்தனர். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள சாதி இந்துக்கள், தலித் மக்கள் காலங்காலமாகப் பயன்படுத்தி வந்த இந்த சாலையை தடுத்து, சுமார் 15 அடி உயரத்திற்கு சுவர் எழுப்பி விட்டனர். இச்சுவரை அகற்ற வலியுறுத்தி, தலித் மக்கள் பலமுறை வலியுறுத்தியும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ("இந்தியன் எக்ஸ்பிரஸ்' 24.10.2010). இப்பிரச்சனையை மார்க்சிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையிலெடுத்தது. “இத்தீண்டாமைச் சுவரை அரசு ஒரு வாரத்தில் இடிக்கவில்லை எனில், எங்கள் இயக்கமே இச்சுவரை இடித்துத்தள்ளும்’ என்று இம்முன்னணியின் தலைவர் பி. சம்பத் அறிவித்தார். அதன்பிறகு அரசு தலையிட்டு, இச்சுவரை இடித்துள்ளது. வெளிப்படையான தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்டுவிட்டது; மறைந்து நிற்கும் சாதிச் சுவரை எதைக் கொண்டு இடிப்பது?

ஜாதிய சமூகத்தை எதிர்த்து நிற்கும் முருகன்

ஓ. முருகன் (35) என்பவர், கடந்த 20 ஆண்டுகளாக பட்டுக்கோட்டை நகராட்சியில் உள்ள பாரதி நகரில் குடியிருக்கிறார். தஞ்சாவூரில் உள்ள இந்நகரத்தில் குடியிருக்கும் ஒரே தலித் குடும்பம் இவருடையதுதான்! ஒரு தலித் குடும்பம் இங்கு வீடு கட்டி வசிப்பதை, சாதி இந்துக்கள் விரும்பவில்லை. அவர்கள் நீண்ட நாட்களாக இவரை காலி செய்யச் சொல்லி மிரட்டி வருகின்றனர்; பிறகு அவர் வீட்டின் முன்னால் குப்பைகளை கொட்டத் தொடங்கினர். இருப்பினும், முருகன் அமைதி காத்தார். அதன் பிறகு ஒரு பெரிய மரத்தை வெட்டி, அவர் வீட்டு முன்னால் போட்டனர். அதன் பிறகு, சமூகப் புறக்கணிப்பு தொடர்ந்தது. தற்பொழுது சாலையை விரிவாக்குகிறோம் என்ற பெயரில், அவர் வீட்டு முன்பு தடுப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இன்றளவும் முருகனின் குடும்பம், சமூகப் புறக்கணிப்பை எதிர்நோக்கியிருக்கிறது. அவருக்கு அந்த கிராமத்தில் யாரும் வேலை கொடுப்பதில்லை. அவர் 48 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தஞ்சாவூருக்கு சென்று வேலை பார்த்துவிட்டு, நடு இரவில்தான் வீடு திரும்ப முடியும். பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் இது குறித்துப் புகார் செய்தும், இதே நிலைதான் நீடிக்கிறது. காவல் துறையினருக்கு இது ஒன்றும் புதிய பிரச்சினை அல்ல. நான்கு மாதங்களுக்கு முன்பு, முருகேசனை மிரட்டிய சாதி இந்து இளைஞர்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. அவர் வீட்டு முன்பு வைக்கப்பட்ட குப்பைத் தொட்டியை அகற்ற புகார் கொடுத்தபோது, காவல் துறை உடனே அகற்றியிருக்கிறது. ஆனால் சமூகப் புறக்கணிப்பை காவல் துறையால் தடுக்க முடியவில்லை. அதனால் வேடிக்கை பார்க்கிறது ("டைம்ஸ் ஆப் இந்தியா', 4.11.2010). சாதி இந்துக்களுக்கு சவாலாக துணிச்சலுடன் அங்கேயே வாழ்வது என்று தீர்மானித்திருக்கும் முருகனுக்கு நம் வாழ்த்துகள்! 

ஜனநாயகத்தை அசிங்கப்படுத்தும் இந்துக்கள்

சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டைக்கு அருகில் உள்ள கள்ளங்குடி ஊராட்சியின் தலைவர் பூமயில் (42). இவர் காவல் துறையிடம் அளித்துள்ள புகாரில், தான் ஒரு தலித் என்றும், கடந்த நான்கு ஆண்டுகளாக இவ்வூராட்சி மன்றத்தின் தலைவராகப் பணியாற்றுவதாகவும், நவம்பர் 3 அன்று பொருட்களை வாங்க தான் ஒரு ரேஷன் கடைக்கு சென்றபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி (கள்ளர் சாதி) என்பவர் தன்னை தடுத்து நிறுத்தி, சாதி பெயரைக் குறிப்பிட்டு அசிங்கமாகப் பேசி, செருப்பால் அடித்ததாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரியிருக்கிறார். அந்த ஊர் மக்கள் இக்கொடுமையை வேடிக்கை பார்த்துள்ளனர். ஓர் ஊராட்சி மன்ற தலைவர் என்றும் பாராமல், அவரை சாதி இந்துக்கள் இந்தளவுக்கு கேவலப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், அந்த ஊரில் இருக்கும் எளிய தலித்துகளின் நிலைமையை விளக்கத் தேவையில்லை. வழக்கம்போல் காவல் துறை வழக்கைப் பதிவு செய்து, ராஜேஸ்வரியை காணவில்லை என்று கூறியுள்ளது ("இந்தியன் எக்ஸ்பிரஸ்' 5.11.2010). பெண்களை அதிகாரப்படுத்துவதுதான் ஜனநாயகம் என்றும், இந்நாட்டின் முதல் குடிமகளாக ஒரு பெண்தான் இருக்கிறார் என்றும் சிலாகிக்கிறார்கள். ஆனால், நடைமுறையில் ஜனநாயகத்தை செருப்பால் அடிக்கும் ஜாதி நாயகம்தான் கோலோச்சுகிறது. 

தீட்டுப்படுத்த தயாராவீர்!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் கோயிலில் தலித் மக்கள் நுழைய, சாதி இந்துக்கள் அனுமதிப்பதில்லை. 2005 சனவரியில், உத்தமபாளையத்திலுள்ள மாரியம்மன் கோயிலில் தலித் மக்கள் நுழைய அனுமதி கேட்டபோது, இந்து அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், தலித்துகள் கோயிலில் நுழையும் உரிமையை உறுதிப்படுத்தினர். உத்தமபாளையம் கோயில் நுழைவு போராட்டக் குழுவின் அமைப்பாளர் எஸ். கருப்பையா கூறுகிறார் : “தலித் மக்கள் கோயிலுக்குள் நுழைந்ததால் தீட்டுப்பட்டுவிட்டது என்று சாதி இந்துக்கள் கூறி, தற்பொழுது பொது இடத்தில் அவர்கள் இன்னொரு கோயிலை கட்டி, அதற்கு புது உத்தமபாளையம் மாரியம்மன் கோயில் என்று பெயர் சூட்டி, அக்டோபர் 21 அன்று கும்பாபிஷேகமும் நடத்தியுள்ளனர்.’ பல்வேறு பகுதிகளிலிருந்து கும்பாபிஷேகப் பொருட்களோடு திரண்டு வந்த 500க்கும் மேற்பட்ட தலித் மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, சாதி இந்துக்களால் தாக்கப்பட்டுள்ளனர். சாதி பாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவர, 13 அமைப்புகளின் பிரதிநிதிகள் 25.10.2010 அன்று ஒன்றுகூடி பேசியுள்ளனர். இக்கூட்டத்தில், சாதி இந்துக்களுக்கு ஆதரவாக இருந்த அரசு அதிகாரிகளை கண்டித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், 18 பேர் கொண்ட செயற்குழு தேர்வு செய்யப்பட்டு, தலித்துகளின் உரிமையை மீண்டும் நிலைநாட்டுவது என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது ("தி இந்து' 26.10.2010). விரைவில், அக்கோயிலையும் தீட்டுப்படுத்த தலித்துகள் முன்வர வேண்டும்! 

Pin It