தமிழர்கள் மீதான பிறவி இழிவைத் துடைத்தழிப்பதற்காகத் தொடங்கப்பட்ட திராவிட இயக்கம் இடையிலேயே பிளவுபட்டு, திசைமாறி, இறுதியில் ஆட்சியை மட்டும் கைப்பற்றி – இன்று ஒரு தேக்க நிலைக்கு வந்துவிட்டது. இதற்கான மூல காரணமாக அரசியல் மோகத்தையும்; அதற்கு வித்திட்டவராக அண்ணாவையும் சொல்ல முடியும். அண்ணா நூற்றாண்டிற்கு ‘இந்து' நாளேடு சிறப்பிதழ் வெளியிட்டதை, இவ்வரலாற்றுத் துரோகத்திற்கான சான்றாகக் கொள்ளலாம். ஓராண்டு நடைபெற்ற இந்நூற்றாண்டு விழா, தி.மு.க. என்ற ஆளும் கட்சியின் கொண்டாட்டமாகவே சுருங்கிப் போனதற்கும் அதுதான் காரணம்.

தந்தை பெரியார் முன்னிறுத்திய கடவுள் மறுப்பை கல்வெட்டாக நாடெங்கும் வைத்தவர்கள், அதற்கு இணையாக அவர் முன்வைத்த ஜாதி, மத, அரசியல் மறுப்பை மட்டும் திட்டமிட்டு மறைத்து விட்டனர். சிந்து சமவெளித் தமிழன் மீது இழிவைத் திணித்தது இந்து மதம். இதற்கு எதிர்வினையாற்றத் தொடங்கப்பட்ட இயக்கம், அதிகார ஆட்சி வெறியில் இழிவையும் இசைவுடன் ஏற்றுக் கொண்டது. அதன் விளைவு, ‘தமிழன்' என்பது அரசியல் அடையாளமாகவும், ‘ஜாதி' என்பது சமூக, பண்பாட்டு அடையாளமாகவும் – பெருமையும் இழிவும் இரண்டறக் கலந்துவிட்டது. இம்முரண்பாட்டை அவமானமாக எண்ணி, அழித்தொழிக்க எவரும் தயாரில்லை.

திராவிடன் என்ற இன அடையாளத்துடன் விடுதலைக்காகப் போராடுவதற்கு மாறாக, திராவிட நாட்டின் ஆரியர்களையும் முன்னேற்றும் கழகம் என திரித்து, வாக்குகளை மட்டுமே குறிவைத்து செயல்பட்டதால் ஏற்பட்ட ஆபத்தை இன்று அவர்களே அனுபவிக்கின்றனர். அண்ணா நூற்றாண்டைக் கொண்டாடும் கட்சிக்கு எதிரி, அண்ணா பெயரிலேயே அமைந்துள்ள – அவருடைய நூற்றாண்டைக் கொண்டாட மறுக்கும் – ஆரியத் தலைமையிலான கட்சிதானே! இந்த முரண்நகைக்காக ‘அண்ணாயிஸ்டு'கள் வெட்கப்படுவதில்லை. தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுத்ததால் ஏற்பட்ட நிரந்தரப் பக்க விளைவு இது.

‘தி.மு.க.வை அண்ணா தோற்றுவிக்காமல் இருந்திருந்தால், ஆட்சி அதிகாரம் தமிழனிடம் வந்திருக்குமா?' என்ற பட்டிமன்றக் கேள்விகள் அறிவின்பாற் பட்டவையல்ல; அப்பழுக்கற்ற சுயநல அரசியலின் பாற்பட்டவை. சேர, சோழ, பாண்டியர்கள் ஆட்சிக் கட்டிலில் இருந்திடவில்லையா? அன்று தொடக்கம் இன்றுவரையிலும் தமிழன் சூத்திரப் பட்டத்தை சுமந்து கொண்டுதானே ‘அதிகாரத்தில்' திளைக்கிறான். அய்ந்து முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்தும் தமிழக முதல்வரால் தன்/இனத்தின் சூத்திரப் பட்டத்தை அழிக்க முடிந்ததா? இன்னும் நூறாண்டுகளுக்கு ஆட்சியில் இருந்தால்கூட, தமிழர்கள் மீதான இழிவை அகற்றிவிட முடியாது. இந்த இன இழிவைச் சொல்லி, அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்குதான் தேர்தல் அரசியல் பயன்படும்.

தமிழனின் ஆட்சி என்பதற்காகப் பெருமை கொள்ள என்ன இருக்கிறது? முப்பது கல் தொலைவில் இருக்கும் ஈழத்தில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டபோதும் தமிழனின் அதிகாரத்தால் என்ன செய்ய முடிந்தது – சில மணி நேரம் பட்டினி கிடந்து, மண்டியிட்டதைத் தவிர? போருக்குப் பிறகும் நிராயுபாணிகளாக இருக்கும் மக்கள் வதைபடுவதைத் தடுக்க – கடிதம் எழுதி, தீர்மானங்களை முன்மொழிந்து, கோரிக்கை மனுக்களை அளிப்பதற்குப் பெயர் அதிகாரம் அல்ல; அடிமைத்தனம். சட்டமன்றம் தவிர்த்த (சமூகம்/நீதிமன்றம்/அரசு எந்திரம்/ஊடகம்) பிற அதிகாரங்கள் அனைத்தும் இன்றளவும் பார்ப்பனர்களிடம்தானே இருக்கிறது.

இங்கிருக்கும் சேரித் தமிழனையாவது வன்கொடுமைகளில் இருந்து காப்பாற்ற, ஆட்சி அதிகாரம் பயன்படுகிறதா? உடனே, இலவச நலத் திட்டங்கள் பட்டியலிடப்படும். வாக்கு அறுவடைக்காக, அதை காங்கிரஸ்/பா.ஜ.க. ஆட்சிகள்கூட செய்து தொலைக்கும். செந்தமிழ் நாடெங்கும் ‘உத்தப்புர சுவர்கள்' ஊரையும் சேரியையும் பிரித்து நிற்கிறதே! இச்சமூகக் கொடுமைகளை மறைப்பதற்குதான் அண்ணாவின் அரசியல் பயன்படுகிறது. அது ஒருபோதும் சமூக – பண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்தி தமிழர்களை உய்விக்காது.

நாற்பதாண்டு கால திராவிட ஆட்சியில் ஊழலும், ஜாதியும், வாரிசு அரசியலும் போட்டிப் போட்டுக் கொண்டு ஒன்றையொன்று விஞ்சி நிற்கின்றன. வேட்பாளர் தேர்வு முதல் கட்சி நிருவாகம், ஆட்சி நிருவாகம் வரை ஜாதி அடிப்படையில் பங்கு போட்டுக் கொண்டு, மறுபுறம் எந்தக் கூச்சமுமின்றி தமிழ் நாட்டையே சமத்துவபுரமாக்கும் லட்சியத்தை அறிவிப்பது – கடைந்தெடுத்த அரசியல் கயமையல்லவா? சமூக – பண்பாட்டு ரீதியாக சமத்துவத்தை எய்தும் வரை, தமிழன் சுயமரியாதையுடன் வாழவே முடியாது. அதற்கு வக்கற்ற தமிழன் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதற்குதான் அண்ணா மாயை!

 

Pin It