கூத்துக்கு மிகவும் தேவையானவை மிருதங்கமும் முகவீணை யும்தான். ஆதியிலே ராகத்த எடுத்து ஆலாபன பண்ணி அடவுகட்டி விருத்தம் வச்சி பாட்ட ஆரம்பிச்சி, ஆடி முடிக்கிற வர தாளத்த உடாம அடிச்சிக்கிட்டே இருக்கணும். அதுவர மூச்சே உடமுடியாது மிருதங்ககாரருக்கு. அதே மாதிரிதான் முகவீணையும். மூச்சியே உட முடியாது. இத, யாரால செய்ய முடியும்? தலித்துகளால்தான் முடியும்.''
பத்து கலைமாமணி விருதுக்குத் தேவையான கலைத்தன்மை, தலித் கூத்துக் கலைஞர்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு என்றும், ஆனால் அக்கலைஞர்கள் தலித்துகள் என்பதாலேயே சுரண்டப்படுகிறார்கள் என்றும், கூத்தின் அனைத்து வகைமைகளையும் தெரிந்து வைத்திருக்கும் அவர்கள், ஏதோ ஒரு வகையில் மட்டுமே பரிச்சயம் உள்ள சாதி இந்துக்களின் ஆளுமையினால் மறைக்கப்படுகிறார்கள் என்றும் கூறுகிறார், கள அனுபவமும் கலை அனுபவமும் எழுத்தியல்பும் கொண்ட ஹரிகிருஷ்ணன். அண்மைக் காலமாக, இலக்கிய உலகில் இவர் "மணல் வீடு' ஹரிகிருஷ்ணன் என்றே அறியப்படுகிறார்.
இலக்கியத்திற்கான சிறு பத்திரிகைத் தளம், தலித்துகளுக்கு மிகக் குறைந்த வெளியையே வைத்திருக்கிறது. அதில் அவர்கள் ஆக்கப் பங்காளிகளாக இருக்கிறார்களே ஒழிய, அதைத் தீர்மானிக்கும் பொறுப்பில் இருந்ததே இல்லை. தலித்துகளே நடத்திய சில பத்திரிகைகளை இந்த கருத்திலிருந்து தவிர்த்துவிடலாம். தான் பணம் போட்டு இதழை வெளிக்கொணர்ந்தும் அதில் தான் நினைத்ததை எழுத முடியவில்லை. அதற்கு வாய்ப்பு இல்லாமலேயே இருந்தது என்று கூறும் ஹரி, “சிற்றிதழ்களில் நமக்கான இடம் தனியாக இருக்கும். அங்கேயே இருக்கலாம்; எழுதலாம்; ஆனால் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். இது எனக்கு வேண்டும், இதை எழுதலாம் என்று கேட்டீர்கள் என்றால் வெளியேற்றப்படுவீர்கள்'' என வாக்குமூலம் தருகிறார். தற்பொழுது "மணல் வீடு' என்னும் சிறு பத்திரிகையை அப்படியான முழு சுதந்திரத்தோடு கொண்டு வருகிறார்.
"மயில் ராவணன்' என்னும் சிறுகதைத் தொகுப்பின் மூலம் தமிழ்க் கதையுலகில் தனியிடம் பிடித்திருப்பவர் ஹரிகிருஷ்ணன். மக்கள் மொழியில் கதை சொல்லுதல் என்ற பெயரில் தன் சாதி சார்ந்த அல்லது தங்கள் சாதிக்கு இணையான சாதியினரின் கதைகளைச் சொன்னவர்கள் பெரியவர்களாக மதிக்கப்படும் தமிழிலக்கியச் சூழலில், உண்மையாக மக்கள் பேசும் மொழியிலேயே கதை சொல்பவர் ஹரி.
1979 – 80களில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நடந்த இந்து முஸ்லிம் கலவரத்தில், ஹரிகிருஷ்ணனின் தந்தை முஸ்லிம்களை ஆதரித்தார் என்பதால், அவர்களுடைய உறவுக்காரர்களாலேயே அவர்களின் வீடு கொளுத்தப்பட்டிருக்கிறது. தன்னுடைய ஆறு குழந்தைகளையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு, சேலம் ஏர்வாடியில் சென்று குடியேறியிருக்கிறார். தீவிரமாக வாசிக்கும் பழக்கமுடைய அவருடைய அண்ணனின் புத்தகங்களைப் படிக்க நேர்ந்த பிறகு, அந்நூல்களை எழுதிய எழுத்தாளர்களுக்கு கடிதம் எழுதும் வழக்கம் இவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அப்படி எல்லாருக்கும் கடிதம் எழுதியுள்ளார் ஹரி. இவருடைய கடிதத்தைப் படித்துவிட்டு சென்னைக்கு வரச் சொன்ன ராஜம்கிருஷ்ணன், இவரிடமுள்ள எழுத்தாற்றலை அடையாளம் கண்டு எழுதச் சொன்னதாகவும், பல இதழ்களை அறிமுகம் செய்ததாகவும், தான் முதன்முதல் எழுதிய கதை அவராலேயே வெளிவந்ததாகவும் கூறுகிறார்.
1996 இல் அவர் வாழும் பகுதியான ஏர்வாடியில் தேனிரும்பு ஆலை வருவதற்கு 1500 ஏக்கர் நிலத்தினை அரசு கையகப்படுத்தியது. அதில் நிலமிழந்து, வாழ்விழந்தோரை முன்வைத்து அக்கதை எழுதப்பட்டது என்பதை நினைவு கூர்கிறார். அதற்குப் பிறகு அவருடைய கதைகள் ஒரு சிற்றிதழில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருந்தது. மக்கள் மொழியிலேயே கதை ஒன்றை எழுதி அனுப்ப, என் கதைகளைத் தொடர்ந்து வெளியிட்ட அவ்விதழ், இந்தக் கதையை வெளியிட மறுத்துவிட்டது. அப்போதுதான் இந்த மொழிநடையிலேயே எழுதுவது எனத் தீர்மானித்தேன்'' என்கிறார் ஹரிகிருஷ்ணன்.
ஹரியின் தொகுப்பில் உள்ள கதைகளின் தலைப்புகள் மக்களின் சொல்லாடல்களிலேயே அமைக்கப்பட்டிருப்பது, அவருடைய தனித்தன்மை. வழக்கமாக கதையை மக்களின் மொழியில் எழுதினாலும் தலைப்பை தன் இலக்கிய ஆளுமையை வெளிப்படும் விதமாகவே வைப்பார்கள் : "குன்னூத்தி நாயம்', "ஊருவாயி', "குடிநாசுவன்', "உத்தமியோலம்', "பெத்தவ', "மூணுத்தலக்கட்டு' என கதைத் தலைப்புகள் அமைந்திருக்கும். ஒவ்வொரு கதையும் ஒரு விளிம்பு நிலை வாழ்க்கையைச் சொல்லும் ஓவியமாகவே இருக்கும்.
“ஏண்டா கேனா, எள நேரத்துல வர்றதுக்கு உனக்கு என்றா கேடு? வெய்ய நேரத்துல வந்து ஏண்டா எந்தாலிய அறுக்கற? இனுமேட்டு நீ எப்ப செரைக்கிறது, நானு எந்நேரந் தண்ணிய வாத்துக்கிட்டு சோறு குடிக்கிறது''ன்னு பண்ணாடிக்கு அவனப் பாத்ததும் பாக்காத மின்னச் சிர்ன்னு நேபாளஞ் சீறிக்கிட்டு வந்தது...... அப்படியே சைசாப்பேசி நைசுபண்டி கவுண்டரக் குந்த வெச்சி,
கத்தியத் தீட்டி மொவறயில வச்சாம்பா. இருந்தாப்பில இருந்து பண்ணாடி சிவுக்குனு எழுந்து தென்ன மரத்துல சாஞ்சி நின்னு வெடுக்குனு கோமணத்த அவுத்துட்டு, “அங்க கெடந்தா கெடக்கட்டும், அதவுடுறா, அப்புறம் பாத்துக்கலாம். இங்க பண்டுறா மொதல்ல''ன்னு முக்கிலியமான எடத்த காட்டும்படி வழுதுப்பேசல அங்கமுத்து.
"குன்னூத்தி நாயம்' கதையிலும் ஒரு காட்சி இருக்கும். போரிங் பைப்பு உடைந்து போனதால் காலனி சனங்க குடிக்கத் தண்ணீரில்லாமல் காடு கிணறு என்று அலைந்து சோர்ந்து போக, மேட்டூர் தண்ணீர் தொட்டியில் ஊர்ப்பக்கம் போய்க் கொண்டிருக்கும் வால்வை கொஞ்ச நேரம் நிறுத்திவிட்டு, சக்கிலித் தெருப்பக்கம் தண்ணீர் வரும் வால்வை திறந்ததற்காய் தண்ணீர் டேங்கிலேயே மணிப் பையனை கட்டிவச்சு அடித்த கவுண்டரின் சாதித்திமிரும், அதை நிலைநிறுத்தப் பயன்படுத்தப்படும் வசவுச் சொற்களும் மிகவும் அப்பட்டமாக அந்தக் கதையில் இருக்கும். இத்தகைய வாழ்வோட்டம் தன் அனைத்துக் கதைகளிலும் இருக்கும்படி எழுதுவது ஹரியின் தலித் எழுத்து வகைமை.
“எழுத்து என்று எதையும் தனியாக நான் யோசிப்பதில்லை. எது என் மனதில் படுகிறதோ அதை எழுதுகிறேன். அதற்காக மனதில் ஊறப்போட்டு வைத்திருந்தேன் என்றெல்லாம் என்னால் சொல்ல முடியாது. ஒரு கதைக்காரன் தன் மனவுணர்ச்சிகளின் அடிப்படையில்தான் பாத்திரங் களை உருவாக்குகிறான். தலித்துகளுக்கு கதை சொல்லும் மரபு இருக்கிறது. கதையினைச் சொல்லும்போது ஆசிரியர் கூற்று என்று வரும். அப்போது, அந்தப் பாத்திரத்தைப் பற்றிய விமர்சனத்தையும் சொல்லுவது என்பதுதான் அது. அப்போது அந்தக் கதாபாத்திரத்தின் சகல பக்கங்களையும் நாம் உணர முடியும். ராமாயணக் கதையில் ராமனின் பாத்திரம் குறித்து பேசுகையில், கூனியின் முதுகு மீது கல்லெடுத்துப் போட்டான் எனக் கூறவரும்போது, “கொழுப்புதானே அது. அந்தக் கயித எதுக்கு அவ மேல கல்லப் போடனும்'' என்று கதை சொல்லியின் விமர்சனம் வரும். அப்படித்தான் நானும் அழகியல், இலக்கியத் தகுதி என்று பார்க்காமல் வாழ்வை அப்படியே எழுதுவது என்பதுதான் நான் தேர்ந்தெடுத்த எழுத்து முறை.
“கதைகள் வாழ்விலிருந்துதான் எடுக்கப்படுகின்றன. ஆனால் நாம் எத்தகைய வாழ்வை வாழ நிர்பந்திக்கப்படு கிறோம். இடரும் இன்னலும் துயரும் கண்ணீரும் இருக்கும்போதுதான் கலகம் பிறக்கும் எழுத்துகளை உருவாக்க முடிந்தது. ஆனால் இன்றைய நிலை, வாழக் கற்றுக் கொண்ட பின் வாழப்படுவதாக இருக்கிறது. தலித்துகளுக்கு கிடைத் திருக்கும் ஓரளவு வசதி வாய்ப்புகள், அவர்களுடைய போராட்ட வாழ்வை மழுங்கடித்துவிட்டன. அதனால்தான் தற்போதைய தலித் எழுத்து வாழ்வைப் பதிவாக்காமல் – இலக்கிய அங்கீகாரத்திற்கும், பதிப்பாளர் அல்லது பத்திரிகையாசிரியரின் கருதுகோளுக் கும் ஏற்ப எழுதப்படுகிறது. அதனால் அவை தலித்துகளால் எழுதப்பட்டாலும் தலித் எழுத்தாக இல்லாமல் இருக்கிறது'' என்கிறார் ஹரி.
அவருடைய இன்னொரு ஆளுமை கூத்தில் வெளிப்படுகிறது. கூத்துக் கலைஞர்களுடனான அவருடைய நட்பும் கூத்தில் அவருக்குள்ள ஈடுபாடும் அவரை ஒரு கூத்தாடியாகவே மாற்றி வைத்திருக்கிறது. தலித் கூத்துக் கலைஞர்கள் எத்தகைய வில்லாதி வில்லன்களாக இருந்தாலும், ஜமாவில் ஓர் ஆளாகத்தான் இருக்க முடியும்; வாத்தியாரா ஆகவே முடியாது என்ற உண்மையில் பொய் யில்லை என்கிறார் ஹரி. கூத்தை தங்கள் வாழ்வாகவே கருதிக் கொண் டிருக்கும் இத்தகைய உண்மைக் கலைஞர்கள் கண்டு கொள்ளப்படுவதில்லை என்ற ஆதங்கம், அவரை அவர்களுக்கான செயல் வீரராக மாற்றியிருக்கிறது. அதற்குக் காரணம் அவர்கள் தலித்துகள் என்பதுதான் என்கிறார்.
பேருந்துகளில் பெட்டிகளுடன் ஏறுகின்ற கலைஞர்களை ஏற்றாமல் மறுக்கின்ற நடத்துநர் தொடங்கி, தாமதமாகச் செல்வதால் ஏசுகின்ற ஊர்க்காரன் அதற்கு தகுந்த "தகுமானம்' சொல்லி, கூத்தினை இரவெல்லாம் நடத்திவிட்டு வரும் அம்மக்களின் வாழ்வு குறித்து - எந்த இலக்கியவாதியும் அரசும் கண்டுகொள்வதில்லை. சினிமாக்காரர்களுக்கு வாரிவாரி விருதுகளை வழங்கும் அரசு, கூத்துக் கலைஞர்களை கூலித் தொழிலாளிகளைப்போல் நடத்துகிறது. அதனால்தான் அவர்களுக்கு நான் விழா எடுத்து விருதுகளை தருகிறேன் என்னும் அவருடைய கோபத்தில் நியாயம் இருக்கிறது.
தலித் கதைசொல்லி, சிற்றிதழ் ஆசிரியர், கூத்துக் கலைஞர் என்னும் பன்முகத்தன்மை இருந்தாலும், தலித் வாழ்வியல் என்னும் பண்பாட்டுத் தளத்தினை தன் ஒற்றை அடையாளமாக்கிக் கொண்டிருக்கிறார் ஹரிகிருஷ்ணன்.
- யாழன் ஆதி