அன்புள்ள தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் அவர்களுக்கு,

வணக்கம். உங்கள் கடிதம் கண்டேன். அக்கடிதத்தில் தோழமை உணர்வும் வருத்தமும் சம அளவில் கலந்திருந்தது. தோழமையுடன் கூடிய ஒரு விவாதமாக வளர்த்தெடுக்கும் உத்தேசத்திலேயே இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

உங்களின் வருத்தம் என்பது சமூகத்தில் அடித்தட்டிலிருந்து வரும் அருந்ததியத் தோழர்களிடமும் நிராகரிப்புத் தொனியிலான விமர்சனங்கள் வருகிறதே என்பதை அடிப்படையாகக் கொண்டு வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. உங்கள் கடிதத்தில் “உங்களைப் போலவே நானும் மனு விரோதன்” என்று உங்களை அடையாளப்படுத்திக் கொண்டீர்கள். அது குறித்து எனக்கு மகிழ்ச்சியே. இருந்தாலும் மரம் அதன் கனிகளால் அறியப்படும் என்று விவிலியம் சொல்வதைப் போன்றே மனுவிரோதிகள் தங்கள் செயல்பாடுகளால் அறியப்படுவார்கள் என்பதை நீங்களும் சொல்வீர்கள் தானே!

நீங்கள் முன்வைக்கும் தகழி, பெருமாள்முருகன், சூர்யகாந்தன் போன்றவர்களிடம் அவ்வாறான மனுவிரோதச் செயல்பாடுகளை காண முடிந்ததா என்பதை உங்களை நீங்களே கேட்டுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இந்த இடத்தில் ஒரு சாதி இந்துவின் பார்வையும், சாதிக்கு வெளியே இருப்பவனின் பார்வையும் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை எல்லாருக்கும் தெரிகின்ற ஒரு உதாரணத்தைச் சொல்லி விளக்கலாம்.

பசும்பொன் என்று பின்னாளில் படம் எடுத்த பாரதிராஜாவும் தன்னை ஒரு கலைஞன் என்று அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் சாதியை விமர்சிப்பது மாதிரி காட்டிக் கொள்ள வேண்டும் என்பது தெரியும். எனவே அவ்வாறான ஒரு காட்சியைத் தன் முதல் மரியாதை படத்தில் வைக்கிறார். வெறும் தொரட்டியோடும் அழுக்கு வேட்டியோடும் இருக்கின்ற ஊர்த்தேவரின் மருமகனான பையனுக்கு கம்மல், மூக்குத்தியென்று சீர்செனத்தியோடு அருந்ததியப் பெண்ணை கட்டி வைப்பதற்கு நன்றிக் கடனாய் அந்தப் பெண்ணின் தந்தை தேவரைப் பார்க்கும் போதெல்லாம் காலில் விழுந்து வணங்குவது போன்று காட்சி வைப்பார். இதன் மூலம் தேவரின் தயாள குணமும் காட்சிப்படுத்தப்படுகிறது. சாதியை உயர்வாகவும் காட்ட முடிகிறது. இடையில் அருந்ததியன் கேவலப்படுத்தப்பட்டால் யாருக்கென்ன? பெரிய சாதி ஒழிப்பு போராளியென நமது தமுஎச கூட அவருக்கு விழா எடுத்தது.

இதே போன்ற ஒரு நிகழ்வை அமீர் என்கிற இஸ்லாமியர் எவ்வாறு காட்சிப்படுத்துகிறார்? இதே போன்று ஒரு தேவர் பையன் ஒரு குறத்திப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் தருணத்தில் தன் குடும்பத்துக்குச் சோறு போட்ட குறத்தி வீட்டுக்குத் தான் நன்றியுள்ளவனாக நடந்து கொள்ள வேண்டும் என அந்த தேவர் பையன் பேசுவதாகக் காட்சி வைப்பார் தனது பருத்தி வீரன் படத்தில். இதுதான் சாதிக்கு வெளியில் இருந்து பார்க்கும் பார்வை இரண்டுக்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது என்று நாம் நம்புகிறேன்.

ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த என்னுடன் அறைத்தோழனாக இருந்தவன் தன்னுடைய சாதியைப் பற்றிச் சொல்லும்போது தன்னுடைய வீட்டிற்குப் பிராமணர் வந்தால் அவர் வந்து விட்டுப்போன பிறகு அவர் உட்கார்ந்திருந்த இடத்தைத் தனது பாட்டி பால் ஊற்றிக் கழுவி விடுவார் என்றுத் தனது சாதியின் உயர்வைச் சொல்லிப் பெருமைப்படுவான். ஒரு சாதியின் உயர்வு என்பது இங்கு எந்த அளவுக்கு தனக்கு கீழுள்ள சாதியை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறதோ, எந்தளவுக்கு வன்கொடுமைகள் செய்கிறதோ அந்தளவுக்கு உயர்ந்த சாதியாக கொள்ளப்படும் என்பது தான் நிதர்சனம்.

Perumal Muruganஅதற்கு மறுதலையாக அக்குறிப்பிட்டச் சாதிகளில் புரையோடிப் போயிருக்கும் மூடத்தனங்கள், இழிவுகள் பம்மாத்துகள் இவற்றைக் கேள்விக்குள்ளாக்குவது என்பதைத் தான் அந்த குறிப்பிட்ட சாதி தனக்கு விடப்பட்ட அச்சுறுத்தலாகக் காணும்.

யூ.ஆர்.ஆனந்தமூர்த்தி தனது பார்ப்பனச் சாதியை தனது சமஸ்காரா நாவலில் இவ்வாறான நோக்கில்தான் படைத்தார். அவ்வாறான பதிவுகள் மேலே குறிப்பிட்டவர்களின் படைப்புகளில் இருக்கிறதா? குறைந்த பட்சம் தலித்துகள் இன்றிருக்கும் நிலை இடையிலே அவர்கள் மேல் சுமத்தப்பட்ட ஒன்று. அவர்களுக்கென்று ஒரு வரலாறு உண்டு என்பதை குறிப்பாலாவது உணர்த்தி இருக்கின்றனவா?

தனது சாதியையும் கேள்வி கேட்காமல், தலித்துகளையும் இழிவுபடுத்தும் நோக்கிலே பதிவு செய்வது அயோக்கியத்தனம். இதை யார் செய்தாலும் தவறு தான் என்கின்ற பார்வை தான் எனது பார்வை. இவ்வாறான பார்வை உங்களிடம் இல்லை என்றால் கூட பரவாயில்லை. என்னிடமும் இவ்வாறான பார்வை இருக்கக் கூடாது என்பது சரியான பார்வைதானா என்று யோசித்துப் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன்.

மற்றபடி இதில் அந்தந்த காலச்சூழல் என்றெல்லாம் சாக்குச் சொல்வது எனக்கு உவப்பானதாக இல்லை. எனது விமர்சனங்களை அந்தந்த படைப்பின் மீது வைக்கும்போது அதற்கான நியாயத்துடன் தான் வைத்திருக்கிறேன் என்று நம்புகிறேன். எனது விமர்சனக் கட்டுரைகளைப் படித்து விட்டுத்தான் நீங்கள் இந்தக் கேள்விகளை எழுப்புகிறீர்களா என்பது எனக்குத் தெரியவில்லை. நீங்கள் படித்திருந்தீர்கள் என்றால் நீங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அந்தந்த கட்டுரைகளிலேயே பதில் இருக்கிறது என்பது தான் எனது கருத்து.

அதேபோல் விரிந்த ஜனநாயக மேடையைக் கட்டியெழுப்புவதற்கும் ஜனநாயப் படை திரட்டலுக்கும் எனது விமர்சனங்கள் இடையூறாகி விடுமோ என்ன்று அஞ்சுவதாக நீங்கள் குறிப்பிட்டது குறித்தும் எனக்கு மாற்றுக்கருத்து இருக்கிறது. கட்டியெழுப்பப்படும் மேடையும், திரட்டப்படும் படையும் விரிவானதாக பெரிதானதாக இருப்பதை விடவும் வலுவானதாகவும், உறுதி கொண்டதாகவும் இருப்பதே அவசியம் என்பது என் கருத்து.

இதைத்தான் ரஷ்யப்புரட்சி மற்றும் கியூபப் புரட்சி அனுபவங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. விரிந்த மேடை, திரளான ஜனநாயகப் படை என்ற எண்ணத்தில் மென்ஷ்விக்குகளை கூட்டுச் சேர்த்துக் கொண்டு லெனின் போல்ஷ்விக் புரட்சியை நடத்தவில்லை என்பது வரலாறு. நமது படையும் நமது மேடையும் உறுதியானதாகவும், வலுவானதாகவும் இருக்க வேண்டுமானால் நாம் இடுவாய் ரத்தினசாமி போன்ற தோழர்களை முன்வைக்க வேண்டுமே தவிர, தங்களது சாதிப் பெருமிதங்களைக் (அல்லது அவ்வாறு போலியாகக் கருதிக்கொள்வனவற்றை) கூட கடந்து வர முடியாதவர்களை அல்ல என்பது என் பார்வை.

ஒரு எழுத்தாளனின் முக்கியத்துவம் அவன் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு கம்யூனிஸ்டு கட்சியின் பேட்ஜை அணிந்திருந்தான் என்பதை மட்டும் வைத்து மதிப்பிடப்படுவதில்லை. துரதிருஷ்டவசமாக இத்தகையப் பரிவுணர்ச்சியின் பேரால் ஜெயகாந்தனைப் போன்ற கொடிய சாதிய வர்ணாசிரமவாதிகளைக் கூட தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் பெருந்தவற்றை நாம் செய்து கொண்டிருக்கிறோம். ஒரே நேரத்தில் ஒருவர் கம்யூனிஸ்டாகவும் சாதியவாதியாகவும் இருப்பது சாத்தியமில்லை என்று உறுதியாக நம்புபவன் நான். நமது மதிப்பீட்டில் எழுத்தாளனுக்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டுமா என்ன?

மற்றபடி உங்களைப் போலவே எனது நண்பரான பெருமாள்முருகனும் வருத்தப்பட்டதாக நண்பர்கள் தெரிவித்தார்கள். எனது நண்பரை விமர்சனம் செய்வது எனக்குத்தான் வருத்தமளிப்பதாக இருக்கிறது. என்ன செய்வது? கொங்கு வட்டாரச் சொல்லகராதி என்ற பெயரில் தனது சாதியின் பேச்சுமொழியில் உள்ளதை மட்டும் கொண்ட ஒரு அகராதியை எழுதி, அதை அதே சாதியை சேர்ந்த ஒருவர் பதிப்பித்து அதே சாதியைச் சேர்ந்த நடிகர் மற்றும் சாமியார் போன்றவர்களை வைத்து வெளியிட்ட அவ்விழாவிற்கு அந்த குறிப்பிட்ட சாதிச் சங்கங்களை சேர்ந்தவர்கள் லாரிகள், வேன்களில் வந்து குவியுமளவுக்கு ஒரு பெரிய சாதிப் புரட்சிக்குக் காரணமாகி விட்டவர் எனது நண்பர்.

போதாக்குறைக்கு பார்ப்பனீய காலச்சுவடின் தூணாக வேறு ஆகிவிட்டார். இப்போது ஒரு நண்பரை சாதியத்துக்குப் பலியாகக் கொடுத்து விட்ட வருத்தத்தோடு, அவரின் எழுத்துக்களில் சாதியம் தட்டுப்படும் இடங்களை சுட்டிக் காட்டுவதைத் தான் நான் செய்தேன். மற்றபடி யார் மீதும் துவேஷமோ பழியுணர்ச்சியோ இல்லை.

முடிந்தால் மீண்டும் பேசுவோம்.

தோழமையுடன்,

- ம.மதிவண்ணன்

Pin It