தீண்டத்தகாத மக்கள் மீது பல நூற்றாண்டுகளாகத் தொடரும் இந்து சமூக அமைப்பின் வன்முறையை, எந்த நவீனமும் தடுத்து நிறுத்திவிடவில்லை; அவர்கள் மீதான வன்முறையை எந்த வகையிலும் அது குறைத்து விடவும் இல்லை. தலித் மக்களுக்கு எதிராக ஒவ்வொரு 20 நிமிடமும் ஒரு குற்றம் இழைக்கப்படுவதாக, மய்ய அரசின் தேசிய குற்றவியல் ஆவணங்கள் பறைசாற்றுகின்றன.

Dalit woman
அரசின் ஆவணங்களுக்குள் வராமல் தடுக்கப்பட்ட வன்முறைகள் ஏராளம். சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாகச் சொல்லப்படும் இந்திய ஜனநாயகத்தின் அனைத்து மாநிலங்களிலும், சட்டத்திற்குப் புறம்பான ஜாதியும் தீண்டாமையுமே கோலோச்சுகின்றன. அண்மையில் மகாராட்டிர மாநிலத்தில் மிகக் கொடூரமாக நடைபெற்ற கயர்லாஞ்சி படுகொலை, கீழ்வெண்மணி படுகொலை போல இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்தும் வரலாற்றிலிருந்து நீங்காது.

இந்திய நாடாளுமன்றத்தில், தலித் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 120 பேர் உள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை, 42 தலித் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதே போன்ற அரசியல் பிரதிநிதித்துவம் அனைத்து மாநிலங்களிலும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. ஆனால், இந்த அரசியல் அதிகாரங்கள் - எந்த வகையிலும் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்துவதாக இல்லை.

இது தவிர குடியரசுக் கட்சிகள், பகுஜன் சமாஜ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற தலித் அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவமும்கூட, தலித்துகள் மீதான வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தி விடவில்லை. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசிலும், மாநில அரசுகளிலும் ஓரளவுக்கேனும் இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த வகையில் லட்சக்கணக்கான தலித்துகள் அரசு நிர்வாகத்தில் பங்கேற்றுள்ளனர். இருப்பினும், வன்கொடுமைகள் மட்டும் நின்றபாடில்லை. மத்திய, மாநில அரசுகள் கோடிக்கணக்கான ரூபாய்களை தலித் மேம்பாட்டிற்கென செலவழிக்கின்றன. இத்தகைய பொருளாதாரத் திட்டங்களும் வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவில்லை!

வேறு எதுதான் தலித்துகள் மீதான வன்கொடுமைகளை முற்றாகத் தடுத்து நிறுத்தும்? அதை இக்கட்டுரை ஆய்வு செய்கிறது. கட்டுரையாளர், ஆந்திரா பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் மானுடவியல் பேராசிரியர்.

தமிழாக்கம்: பூங்குழலி



இந்து சமூகத்தின் அமைப்பு, பழக்க வழக்கங்கள், அனுமானங்கள் ஆகியவற்றின் மீதான சாதாரண ஆய்வுகூட, அது எவ்வாறு ஓர் இறுக்கமான, படிநிலைப்படுத்தப்பட்ட சமூகமாக அமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அந்த அமைப்பிலிருந்து எப்படி தலித்துகள் ஒட்டுமொத்தமாக விலக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் வெளிப் படுத்திவிடும். மரியாதை மரபுகளும், சமூகப் பார்வையும் படிநிலையில் அமைக்கப்பட்டிருப்பதே இந்து சமூகத்தின் முக்கிய அங்கம்.

வன்முறை என்பதன் பரந்துபட்ட விளக்கமான, குறிப்பிட்ட சில தனி நபர்களை அல்லது குழுக்களை மனிதர்களாகக்கூட அங்கீகரிக்காதிருப்பது; அவர்களது மனித அடையாளத்தை மறுப்பது போன்றவையே இந்து அமைப்பின் அடித்தளம். குறிப்பிட்ட சில நபர்களை சமூகத்தின் அங்க மாகவோ, பிறருடன் சமமாக நடத்தவோ மறுக்கும் பண்பாட்டு மதிப்பீடுகளின் நீட்சியே தலித்துகள் மீதான வன்முறையாகும்.

வன்முறையை, அதன் மிகக் கொடூரமான வடிவத்தில், ஒரு தற்காலிகமான சமூகக் கொந்தளிப்பாகவோ, அது நடக்கும் காலத்தின் சீரற்ற நிகழ்வாகவோ விவரிக்க முடியாது. மாறாக, சமூக அமைப்பு கட்டமைக்கப்பட்டிருப்பதன் விதத்திலேயே தலித்துகள் மீது வன்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன. இத்தகைய ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறையே, அவ்வப்போது பல்வேறு வெளிப்படையான வன்முறை நிகழ்வுகளாக வெடிக்கின்றன. தனிப்பட்ட நிகழ்வுகளுக்கும், அமைப்பிற்கும் இடையிலான மறைமுகமான உறவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பார்ப்பனிய கும்பல் தாங்கள் உருவாக்கிய சமூகக் கட்டமைப்பிற்கு வெளியிலிருந்தும், உள்ளிருந்தும் வரும் எதிர்ப்புகளையும் அழுத்தங்களையும் மீறி, அதன் ஒழுங்கை கட்டிக் காப்பதற்காக சமூகத்தின் பிற நடவடிக்கைகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதற்காக அறிவு மற்றும் ஊடகத் தளங்களில் தங்களுக்கு இருக்கும் ஆதிக்க நிலையைப் பயன்படுத்துகின்றனர். தலித்துகள் இச்சமூகத்திற்கு அளிக்கும் பங்களிப்புகளை, ஒட்டுமொத்த சமூகத்தின் மீது தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்காக பார்ப்பனர்கள் சுரண்டுகின்றனர்.

அதே வேளை, தலித்துகள் தாங்கள் கீழான நிலையில் வைக்கப்பட்டிருப்பதிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முயல்கின்றனர். இதனால் பார்ப்பனர்கள் கட்டமைத்துள்ள இந்து சமூக அமைப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதைத் தடுக்க அமைப்பு ரீதியாகவும், அதை ஒட்டிய வேறு பல வழிகளிலும் தலித்துகளை அடிமைத்தளத்திலேயே வைத்திருக்கவும் பார்ப்பனர்கள் தவறுவதில்லை.

அவ்வாறு தலித்துகளை அடக்கி ஒடுக்கவும், பிற சமூகத்தினருக்கு எதிராக அவர்கள் குரல் எழுப்பாமல் தடுக்கவும் கூடிய ஒரு மரபினை அவர்கள் மீது திணிக்க, வன்முறை மிக முக்கிய பங்கை வகிக்கிறது. சமூகத்தின் மிகுந்த கவனம் மிக்க பிரிவினரான பார்ப்பனர்கள், சமூகத்தில் தங்களது நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளவும், சமூகத்தின் முக்கிய அம்சங்களில் முடிவெடுக்கும் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளவும் ஏற்ற வகையில், சமூகத்தின் பிற பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் சிந்தனைப் போக்கை கட்டுப்படுத்துகின்றனர்.

மொழி, இனம், மதம் மற்றும் பாலின வன்முறைகளில், இரு பிரிவினருக்கும் இடையிலான முரண் மிக வெளிப்படையானது. ஆனால், இந்து சமூக அமைப்பைப் பொறுத்தவரை, தலித்துகளும் அந்த சமூக அமைப்பை சார்ந்தவர்களாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளனர். இருப்பினும், தாங்கள் இழிவாக நடத்தப்படுவதற்கு எதிராக அவர்கள் கிளர்ந்தெழும்போதெல்லாம் அது வன்முறையாலேயே எதிர்öகாள்ளப்படுகிறது.

சமூகத்தில் நல்ல நிலையில் தங்களை நிலை நிறுத்திக் கொண்ட சாதியினர், மதமாற்றத்தை எதிர்ப்பதற்கு முக்கியக் காரணம், மதமாற்றம் அவர்களது உயர்ந்த நிலையை கேள்விக்குள்ளாக்குகிறது. அதைவிட முக்கியமாக, மதம் மாறிய தலித்துகள் அச்சமூகத்தின் பிற பிரிவினரிடமிருந்து முற்றிலுமாக விலகி, தனித்து செயல்படத் தொடங்குவதாலுமே ஆகும். தலித்துகளும் இந்துக்கள் என்று தத்துவ அளவில் சாதி இந்துக்கள் ஏற்றுக் கொண்ட போதிலும், அவர்கள் உயர் நிலைக்குச் செல்வதை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்பதற்கு, இதை விட வேறு சான்றுகள் தேவையில்லை.

இந்து புராண இதிகாசங்களை உற்று நோக்குகையில், இந்து சமூக அமைப்பை கேள்விக்குள்ளாக்கும் சூழல் – அமைப்பிற்குள்ளிருந்தே எழும்பும் தருணங்களில் எல்லாம் அதற்கு சட்டப்பூர்வமான, அங்கீகரிக்கப்பட்ட வன்முறையே பதிலளித்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. ‘எப்பொழுதெல்லாம் அதர்மம் (அதாவது இந்து தர்மத்திற்கு எதிரான நிலை) தலையெடுக்கிறதோ, அப்பொழுதெல்லாம் அதனை அழிக்க’ தான் தோன்றுவதாக கண்ணன் கீதையில் கூறுகிறான். அதோடு, சில வகையான சமூக வடிவங்களை, அதாவது ஒருவர் மீது மற்றவர் ஆதிக்கம் செலுத்தும் வடிவங்களைக் காக்க வன்முறை அவசியம் எனவும் கண்ணன் கூறுவதாக கீதை சொல்கிறது. இத்தகைய புராண இதிகாசங்களை மனுஸ்மிருதி சட்டப்பூர்வமாக அங்கீகரித்திருக்கிறது.

பார்ப்பனர்களை உச்ச நிலையில் வைத்திருக்கும் படிநிலைப்படுத்தப்பட்ட சமூகத்திற்கு எதிராக செயல்பட்டாலோ, அதன் வழிமுறைகளை மீறினாலோ மிகக் கடுமையான தண்டனைகள் அளிக்கப்படும் என்று மனுஸ்மிருதி கூறுகிறது. ஆரோக்கியமான சமத்துவ சமூகத்திற்கு எதிராக, இத்தகைய கடுமையான சட்டங்களை மனுவால் கொண்டு வர முடிந்தது என்றால், அக்காலகட்டத்தில் அந்த அமைப்பு எந்தளவுக்கு வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது என்பதும், அதன் மீது மனு எப்படி சட்ட முத்திரையை அளிக்க முடிந்தது என்பதும் விளங்கும். அக்காலத்தில் நிலவி வந்த சமூக பழக்க வழக்கங்களுக்கு சட்ட முத்திரை அளித்ததுதான் மனுவே ஒழிய, அந்தப் பழக்க வழக்கங்களுக்கான மூல காரணி அல்ல.

வினைப்பயன் என்ற தத்துவம், தலித்துகளின் இன்றைய நிலைக்கு அவர்களின் கடந்தகால செயல்பாடுகள்தான் காரணமே ஒழிய அதற்கு சமூகம் எந்த விதத்திலும் பொறுப்பாகாது என்கிறது. அவர்களை முன்னேற்ற, சமூகத்திற்கு எந்த அவசியமும் இல்லை எனவும் அது அறிவுறுத்துகிறது. அந்த வகையில் இரு வகையான செய்திகள் சொல்லப்படுகின்றன : 1. அறிவு வளர்ச்சி உட்பட அனைத்து வகையான வளர்ச்சியும் மறுக்கப்படுகிறது 2. அவர்களின் இந்த நிலைக்கு அவர்கள் முன் செய்த ‘பாவங்கள்' தான் காரணமே ஒழிய, சமூகத்தின் கூட்டுச் சதி அல்ல.

இவ்வகையான பண்பாட்டு அடிப்படையிலான ஆதிக்கமும், பண்பாட்டு ஒழுக்க நெறிகள் வழியாக ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல் மிக்க சூழலுமே தலித்துகள் கீழான நிலையில் இருப்பதற்கான காரணங்களாகும். இதன் மூலம் அவர்களிடமிருந்து எளிதாக உடல் உழைப்பை உறிஞ்சவும், தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், அதே நேரத்தில் அவர்கள் மனிதர்கள் என்ற அடையாளத்தை அழிக்கவும் முடிகிறது. பார்ப்பனர்களும், சத்ரியர்களும் சமூக, வாழ்வின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றத்தக்க எந்த ஆக்கப்பூர்வமான பணிகளிலும் ஈடுபட்டிருக்கவில்லை.

உற்பத்தி என்பது முழுமையாக சூத்திரர்களாலும், தீண்டத்தகாதவர்களாலுமே செய்யப்படுகிறது. மூன்றாம் வர்ணத்தினரான வைசியர்கள், பண்டமாற்றத்தில் ஈடுபட்டிருந்தனரே ஒழிய உற்பத்தியில் ஈடுபடவில்லை. அதிகாரமும் கவுரவமும் சுரண்டல்வாதிகளுக்கு ஏறுமுகத்தில் இருக்க, இழிநிலையும், அவமானமும் உழைப்பவர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு இறங்குமுகத்தில் உள்ளது. வெளிப்படையாகக் கூறவேண்டுமெனில், குறிப்பிட்ட பண்பாட்டு ஒழுக்க நெறிகள் மற்றும் பழக்க வழக்கங்களாலும், அவற்றிற்கு அளிக்கப்பட்ட அதிகாரப் படிநிலையாலும் மட்டுமே இந்தப் பிரிவினரின் உற்பத்தியை சுரண்டுவது தக்கவைக்கப்படுகிறது.

இந்தியாவின் பண்பாட்டு வரலாற்றை நோக்குகையில், இரு வலிமைமிக்க மத அடிப்படையிலான சமூக இயக்கங்கள், இந்து சமூக அமைப்பின் அடிப்படையை கேள்விக்குள்ளாக்கி, அதற்கு ஒரு மாற்று நெறியை வழங்கின. பண்டைய இந்தியாவில் பவுத்தமும், பனிரெண்டாம் நூற்றாண்டின் ‘பசவா' இயக்கமும், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் வளர்ச்சிக்கும், நல் வாழ்விற்குமான சம வாய்ப்புகளை அளிக்கும் ஒரு புதிய சமூக நிலையை உருவாக்கும் நோக்கத்தில் செயல்பட்டன.

ஆனால், நாளடைவில் இவ்வியக்கங்களின் அடிப்படைக் கோட்பாடுகளை உள்வாங்கிக் கொண்டதன் மூலமும், அந்நெறிகளைப் பின்பற்றியவர்களை கொடூரமாக அழித்தொழிப்பதன் மூலமும் அந்நெறிகள் ஒழிக்கப்பட்டன. இந்து சமூக அமைப்பு தனது நிலையை தக்க வைத்துக் கொள்ள, எந்த மாற்று வழியையும் வன்முறையின் மூலம் அழிக்கத் தயங்காது என்பதற்கு இவை தெளிவான சான்றுகளாகும்.

பண்பாட்டால் அங்கீகரிக்கப்பட்ட இத்தகைய வன்முறை, அடையாள மறுப்பு முதல் அவ்வப்போது கட்டவிழ்த்து விடப்படுகிற வன்முறை வெறியாட்டங்கள் வரை, இன்றைய தலித்துகளின் வாழ்வில் ஒவ்வொரு நாளும் உணரப்படுகிறது. தலித்துகள் கொல்லப்படுவதற்கும் அவர்களது உடைமைகள் அழிக்கப்படுவதற்கும் அவை எந்த அளவுக்கு கொடூரமாக இருந்தாலும், சமூகத்தின் மற்ற பிரிவினரிடமிருந்து வலுவான எதிர்ப்பு எழுவதில்லை.

நாள்தோறும் நடைபெறும் சாதாரண நிகழ்வாகவே அது பார்க்கப்படுகின்றது. ஜோதிபாசு போன்ற கம்யூனிஸ்டு தலைவர்கள்கூட, ‘பீகாரில் ரன்வீர் சேனா தலித்துகளை தொடர்ந்து கொல்வதை ராஷ்டிரிய ஜனதாவால் தடுக்க இயலாத நிலையில், அவர்களுடன் கூட்டு சேர்வது சரியா?' என்ற பத்திரிகையாளரின் கேள்விக்கு, ‘அதனால் என்ன? தலித்துகள் தினமும்தான் சாகிறார்கள்’ என்று பதிலளித்திருக்கிறார்.

தலித்துகள் மீதான வன்முறை அதிகரிக்க காரணம் என்ன? அத்தகைய வன்முறைகளுக்கு எதிராக ஏன் ஒட்டுமொத்த சமூகமும் அமைதி காக்கிறது? எதிர்க்க மறுக்கிறது? இந்தக் கூட்டு மவுனத்திற்கு ஒரே பொருள்தான். குறிப்பிட்ட வன்முறை நிகழ்வில், தலித்துகள் மீது தாக்குதல் நடத்திய பிரிவினரின் இடத்தில் வேறு எந்தப் பிரிவினர் இருந்திருந்தாலும், அவர்களது செயல்பாடும் எவ்வகையிலும் மாறுபட்டிருக்காது. மேலும், தலித்து களின் உயிருக்கு எவ்வித மதிப்பும் இல்லை என்பதுமே உண்மை. இன்று படித்த வர்க்கமும், வெகு மக்கள் ஊடகங்களும் உலகிற்கும் நாட்டிற்குள்ளேயே சில பிரிவினருக்கும் முன்னிறுத்தும் செய்திகள், 1949 இல் அம்பேத்கர் விடுத்த இறுதி எச்சரிக்கையை உறுதி செய்யும் வகையிலேயே இருக்கின்றன.

‘சனவரி 26, 1950 அன்று நாம் முரண் பாடுகள் நிறைந்த ஒரு வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்க இருக்கிறோம். அரசியலில் நமக்கு சமத்துவம் இருக்கும். ஆனால், சமூக பொருளாதார வாழ்வில் சமத்துவமற்ற நிலையே நீடிக்கும். அரசியலில், ஒரு மனிதன் ஒரு வாக்கு; ஒரு வாக்கு ஒரு மதிப்பு என்ற கோட்பாட்டினை நாம் அங்கீகரிப்போம். ஆனால், நமது சமூக, பொருளாதார வாழ்வில், நமது சமூக, பொருளாதார அமைப்பின் காரணமாக, ஒரு மனிதன் ஒரு மதிப்பு என்ற கோட்பாட்டினை தொடர்ந்து மறுப்பவர்களாக இருப்போம்.

இந்த முரண்பாடான வாழ்வை, நாம் எத்தனை காலத்திற்கு வாழ்வது? நமது சமூக பொருளாதார வாழ்வில் எத்தனை காலம் தான் நாம் சமத்துவத்தை மறுப்பது? நாம் அதனைத் தொடர்ந்து மறுத்தோம் எனில், நமது அரசியல் ஜனநாயகத்திற்கு விடுக்கும் எச்சரிக்கையாகவே அது அமையும். இந்த முரண்பாடுகளை நாம் மிக விரைவில் களைந்தாக வேண்டும். இல்லையெனில், சமத்துவமின்மையால் துன்புறும் மக்கள், இந்த அவை மிக சிரமப்பட்டு உருவாக்கிய அரசியல் ஜனநாயக அமைப்பையே தகர்த்து எறிந்துவிடுவர்.’

இக்கூற்றை உறுதிப்படுத்தும் வகையில், நவீன இந்தியா, சமூகத்தின் அடித்தளத்திற்கு ஊடுருவி சமூக ஜனநாயகத்தை உருவாக்கத் தவறிவிட்டது. மேலும், நிலவுடைமைச் சமூகத்தில் இருக்கும் பிரிவு களுக்கிடையிலான வேறுபாட்டை நீக்கவும் அது தவறிவிட்டது. பாரம்பரிய நிலவுடைமை ஆதிக்க சாதியினர் அரசியல் தலைவர்களாக இன்று உருவெடுத்து, பாரம்பரிய உழைப்பாளி வர்க்கத்தை – காவல் துறை மற்றும் பிற அரசு எந்திரங்களின் உதவியோடு அடக்கி ஒடுக்குகின்றனர்.

அண்மைக்காலமாக, அதிகார வர்க்கமும், தங்களது சுய நலன்களுக்காக இந்தப் பாரம்பரியமான ஆதிக்கவாதிகளை ஆதரிக்கின்றனர். வழிவழியாக ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்கள், நவீன கால வளர்ச்சிக்குப் பிறகும் தொடர்ந்து இந்து சமூகத்தில் கீழ் நிலை மக்களாகவே இருக்கின்றனர். தலித் மக்கள் என்றென்றும் கீழ் நிலையிலேயே நின்று, இந்து சமூகத்தைத் தாங்கிப் பிடிக்கும் வகையில் சமூக பொருளாதார மாற்றங்களும் தலித் மக்களுக்கு மறுக்கப்படுகின்றன. தங்கள் நிலை குறித்து தலித் மக்கள் கேள்வி எழுப்பினாலோ, ஏதேனும் ஒரு வகையில் அதை எதிர்த்து நின்றாலோ, மற்ற அனைத்து சாதிப் பிரிவினரும் ஒன்றிணைந்து தலித் மக்களை ஒடுக்க, அதீத வன்முறையைப் பயன்படுத்தவும் தயங்குவதில்லை. இதில் நீதித்துறையின் பங்களிப்பு வெளிப்படையானது.

1985 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் கரம்சேடுவில் தலித்துகள் மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். தலித் அமைப்புகளின் பரவலான எதிர்ப்பு மற்றும் பிரச்சாரத்திற்குப் பின்னரும் – அவ்வழக்கின் சாட்சிகள் படுகொலை செய்யப்பட்டனர். போதுமான ஆதாரம் இல்லையென ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது. 1987 இல் நடந்த சுண்டூர் தலித்துகள் படுகொலை வழக்கு, இன்னமும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதே நேரத்தில், இந்தப் படுகொலைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய ஆர்வலர்களுக்கு, கீழ் நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்டது.

அண்மையில் அரியானா மாநிலம் ஜஜ்ஜாரில் 5 தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஜாட் மகா பஞ்சாயத்தினர் கொலை செய்தவர்களுக்கு ஆதரவாக வழக்கை நடத்தினர். அவர்களும், ஆரிய சமாஜம், வி.எச்.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர், கொலை செய்தவர்கள் தங்கள் தர்மத்தை நிலைநிறுத்தவே இச்செயலைப் புரிந்தனர் என்றும், அதனால் அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்றும் வாதிட்டனர். கரம்சேடு முதல் ஜஜ்ஜார் வரையில், மேலவளவு உள்பட எங்குமே காவல் துறையும் நீதித்துறையும் தலித்துகளைப் பாதுகாக்க முன்வரவேயில்லை என்பதும், வன்முறையாளர்கள் பக்கமே அவர்கள் நின்றனர் என்பதும் வெளிப்படையானது.

தலித்துகளில் படித்தவர்கள், மறைமுகமான உள வியல் அழுத்தங்களாலும், பண்பாட்டு வரையறைகளாலும், தங்களது மனசாட்சி நெறிக்கப்பட்டு, தங்களது தனித்துவத்தை இழந்து நிற்கின்றனர். அதே நேரத்தில், பல்வேறு தலித் தலைவர்கள் சமூக அழுத்தங்களை உருவாக்குவதிலும், தலித் பிரச்சினைகளைத் திறம்பட எடுத்துரைக்கும் வல்லமை உடையவர்களாகவும் உருவாகி வந்துள்ளனர். ஆனால், ஆதிக்க சாதியினரால் அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட பல தலித் தலைவர்கள், பின்னர் அவர்களால் ஆதிக்க நலன்களையும் ஆதிக்கச் சிந்தனையையும் வெளிப்படுத்துபவர்களாக உருமாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு தலித் தலைவர்களை ஏற்று, உருமாற்றுவதிலேயே, இந்து சமூக அமைப்பு தனது ஆளுகையை நிலைநிறுத்திக் கொள்கிறது.

Ambedkar and Periyar
ஆக, அண்மைக்காலமாக அதிகரித்திருக்கும் தலித்துகள் மீதான வன்முறை என்பது – தற்செயலானதோ, எதிர்பாராததோ அல்ல. மாறாக, அது இந்து பண்பாட்டு அமைப்பின் அடித்தளமாக இருக்கும் வன்முறைக் கோட்பாடுகளின் நீட்சியே ஆகும். இந்து அமைப்பு, இயற்கை நீதி, சமத்துவம், நேர்மை இவற்றிற்கு எதிராக, வன்முறையின் மீது கட்டமைக்கப்பட்ட படிநிலைப்படுத்தப்பட்ட சமூகமாகும். பார்ப்பனிய மனப்போக்கு இத்தகைய வன்முறை தவறல்ல என்றும், இதுவே ‘தர்மம்' என்று அறிவுறுத்துகிறது.

துன்பப்படும் மக்கள் மீது இரக்கம் கொள்வதற்கும், மனித நேயத்தோடு உதவுவதற்கும் எதிராக, அவர்களின் துன்பம் முன் வினைப்பயனால் உண்டானதே என்று இந்து ‘தர்மம்' கூறுகிறது. மனித நேயத்திற்கு முற்றிலும் எதிரான இந்த தர்மத்தின் அடிப்படையில்தான் தலித்துகள் மீதான வன்முறை நியாயப்படுத்தப்படுகிறது. சாதிய மதமாகிய இந்து மதம், வன்முறையை அறிவுப்பூர்வமாகவே ஏற்றுக்கொள்ளும் படியான தத்துவங்களை முன் வைக்கிறது.

மதக் கோட்பாடுகள் மூலமும், புராண இதிகாச கதைகளின் மூலமாகவும், மக்களை மூளைச் சலவை செய்து, வன்முறையை கையிலெடுப்பவர்களும் சரி, வன்முறையால் பாதிக்கப்படுபவர்களும் சரி இருவருமே அதுவே ‘விதி' என ஏற்றுக் கொள்ளும் வகையில் இறுக்கமாகவும் நுணுக்கமாகவும் இந்து சமூக அமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது.

தலித்துகள் மீதான வன்முறை திட்டமிட்டதாக, ஒழுங்கமைக்கப்பட்டதாகவே நடக்கின்றன. அடிக்கடி இல்லாமல் என்றாவது நடந்தாலும், மிக நீண்ட காலத்திற்கு அச்சுறுத்தும் வகையில் மிகக் கொடூரமானதாகவே அவ்வன்முறைகள் இருக்கின்றன. கீழ்வெண்மணியும், மேலவளவும், கயர்லாஞ்சி யும் – சாதியத்திற்கு எதிராகப் போர்க்குரல் எழுப்ப முனையும் எவருக்கும் என்றென்றும் அச்சுறுத்தலாகவே இருக்கும்.

அமைப்பு ரீதியாக கட்டமைக்கப்பட்டிருக்கும் இவ்வன்முறையை முறியடிக்க ஒரே வழி, அந்த அமைப்பையே தகர்ப்பது மட்டுமே. உளவியல் ரீதியாக மூளையில் ஏற்றப்பட்டிருப்பவைக்கு எதிராக, அந்த மதக் கோட்பாடுகளை கேள்விக்குள்ளாக்க வேண்டும். வன்முறையை நியாயப்படுத்தும் இந்து மத சிந்தனைக்கு எதிராக, சமூக ஜனநாயகத்தை வலியுறுத்தும் சிந்தனைப் போக்கை வளர்க்க வேண்டும். மூளைச் சலவை செய்து திணிக்கப்பட்ட சாதிய பண்பாட்டுக் கூறுகளிலிருந்து விடுபட்டு, சுயமாக சிந்திக்க வழி வகை செய்ய வேண்டும். இந்தப் புள்ளியில் பாபாசாகேப் அம்பேத்கரும் பெரியாரும் இணைந்து நிற்கின்றனர்.

மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் விதிக்கப்பட்ட அறிவுத்தடைகளிலிருந்து விடுபட்டு, சிந்திக்கக் கூடிய மனிதர்களாக, இந்து சமூக கட்டமைப்பைத் தகர்த்து எறிபவர்களாக, ஒடுக்கப்பட்ட மக்கள் எழ வேண்டும் என்பதற்காகவே அம்பேத்கரும் பெரியாரும் உழைத்தனர்.

தங்களை இழிவாக நடத்துவதோடு மட்டுமின்றி, அந்த இழி நிலையில் தங்களைத் தொடர்ந்து வைத்திருக்க தங்கள் மீது வன்முறைகளை ஏவிவிட்டு அத்தகு வன்முறைகளை நியாயப்படுத்து கின்ற ஒரு சமூகத்தின் அங்கமாக ஏன் தலித்துகள் இருக்க வேண்டும்? இந்து சமூக அமைப்பை விட்டு வெளியேறாமல், அதன் கட்டமைப்பைத் தகர்த்து எறியாமல் – தலித்துகளுக்கு எதிரான வன்முறையை ஒருபோதும் முறியடிக்க முடியாது.
Pin It