இருபதாம் நூற்றாண்டின் சிறப்புமிக்க அறிவுஜீவிகளில் ஒருவரான பாபாசாகேப் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் – மனித இனத்தை ஒடுக்கி அடிமைப்படுத்தும் சாத்தானின் செயல் திட்டமான – பார்ப்பனிய முறையை எதிர்த்து, ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்கள் தங்கள் மனிதப் பண்புகளை சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு விடுதலை மூலம் திரும்பப் பெற ஒரு தீரமிக்கப் போராட்டத்தை நடத்தினார். அவர் ஒரு சமூக – நன்னெறித் தத்துவத்தை உருவாக்கி மனித மாண்பு மற்றும் விடுதலை, சமூக பொருளாதார நீதி மற்றும் ஆன்மிக ஒழுங்குமுறைக்காக உறுதியுடன் பாடுபட்டார். அவரைப் பொருத்த வரையில் இது தீண்டத்தகாதவர்களை காப்பதற்கானது மட்டும் அல்ல; மாறாக தீண்டத்தகாதவர்களை காப்பதன் மூலம் ஒரு தேசமாக இந்தியாவை காப்பதாகும். அம்பேத்கரின் சிறப்பு என்பது அவதியுறும் ஒரு சமூகத்திற்கான அடித்தளத்தை அமைத்து, அவர்கள் மீள்வதற்கான வழியை அளித்தது மட்டுமல்ல; ஒரு நடைமுறை தத்துவவாதியாகத் தானே விடுதலைக்கான ஓர் இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றதில் உள்ளது.

ambedkarடாக்டர் அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மாணவராக அமெரிக்காவில் பெற்ற அனுபவத்தை கொண்டாடுவதற்காக இங்கே கூடியுள்ளோம். கொலம்பியா பல்கலைக்கழகம் அவருடைய ஆளுமைகளையும் உலகப் பார்வையையும் மட்டும் செழுமைப்படுத்தவில்லை. கூடுதலாக, இந்தியாவில் அவர் மேற்கொள்ளவிருந்த "தேசிய மறுகட்டமைப்பு' திட்டத்திற்குத் தேவையான முக்கியக் கூறுகளை அவருக்கு அளித்தது. கொலம்பியா பல்கலைக்கழகத்தின் தலைசிறந்த பேராசிரியர்களான ஜான் திவே, எட்வின் செலிக்மேன், ஜேம்ஸ் ஹார்வே ராபின்சன் மற்றும் அலெக்சாண்டர் கோல்டன்வைசர் போன்ற பேராசிரியர்களிடம் அவர் கல்வி பயின்றார். அவர்கள் அவருக்கு எதார்த்த தத்துவ அறிவைப் பற்றி ஆழமான மற்றும் பரந்துபட்ட அனுபவத்தை அளித்தனர்.

அக்காலத்தின் ஆகச்சிறந்த தத்துவவாதியான பேராசிரியர் ஜான் திவேயின் கருத்துகள் அவரை மிகவும் ஈர்த்தன. பேராசிரியர் ஜான் திவே, அப்போது ஆதிக்கம் செலுத்தி வந்த "ஹெக்கலிகன்' தத்துவத்தை உடைத்தவர். சமூகச் சிக்கல்களை தீர்க்கும் கருவிகளாக சிந்தனைகளை நோக்கும் அறிவுக் கருவி கோட்பாட்டை உருவாக்கியவர். சமூகம், சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் தத்துவத்தின் மீதான திவேயின் கருத்துகளை மறுகட்டமைப்பை உருவாக்குவதற்கான திறனாய்வாக அம்பேத்கர் உள்வாங்கிக் கொண்டார்.

இதன் பயனாக ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை ஒப்பிட்டுப் பார்க்கச் செய்ததில் அக்காலத்திய ஆப்பிரிக்க அமெரிக்க விடுதலை இயக்கங்கள் அம்பேத்கர் மீது தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தன. அம்பேத்கரின் விடுதலைக் கருத்துகளின் தொடக்கம், அக்காலத்தில் அவர் வாழ்ந்த "மார்னிங் சைட்' என்ற இடத்திலும் கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் ஆதிக்கம் செலுத்திய சமூக நற்பணி (social gospel movement) இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கலாம் என்று கிருஸ் குயின் (1996) கருதுகிறார்.

மீரா நந்தா (2006)திவே– அம்பேத்கர் – புத்தா தொடர்புகளை திறனாய்வு செய்கிறார். அம்பேத்கரின் "திவேவியன் புத்தர்' பார்ப்பனியப் பண்பாட்டு மாயையை உடைக்கக்கூடிய பகுத்தறிவு மற்றும் அறிவியல் வழிமுறையாகவும், ஒரு மதச்சார்பற்ற மனித நேயமிக்க சமூகப் பண்பாட்டை உருவாக்க வழிவகுப்பதாகவும் இருப்பதாகக் கூறுகிறார்.

ஒடுக்கப்பட்ட மக்கள் தாங்கள் மனிதர்களாக வாழ்வதற்குரிய உரிமையை பெற்றுத்தர அம்பேத்கர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடியதன் விளைவாகக் கிடைத்த ஓர் உறுதியான வெற்றி எனும் அடிப்படையில் மட்டும் வகுப்புவாரி தீர்ப்பு முக்கியத்துவம் பெறவில்லை. வகுப்புவாரி தீர்ப்பு என்பது தன் ஆன்மிக பாசிசத்தின் மூலம் சிறுபான்மைப் பார்ப்பனியம் அடைந்த அதிகாரம், சிறப்புரிமை, கவுரவம் ஆகிய அனைத்தின் மீதும் விழுந்த அடியாக அமைந்ததனால் அது முக்கியத்துவம் பெறுகிறது.

அம்பேத்கர் அதுவரையிலும் மகத் சத்தியாகிரகம் மூலம் சட்ட மற்றும் சமூக சம உரிமைக்காகவும் காலராம் கோயில் நுழைவுப் போராட்டம் மூலம் இந்து மதத்தில் சமஉரிமைக்காகவும் போராடுவதில் கவனம் செலுத்தி வந்தார். 1927 இல் டாக்டர் அம்பேத்கர் மகத் சத்தியாகிரகப் போராட்டத்தின்போது, “இந்தப் போராட்டத்தின் நோக்கம் எங்களுடைய இயலாமைகளை நீக்குவதற்காக மட்டும் அன்று; ஒரு சமூகப் புரட்சியின் மூலம் மனிதனால் உருவாக்கப்பட்ட சாதியத் தடைகளை நீக்கி அனைவரும் உயர்ந்த நிலையை அடைவதற்கான சம வாய்ப்புகளை அளிக்கவும், சமூக உரிமையைப் பொருத்தமட்டில் ஒரு மனிதனுக்கும் மற்றுமொரு மனிதனுக்குமிடையில் எந்த வேறுபாடும் இல்லாமல் செய்வதற்காகவும்தான்'' என்றார்.

டாக்டர் அம்பேத்கர் மனிதனின் அடிப்படைத் தேவைகளுக்காக இவ்வாறு போராடிக்கொண்டிருந்த பொழுது காந்தி, எப்.அய்.சி.சி.அய். எனப்படும் முதலாளிகளுக்கான அமைப்பை 1927 இல் தொடங்கி வைத்தார் என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது.

வகுப்புவாரி தீர்ப்பு என்பது, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் சம உரிமையுடன் கூடுதலாக, அம்பேத்கர் மிகுந்த முக்கியத்துவம் அளித்த சமூக விடுதலையின் அடையாளமும் ஆகும். வகுப்புவாரி தீர்ப்பு என்பது இடஒதுக்கீடு பண்பாட்டிற்குப் பதிலாக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பண்பாட்டை கொண்டு வருவதில் ஒரு முதல்படி என்பதாலும் தனிச்சிறப்பு பெறுகிறது. மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பண்பாட்டின் மூலம் ஜனநாயக சமூகத்தை வழிநடத்த விரும்பிய அம்பேத்கர், கல்வியை 100 சதவிகிதம் தங்களுக்கென ஒதுக்கி வைத்துக்கொண்டு தங்களுக்கு சேவை செய்வதை மட்டுமே தொல்குடி பெரும்பான்மை மக்களுக்கு என விதித்த பார்ப்பனிய முறையை இடஒதுக்கீட்டு பண்பாடு என அடையாளப்படுத்தினார்.

சவுத்பரோ குழு, மாண்டேகு – செம்ஸ்போர்டு குழு, முட்டிமேன் குழு, சைமன் கமிசன் போன்றவற்றில் அளித்த அவரது மனுக்கள் மற்றும் வட்டமேசை மாநாட்டில் அவரது வாதங்கள், "பிரதிநிதித்துவ உரிமைகள் என்பவை ஜனநாயக உரிமைகளே' என்பதையே அடிப்படையாகக் கொண்டிருந்தன. அம்பேத்கர் சைமன் கமிசன் என அறியப்படும் இந்திய சட்ட ஆணையத்தின் முன் அளித்த "உரிமைகளும் தேவைகளும்' குறித்த அறிக்கை சமமான குடியுரிமை குறித்த விரிவான அரசியல் சட்ட முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது.

பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதியான எஸ்.டி. சவுராசியா, சைமன் கமிசனை வரவேற்றார். முதல் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்ற மற்ற அனைவரும் தங்கள் வகுப்பிற்கான கோரிக்கைகளில் மிகுந்த கவனம் செலுத்தி வந்த வேளையில் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமஉரிமை, அடிப்படை உரிமைகளுடன் கூடிய சமமான குடியுரிமை, சமூகப் புறக்கணிப்பில் இருந்தும் பாகுபாட்டில் இருந்தும் பாதுகாப்பு, சட்டமன்றம், அமைச்சரவை, அரசுப் பணிகள் மற்றும் கல்வி ஆகியவற்றில் தேவையான பிரதிநிதித்துவம், கோரிக்கைகளை அளிப்பதற்கான மத்திய மற்றும் மாநில ஆணையங்களை அமைத்தல், வயது வந்தோருக்கான வாக்குரிமை, தனித் தொகுதியுடன் கூடிய இரட்டை வாக்குரிமை ஆகியவற்றைப் பெற்றுத்தருவதில் கவனம் செலுத்தினார்.

சமூக அரசியல் மற்றும் அரசமைப்புச் சட்டத் தேவைகளுக்காக தீண்டத்தகாத மக்களை ஒரு தனி சிறுபான்மையினராகக் கருத வேண்டி அதற்கான காரணங்களை விளக்கினார். பிரிட்டிஷ் அரசு டாக்டர் அம்பேத்கரின் வாதத்தை ஒப்புக்கொண்டு அவர் கோரியபடி தனி உரிமைகளை அளிப்பதென உறுதியளித்தது. இம்முயற்சி காலனி ஆட்சியின் அடிப்படைப் பரிமாணங்களையும் இருவேறு சிறுபான்மையினங்கள் பெரும்பான்மையாக உருவாவதையும் வேறுபடுத்திக் காட்ட முயல்கிறது. 1. சிறுபான்மைப் பார்ப்பனியம் இந்து என வகைப்படுத்தப்படக்கூடிய ஓர் ஆன்மிக அரசியல் சமூகத்தை கட்டியமைத்தல், அதன் மூலம் மற்ற சிறுபான்மையினரை விட இயற்கையான பெரும்பான்மையாக உருவாதல். இணக்கமான ஒற்றை இந்து சமூகத்தை உருவாக்குவதில் காந்தியின் அக்கறை.

2. பாபாசாகேப் அம்பேத்கர் ஒரு ஜனநாயகப் புரட்சியின் தூதுவராக ஒடுக்கப்பட்ட மக்களை ஒரு தனி சிறுபான்மையினராக அங்கீகரிக்க அழுத்தம் கொடுத்தார். பின் அதற்கும் மேலே சென்று பார்ப்பனிய முறையால் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மையினரை பின்தங்கிய மக்களாக அசரமைப்புச் சட்டத்தில் வகைப்படுத்தினார்.

ambedkar at eravada prison

(பூனா ஒப்பந்தம் 24.9.1932 எரவாடா மத்திய சிறையின் முன்பு (இடமிருந்து) - பாரிஸ்டர் எம்.ஆர்.ஜெயகர், சர் தேஜ் பகதூர் சப்ரு, டாக்டர் அம்பேத்கர், கஜோல்கர், பி.பாலு)

வட்ட மேசை மாநாடுகளும் அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளும் இந்து பார்ப்பன சக்திகளுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் இடையேயான போட்டியாக மாறின. ஏகாதிபத்தியத்தியம் கையளிக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே இப்போட்டியின் மிக முக்கிய ஒற்றை இலக்காக இருந்ததை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது.

காந்தி தானே விளக்கியபடி கீழ்க்கண்ட இரு காரணங்களுக்காக வகுப்புவாரி தீர்ப்பை எதிர்த்தார்:

1. இந்து மகா சபை கூறியபடி இது இந்து சமூகத்தினரின் நலன்களை பாதிக்கும். அதோடு மட்டுமின்றி இது இந்து சமயத்தின் தார்மீக நெறிகளையும் பாதிக்கும்.

2. தீண்டத்தகாதோர் இந்து சமூகத்தின் ஒரு பகுதியே ஆவர். எனவே அவர்களுக்கென தனிப் பிரதிநிதித்துவம் கோர முடியாது.

அப்போதைய சமூக – அரசியல் நிலைமைகளை அறிந்து கொள்ள மேற்கண்ட இரு ஆட்சேபனைகளை ஆய்வது அவசியம். இங்கு இந்து சமூகம் என்ற ஒன்று எவ்வாறு வெளிப்படுகிறது என பார்ப்பது அவசியம். மேலும், சிறுபான்மைப் பார்ப்பனியம் எவ்வாறு காலனிய ஆட்சியின் துணை கொண்டு இந்து எனப் பெயரிடப்பட்ட ஒரு சமூக – அரசியல் சமூகத்தைக் கட்டமைக்கிறது என்பதையும் ஓர் இணக்கமான பெரும்பான்மையுள்ள இந்து சமூகத்தை தோற்றுவித்ததில் காந்தியின் அக்கறையையும் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். "இந்து' என்ற சொல் பார்ப்பனிய இலக்கியங்களில் எங்குமே காணப்படவில்லை என்பதும் மேற்கண்ட இந்து என்ற சொல்லானது முகலாயர்களின் படையெடுப்பிற்குப் பிறகுதான் தோன்றியது என்பதும் நன்கு அறியப்பட்ட உண்மையாகும்.

தயானந்த சரஸ்வதி தன் புத்தகமான "சத்யார்தபர்காஸ்' (1875) இல் "இந்து எனப்படுவது அவமரியாதையானது' என விளக்கியுள்ளார். (பெரிஸ்ய சொற்பொருள் களஞ்சியத்தில் இதற்கான பொருள் உள்ளது.)

15 ஆம் நூற்றாண்டில் அவுரங்கசீப் ஜிசியா என்ற வரியை இந்துக்களுக்கு விதித்தார். ஆனால் ஆரிய பார்ப்பனர்கள், சத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் தாங்கள் இந்துக்கள் அல்லர் எனக் கூறி அந்த வரியைக் கட்ட மறுத்தனர்.

முகலாயர் ஆட்சியில் அவர்களுக்கு அனுசரணையாக இருந்து பலன் பெற்றதைப்போல் சிறுபான்மைப் பார்ப்பனியம் பிரித்தானியர் ஆட்சியையும் போற்றி தனக்கான நலன்களைப் பெற்றுக் கொண்டது.

காலனி ஆட்சி தோன்றியபோதே பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கும் ஆரிய இந்தியர்களுக்கும் இடையே ஒற்றுமையையும் சமத்துவத்தையும் கோருவதற்குப் பார்ப்பனர்கள், தங்களைப்பற்றி மாக்ஸ் முல்லரின் புகழ்ச்சி மற்றும் ஆரியத்தின் மீதான பொது கருத்துகளைப் பயன்படுத்தினர். 1905 வரையிலும் பி.ஜி. திலகர் வேதங்களின் தாயகமான ஆர்டிக்தான் "ஆரியர்களின் தாயகம்' என எழுதி வந்தார். ராஜாராம் மோகன் ராய் (1884) மற்றும் கேஷப் சென் (1877) போன்ற பிரம்ம சமாஜத்தின் முக்கியமானவர்கள் வெள்ளையர்களின் இந்திய வருகையைப் போற்றி அதைப் பிரிந்த சகோதரர்களின் ஒன்று சேரல் என வர்ணித்தனர்.

எம்.கே. காந்தி தென் ஆப்பிரிக்காவின் நடால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தில் இந்தியர்களும் (இந்தியர்கள் என்றால் காந்தியை பொருத்த மட்டில் ஆரிய இந்தியர்கள்) வெள்ளையர்களும் இந்தோ ஆரியன் என்ற பொதுவான இனத்தில் இருந்து தோன்றிய வழித்தோன்றல்கள்தான் என்பதை வெள்ளையர்கள் உணரவில்லை என சாடுகிறார்.

அரசும் சமூகமும் இணைந்து செயல்படும் நன்கு அறியப்பட்ட ஒரு வரலாற்றிற்கு இது வழி வகுத்தது. (தங்கள் நலன்களைப் பாதுகாக்க) ஏகாதிபத்திய நோக்கத்தை அடைவதற்கான (பார்ப்பனர்களின்) தேடல் பார்ப்பனியத்திற்கு முக்கியத்துவத்தையும் மேலாதிக்கத்தையும் அளிக்கும் ஓர் ஒருங்கிணைந்த சமூகம் தோன்றுவதற்கான சூழ்நிலையை உருவாக்கியது என்றால் மறுபுறம் பார்ப்பனியம் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள அரசின் உதவியையும் தயவையும் நாடியது. அதன் மூலம் தன்னை மென்மேலும் வலுப்படுத்திக் கொண்டது.

பிரிந்த இரு சகோதரர்களின் ஒன்றிணைவு (ஆர்.தாப்பர் 2008:39) எனப்பட்ட இந்த பரஸ்பரம் நன்மை பயக்கக்கூடிய கூட்டு ஒப்பந்தத்தின் கண்டுபிடிப்பிற்குப்பிறகு என்ன நடந்திருக்கும் என்பது ஊகிக்கக்கூடியது தான்.

கிழக்கிந்திய கம்பெனியின் ஒவ்வொரு முக்கியமான கொள்கைகளும் முடிவுகளும் இரட்டை நோக்கத்தை தன் கூறாகக் கொண்டிருந்தன. தன் ஆட்சியைத் தக்க வைப்பதும் தன் உள்ளூர் கூட்டாளியான பார்ப்பனியத்தின் நலன்களைக் காப்பதும்தான் அவை (ஜி. அலாய்சியஸ் 2010).

நாட்டின் நிர்வாகத்தை பிரித்தானிய நாடாளுமன்றம் எடுத்துக்கொண்ட பிறகு, அரசின் நிர்வாகத்தில் அனைவருக்குமான சம உரிமை அளிக்கப்படும் என்று அரசு வாக்குறுதி அளித்தபிறகு அப்பொழுதுவரை ஏகாதிபத்தியம் கடைப்பிடித்து வந்த "எதிலும் தலையிடாத' கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை ஒருவர் எளிதில் புரிந்து கொள்ள முடியும். முக்கியமாக 1919 இல் இங்கிலாந்தில் வயது வந்தோருக்கு வாக்குரிமைச் சட்டம் இயற்றப்பட்ட பொழுது அதற்கான அதிர்வுகள் இந்தியாவிலும் உணரப்பட்டன. சிறுபான்மைப் பார்ப்பனியம் தன் மேலாதிக்கத்தை நிலை நிறுத்தவும், நாட்டின் மீதான உரிமையைக் கோரவும் இந்து சமூகம் என்ற கற்பனையான சமூகத்தை கட்டமைத்து ஒரு முக்கியமான மாற்றத்தை உருவாக்கியது.

"இந்து மகா சபா' 1922 ஆம் ஆண்டு மேற்கண்ட நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. இதை உருவாக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் பார்ப்பனர்கள். அதன் தொடர்ச்சியாக ஒரு பண்பாட்டுக் கற்பிதமும் உருவாக்கப்பட்டது. மேலும் இந்து பண்பாடு, இந்து நாகரிகம் போன்ற சொற்றொடர்களும் உருவாயின. முன் எப்பொழுதோ தொலைந்துபோன, சிதறிக்கிடந்த பாகுபாடுகள் நிறைந்த பழைய சமஸ்கிருத இலக்கியங்கள் தோண்டி எடுக்கப்பட்டு தூசி தட்டப்பட்டு புதிதாக எழும்பியுள்ள பொது வெளியின் மய்யக் கருப்பொருளாக்கப்பட்டன. இவை பார்ப்பனிய சாதிகளுக்கு மட்டும் அல்லாமல் விரிவுபடுத்தப்பட்ட இந்துத்துவத்திற்கும் ஏன் இந்த துணைக் கண்டம் முழுவதும் ஏற்கப்பட வேண்டிய தெய்வீக நூல்களாக ஆக்கப்பட்டன. நான்கு வேதங்களும் இந்த துணைக்கண்ட நாகரிகத்தின் தோற்றுவாய் ஆகின. வரலாறு, மதம், பண்பாடு, பாரம்பரியம் போன்றவற்றை மறு கட்டமைக்க வேதங்கள் நம்பத்தகுந்த ஆதார மூலங்கள் ஆயின. விவேகானந்தர், அரொபிந்தோ கோஷ் போன்ற ஆளுமைகள் மேலும் முக்கியத்துவம் பெற்றனர்.

காலனியத்தின்போது உருவான இந்துத்துவம் என்பது பார்ப்பனிய சமஸ்கிருத மேலாதிக்கத்தை கொண்டதுதான் என்பதை இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த தொல்குடி மக்களின் அறிவுஜீவிகளான அயோத்திதாசர், பெரியார் போன்றவர்கள் அம்பலப்படுத்தினர். ரொமிலா தாப்பர் (2004) தன்னுடைய மிகத் தெளிவான கட்டுரை ஒன்றில் விளக்கியுள்ளபடி, தற்பொழுது எவ்விதச் சிக்கலுமின்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள இந்துத்துவம் என்பது நவீனத்தின் பெயரால் – பார்ப்பன நலன்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஆதிக்கம் மிகுந்த ஒரு பெரும்பான்மைப் பண்பாடாகவும், தொடர்ந்து பரவுக்கூடிய வளம்பெறக்கூடிய பொருளாதார – அரசியலில் அனைத்து நிலைகளிலும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒன்றாகவும் உள்ளது.

ராபர்ட் இ. ப்ரைகென்பெர்க் (2009), இந்திய அரசு என்பது பிரித்தானிய முடியின் கீழ் அமைந்த இந்து ராஜ்யமாக ஏற்கெனவே உருவாகிவிட்டது என்கிறார். சுவாமி தர்மதீர்த்தர் (1944), பின்னாளில் கெய்ல் ஓம்வெத், கிங் (2008), காஞ்சா அய்லையா(2009) போன்றோர் காலனிய ஆட்சியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்துத்துவம் (அகண்ட இந்து ராஷ்டிரம்) என்பது புரட்சிமிக்கதாகவும் அரசியல் முக்கியத்துவம் உடையதாகவும் மாறிவிட்டது என்கிறார். பிரித்தானிய ஆட்சியில் வர்ண முறை புகழ்பெற்றது என்றும் புதிய அரசியல் பொருளாதாரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பார்ப்பனர் மேலாதிக்கத்தை புதுப்பிப்பதாக அமைந்தது என்றும் எம். என். சீனிவாஸ் குறிப்பிடுகிறார். ஒரே சமயத்தில் நிலவுடைமைப் பொருளாதாரமும் பார்ப்பனியப் பண்பாடும் எழுந்ததை வாஷ்புரோக் (1993) தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

ஒட்டுமொத்த மக்களையும் பெரும்பான்மை மதம் என்ற புதிய செயல் திட்டத்தை நோக்கி கவர்வதன் வேலையை தொடங்கிய இப்புதிய இந்துத்துவத்தின் கொள்கைகளுக்குள் வர முடியாத மக்கள் – கிறித்துவர்கள், முகமதியர்கள் மற்றும் இதர பிரிவினர் என – சிறுபான்மையினராக முத்திரையிடப்பட்டு அச்சுறுத்தப்பட்டனர். இவர்கள் சிறுபான்மையினர் என பெரும்பான்மை இந்துக்களால் அழைக்கப்பட்டனர். இவ்வாறாக திரட்டப்பட்ட இந்து பெரும்பான்மை முறை இரு அனுகூலங்களைக் கொண்டிருந்தது: 1. சூத்திரர்கள் மற்றும் ஆதி சூத்திரர்கள் என அறியப்பட்ட பெரும்பான்மை தொல்குடி மக்களின் மீதான மேலாதிக்கத்தை அடைவது. 2. அடையாளம் கொள்ளக்கூடிய மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிறுபான்மை சமூகத்தை உருவாக்குவது. அதிகாரத்தை தனதாக்கிக் கொள்ளும் இப்புதிய முயற்சியில் முதலாவதில் பெரும்பான்மை தொல்குடி மக்கள் அனைவரும் பார்ப்பனர்களுக்கு கீழானவர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இரண்டாவதில் குறிக்கப்பட்ட சிறுபான்மையினர் தெளிவாக எடுத்த எடுப்பிலேயே வெளியேற்றப்பட்டனர். அதாவது, காலனியாதிக்கத்தின் போது வலிமையூட்டப்பட்ட பார்ப்பனியத்தின் கீழ் அனைவரையும் கொண்டு வர முன்னெடுக்கப்பட்ட இப்புதிய இந்துத்துவ முறை இரு பக்கங்களைக் கொண்டிருந்தது. சாதி ஒடுக்குமுறை ஒருபுறமும் மத அடிப்படையில் வெளியேற்றுவதை மறுபுறமும் அடிப்படையாகக் கொண்டிருந்தது. இந்த பெரும்பான்மை "மத அரசியல் சமூகம்' கருத்தியல் ரீதியாக அங்கீகாரம் பெற வேண்டுமானால், அதே போன்று சிறுபான்மை "மத அரசியல் சமூகங்கள்' உருவாவதற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

எனவேதான் நாட்டின் அடிப்படைப் பண்பாட்டைக் காக்க சாதி –வர்க்க வேறுபாடுகளை விட மத ஒற்றுமையை முன்னிலைப்படுத்துவது பொருத்தமானதாகக் கருதப்பட்டது. பார்ப்பனியத் தந்திரமானது (சாதிகளாக) பிரித்தாளும் முறையையும் அதே நேரத்தில் மத சிறுபான்மையினருக்கு எதிராக (மதத்தின் பேரால்) ஒன்றுபடுத்தி ஆளும் தந்திரத்தையும் ஒருங்கே கொண்டிருந்தது. இதன் மூலம் சிறுபான்மைப் பார்ப்பனியம் எப்பொழுதுமே ஆதிக்கம் செலுத்தி வந்தது. அந்த வகையில், பிரித்தானிய ஆட்சி ஏதேனும் சாதித்துள்ளது என்றால் அது பார்ப்பனியத்தை வலிமைப்படுத்தி, வேரூன்ற வைத்திருக்கிறது என்பதில் வியப்பேதும் இல்லை.

சிறுபான்மைப் பார்ப்பனியத்திற்கும் பிரித்தானிய அரசிற்கும் இடையே நூறாண்டு காலத்திற்கும் மேலாகத் தொடர்ந்த இந்த கூட்டணி எவ்வாறு மோதலாக மாறியது என்பதை விளக்குவது நமது நோக்கத்திற்கு முக்கியமானதாகும்.

– தொடரும்

***

டாக்டர் பி.டி. சத்யபால், ஆந்திர பல்கலைக் கழகத்தின் மானுடவியல் துறை பேராசிரியர். அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பாபாசாகேப் அம்பேத்கர் மாணவராக சேர்ந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, 2.7.2013 அன்று அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் பங்கேற்று ஆற்றிய உரையின் தமிழாக்கம்.

தமிழில் : செ. சரவணன்

Pin It