கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

அம்பேத்கர் நினைவு நாளில் பெண்களைப் பற்றி இழிவாகப் பேசியதாக இளைஞர் ஒருவரின் வீடியோ வெளியானது. சம்மந்தப்பட்ட நபரைக் கைது செய்யவேண்டும் என்று தமிழகம் முழுக்க பல காவல் நிலையங்களில் சுயசாதிப் பெண்களின் கற்புக்கு காவல் இருக்கும் வேலையை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கும் மாமாக்கள் மூலம் புகார் கொடுக்கப்பட்டது. மேலும் அந்த நபர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் என்றும், இதற்கு திருமாவளவன் அவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்றும் நிர்பந்தம் உருவாக்கப்பட்டது. அவரும் சம்மந்தப்பட்ட நபர் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர் கிடையாது என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வீடியோவை முழுமையாகப் பார்த்த போது அந்த இளைஞர் முன்வைக்கும் பல்வேறு முழக்கங்கள் தேர்ந்த அரசியல் சிந்தனையின் வெளிப்பாடாகவே தெரிந்தது. ‘வன்னியர் பெண்களைக் காதலிப்போம்’, ‘கவுண்டர் பெண்களைத் திருமணம் செய்வோம்’, முதலியார் பெண்களை கட்டியணைப்போம்' என்ற முழக்கங்களைத் தவிர மீதி உள்ள அனைத்து முழக்கங்களும் இந்திய சமூகத்தில் தலித்துகள் திட்டமிட்டு சாதிரீதியான தாக்குதல்களை சந்திப்பதையே மையமாகக் கொண்டிருந்தன.

h raja and tamilisaiஆனால் இந்த முழக்கம் எப்படி பெண்களை இழிவுபடுத்தும் முழக்கமாகவும் அம்பேத்கரை இழிவுபடுத்தும் முழக்கமாகவும் புரிந்து கொள்ளப்பட்டது என்பதை நம்மால் இன்னமும் புரிந்து கொள்ள முடியவில்லை. சாதிவெறியர்களும், பார்ப்பன அடிமைகளும் கொதிப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது ஆனால் தன்னை முற்போக்குவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் சிலரும் வழிய வந்து கடுமையாகக் கண்டித்ததைப் பார்க்கும்போது இவர்கள் எல்லாம் உண்மையில் சாதி ஒழிப்புப் போராளிகள்தானா என்ற இயல்பான கேள்வி எழுகின்றது. அந்த இளைஞர் எந்த இடத்திலும் கட்டாயப்படுத்தி வன்னியர் பெண்களைக் காதலிப்பேன் என்றோ, வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டு சென்று கவுண்டர் பெண்களைத் திருமணம் செய்வேன் என்றோ, இல்லை திருமணம் செய்யாமலேயே முதலியார் பெண்களைக் கட்டியணைப்பேன் என்றோ சொல்லவே இல்லை. அந்த இளைஞன் அப்படி ஒரு முழக்கத்தை முன்வைப்பதற்கான காரணத்தை ஆழ்ந்து பரிசீலிக்க முடியாமல் அல்லது அதற்குத் தயாராக இல்லாமல் அந்த இளைஞர் பெண்களை இழிவுபடுத்தி விட்டார், பெண்களை உடமையாகக் கருதும் ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடுதான் அவரின் பேச்சு என சொல்வதெல்லாம், தன் சம காலத்தில் நூற்றுக்கணக்கான சாதி ஆணவப் படுகொலைகள் நடந்த போது அதைத் தடுக்க அரசும், பொது சமூகமும் முன்வராததைப் பார்த்து பார்த்து கையறு நிலையில் மனம் வெதும்பி இந்த அரசின் மீதும், சாதிவெறியோடு செயல்படும் பொதுச் சமூகத்தின் மீதும் இருக்கும் தீராத ஆத்திரத்தின் வெளிப்பாடுதான் அந்த இளைஞனின் முழக்கம் என்பதைப் புரிந்து கொள்ள வக்கற்ற மேட்டுக்குடி எலைட் சதி ஒழிப்பு போராளிகளின் பேச்சாகும்.

ஏன் இப்போது கட்டுரையின் தலைப்புக்கு சம்மந்தமே இல்லாமல் இதைப் பற்றி பேச வேண்டி வந்தது என்றால் கொஞ்சம் சம்மந்தப்படுத்த வேண்டும் என்பதால்தான். அந்தத் தலித் இளைஞர் பெண்களைப் பற்றி இழிவாகப் பேசினார் எனக் கைது செய்யும் அளவிற்குப் போகும் காவல்துறை, அதே தலித்துகளை ‘தங்கள் சாதிப் பெண்களை தொட்டால் வெட்டுவேன், குத்துவேன், கருவறுப்பேன்’ என பொதுமேடைகளில் பேசிய எந்த ஒரு சாதி வெறி பிடித்த நாயையும் இதுவரை கைதுசெய்ததில்லை. தலித்துகள் தங்கள் பேச்சில் எல்லையை மீறும்போது அவர்களை விரட்டிவிரட்டி வேட்டையாடும் காவல்துறை, ஆதிக்கசாதி வெறி நாய்கள் என்ன பேசினாலும், எவ்வளவு தரம் தாழ்ந்து நடந்து கொண்டாலும் அவர்களைக் கைது செய்ய மறுப்பதோடு வெட்கமே இல்லாமல் அது போன்ற அயோக்கியர்களுக்குப் பாதுகாப்பையும் தருகின்றது.

அம்பேத்கர் புகைப்படத்துக்கு முன்னால் முழக்கம் இட்ட இளைஞன் குற்றவாளி என்றால், திருமாவளவனை சாதி ரீதியான கண்ணோட்டத்தோடு மிகத் தரம் தாழ்ந்து தொடர்ச்சியாகத் தாக்கி வரும் எச்ச ராஜா குற்றவாளி இல்லையா? “தங்கள் உயர் அதிகாரிகளிடம் படுத்துதான் பெண்கள் பதவி உயர்வு பெறுகின்றார்கள்” என்று சொன்ன எஸ்.வி.சேகர் குற்றவாளி இல்லையா? இவர்களை எல்லாம் காவல்துறை என்ன செய்தது? கைது செய்ததா இல்லை பாதுகாப்பு வழங்கியதா? பார்ப்பனன் ஒட்டு மொத்த தமிழ்ப் பெண்களையும் கொச்சைப்படுத்தினாலும் சூடு சுரணையற்று கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்க்கும் அரசு, “வன்னியர் பெண்களைக் காதலித்தால் கொல்வேன், கவுண்டர் பெண்களை காதலித்தால் கழுத்தறுபேன்” எனச் சொல்வதோடு மட்டுமல்லாமல் அதைச் செய்தும் வரும் ஆதிக்க சாதி வெறிக்கு எதிராக “நீ சொன்ன அதே சாதிப் பெண்களை நான் காதலிப்பேன், கல்யாணம் செய்வேன், கட்டியணைப்பேன்” என்று அதற்கு அஞ்சாமல் எதிர்விணை புரியும்போது போது மட்டும் ஏன் அவர்களை வேட்டையாடுகின்றது? தமிழ்நாட்டுப் பெண்களை விபச்சாரத்துக்கு அழைத்த பிஜேபியைச் சேர்ந்த நிர்மலாதேவி விவகாரத்தில் இதுவரை எத்தனை பேரை இந்த அரசு கைது செய்திருக்கின்றது? எத்தனை சாதி சங்கத் தலைவர்கள் தமிழகம் முழுக்க எஸ்.வி. சேகருக்கு எதிராகவும், எச்சை ராஜாவுக்கு எதிராகவும், நிர்மலா தேவிக்கு எதிராகவும் புகார் கொடுத்திருக்கின்றார்கள்?

பார்ப்பனர்கள் தமிழ்ப் பெண்களை இழிவாகப் பேசினாலும், ஏன் விபச்சாரத்துகே அழைத்தாலும் வெட்கமே இல்லாமல் அதை வேடிக்கை பார்த்த கும்பல் ஒரு தலித் இளைஞர் ஆதிக்க சாதிவெறிக்கு எதிராக முழக்கம் இட்டால், அதை அப்படியே திரித்து பெண்களை இழிவுபடுத்திவிட்டார், அம்பேத்கரை இழிவுபடுத்தி விட்டார் என்று காட்டுக்கூச்சல் இடுவது என்ன வகையான யோக்கியதை? முழக்கம் இட்ட இளைஞனைக் கைது செய்யத் துடிக்கும் காவல்துறை ‘திருமாவளவன் தொட்ட கட்சியை மக்கள் தொடமாட்டார்கள்’ என்று சாதி ஆதிக்க வெறியோடு பேசிய எச்சை ராஜாவை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்து விட்டதா? சென்ற ஆண்டு இதே மாதம் திருமாவளவனை ரவுடி என்று எச்ச ராஜா சொன்னபோதும் இந்த அரசு வேடிக்கைதானே பார்த்துக் கொண்டிருந்தது? அந்த தைரியத்தில் தானே வைரமுத்துவின் குடும்பத்தை இழிவாகப் பேசவும், உயர்நீதி மன்றத்தை ‘உயர்நீதி மன்றமாவது மயிராவது’ எனச் சொல்லும் அளவிற்கு அவனை இட்டுச்சென்றது.

தலித்துகளின் மீது ஏன் இந்த அரசுக்கு இவ்வளவு வன்மம்? ஆதிக்க சாதிவெறியர்களின் கையாளாகவே இந்த அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. திருச்சி ஜெயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெற இருந்த ‘தமிழ் இலக்கியப் பதிவுகளில் பெண் வன்கொடுமைகள்’ என்ற பன்னாட்டு கருத்தரங்கத்தையே எச்சை ராஜாவின் மிரட்டலுக்குப் பயந்து தள்ளி வைக்கும் சூழ்நிலை இருக்கின்றது என்றால் தமிழகத்தை ஆள்வது அரசா, இல்லை பார்ப்பனக் கொழுப்பா என்ற கேள்வி எழுகின்றது. உலகத்துக்கே சுயமரியாதையையும், தன்மானத்தையும் கற்றுக் கொடுத்த மண்ணில் அப்படிப்பட்ட உணர்வு சிறிதும் அற்ற கும்பல் ஆட்சி செய்துகொண்டு இருக்கின்றது. இந்த மண்ணின் மைந்தர்கள் தொடர்ந்து பார்ப்பனக் கும்பல்களால் அவமானங்களை சந்திக்கும் சூழ்நிலையை இந்த பிஜேபி அடிவருடி அரசு ஏற்படுத்தி இருக்கின்றது. கைது செய்து சிறையில் அடைக்க வேண்டிய விஷநாக்குப் பேர்வழிகள் சுதந்திரமாகப் பூணூலை உருவிவிட்டுக் கொண்டு தொடச்சியாக இந்த மண்ணையும், மக்களையும் இழிவுபடுத்திக் கொண்டு, சுதந்திரமாக காவல்துறை பாதுகாப்போடு சுற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் ஆதிக்க சாதிவெறிக்கு எதிராக தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்திய இளைஞனை இந்த அரசு கொலைவெறியோடு துரத்திக் கொண்டு இருக்கின்றது.

எலைட் முற்போக்குவாதிகளோ இரண்டையும் பிரித்து அறியும் திராணியற்று பிதற்றிக் கொண்டு திரிகின்றார்கள். சமூக எதார்த்தத்தின் பிரதிபலிப்புகளை சரியாக மதிப்பிடத் தெரியாத அளவுக்கு அவர்களின் வர்க்கப் பார்வை சுருங்கிப் போய் கிடக்கின்றது. அவர்கள் முற்போக்கு என்ற போர்வையிலும், பெண்ணியம் என்ற போர்வையிலும் ஆதிக்க சாதிவெறிக்கு மறைமுகமாக சாமரம் வீசுகின்றார்கள். பார்ப்பனியத்தின் குரல்வளையாய் செயல்படும் இது போன்ற முற்போக்குவாதிகள் அப்பட்டமாக தன்னை மக்கள் முன் அம்பலப்படுத்திக் கொள்ளும் எச்ச ராஜா, எஸ்வி சேகர் போன்ற பார்ப்பன விஷநாக்குப் பேர்வழிகளைவிட ஆபத்தானவர்கள்.

நம்முடைய விருப்பம் எல்லாம் முழக்கம் இட்ட இளைஞனைக் கைது செய்வதில் காட்டும் அக்கறையில் நூற்றுக்கு ஒரு சதவீதமாவது திருமாவளவனை சாதி ரீதியாக இழிவுபடுத்திய எச்சை ராஜாவைக் கைது செய்வதில் தமிழக காவல்துறை காட்ட வேண்டும் என்பதுதான். அப்படிப்பட்ட நாளுக்காகவே ஒட்டுமொத்த தமிழகமும் காத்துக் கிடக்கின்றது.

- செ.கார்கி