அமெரிக்காவின் வாசிசங்டன் -சியாட்டில் நகர சபை பெண் உறுப்பினர் சமா சாவந்த் அவர்கள் சாதிக்கு எதிராகக் கொண்டு வந்த அவசர சட்டம் பெரும்பான்மை பெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் சாதிய பாகுபாடு சட்டவிரோதமானது என அறிவித்த அமெரிக்காவின் முதல் நகரமாக அது மாறி இருக்கிறது.

2020 இல் அமெரிக்காவில் முதன்முறையாகச் சாதிய பாகுபாட்டை எதிர்த்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. சேன் ஜோசில் உள்ள சிசுகோ என்கிற மென்பொருள் நிறுவனத் தலைமையகத்தில் பணிபுரிந்த இந்தியாவைச் சார்ந்த பொறியாளரான தலித் ஒருவரை அந்நிறுவனத்தில் மேல் நிலையில் பணியாற்றும் சுந்தர் ஐயர், இரமணா கொம்பெல்லா ஆகிய இருவர் மீதும் தன்னைச் சாதி அடிப்படையில் துன்புறுத்துவதாகக் கூறி நிறுவனத்தில் முறையீடு அளித்தார்.

அமெரிக்காவின் சட்டத்தில் சாதிய படிநிலைகள் இல்லை என்பதால் அந்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க மறுத்து விட்டது நிர்வாகம். இதனைத் தொடர்ந்து அந்தத் தலித் ஊழியர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை, காரணம் தான் தலித் என்பது தன் நண்பர்களுக்கும், குடியிருக்கும் இடத்திலும் தெரிந்துவிடும் என்பதாலும், தன் பிள்ளைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதாலும் தான் கொடுத்த வழக்கில் பெயர் குறிப்பிட விரும்பவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்) தொடர்ந்து தொல்லைக்கு ஆளாகியுள்ளார். தனிமைப்படுத்துவது, பதவி உயர்வு ஆகிய நல்வாய்ப்புகளுக்கு இடையூறாக அவர்கள் இருந்தனர்.

பிறகு கலிபோர்னியா மாகாணத்தில் வேலை வாய்ப்பு மற்றும் வீட்டு வசதித் துறைகளில் நீதி (Department of Fair Employment and Housing) வழங்கும் நீதிமன்றத்தில் அந்தத் தலித் ஊழியர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அங்கேயும் தீர்க்கப்படாததால், பாகுபாடுகளை எதிர்ப்பதில் கலிபோர்னியா மாநிலச் சட்டங்கள் வலிமையானதாக இருந்ததால் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் ஆர் எஸ் எஸ் இன் துணை அமைப்பான இந்து அமெரிக்க பவுண்டேஜன் (HAF) இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொள்ளுமாறு மனு தாக்கல் செய்தது. வேடிக்கை என்னவென்றால் சாதி வெறிபிடித்த பார்ப்பனர்களான சுந்தர் ஐயர், இரமணா கும்பெல்லா ஆகிய இருவரும் தங்கள் மனுவில், தாங்கள் ஒரு மத நம்பிக்கையுடைய இந்துவோ, பார்ப்பனரோ அல்லர் எனக் குறிப்பிட்டுள்ளனர். இவர்களால் பாதிக்கப்பட்ட அந்தத் தலித் நபர், தான் வழிபாடு செய்யும் மத நம்பிக்கையுள்ள இந்து என்றும், கோவிலுக்கு வழக்கமாகச் செல்பவன் என்றும் தன்னைப் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த ஆர்எஸ்எஸ் துணை அமைப்பான எச்.ஏ.எப்., தன் மனுவில் சாதிய படிநிலை இந்து மதத்தின் அடிப்படைப் பண்பு என்பதை குறிப்பிட்டுள்ளது, மட்டுமல்லாமல் இந்த அமைப்பு தான் இந்து மதம் சார்ந்தவன், வழக்கமாகக் கோவிலுக்குப் போகின்றவன் என்று சொல்லும் அந்தத் தலித் இளைஞருக்குச் சார்பாக இந்து அமைப்பு இல்லாமல், தான் இந்து இல்லை, கோயிலுக்குப் போவதில்லை எனக் குறிப்பிடும் பார்ப்பனருக்குச் சார்பாகத் தன் நிலையை எடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் சுந்தர் ஐயரும், இரமணா கும்பெல்லாவும் எங்கள் மீது வழக்கு தொடுத்த அந்தத் தலித் ஊழியரின் பெயரை நீதிமன்றம் வெளியிட வேண்டும் எனக் கேட்டுள்ளார்கள்.

இன்னோர் உண்மையை அறிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது. சுந்தர் ஐயரும் அந்தத் தலித் ஊழியரும் இந்தியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். சுந்தர் அமெரிக்காவில் உள்ள சிசுகோ நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த பின்புதான் அதே நிறுவனத்தில் அந்தத் தலித் இளைஞரும் பணியில் இணைந்திருக்கிறார். அப்பொழுது சுந்தர் ஐயர் தன்னோடு பணியாற்றும் ஊழியர்களிடம் இவர் தன்னோடு படித்ததையும் இட ஒதுக்கீட்டின் வழியாக மேற்படிப்பு படித்ததையும் சொல்லி இருக்கிறார். இதன் வழியாக அந்த நிறுவனத்தில் உள்ள எல்லா பார்ப்பன இந்தியர்களும் இவர் ஒரு பட்டியல் சாதியைச் சார்ந்தவர் என்பதைப் புரிந்து கொண்டு அன்று முதல் இவரை ஒடுக்குமுறையில் தனிமைப்படுத்துகிறார்கள்.

தற்போது இவ்வழக்கில் அம்பேத்கர் பன்னாட்டு மையம் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது. இவ்வளவு நாட்களாக இந்த வழக்கு வலுவிழக்கக் காரணமாக இருந்தது, அமெரிக்க சட்டத்தில் சாதி பாகுபாட்டை ஒரு பாகுபாடாக வரையறுக்கவில்லை என்பதுதான். ஆனாலும் அமெரிக்காவில் உள்ள ஹார்வேர்ட் பல்கலைக்கழகம், பிரவுன் பல்கலைக்கழகம், கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் சாதிய பாகுபாடு தடைச்செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான் சியாட்டில் நகர சபையில் ஒடுக்கப்பட்ட சாதியினரைப் பாதுகாக்க அவசர சட்டத்துக்கான தீர்மானத்தைக் கடந்த காலங்களில் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த சியாட்டில் நகர சபை உறுப்பினர்களில் ஒருவரான சமா சாவந்த் அவர்களால் முன்வைக்கப்பட்டுத் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. சியாட்டில் நகரத்தில் இனி பட்டியலின, பிற்படுத்தப்பட்ட சமூக தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பை வழங்கும் நிலையில் சாதி, இனம், நிறம், பாலினம், மதம், மற்றும் தேசியம் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை இந்தச் சட்டம் தடை செய்யும்.

இந்தியாவில் பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட இந்தச் சாதிய படிநிலைகள் உலகமெங்கும் குறிப்பாக, மேற்கு நாடுகளுக்குக் கடத்தும் பார்ப்பனர்களின் இந்த மலிவான போக்கை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் எல்லா மேல்நிலைகளையும் தன் அதிகாரத்தில் வைத்திருக்கும் இந்தப் பார்ப்பனர்கள், வளர்ந்த நாடுகளிலும் இந்த சனாதனத்தை எடுத்துச் சென்று அங்கேயும் உயர் பதவிகளைத் தன் வயப்படுத்திக் கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே மேற்கு நாடுகள் அனைத்திலும் இந்தச் சாதிய பாகுபாடு தடைச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

- அநிமண்

Pin It