தலித் மக்களின் விடுதலை என்பது அவர்களின் சமூக, அரசியல் சூழலில் மட்டுமல்ல; அது அவர்களின் பொருளாதார வளர்ச்சியிலும் அடங்கியிருக்கிறது. தலித்துகளின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி கல்வி மட்டும்தான். ஆனால், சாதிய ஏற்றத்தாழ்வுகளைப் போலவே, இங்கு நிலவும் கல்வி முறையிலான ஏற்றத் தாழ்வுகளில் அவர்களுக்கு கிடைத்திருப்பது தரமற்ற கல்விதான். சத்தான உணவினைப் போல, உயர்தர கல்வியும் அவர்களுக்கு எட்டுவதில்லை. இந்தப் பின்னணியோடுதான், தலித் மாணவர்கள் தங்கிப் பயில்கின்ற ‘ஆதிதிராவிடர் நல மாணவ/மாணவியர் விடுதிகள்' எதிர்கொள்ளப்பட வேண்டும். இந்த விடுதிகள்தான் எதிர்கால தலித்துகளின் வாழ்நிலையைத் தீர்மானிக்கின்ற இடங்களாக இருக்கின்றன. இவற்றை ஒழுங்காகவும், அதற்குரிய வசதிகளோடும் பராமரிக்க வேண்டும் என்ற அக்கறை - ஆளுகின்றவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அதிகமாக இருக்க வேண்டும்.

அதைவிட, தலித் இயக்கங்களுக்கும், அதன் செயல் வீரர்களுக்கும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நாளைய தலித் சமூகம் தலை நிமிரும்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பகுதியில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள், அவ்விடுதியின் காப்பாளரால், அவருடைய மாடுகளை மேய்க்க வைக்கப் பயன்படுத்தப்படுகின்றனர் என்றும், பிற வீட்டுவேலைகள் செய்ய வைக்கப்படுகின்றனர் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டிருந்தது. இதையறிந்த ‘சமூக செயல்பாட்டு இயக்க'த்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசூர் ராஜ், மாணவர்களிடம் விசாரித்தார். வாலாஜாபாத் விடுதி மட்டுமின்றி, மாவட்டத்திலுள்ள பிற விடுதிகளின் நிலை என்ன என்பதை அறிய வேண்டும் என்பதற்காக உண்மை அறியும் குழு ஒன்றை உருவாக்கி, விடுதிகள் ஆய்வு செய்யப்பட்டன. பத்து விடுதிகளில் ஆய்வு செய்த உண்மை அறியும் குழுவினர், தங்கள் கண்டுபிடிப்புகளையும் அரசுக்கான பரிந்துரைகளையும் அளித்துள்ளனர்.

பெரும்பாலான விடுதிகளில் மாணவர்கள் படிப்பதற்கான எந்த சூழலும் இல்லை. உயரமான சுவர்களில் தொங்கும் மங்கிய வெளிச்சம் தரும் குண்டு விளக்குகள்தான் எரிகின்றன. ஆறு மணிக்கு மேல் விடுதியில் சமையல் செய்பவரோ, விடுதிக் காப்பாளரோ, மாணவர்களுடன் விடுதியில் தங்குவதில்லை. வார விடுமுறை நாட்களில் மாணவர்கள் வலுக்கட்டாயமாக வீடுகளுக்கு விரட்டப்படுகின்றனர். திங்கட்கிழமை நேராகப் பள்ளிக்கு வந்துவிடுவதால், அன்றைய காலை உணவு அவர்களுக்கு விடுதியில் தரப்படுவதில்லை. காலை வேளைகளில் அவர்களைப் படிக்க வைப்பதற்கு யாருமே விடுதிகளில் இல்லை. அது மட்டுமல்ல, ஒவ்வொரு விடுதியிலும் அய்ம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்யப்படுகின்றனர். ஆனால், விடுதியில் தங்குவது அதிகபட்சம் இருபது மாணவர்கள்தான்.

மாணவர்களின் கழிப்பிடங்கள் தூய்மையாகப் பராமரிக்கப்படுவதில்லை. நல்ல சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுவதில்லை. சமையல் திறந்தவெளியில்தான் செய்யப்படுகிறது. சுகாதாரமின்மையே அதிகமாக நிலவுகிறது. விடுதி என்பது தண்டனையாகத்தான் இருக்கிறது. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டால், அவர்கள் சொல்லும் பதில் விடுதிகளைவிட மோசமானது. "தமிழ் நாடு முழுக்க இதுதான் நிலை; என்ன செய்யச் சொல்றீங்க'' என்று நம்மையே திருப்பிக் கேட்கிறார்கள். படிக்கப்போன இடத்தில் பாழாய்ப் போகிறார்கள் தலித் சிறுவர்கள். போட்டிகள் நிறைந்த உலகத்தில் முறையான உலக அறிவும், புத்தக அறிவும் இல்லை எனில், மீண்டும் அவர்கள் மூதாதையரின் தொழில்களைச் செய்யவே நேரிடும். எனவே, அனைவரும் ஒன்றிணைந்து, ஆதிதிராவிடர் மாணவ/மாணவியர் விடுதிகளை சீர் செய்ய முன்வர வேண்டும்.

விடுதிகளின் அவலநிலை குறித்து, உண்மை அறியும் குழுவினர், தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசியை சந்தித்தனர். அறிக்கையை சமர்ப்பித்து, தங்கள் பரிந்துரைகளையும் எடுத்துக் கூறினர். ஒரு விடுதிக்கு ஒரு காப்பாளர் என்று வேலையில்லா பட்டதாரி இளைஞர்களை நியமிக்க வேண்டும். அவர்களுக்கு காப்பாளருக்கான பயிற்சி தரப்பட வேண்டும். காப்பாளர் விடுதியிலேயே தங்கி, மாணவர்கள் படிப்பு நேரத்தில், அவர்களுடன் இருக்க வேண்டும். நூலகமும், கணிப்பொறியும் விடுதிகளில் வேண்டும். மாணவர்களுக்குத் தரப்படும் உணவிற்கான தொகை ரூ. 10லிருந்து உயர்த்தப்பட வேண்டும். விடுதியின் நடவடிக்கைகளை கவனிக்க - அந்தப் பகுதிகளிலுள்ள தொண்டு நிறுவனங்களையும், சமூக ஆர்வலர்களையும், கண்காணிக்கும் குழுவாக அங்கீகரிக்க வேண்டும்.
Pin It