பறப்பசங்க எல்லாம் கொடி ஏத்துனத பார்த்தோமா, மிட்டாய் வாங்குனோமா, வீட்டுக்குப் போனோமாண்ணு இருக்கணும். அத விட்டுட்டு பள்ளிக்கூடத்துல நடக்கிற டான்ஸ் போட்டியில எல்லாம் கலந்து கொள்ளக் கூடாது'' - கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயில் வட்டத்திற்கு உட்பட்ட அம்புஜவல்லிப்பேட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கடந்த குடியரசு நாள் விழா வில் வன்னியர் சாதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவருடைய சாதிவெறிப் பேச்சு இது. சுமார் 175 மாணவ, மாணவிகள் படிக் கின்ற அம்புஜவல்லிப் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 26.1.2007 அன்று குடியரசு தினத்திற்கான கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் மூன்று நாட்களுக்கு முன்பாக முத்தமிழ்ச் செல்வன் என்ற ஆசிரியரிடம் தங்கள் பெயரை கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்த மாணவர்கள், தாங்கள் ஈடுபடவுள்ள போட்டிகளில் கலந்து கொள்ள பெயரினைப் பதிவு செய்தனர்.

இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் காட்டுமன்னார் கோயிலுக்கு அருகில் உள்ள லால்பேட்டையைச் சேர்ந்த இஸ்லாமியர். முத்தமிழ்ச் செல்வன், தனது உறவினரான கிருஷ்ண மூர்த்தியுடன் (ஓய்வு பெற்ற காவலர்) சேர்ந்து கொண்டு செய்கிற தொல்லைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், தலைமை ஆசிரியர் அடிக்கடி விடுமுறையில் சென்று விடுவார். இதனால் பள்ளியின் நிர்வாகத்தைக் கவனிக்கிற பொறுப்பை முத்தமிழ்ச் செல்வன் எடுத்துக் கொள்வார். இந்நிலையில் குடியரசு தினத்தன்று நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனித்து வந்த அவர், பள்ளியில் கொடியேற்றி முடித்தவுடன் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய பிறகு, இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டபடி பேசியிருக்கிறார். இதனைக் கேட்ட மற்ற ஆசிரியர்களுக்கெல்லாம் ஒரே பயம். ‘இப்படிப் பேசுறாரே அடுத்து என்ன நடக்குமோ' என ஒருவரை ஒருவர் பார்த்து முணுமுணுக்கத் தொடங்கினர். நடனம் ஆடுவதில் ஆர்வத்தோடும், இரட்டிப்பு மகிழ்ச்சியோடும் இருந்த தலித் மாணவர்களும், இப்படியொரு வார்த்தை வரும் என எதிர்பார்க்கவில்லை.

"சார், வல்லவன் படத்துல உள்ள பாடலுக்கு ஆடுறோம்னு உங்கக்கிட்டே சொன்னோம். நீங்களும் கேசட்கூட எடுத்துட்டு வாங்கண்ணு சொன்னீங்க. இப்ப என்னென்னா நாங்க மட்டும் டான்ஸ் ஆடக் கூடாதுனு சொல்றீங்களே'' என கேட்டனர்.

"நீங்கல்லாம் டான்சும் ஆட வேண்டாம். ஒரு மயிரும் ஆட வேண்டாம்'' என்றார் முத்தமிழ்ச் செல்வன். "அந்தப் பாட்ட நிறைய முறை போட்டு ஆடிப் பார்த்திருக்கிறோம். எங்கள ஆட விடுங்க என தலித் மாணவர்கள் மீண்டும் கேட்க கோபமடைந்த ஆசிரியர், "பறப்பசங்களுக்கெல்லாம் தேவடியா ஆட்டம்தான் ஆடத் தெரியும். அத உங்கத் தெருவுல போய் ஆடுங்க'' என தலித் மாணவர்களை இழிவாகப் பேசி விரட்டியடித்தார். டான்ஸ் போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லையே என மன வருத்தமடைந்த மாணவர்கள், நேராக வீட்டுக்குச் சென்று தங்கள் பெற்றோரிடம் நடந்ததை எல்லாம் அழுது கொண்டே சொன்னார்கள்.

பிஞ்சுக் குழந்தைகளின் நெஞ்சில் இப்படி சாதிவெறியைத் தூவி இருக்கிறானே என கொதிப்படைந்த சேரி மக்கள், அம்புஜவல்லிப்பேட்டை நடுநிலைப் பள்ளிக்குத் திரண்டனர். முத்தமிழ்ச் செல்வனிடம், "ஏன் எங்கள் குழந்தைகளை மட்டும் டான்ஸ் ஆடக் கூடாதென விரட்டியடித்தீர்கள்'' எனக் கேட்டதற்கு, "உங்களால் என்ன செய்ய முடியும்? நான் அப்படித்தான் செய்வேன்'' என சாதித் திமிரோடு பேசியிருக்கிறார். இதனால் பெரிய பிரச்சனை உருவாகும்.

அமைதியாகச் செல்லுங்கள் என மற்ற ஆசிரியர்கள் சொன்ன பிறகு, தலித் மாணவர்களுக்கு ஆறுதல் பரிசு என சொல்லி எவர்சில்வர் தட்டுகளை கொடுத்து அனுப்பியுள்ளார். "நாங்கள் எந்தப் போட்டிகளிலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அதனால் எங்களுக்குப் பரிசுகள் தேவையில்லை'' என செவிளில் அறைந்தது போல் சொல்லி பரிசுப் பொருட்களை திருப்பி அளித்தனர் தலித் மாணவர்கள்.

அம்புஜவல்லிப்பேட்டையில் இருக்கின்ற தலித்துகளில் இருந்து வேறுபட்டு காணப்பட்டவர் சண்முகம். வெளியூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இவர், விடுமுறையில் வந்தபோது இந்தக் கொடுமையை கேள்விப்பட்டு அதை ஒரு மனுவாக எழுதி, ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருபுத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் உதயகுமாரிடம் கொடுத்தார். "நான் மனு கொடுப்பதால், என் உயிரையே வன்னியர்கள் எடுத்தாலும் பரவாயில்லை, சாதி வெறி பிடித்தவர்களை தண்டிக்க வேண்டும்'' என்று கூறிய சண்முகத்தின் மனுவைப் படித்து அதிர்ந்து போனார் ஊராட்சி மன்றத் தலைவர். தான் அதே வன்னிய வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும், நீதி கிடைக்க போராடுவேன் என்றார், ஊராட்சி மன்றத் தலைவர் உதயகுமார். இந்த மனுவுடன் தனது கடிதத்தையும் இணைத்து, கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கொடுத்தார்.

27.1.2007 அன்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கொடுக்கப்பட்ட மனுவைத் தொடர்ந்து, அடுத்த நாளே மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலருக்கும் தொலைபேசி மூலம் செய்தியைத் தெரிவித்துள்ளார், கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர். பிறகு 29.1.2007 அன்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் இருந்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலருக்கும் தொலைபேசி செய்தி வந்துள்ளது.

இதனையடுத்து, 29.1.2007 அன்று (G.O. எண். 536/அ2/2007) ஓர் ஆணையை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் வெளியிட்டார். இதில் "இடைநிலை ஆசிரியர் திரு. எம். முத்தமிழ்ச் செல்வன் என்பவர் குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில், மேற்படி பள்ளியில் தலித் மாணவர்களைப் பங்கேற்க அனுமதி மறுத்து, சாதிப் பெயரைச் சொல்லி மாணவர்களை இழிவுபடுத்தியுள்ளார்'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் சாதியைச் சொல்லி மாணவர்களை இழிவு படுத்தியுள்ளார் என அரசே உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், இந்தக் குற்றத்திற்கெல்லாம் தண்டனை - அம்புஜவல்லிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருந்து இடம் மாற்றி, கருப்பேரி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பணியாற்ற வேண்டும். ஆனால், இந்தப் பணியிட மாற்றம், எப்படி தீண்டாமைக் கொடுமைக்கான சரியான தண்டனையாக இருக்க முடியும்?

இது தவிர, மாணவர்களுக்கு வருகின்ற உதவித் தொகையைப் பெறுவதற்கு வங்கிக் கணக்குப் புத்தகம் வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார் முத்தமிழ்ச் செல்வன். தலித் மாணவர்களின் பெற்றோர்கள் அதையும் வாங்கிக் கொடுத்துள்ளனர். ஆனால், புத்தகத்தை அவரே வைத்துக் கொண்டு உதவித் தொகையைத் தருவதேயில்லை. இப்படி ஊழல்வாதியாக செயல்பட்ட இந்த ஆசிரியர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் பணியிட மாறுதலை மட்டும் அறிவித்துள்ளது.

எல்லோரும் கூடியிருக்கின்ற குடியரசு தின விழாவில் தலித் மாணவர்களை மட்டும் சாதியைச் சொல்லி இழிவுபடுத்தியது ‘தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்' - 1989 இன் பிரிவு 3(1) (10) இன்படி குற்றச் செயல். இதனை கடலூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் வெளியிட்ட ஆணை உறுதி செய்கிறது. இந்நிலையில், முத்தமிழ்ச் செல்வனை இந்த அரசு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இதுதான் இதற்கான தண்டனையாக இருக்க முடியும். அப்போது தான் இதைப்போன்ற ஆசிரியர்களுக்கும் இது அச்சுறுத்தலை உருவாக்கும்.

ஆனால், சாதி வெறியர்களுக்கு சாதகமாக அரசு நடந்து கொள்வதால், இதை முறியடிப்பதற்கு இப்பிரச்சனையை சட்ட ரீதியாக சந்திக்க முன்வந்துள்ளார், தலித் விடுதலைக்கான மனித உரிமை அமைப்பின் மாநில அமைப்பாளர் பா. ரவிச்சந்திரன். அவர் இது குறித்துப் பேசும்போது, "தீண்டாமை ஒரு பாவச் செயல், அது ஒரு குற்றச் செயல் என்று பாடநூல்களில் அச்சிட்டு வருவது வெறும் சடங்காகத்தான் இருக்கிறது. இக்குற்றத்தை செய்த ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்காததன் மூலம் - 'தீண்டாமை ஒரு குற்றமல்ல' என்று அரசே நினைப்பதாகத் தெரிகிறது. ஆனால், நாங்கள் சட்ட ரீதியாக இதற்கு தீர்வு காண்போம் என்றார் உறுதியான குரலில்.

-பூவிழியன்
Pin It