அடக்கி ஆள்வதற்கும், அடிமைப்படுத்துவதற்குமே உருவாக்கப்பட்ட கடவுள் எனும் சர்வாதிகாரக் கோட்பாட்டை, மனித சமூகம் தங்களுக்கான நெறியாகக் கொண்டாடத் தொடங்கியதிலிருந்துதான் - வெளிப்படையாக அரங்கேறின பல்வேறு அசிங்கங்கள். கடவுளும், கடவுளின் பெயரால் உருவாக்கப்பட்ட மதம் இரண்டு நிரந்தர இழுக்குகளை இந்தச் சமூகத்தின் மீது சுமத்தின. அழிக்க அழிக்க, வீறு கொண்டு எழுந்து நின்று அச்சுறுத்தும் அவை, ஜாதியும் பெண்ணடிமைத்தனம். சமூகத்தின் ஒரு பிரிவு மக்களைத் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைத்ததைப் போலவே அது ஒட்டுமொத்த பெண் சமூகத்தையே தீண்டாமைக்கும், வன்முறைக்கும் இரையாக்கியது. மதம், மனிதர்களுக்கான நெறியாக உருவாக்கப்படவில்லை. அது, மனிதர்களைக் கூறு போடவே பயன்படுகிறது. எளியோரை, வலியோர் சூறையாட மதம் அனுமதியளிக்கிறது.

Periyar E.V.Ramasamy
பெண் உடலின் இயற்கையான வளர்ச்சியையும் மாற்றங்களையும், இந்து மதம் ‘தீட்டு' என்கிறது. பெண்ணை பலவீன மானவளாகவும் பேதையாகவும் சித்தரிப்பதோடு, கடவுளின் அருகில் செல்லத் தகுதியற்றவளாக்குகிறது. ஆணை ஆளப் பிறந்தவனாகவும், பெண்ணை அடங்கிப்போக வேண்டியவளாகவும் நிர்பந்திக்கிறது. ஆண் தலைமையிலான குடும்ப அமைப்பை வலியுறுத்தி, கணவனைத் துதிக்கச் சொல்கிறது. தாலியை வேலியாக்கி, தனக்கெதிரான வன்முறைகளை எதிர்த்து வெளியேறும் / ஆண் சார்ந்து வாழ்வதைப் புறக்கணிக்கும் பெண்களை அது ‘வேசி' என்கிறது. பார்ப்பன இந்து மதம், அதன் சட்டதிட்டமான மநு தர்மமே இன்றைய சமூகத்தின் அத்தனை பெண்ணடிமைத் தனங்களுக்கும் ஆணி வேர். அதை உணர்ந்தோமா நாம்? பகுத்தாய்ந்தோமா? அந்த ஆணிவேரைப் பிடுங்கி எறிவதற்குப் பதிலாக, அதற்கு நாள்தோறும் நீர் வார்த்தல்லவா செழிக்க வைத்திருக்கிறோம்!

ஆண்களை விடவும் பெண்கள், பக்தியிலும் கடவுள் நம்பிக்கையிலும் தீவிரமாக இருப்பதன் காரணம் என்ன? பெண் அப்படிப் பழக்கப்படுத்தப்படுகிறாள். உண்பதையும் உறங்குவதையும் போல, தொழுதல் அவளின் அன்றாடக் கடமையாக்கப்படுகிறது. பெண்களின் அணிகலன்களாகக் கருதப்படும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவற்றை மறுதலிக்கத் துணிகிறவர்கள், களங்கற்றவர்களாகிறார்கள். அதனாலேயே பெண் சிறு வயது முதலே அடக்கமானவளாகவும், கடவுளை வணங்குகின்றவளாகவும், அதன் மூலம் ‘ஆண்மை'க்கு அடங்கிப் போகின்றவளாகவும் வளர்க்கப்படுகிறாள். இந்த அடிமைத்தனக் கட்டமைப்பின் சிறு கல் ஆட்டம் கண்டாலும் சமூகமே கொதித்தெழுகிறது; ஆண்களோடு சேர்ந்து கொண்டு பெண்களும் அதற்கு ஆமோதிக்கின்ற நிலையே நிலவி வருகிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணம், எது அடிமைத்தனம் என்ற தெளிவு பெண்களிடம் இல்லாததுதான்.

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான (ஆண்) பக்த கோடிகள் ‘பாதயாத்திரை' செல்கின்றனர். இங்கு பெண்களுக்கு அனுமதியில்லை. அதாவது பருவமடையாத பெண்களும், மாதவிலக்கு நின்ற முதியவர்களும் செல்லலாமாம். அதற்கான வயது வரம்பையும் கோயில் நிர்வாகமே நிர்ணயித்துள்ளது. சபரிமலை கோயிலுக்கு ஆண்டுதோறும் தமிழகத்தில் இருந்தும், குறிப்பாக கிராமங்களிலிருந்தும் ஏராளமானோர் செல்கின்றனர். அது வரையிலும் ஊரில் ரவுடியாகவும் பொறுக்கியாகவும் திரிந்த ஆண்கூட, திடீரென மாலை போட்டு ‘சாமி'யானவுடன் அவனுக்கு கிடைக்கும் மரியாதையைப் பார்க்க வேண்டுமே!

முருகனுக்கும், அய்யப்பனுக்கும் மாலை போடும் கார்த்திகையும் மார்கழியும், பெண்களுக்கு சபிக்கப்பட்ட மாதங்கள். ஏற்கனவே இருக்கும் குடும்பப் பொறுப்புகள் மற்றும் வேலைப்பளுவோடு, இந்த ‘சாமி'களுக்காக இன்னும் சீக்கிரம் எழுந்து பணிவிடைகளைத் தொடங்க வேண்டும். இதிலெல்லாம் நம்பிக்கை இல்லையென்றோ, விருப்பமில்லையென்றோ எந்தப் பெண்ணும் சொல்லிவிட முடியாது. ஆண் நிலை அப்படியில்லை. தனக்கான கடவுளை வணங்கும் உரிமை, மாற்றிக்கொள்ளும் உரிமை, மறுதலிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. அதே நேரத்தில் ஆண் சார்ந்த வழிபாடுகளைச் செய்ய மட்டுமே பெண்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அய்யப்பனுக்குப் பெண் வாடையே ஆகாதாம்! அதனால் பெண்களுக்கு அனுமதியில்லையாம். ஆனால், இவை எதைப் பற்றியும் கவலைப்படாமல் கன்னட நடிகை ஜெயமாலா, பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது அவருடைய இளம் வயதில், அய்யப்பன் கோயிலுக்குள் சென்றது மட்டுமின்றி, பாதங்களையும் தொட்டு வணங்கியதாகப் பேட்டியளிக்கத் தொடங்கிய குழப்பம் மாதக்கணக்கில் நீடிக்கிறது. ‘பெண்களைத் தன் கோயிலுக்குள் வரவிடாதது பற்றி அய்யப்பன் எதிர்ப்பு காட்டவில்லையே. இதிலிருந்தே தெயவில்லையா பெண் வாடை ஆகாதென்று!' என வாதிடுவோர் உண்டு. பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் அய்யப்பனைத் தொட்டு வணங்கியதாக ஜெயமாலா இன்று சொன்னதைத் தொடர்ந்து, இன்னும் சில நடிகைகள் தாங்களும் சென்றதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இதற்கும் அய்யப்பன் எதிர்ப்புக் காட்டவில்லையே! பதினெட்டு ஆண்டுகளாக செல்வச் செழிப்போடு மகிழ்ச்சியாகத் தானே வாழ்கிறார் ஜெயமாலா! தெய்வக்குத்தம் என்றால், ரத்தம் கக்கி செத்துப்போயிருக்க வேண்டுமே?!

அய்யப்பனை விட்டுவிடுவோம். ஆண்களுக்கு என்ன பிரச்சனை என்றால், தங்களின் சர்வாதிகார வட்டத்துக்குள் ஒரு பெண் நுழைந்தால் எல்லாம் கண்காணிக்கப்படும், கேள்விக்குள்ளாக்கப்படும் என்ற பதட்டம்! அதனால்தான் ஒரு பெண், அய்யப்பன் சந்நிதானத்துக்குள் நுழைந்தாள் என்ற உண்மையை ஏற்க மறுக்கின்றனர்! சட்டம், தீண்டாமையை குற்றம் என்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை என்கிறது. ஆனால், யார் கண்டு கொண்டார்கள்?

சமூகத்தின் எல்லா விதிகளும் ஆணுக்காகவே உருவாக்கப்படுவதும், ஆண் தன் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்வதுமே கண்கூடு. அய்யப்பன் கோயிலின் தந்தி, வழிபாட்டுக்கு முன் பம்பை ஆற்றில் நீராட வேண்டும் என்பது விதி. கன்டரரு மோகனரு தந்தி ஷவரில் குளிப்பது வழக்கம். கேட்டால், பம்பை ஆற்று நீர்தானே ஷவரில் வருகிறது என்கிறார். நியாயம்தான் என அய்யப்பன் மன்னித்துவிடக்கூடும். அதே தந்தி, பாலியல் தொழிலாளியிடம் போனதையுமா பெண் வாடையே பிடிக்காத அய்யப்பன் மன்னிப்பது?!

இங்கு சங்கராச்சாரிக்கு இருக்கும் பெண்கள் தொடர்பைப் போலவே, தந்தி மோகனருக்கும் இருப்பதாக நாளொரு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சாமியார்களின் அய்யோக்கியத்தனங்கள் வெறும் கிளுகிளுப்பான செய்திகளாக மட்டுமே இங்கு சித்தரிக்கப்படுகின்றன. மாறாக, அதனால் பெருகும் சமூகச் சீர்கேட்டை யாரும் உணர்ந்தபாடில்லை. கொலையும் செய்து, கோடி கோடியாக கொள்ளையும் அடித்து, பெண்களுடனும் கூத்தடித்ததாக சங்கராச்சாரி கையும் களவுமாகப் பிடிபட்டபோதும் சுதந்திரமாக வெளியில் உலவ முடிகிறது. அதற்கு இந்த மதவாத சமூகம் அனுமதிக்கிறது. கடவுள், மதம், சாதியை நம்பும் இளிச்சவாய் மக்கள் கூட்டம் இருக்கும் தைரியத்தில் தான் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் குற்றவாளி சங்கராச்சாரியால் தனது 75 ஆவது பிறந்த நாளுக்காக கும்பாபிஷேகத்தை நடத்திக் கொள்ள முடிகிறது.

ஒரு காலத்தில் கோயில் நுழைவுப் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றன. மனிதர்களுள் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தி, மூடநம்பிக்கைகள் பரவக் காரணமாயிருந்த கோயில் சிலைகளை பெரியார் செருப்பால் அடித்தார். உரிமைகளை வென்றெடுக்கும் முயற்சியாகவே அவை நடந்தேறின. ஜெயமாலா செய்தது அந்த மாதியான ஒரு போராட்டமா என்றால்,அதுதான் இல்லை. மூட நம்பிக்கையின் உச்சபட்சமே அவரை அய்யப்பன் கோயிலுக்குள் நுழைய வைத்தது. பிரச்சன்னம் பார்த்து அய்யப்பன் கோபமாக இருப்பதாக உன்னிக்கிருஷ்ணன் சொன்னவுடன், தன் குடும்ப நலனுக்காகப் பகார பூசை செய்யும் மழுங்கிப் போன மதவாதிதான் அவரும்.

ஆக, பிரச்சனை இதுதான். ஆண்கள் கண்டுபிடித்த கடவுளும், கடவுளின் பெயரால் உருவான மதம், மதம் வலியுறுத்தும் சாதியும் பாலினப் பாகுபாடுகளும், பாகுபாடுகளைத் தூக்கிப் பிடிக்கும் ஆண்களும், ஆண்கள் தலைமையிலான குடும்ப அமைப்புமே பெண்களுக்கெதிரான எல்லாத் துன்பங்களுக்கும் காரணம். பெண் விடுதலைக்காகப் போராடும் யாரும் இதைத் துல்லியமாகக் கணிக்கவில்லை. பெரியார் மட்டுமே அதைத் துணிச்சலாக செய்தார். இன்றைய பெண்ணியவாதிகள் யாருக்கும் அத்தகையதொரு தெளிவு இருப்பதாகச் சொல்வதற்கில்லை. பிரச்சினையின் ஊற்றுக்கண்ணை அவர்கள் தப்பவிட்டு, அதன் வெளிப்பாடுகள் மீதுதான் பெண்ணியவாதிகள் பெரும்பாலும் தாக்குதல் நிகழ்த்துகிறார்கள். வரதட்சணையை எதிர்க்கிறார்கள், இடஒதுக்கீடு கேட்கிறார்கள், குடும்ப வன்முறையை எதிர்க்கிறார்கள். எல்லாம் சரி. ஆனால், அடிமைத்தனத்தை அடியோடு அழிக்கும் அந்த ஆயுதத்தை யாரும் கையிலெடுத்த பாடில்லை. அது, பகுத்தறிவைப் பரப்புவது.

கடவுள் நம்பிக்கை என்பது, அவரவர் தனிப்பட்ட விருப்பமாகவே பார்க்கப்படுகிறது. அது மிகப் பெரிய சமூக அவலம் என்பதைச் சொல்ல இன்றைக்கு ஆளில்லை. வரதட்சணைக்கு எதிராக எத்தனை காலமாகப் போராடுகிறோம்! அது ஒழிந்ததா? பாலியல் வன்முறைக்கு எதிரான கடுமையான சட்டங்கள் இருக்கின்றன. ஆனாலும் இந்தியாவில் அரை மணி நேரத்துக்கு ஒரு பெண், பாலியல் வன்முறைக்கு ஆளாகிறாள். ஏன்? பெண் உரிமைக்கு குரல் கொடுப்பவர்களும், சட்டம் பிரச்சனையை மேலோட்டமாக அணுகுவதே காரணம். இந்து மதம் அழிந்தால்தான் சாதியும் அழியும் என்பது எவ்வளவு உண்மையோ, அது போலதான் பெண்ணடிமைத்தனம். சாமியிடம் போய் சாதி அழிய வேண்டுவது முட்டாள்தனம். பெண்ணடிமைத்தனம் அப்படியே!

படிப்பறிவு வேறு, பகுத்தறிவு வேறு. நம் கல்வி அமைப்பு, சமூக அறிவையும் பகுத்தறிவையும் அளிப்பதில்லை. அதனாலேயே பெரிய படிப்பு படித்து உயர் பதவியிலிருக்கும் பெண்களாகட்டும், நவ நாகரிக மங்கைகளாகட்டும், அவர்களால் குடும்ப வன்முறையை எதிர்க்க முடிவதில்லை. மாவட்ட ஆட்சித் தலைவரான அமுதா, தீ மிதிக்கும்போது, கல்வியறிவற்ற பெண்கள் என்ன செய்வார்கள்? இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். உரிமைகளுக்கான முழக்கங்களோடு, வன்முறைகளுக்கான எதிர்ப்புகளோடு உடலை, உணர்வை கொண்டாடும் வீரிய படைப்பிலக்கியங்களோடு, கடவுள் - மதம் - ஜாதி அழிந்தொழிய பாடுபடும்போதுதான் பெண்ணியம் வலிமைமிக்கதாகும். இல்லையெனில், இப்படித்தான் வரதட்சணை பெருகும்; இடஒதுக்கீடு கானல் நீராகவே இருக்கும்; குடும்ப வன்முறைக்கும் பாலியல் வன்முறைக்கும் பலியாவது அதிகரிக்கும்; பெண்ணை வெறும் உடலாகப் பார்க்கும் பார்வை மாறவே மாறாது... பெண்ணிய அமைப்புகள் தங்களுக்கானத் திட்டங்களை வகுக்கும்போது, பகுத்தறிவுப் பரவலை தன்மைப்படுத்த வேண்டியது அவசியம்.

பகுத்தறிவை எட்டிய பெண், பலவீனமானவளாக இருக்க மாட்டாள். கடவுளைப் புறக்கணிக்கும் பெண், அடிமைத்தனங்களைப் புறக்கணிப்பவளாகிறாள். தன்னை வெறும் உடலாகப் பாவிப்பதை எதிர்ப்பாள். தனக்கெதிரான அநீதிகளைத் துணிச்சலாக சந்திப்பாள். சமத்துவத்தைக் கொண்டாடுவாள். பெண் விடுதலை வேண்டுமெனில், ஒவ்வொரு பெண்ணும் தங்கள் மீது சுமத்தப்பட்ட கடவுளை மறுத்து, மதங்களைத் துறந்து, சாதியைப் புறக்கணித்துப் பகுத்தறிவாளராக வேண்டும். அந்த அறிவும் தெளிவும் யாரையும் யாருக்கும் அடிமையாக வாழவும் அனுமதிக்காது, அடிமைப்படுத்தவும் துணியாது.
Pin It