சாரதா சட்டம் அமுலுக்கு வந்து விட்டது. சாரதா சட்டம் என்பது:
14 வயதுக்குக் கீழ்பட்ட பெண்களுக்கும் 18 வயதுக்கு கீழ்பட்ட ஆண்களுக்கும் விவாகம் செய்யக் கூடாது. செய்தால் தண்டனை என்ற நிபந்தனையைக் கொண்டது. மற்றபடி இதைத் தவிர இந்த சட்டத்தில் வேறு எவ்வித ஆபத்தும் கிடையாது என்பது யாவருக்கும் தெரிந்ததே.
ஆனால் இந்தசட்டத்திற்கு இருந்துவரும் எதிர்ப்பு பெரிதாயிருந்தாலும், சிறிதாயிருந்தாலும் மதம் என்னும் பேரால் அல்லது வேறு எதையும் இது வரை யாரும் சொன்னதில்லை. மதத்தின் பேராலும் கூட ஆக்ஷேபணை சொல்லுகின்ற வர்களும் இருமதங்களின் பேராலேயே சொல்ல முன் வந்திருக்கிறார்கள்.
ஒன்று மகமதிய மதம். மற்றொன்று இந்து மதம், மகமதிய மதத்தின் பேரால் ஆக்ஷேபம் சொல்லுகின்றவர்கள் 14 வயதுக்கு மேற்பட்ட பெண்ணை கலியாணம் செய்வது கூடாது என்றோ அல்லது அது மத விரோதம் என்றோ சொல்வதில்லை. அன்றியும் 14 வயதுக்குக் கீழ்பட்ட பெண்ணைத்தான் கலியாணம் செய்து கொள்ள வேண்டும் என்கின்ற மத நிர்பந்தமிருப்பதாக வும் அவர்கள் சொல்லுவதில்லை.
ஆனால் “கலியாணத்திற்கு வயது நிர்ணயம் கூடாது” என்று மாத்திரம் தான் சொல்லுகின்றார்கள். இதற்கு மற்ற ஜனங்கள் எவ்வளவு மதிப்புக் கொடுப்பார்கள் என்பது விளங்கவில்லை. ஆதலால் இதைப்பற்றி நமக்கு லட்சியமில்லை.
ஆனால் இந்து மதத்தின் பேரால் சொல்லுகின்றவர்கள் பெண்களுக்கு 12 வயதுக்குள் கலியாணம் செய்தாக வேண்டும் என்றும் பெரிய மனுஷியானப் பெண்ணை கலியாணம் செய்து கொள்ளக் கூடாது என்றும், இவைகளுக்கு விரோதமாய் செய்தால் மத விரோதமென்றும், பாவமென்றும், நரகம் கிடைக்குமென்றும் சொல்லு கின்றார்கள்.
இது சரீர சாஸ்திரக் கூற்றுப்படி எப்படி இருந்த போதிலும் பெண்களை அடிமை என்றும் பெண்களுக்கு எந்த நிலையிலும் சுதந்தரம் கொடுப்பது கூடாதென்றும் சொல்லுகின்றவர்களுக்கும் அதை அனுமதிக்கும் மதத்திற்கும் வேண்டுமானால் சரியான நியாயமாய் இருக்கலாமே யொழிய, ஆனால் பெண்களுக்கு சுதந்தரம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்களும் நம்மைப் போல் மனித ஜன்மம் தான் என்றும் கருதுகின்றவர்களுக்கும் ஒரு சிறிதும் நியாயமாய் தோன்றாது? மக்களை நரகத்திற்காவது அனுப்பலாமே யொழிய, அடிமையாய் இருக்க விடக் கூடாது என்றுதான் தோன்றும்.
அன்றியும் இந்து மதத்தின் கல்யாண ஒழுங்கு முறை இந்த மார்ச் 1 முதல் 31 தேதி வரை நடந்த கல்யாணங்களைப் பார்த்தால் அதிலிருந்தே தெரிந்து கொண்டிருக்கலாம். சாதாரணமாக நமது நாட்டில் மட்டும் ஒரு வருஷ வயதிற்கு கீழ்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாத்திரம் நூற்றுக்கணக்கான கல்யாணங்கள் நடந்திருக்கின்றன. மற்றும் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 வருஷங் களுக்கு உள்பட்ட கல்யாணங்கள் பல பல ஆயிரங்களாக இருக்கலாம்.
இவற்றுள் பி. ஏ. பி. எல்., எம். ஏ. எம். எல்,. பட்டம் பெற்றவர்களும் இங்கிலாந்து முதலிய மேல் நாடுகளுக்கு யாத்திரை சென்று வந்த சீர்திருத்தவாதிகளும், சரீரக் கூற்று அறிந்த டாக்டர்களும், மேடையில் சீர்திருத்தத்தைப் பற்றி பேசுகின்றவர்களும் ஆகிய கூட்டத்தார்களின் வீட்டுக் கலியாணங்களே எண்ணிறந்தனவாயிருக்கின்றன. இவைகளை எல்லாம் பார்க்கும் போது இந்த சட்டம் எவ்வளவு அவசியம் என்பது மக்களுக்கு இப்பொழுதாவது விளங்கி இருக்கும்.
இந்த மாதிரி நிலைமை நமது நாட்டில் வெகு காலமாய் இருந்து வந்தும், இந்த அக்கிரமங்களைக் கவனித்து இவ்விதமாக ஒரு சட்டம் செய்யப் படுவதற்கு இந்திய அரசியல் வாதிகளாலேயே சுமார் 25 வருஷ காலமாக தடை செய்யப்பட்டு வந்திருக்கும் விஷயம் இந்திய சட்ட சபை நடவடிக்கைகளைக் கவனித்து வந்தவர்களுக்கு நன்றாய் விளங்கும்.
சிறிது காலமாக நமது நாட்டில் அரசியல் புரட்டுகள் வெளியாக்கி அரசியல் சீர்திருத்த இயல் ஆகிய இயக்கங்களை தங்களுக்கே சொந்தமாக்கிக் கொண்டிருந்த பார்ப்பனர்களின் யோக்கியதையும் சூட்சியையும் வெளியாக்கி இந்நாட்டுக்கு வேண்டியது அரசியலா? அல்லது மதப் புரட்டு பார்ப்பனப் புரட்டு ஆகியவைகள் ஒழிபட வேண்டிய சமூக சீர்திருத்த இயலா? என்பதை பாமர மக்களை நன்றாய் உணரச் செய்த பிறகே பாலிய விவாகத்தை ஒழிக்கும் சாரதா சட்டத்தின் அவசியமும், பொட்டுக் கட்டும் வழக்கத்தை ஒழிக்கும் டாக்டர். முத்து லட்சுமி அம்மாள் சட்டத்தின் அவசியமும் ‘தீண்டாமை ஒழிக்கவும்’ பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்கவும், விதவைகளுக்கு சொத்துரிமை கொடுக்கவும் கொண்டு வரப்பட்டிருக்கும் ஜெயகர் முதலியவர்கள் சட்டத்தின் அவசியமும் ஜனங்கள் உணரவும், அவை வெளி வரவும் செல்வாக்கு பெறவும் இடம் கிடைத்து வந்திருக்கின்றன.
ஆனாலும் இவைகளுக்கு பலமான எதிர்ப்புகள் இல்லாமலும் இல்லை. இருந்தாலும் சீர்திருத்தக்காரர்கள் ஒருவாறு பூரண வெற்றி பெற்று வருகின்றார்கள் என்றே சொல்ல வேண்டும். எப்படி எனில் சீர்திருத்தக் காரர்கள் 100க்கு 10 விஷயத்தில் வெற்றி பெற்றால் அதுவே பூரண வெற்றியான 100க்கு 100 பாகம் வெற்றி பெற்றதாகும்.
ஏனெனில் உண்மை சீர்திருத்தக்காரர்கள் எண்ணிக்கை நமது நாட்டில் 1000 -க்கு ஒன்று கூட இருக்க மாட்டார்கள். சீர்திருத்த விரோதிகள் எண்ணிக்கை பகுதிக்கு மேற்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள். மீதியுள்ள பாமர மக்களோ தனக்கும் தெரியாமல், பிறர் சொல்வதையும் அறிய சக்தியற்ற மூடர்களாக வைக்கப் பட்டிருப்பவர்கள்.
இந்த நிலையில் உள்ள ஒரு நாட்டில் ஒரு சிறு வெற்றி ஏற்பட்டாலும் அது முழு வெற்றியேயாகும். உதாரணமாக, சீர்திருத்தங்களுக்கு விறோதமாய் இருந்து, சீர்திருத்தங்களை எதிர்த்து வெற்றி பெற்றவர்களைப் பற்றி வெற்றி மகிழ்ச்சி கூறுகின்ற உணர்ச்சியுள்ள மக்கள் அடியோடு மறைந்து வருகிறார்கள்.
ஆனால் சீர்திருத்தத்தில் ஒரு சிறு பாகம் வெற்றியானாலும் அதை புகழ்ந்து வெற்றி மகிழ்ச்சி அடைகின்றவர்கள் தாராளமாயும், வெளிப்படையாயும் ஏற்பட்டுவிட்டார்கள். இந்த நிலை மிகவும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அடையத் தக்க நிலையாகும். ஆதலால் சீர்திருத்தக்காரர்கள் தங்களது தோல்விக்கும் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் எதிர்ப்புகளுக்கும் சிறிதும் கவலைக் கொள்ளக் கூடாது.
ஆனால் வெற்றியில் எவ்வளவு மகிழ்ச்சி அடைவதாய் இருந்தாலும் அதோடு திருப்தியும் அடைந்து விடக்கூடாது என்று சொல்லுவோம். பொட்டு கட்டு மசோதா சென்ற மாதம் சென்னை சட்டசபையில் நிறைவேறி இருக்க வேண்டியதானது அனாவசியமாய் ஒத்திப் போட நேர்ந்ததானது விசனிக்கத்தக்கதாகும். ஆனாலும் அடுத்த கூட்டத்திலாவது அது நிறைவேறி விடக்கூடும் என்றே கருதி இருக்கின்றோம்.
(குடி அரசு - துணைத் தலையங்கம் - 06.04.1930)