தோழர்களே! தந்தை பெரியாரின் பெண்ணுரிமைக் களம் என்பது முழுமையான இலக்கினை கொண்டது. பெண்ணுரிமை போராளி தந்தை பெரியார் அவர்கள் பெண்களுக்கான சிந்தனைகளை, கருத்துகளை, போராட்டங்களை சமூகத்தில் முன்வைத்த போது, பெண்ணுரிமைக்கு தடையாக இருந்த அரசியல். ஜாதி, மதம், கடவுள், மூடநம்பிக்கை என்ற அனைத்தையும் எதிர்த்ததால் பல எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் எதிர் கொண்டார்.

பெண்ணடிமை ஒழிப்பை, தந்தை பெரியார் அவர்கள் ஏதோ வார்த்தைகளால் பேசிவிட்டு கடந்தவர் அல்ல. மாறாக, பெண்களே பெண்களுக்கான மாற்றங்களை விரும்பாத, ஏற்காத காலத்தில், அவர்களின் வசவு சொற்களையும் பொருட்படுத்தாது, “புரட்சிப் பெண்கள் மாநாடு” என மாநாடுகளையும், போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி, பெண்களின் மாற்றத்திற்கு வித்திட்டவர் பெரியார். எத்தனையோ பேர் பெண்களின் முன்னேற்றத்தினை பாடலாக, கதையாக, நாடகமாக தந்திருக்கலாம். ஆனால் அதை மாற்றமாகவும், அரசியல் வழியாக சட்டமாகவும் தந்தவர் பெரியார்.

இன்றைக்கும் பெரியார் சொன்ன கருத்தை நம் நலனுக்காக முன்வைத்துக் கொண்டே இருக்கிறோம். பெண்ணுரிமையைப் பற்றி பெரியார் பேசும் போது சமுதாய முன்னேற்றம் என்பது பெண்கள் முன்னேற்றத்தை தவிர்த்து, எப்படி சாத்தியம் எனக் கேட்டார். சமுதாயம் என்பது ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் அடங்கியது எனக் கூறினார்.

இன்றைய சுதந்திர நாட்டிலும், எங்கள் நிலையில் ஒரு கேள்வி வலுவாக உள்ளது. அது என்னவென்றால் “சுதந்திரம்” என்னும் நிலை ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவான ஒன்றாக இருக்க, இன்றைக்கும் பெண் சுதந்திரம் பற்றித் தனியாக பேச வேண்டி உள்ளதே? இதை ஒவ்வொரு பெண்ணும் ஏற்று, அதற்கான மாற்று நிலைக்கு களம் காண வேண்டும்.

இன்றைக்கு பெண்களுக்கு கிடைத்திருக்கின்ற ஓரளவு உரிமை என்பது, ஏதோ அயல்நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட வாசனை திரவியம் அல்ல. அதை வாங்கி அடித்துக் கொண்டு நாம் கமகமக்கும் மணத்தோடு நடைபோடுகிறோம் என்பதல்ல. சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு பெண்ணும் பெண்ணின வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் தடைகளை உணர்ந்து அதை வென்று அடுத்தகட்ட நிலைக்குச் செல்ல முடியும்.

இறுதியாக கொடுத்த தலைப்பிற்கு வருகிறேன். “விஞ்ஞானி” என்ற சொல், சமூகத்தில் எந்தவொரு நிலையிலும் புதுமையை புகுத்தியவருக்கு பொருந்தும் என்று ஏற்கும்போது, பெண் சமூகத்தில் புதுமையை புரட்சியை புகுத்திட்ட ஒப்பற்ற தலைவர் தந்தை பெரியாரை “ பெண்ணுரிமை விஞ்ஞானி பெரியார்” என அழைத்து மகிழ்ச்சி கொள்கிறோம். இன்னொரு பெருமையாக தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஒவ்வொரு மேடையிலும் முழங்குவார் என்னவென்று தெரியுமா தோழர்களே! உலகத் தலைவருக்கு “பெரியார்” என்ற பட்டமே பெண்கள் அளித்தது அத்தகைய சிறப்புக்குரியவர்கள் பெண்கள் என எங்களுக்குரிய பெருமையாக கூறும்போது நாங்களெல்லாம் நன்றிக்குரியவர்களாய் மகிழ்ந்து, அவர்பின் நடை போடுகிறோம் தந்தை பெரியார் பணி முடிக்கும் பணியில்...

Pin It