தான் நினைக்கும் கருத்துகளை எவ்வித இடையூறும் இல்லாமல் சுதந்திரமாக சொல்ல முடிவதுதான் மனித உரிமைகளில் மேன்மையானது. அந்த கருத்துகளை தடைகளின்றி எவ்வித அச்சுறுத்தலுக்கும் ஆட்படாமல் வெளிப்படுத்த முடிவதென்பது உயர்வான உரிமையும் சுதந்திரமும் ஆகிறது. இல்லையென்றாலும் அதைச் சொல்லும் உனது உரிமையை என் இன்னுயிரை ஈந்தேனும் காப்பேன்'' என்ற அறிஞர் வால்டேரின் முழக்கம்தான் கருத்துச் சுதந்திரத்திற்கான விளக்கமாக முன் வைக்கப்படுகிறது.

ஆம். கருத்துச் சுதந்திரம் இல்லாதவர்களுக்கு எச்சுதந்திரமும் அர்த்தமற்றதே. தன் கருத்தை துணிவுடன் உரக்கச் சொல்லும் உரிமையிலிருந்தே இங்கே கலைகள் உயிர் பெற்று எழுகின்றன. படைப்புகள் பிறக்கின்றன. மனிதர்கள் தம் ஆளுமையின் எல்லையை அடையும் மேன்மைகள் நடந்தேறுகின்றன. எனில், கருத்துச் சுதந்திரமே மனித இயக்கத்தின் உயிர்நாடி.ஆனால் விஷயம் இதோடு முடியவில்லை. மாறாக இங்கிருந்துதான் தொடங்குகிறது.

இவ்வளவு உயர்வான உரிமையான கருத்துச் சுதந்திரத்தை வரம்பற்ற, எல்லையற்ற ஒன்றாகக் கருத முடியுமா? அண்மைக் காலமாக தமிழகத்தில் சில எழுத்தாளர்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். பெருமாள் முருகனின் "மாதொருபாகன்' கொங்கு சமூகப் பெண்களை இழிவுபடுத்துவதாகவும் துரை. குணாவின் "ஊரார் வரைந்த ஓவியம்' ஊரின் ஒற்றுமையை சிதைப்பதாகவும் புலியூர் முருகேசனின் "நான் ஏன் மிகை அலங்காரம் செய்து கொள்கிறேன்' என்ற சிறுகதையில் கொங்கு வேளாளர் குறித்த எதிர்மறைக் குறிப்புகள் இடம் பெற்றிருப்பதாகவும் அவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சாதி, மத ஆதிக்கவாதிகளின் இந்த அத்துமீறல்களை கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையென கண்டித்து பல்வேறு சமூக அமைப்புகள், தனிநபர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், பெண்ணுரிமைப் போராளிகள் என எல்லோரும் இணைந்து போராட்டங்களை நடத்தினர்.

நினைக்கிற, விரும்புகிற, தோன்றுகிற கருத்தைச் சொல்வதற்கு அனைவருக்கும் முழு சுதந்திரம் இருக்க வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் நினைக்கிற, விரும்புகிற, தோன்றுகிற எல்லாவற்றையும் சொல்லிவிடலாமா? சக மனிதர் மீது வெறுப்புணர்வையும் காழ்ப்புணர்வையும் இழிவையும் உமிழும் எழுத்துகளை எவ்வித எதிர்ப்புமின்றி அங்கீகரிக்கலாமா? அப்படியான வரம்பற்ற ஒரு கருத்துச் சுதந்திரத்தையா நமது அரசமைப்புச் சட்டமும் சர்வதேசச் சட்டமும் அடிப்படை உரிமையாக அங்கீகரித்திருக்கிறது? ஒரு படைப்புக்கு எதிர்ப்பு வந்தாலே கருத்துச் சுதந்திரம் என்ற ஆயுதத்தைத் தூக்கிவிடுவது சரியாகுமா?இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை காண வேண்டியது காலத்தின் தேவையாக இன்று உருவெடுத்திருக்கிறது.

அரசமைப்புச் சட்டம் ஒவ்வொரு மனிதருக்கும் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு மனிதர் – ஒரு மதிப்பு – ஒரு வாக்கு என்பதே அதன் தாரக முழக்கம். அதன்படி உரிமைகளும் சுதந்திரமும் எல்லா மனிதர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மொழி, இனம், பண்பாடு, சாதி, மதம் மற்றும் புவியியல் அமைப்பு ரீதியாக வீரியமிக்க பல்வேறு வேற்றுமைகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் கொண்டுள்ள இந்நாட்டை ஜனநாயகப்படுத்துவதென்பது அத்தனை சாதாரணமானதல்ல. குறிப்பாக மூவாயிரம் ஆண்டுகளாக வேரூன்றியிருக்கும் மூவாயிரம் சாதிகளால் ஊரும் சேரியுமாகப் பிளவுண்டு கிடக்கும் ஆறு லட்சம் கிராமங்கள் ஆதிக்கத்தையும் அடிமைத்தனத்தையும் மூர்க்கமாகக் கடைப்பிடிக்கும் இந்நாட்டில் – சட்டத்தாள்களில் உறுதி செய்யப்பட்ட ஜனநாயகத்தை மூளைகளுக்குக் கடத்துவதென்பது – அத்தனை எளிய விஷயமாக இருக்கவில்லை.

“அரசியலில் ஒரு மனிதர் – ஒரு வாக்கு – ஒரு மதிப்பு என்ற கொள்கையை பின்பற்றும் நாம் சமூக, பொருளாதார வாழ்வில் நமது சமூகப் பொருளாதார கட்டமைப்பு காரணமாக ஒரு நபர் ஒரு மதிப்பு என்ற கொள்கையை புறந்தள்ளுகிறோம். எவ்வளவு காலத்திற்கு முரண்பாடான இந்த வாழ்க்கையை நாம் தொடரப் போகிறோம்?

''என அம்பேத்கர் கேட்டு 65 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஒரு நபருக்கு ஒரு மதிப்பை அளிக்கவிடாமல் மதவெறி ஏறிய சாதியக் கட்டமைப்பு இறுகிக் கிடப்பதால் அரசியல் அளவில் உயிர்ப்போடு இருக்கும் ஜனநாயகம், ஆயிரம் ஆண்டு கால உண்மையாக சமூக அளவில் செத்தது செத்தபடியே கிடக்கிறது. அதற்கு உயிரூட்டும் முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன என்றாலும் அதன் உடலில் ஏறி நீலம் பூத்திருக்கும் ஜாதியெனும் நஞ்சை நீக்க முடியவில்லை.

தீண்டத்தகாதவர்களாக, சமூகக் கலப்புக்கு தகுதியற்றவர்களாக, சமத்துவத்தை கோரக் கூடாதவர்களாக, மதிப்பைகோர முடியாதவர்களாக, நல்வாழ்வு மறுக்கப்பட்டவர்களாக, மிக முக்கியமாக தம் தரப்பு நியாயங்களை, மறுக்கப்படும் நீதிகளை, இழைக்கப்படும் கொடுமைகளை, தம் உள்ளக்கிடக்கைகளை, வலிகளை, மகிழ்வுகளை –எதையுமே சொல்ல முடியாதவர்களாக – கோடிக்கணக்கான மக்கள் இங்கே ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கும் போது – சமூக அளவில் ஜனநாயகம் மரித்து கிடக்கும் மண்ணில் – கருத்துச் சுதந்திரமும் உரிமையும் வரம்பற்றதாக, கட்டற்றதாக இருக்க முடியுமா என்பதுதான் நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய முதல் கேள்வி.

நவீன காலத்தில் சுதந்திரம் என்பது மிகவும் தட்டையான ஒன்றாக, ஒற்றைப் பரிமாணத் தன்மை கொண்டதாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.ஆனால், எந்த சமூகம் சுதந்திரத்திற்கு இணையாக அல்லது அதைவிடவும் முக்கியமான ஒன்றாக சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் போற்றுகிறதோ அதுவே ஜனநாயக மதிப்பை பெறுகிறது.ஆனால் இந்நாடு அப்படிப்பட்டதாக இல்லை. சமத்துவமும் சகோதரத்துவமும் மறுதலிக்கப்படும் ஒரு தேசத்தின் அங்கமாக நின்று கொண்டு நாம் கட்டுப்பாடில்லாத சுதந்திரத்தை அடிப்படை உரிமை என கோர முடியாது.

அது மட்டுமல்ல, தனிமனித உரிமைகளையும் சுதந்திரத்தையும் அடிப்படை வாழ்வியல் உரிமையாக மக்களுக்கு வழங்கியிருக்கும் இந்திய அரசமைப்புச் சட்டமும் அவ்வுரிமைகளும் சுதந்திரமும் வரம்பற்றதல்ல என்றே குறிப்பிடுகிறது. இந்தியாவைப் போன்ற கூரிய பாகுபாடுகள் போற்றிப் பாதுகாக்கப்படும் சமூகத்தில் கட்டுப்பாடில்லாத சுதந்திரமென்பது, வெறுப்புணர்வின் மீதும் சக மனிதரின் இழிவின் மீதும் ஒடுக்குமுறைகளின் மீதுமே கட்டமைக்கப்படும் ஆபத்து இருப்பதாலேயே அதற்கு வரம்பு தேவைப்படுகிறது.

நல்ல உரமிடப்பட்ட வளமான மண்ணிலிருந்தே நல்ல பயிர்கள் உருவாக முடியுமென்பதைப் போல, சமத்துவம் போற்றப்படும் சமூகத்திலேயே கருத்துச் சுதந்திரம் அதன் உண்மையான பயனை எட்ட முடியும். ஓரினமாக எல்லோருக்கும் சமூகப் பொருளாதார ரீதியான பாதுகாப்புமிக்க வாழ்க்கை உறுதி செய்யப்பட்டிருக்கிற நாட்டிலேயே கூட – கட்டற்ற கருத்துச் சுதந்திரமானது – தனிமனிதரின் மாண்பை சிதைக்கும் பாதிப்புகளை உண்டாக்கிவிடக் கூடும். இந்நிலையில் பல்வேறு மொழிகள், பண்பாடு, இன, மதம் மற்றும் சாதி ரீதியான வேற்றுமைகள் நிறைந்த இந்திய நாட்டில் யார் வேண்டுமானாலும் வரம்பில்லாமல் எதை வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம் என்று வாதிடுவோமானால், அது நிச்சயம் ஒரு தரப்பினரை மற்றொரு தரப்பினர் சுதந்திரமாக தாக்குவதற்கும் தாழ்த்துவதற்குமே வழி வகுத்துவிடும்.

அதுமட்டுமல்ல, இங்கே விதைக்கப்பட்டிருக்கும் அரசியல் மாயையைப் போல, இந்தியாவின் வேற்றுமைகளென்பவை ஒற்றுமையால் கட்டப்படவில்லை. அவை மிக மூர்க்கமாக பாகுபாடுகளாலும் ஏற்றத் தாழ்வுகளாலும் ஆதிக்க / அடிமை சித்தாந்தங்களாலும் கடவுளின் பெயராலும் மூட நம்பிக்கைகளாலும் மக்களை கூறுகளாக்கி வைத்துள்ளன. இங்கே எந்த மதங்களும் சமமில்லை, எந்த சாதிகளும் சமமில்லை, எந்த பாலினமும் சமமில்லை, எந்த மொழியும் சமமானதில்லை.

தான் எல்லோரையும் போன்றவர் என கருதும் மனநிலையை 99.9 சதவிகித இந்தியர்கள் கொண்டிருக்கவில்லை. இந்தப் பாகுபாட்டு உணர்வென்பது சமூக, பண்பாட்டு ரீதியாகவும் சமூக, அரசியல் ரீதியாகவும் வீரியமிக்கதாக வேரூன்றியிருக்கும் போது பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை, படைப்புரிமை, கலை செய்யும் உரிமை எல்லாம் யார் உயர்த்தப்பட்டவர்களோ யார் ஆதிக்கவாதிகளோ அவர்களுக்குரியதாகிறது. உலக வரலாறுகள் அனைத்தும் சொல்வது ஒன்றைத்தான்.யாரிடம் அதிகாரம் இருக்கிறதோ கருத்துச் சுதந்திரம் அவர்களுடையதாக மட்டுமாகிறது.யாரிடம் அது இல்லையோ அவர்கள் குரலற்றவர்களாக ஒடுக்கப்படுகின்றனர்.

ஒடுக்கப்பட்ட தலித், பழங்குடியின, சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் குரல்வளைகளில் பூட்டுகள் பூட்டப்பட்டிருந்த காலம் இந்திய வரலாற்றில் வெகு பின்னோக்கிய ஒன்றில்லை. இங்கே சாதி மத பாலியல் ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையினரைப் பேச விடாமல் தடுத்துக் கொண்டிருந்தவர்கள் யார்? கலை இலக்கியப் படைப்புகளே கருத்துப் பரவலுக்கான ஊடகமாக இருந்த நிலையில் இந்தியாவில் கலை இலக்கியப் படைப்புகளும் ஆக்கங்களும் யார் வசம் இருந்தன? யாருடைய வாழ்வை அவை பதிவு செய்தன? நவீன காலத்திய இலக்கியங்கள், இசை மற்றும் திரைப்படங்களை ஆக்கிரமித்திருப்பவர்கள் யார்? இங்கே யாருக்கு கருத்து சொல்லும் அதிகாரம் (உரிமையல்ல) இருந்ததோ அவர்களே அத்தனை ஆக்கங்களையும் உருவாக்கும் வாய்ப்பையும் பெற்றிருந்தனர்.

"க்ளாசிக்'குகளாக முத்திரை குத்தப்பட்டு தலைமுறைகளுக்கு பரிந்துரைக்கப்படும் நவீன இலக்கிய ஆக்கங்கள் யாரால் எதை மய்யக் கருவாகக் கொண்டு எழுதப்பட்டன? இந்த கேள்விகளுக்கான விடை மிக வெளிப்படையானது. கல்வி கற்கும் உரிமையை பிறவி உரிமையாகக் கொண்ட பார்ப்பனர்கள் மற்றும் பிற முன்னேறிய சாதிகளின் ஆக்கிரமிப்பில்தான் இலக்கியம், கலை, திரைப்படம், அரசியல் என எல்லாமே சிக்குண்டு கிடந்தன என சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த இறுக்கம் இன்றளவிலும் அவ்வாறே நீடிக்கிறது.

நவீன இலக்கிய "க்ளாசிக்"குகளாக தமிழ் இலக்கிய உலகம் சிலாகிக்கக் கூடிய படைப்புகள் பெரும்பாலும் பார்ப்பன/ஆதிக்க சாதி மொழியில், பார்ப்பன/ஆதிக்க சாதி வாழ்வியலைப் பதிவு செய்தவையே. பெரும்பாலானவை சாதியக் கட்டமைப்பை கேள்விக்குட்படுத்தாமல் சமூகப் பிரதிபலிப்பு என்ற பெயரில் பிற சாதியினரை குறிப்பாக தலித் மக்களை இழிவு செய்தே எழுதப்பட்டன. தலித் மக்கள் என்றேனும் அவற்றை வாசிக்கக் கூடும்; சாதிய படிநிலைகள் என்றுமே நெருக்கடியை சந்திக்காமல் போய்விடாது; பெண்கள் எப்போதேனும் எழுத வந்துவிடுவார்கள் என்ற அவதானிப்பு சிறிதளவேனும் இருந்திருந்தால் இந்த இலக்கியப் பிதாமகன்களெல்லாம் தம் கருத்துச் சுதந்திரத்திற்கு சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கக் கூடும்.

இன்றைய தகவல் தொழில்நுட்ப காலத்தை கடந்த கால இலக்கியச் சூழலோடு ஒப்பிட்டு இந்த பாகுபாட்டை நாம் புரிந்து கொள்ளலாம். ஊடகங்களின் ஆதிக்கம் கேள்வியின்றி ஓங்கியிருக்கும் காலமிது. பொது மக்களின் கருத்துகளையும் சிந்தனை ஓட்டங்களையும் தீர்வுகளையும் ஊடகங்களே இன்று கட்டமைக்கின்றன. செய்தித் தாள்கள், வார, மாத, வாரமிருமுறை பத்திரிகைகள், தொலைக்காட்சி சேனல்கள் என இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஊடகங்கள் இயங்குகின்றன. தேசிய அளவிலும் மாநில அளவிலும் முன்னணி வகிக்கும் முக்கிய ஊடகங்களில் இந்தியாவின் ஒடுக்கப்பட்டவர்கள், சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடம் மிகக் குறைவு.

கடைநிலை, இடைநிலை ஊழியர்களாக இப்பிரிவினர் இருந்தாலும் முடிவெடுக்கும் அதிகாரமிக்கப் பொறுப்புகளில் ஒரு சதவீதம் கூட இவர்களில் யாருமில்லை. அதனால்தான் இவர்களைப் பற்றின செய்திகள் மறைக்கவும் திரிக்கவும் படுகின்றன. அதுமட்டுமின்றி, ஆயிரமாண்டுகால வன்மத்தின் நீட்சியாக இவை தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்டோர் குறித்த எதிர்மறை பிம்பத்தை கட்டிக் காக்கும் செயலையும் நுணுக்கமாகவும் வெளிப்படையாகவும் செய்து வருகின்றன.

டெல்லி நிர்பயா பாலியல் வல்லுறவு நிகழ்வை பரபரப்பான விற்பனைப் பண்டமாக மாற்ற முடிகிற அவற்றால் கயர்லாஞ்சியின் தலித்துகளான போட்மாங்கே குடும்பத்துப் பெண்கள் ஊரின் பல ஆண்களால் பாலியல் வதை செய்யப்பட்டு பிறப்புறுப்பில் கழியடித்து கொலை செய்யப்பட்ட சமகால கொடூரத்தை மூடி மறைத்துவிட முடிகிறது. நாள்தோறும் நடந்தேறுகின்றன என்றாலும் எந்த சாதிய வன்கொடுமையும் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாவதில்லை. தீண்டாமைக் குற்றங்கள் தேசிய ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகும் தகுதியை என்றென்றைக்குமாக இழந்து நிற்கின்றன. எந்த முஸ்லிமும் அவற்றுக்கு தீவிரவாதிதான்.

கட்டுப்பாட்டிற்குள்ளும் இயங்கும் ஊடகங்கள் எதை செய்தியாக்க வேண்டும் என்பதில் பாகுபாட்டை கடைப்பிடிக்கும் போது, இன்றும் சாதிவெறி அதன் வீரியம் குறையாமல் இருக்கும் போது, இந்து மத ஆதிக்கச் செயல்பாடுகள் முகமூடி அணியாமல் திரைக்கு முன்னால் நிகழ்த்தப்படும் காலகட்டத்தில் கருத்துச் சுதந்திரத்தை கட்டற்றது என நாம் பேசுவது தகுமா?

உலகெங்கிலுமே வெறுப்புணர்வற்ற, பாகுபாடுகளில்லாத, சக மனிதரை இழிவுபடுத்தாத, மனித உரிமைகளையும் அறங்களையும் போற்றுகிற எழுத்துகளும் படைப்புகளுமே பேரிலக்கியமாக, பெருங்கலைப் பதிவாகக் கொண்டாடப்படுகின்றன. அவைதான் காலங்களை கடந்து எல்லைகளை உடைத்து உலகப் பரப்பில் நிலைத்து நிற்கின்றன. வெவ்வேறு மொழிகளில் இருந்து தமிழுக்கு பெயர்க்கப்படும் படைப்புகளை ஆராய்ந்தாலே அவற்றின் சிறப்பும் தனித்துவமும் நற்பண்புகளும் தெரிந்துவிடும். கறுப்பர்களை இழிவுபடுத்தும் படைப்புகளை நாம் மொழிபெயர்ப்பதோ அங்கீகரிப்பதோ இல்லை.

முஸ்லிம்களை சிறுமைப்படுத்தும் அல்லது உலக அரங்கில் எவ்வகையான ஆதிக்கத்தையும் துதிக்கும் படைப்புகளை நாம் நம் மொழிக்குள் கொண்டு வர ஆவல் கொள்வதில்லை. மொழி, பண்பாடு, இனம், நிறம் எல்லாம் மாறினாலும் மனிதர்களின் அற வாழ்வியலுக்குகந்த வாழ்வியல் விதிமுறைகளெனப்படுபவை உலகம் முழுக்க ஒன்றுதான். எத்தகைய வாழ்வியல் முறையில், எந்தப் பின்னணியிலான கதாபாத்திரத்தைக் கொண்டு என்ன கதை சொல்லப்பட்டிருந்தாலும் ஒரு படைப்பின், ஆக்கத்தின் உள்ளார்ந்த நோக்கமானது மனித அறங்களுக்கு வலுவூட்டுவதாகவும் எல்லா வகையான ஆதிக்கங்களையும் கேள்விக்குட்படுத்துவதாகவுமே இருக்க வேண்டும்.

ஒருவர் சமத்துவத்தின் மீது தீராத நம்பிக்கையும் நீதியின் மீது பேரவாவும் கொண்டிருக்கும் போது அவரது படைப்பு பொறுப்புணர்வை அடித்தளமாகக் கட்டமைத்துக் கொள்கிறது. அது எதிர்காலம் குறித்த அக்கறையுடன் எல்லா மனிதர்களுக்குமான அன்பை உள்ளடக்கியதாக எழுந்து வருகிறது. தான் வாழ்கின்ற காலத்து அநீதிகளை கேள்விகளில்லாமல் வெறும் நிகழ்வாகப் பதிவு செய்யும் அல்லது ஆதரிக்கும் தொனியிலான அணுகுமுறையை கொண்டிருக்கும் எப்படைப்பும் காலத்தால் அழிக்கப்படும். சமகாலத்தில் அது எத்தகைய வரவேற்பைப் பெற்றிருந்தாலும் ஒரு தேசமே சேர்ந்து அதைப் போற்றிப் பாதுகாத்து வைத்தாலும், நீதியின் மேல் நம்பிக்கை கொண்டவர்களால் எதிர்காலத்தில் அவை பெரும் நெருக்கடிக்கு ஆளாக்கப்படும்.

இந்தியாவின் பண்பாட்டு நூல்களாகவும் ஈடில்லா இதிகாசங்களாகவும் போற்றப்பட்ட ராமாயணமும் மகாபாரதமும் தலித்துகள், பழங்குடியினர், சூத்திரர்கள் மற்றும் பெண்களை மிக இழிவாக சித்தரித்த காரணத்திற்காக புலே முதல் அம்பேத்கர், பெரியார் வரை பல பகுத்தறிவாளர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டன. இந்நாட்டின் சமத்துவத்திற்கும் ஒற்றுமைக்கும் பாதிப்பை உண்டாக்கும் வகையில் கற்பனை கதாபாத்திரங்களையும் நிகழ்வுகளையும் உருவாக்கி சகமனிதர் மீதான இழிவை கடவுள் செயலாக்கிய குற்றத்திற்காக அவை எரிக்கப்பட்டன. தொலைக்காட்சி தொடர்களாகவும், சிறுவர் இலக்கியமாகவும் அவை பரிணாமம் பெற்று தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டாலும் அவற்றின் அழிவையும் சிதைவையும் யாராலும் தடுக்க முடியாது.

தமிழ் இலக்கியத்தின் பிதாமகன்களில் பலரும் அத்தகைய நெருக்கடியின் நெருப்பில் அனல் தகிக்க நின்று கொண்டிருப்பதில் வியப்பில்லை. தலித் மக்கள் கல்வி மறுக்கப்பட்டவர்களாக இருந்த காலகட்டங்களில் எழுதப்பட்ட புனைவுகள் பலவற்றில் போகிற போக்கில் அவர்களின் மாண்பை இவ்விலக்கியங்கள் சிதைக்கின்றன. இட ஒதுக்கீட்டின் பயனாக கல்வி கிடைக்கப் பெற்று இலக்கியப் படைப்புகளை வாசிக்க நேர்ந்து அவற்றில் தாம் என்னவாக சித்தரிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறிய வரும் போது தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டிய நிலை தலித் மக்களுக்கு உருவாகிறது.

ஒவ்வொரு படைப்பும் காலகட்டத்தின் பிரதிபலிப்பு, சமூக உண்மையின் பதிவு என்று நாம் வாதிடலாம். ஆனால் ஓர் எழுத்தாளர் தன் காலத்து அநீதிகளை கேள்விக்குட்படுத்தாமல் கடனே என்று பதிவு செய்து வைப்பதென்பது அந்த அநீதிக்கு துணை போவதாகவே பொருள்படும். தலித் மக்களை இழிவுபடுத்தும் அல்லது ஆதிக்கம் நிறைந்த வாழ்வியலை உயர்வாக சித்தரிக்கும் அல்லது பெண்களை இழிவுபடுத்தும் படைப்புகளை உருவாக்குகிறவர்கள் சராசரிகளை விடவும் எவ்வகையில் மேலானவர்கள்? அவர்களை எப்படி நாம் இலக்கியப் பிதாமக்களாகக் கொண்டாடுவது?

ஒரு படைப்பு தான் கையாளும் கதைக் களத்தில் வரிக்கு வரி அநீதிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்பதில்லை. ஒரு சமூகத்தின் பல பிரிவினரின் வாழ்க்கைக்குள்ளும் அது புகுந்து வெளியே வரலாம்.யாரையும் கதாநாயகராக்கலாம்.யாரையும் வில்லனாக்கலாம்.ஆனால் அதை எழுதும் எழுத்தாளர் யார் பக்கம் நின்று தனது நிலைப்பாட்டிற்கு உயிர் கொடுக்கிறார் என்பதிலேயே படைப்பின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது.எழுத்தாளரின் இந்த நிலைப்பாடு வார்த்தைகளால் கட்டமைக்கப்படுவதில்லை.மாறாக, மவுனத்தால் நிலைநிறுத்தப்படுகிறது.காலம் கடந்தும் உரக்க பேசப் போவது அந்த மவுனம் மட்டுமே.அவ்வகையில் பார்த்தோமானால் நவீன தமிழ் படைப்புகளில் பரவிக் கிடக்கும் சாதியக் கூறுகளால் அதை எழுதிய எழுத்தாளர்கள் தன் காலத்து அநீதிகளுக்கு மவுனமாக இயைந்து போனவர்கள் என்றே கொள்ள வேண்டும்.

சாதியாதிக்கக் கூறுகள் நிறைந்த படைப்புகளை அவை வெளி வந்த காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களால் எதிர்க்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால் எக்காலத்திற்குமே அந்நிலையே நீடிக்க வேண்டுமென யாரும் எதிர்பார்க்கக் கூடாது. அடுத்தடுத்த தலைமுறைகள் பலதரப்பட்ட பிரிவிலிருந்து எழுதவும் படைக்கவும் வாசிக்கவும் வரும் போது இப்படைப்புகள் ஆய்வுகளுக்கும் பெரும் புடம் போடுதலுக்கும் உட்படுத்தப்படும். இந்த செயல்முறையில் அவை தாக்குப் பிடித்தும் நிற்கலாம், காணாமலும் போகலாம். சமத்துவமற்ற நாட்டில் பின் தங்கியவர்களுக்கு எப்போது வாய்ப்பு உருவாகிறதோ அப்போதுதான் அவர்கள் எதிர்வினையாற்றுவார்கள். கருத்துச் சுதந்திர அரண் கொண்டு அப்படைப்புகளை காப்பாற்ற முயல்வதில் எப்பயனும் இல்லை. படைப்புச் சுதந்திரமா சமூக நீதியா என்ற கேள்வி வரும் போது ஒரு நல்ல படைப்பாளி சமூக நீதியின் பக்கமே நிற்க வேண்டும். ஆனால் இங்கு நடப்பவை தலைகீழானவை!

இரண்டு ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் பாடுபட்டு இரவு பகல் பாராமல் உழைத்து தான் எழுதிய 12 ஆயிரத்து 265 பக்கங்கள் கொண்ட அரசமைப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுமானால் அதை எரிக்கும் முதல் நபர் நானாகவே இருப்பேன் என்று முழங்கினார் அம்பேத்கர். தலைசிறந்தது என இன்று உலகமே கொண்டாடும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை, அதன் நோக்கம் சிதைவுற்றால் எரிப்பேன் என்று சொல்வதற்கு எத்தகைய துணிவு வேண்டும்? இதுதான் ஒரு படைப்பாளிக்குரிய அறம், நேர்மை.ஆனால் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நாம் எதை கட்டிக் காத்து எதிர்காலத் தலைமுறைக்கு கொடுக்கவிருக்கிறோம்?விதைகளை யார் வேண்டுமானாலும் ஊன்றலாம்.அவை விஷச் செடிகளாக வளர்ந்து நிற்கிறதெனில் களையெடுத்தலில் இருந்து தப்பிக்க முடியாது.

அவ்வகையிலேயே சக மனிதர்களை இழிவுபடுத்தும், ஏற்றத் தாழ்வுகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ கொண்டாடும் ஆக்கங்கள் நிச்சயமாக சோதனைக்குட்படுத்தப்படும். அற உணர்வு கொண்டவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் எதிர்வினைகளை அவர்களது விடுதலைப் போராட்டத்தின் அங்கமாகப் பார்க்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, சாதி இழிவு படைப்புகளை எல்லாம் கருத்துச் சுதந்திரச் சட்டத்திற்குள் வைத்து அவற்றைப் பாதுகாக்க முனையக் கூடாது.

சுதந்திரத்தின் பரந்த வெளியில் மனம் லயித்திருக்கும் போதே படைப்புகள் உயிர்த்தெழுகின்றன.மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதற்கு எல்லைகள் உண்டு என்பதே நாம் கற்க வேண்டியது. புதுமைப்பித்தனும் வண்ணநிலவனும் தலித் அமைப்புகளாலும் பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் போன்றவர்கள் இந்துத்துவ மற்றும் சாதி இந்து அமைப்புகளாலும் எதிர்க்கப்பட்டனர். புதுமைப்பித்தனின் "துன்பக்கேணி' இலங்கையில் தேயிலைத் தோட்ட வேலைக்கு இங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்ட தலித் பெண்களை பாலியல் ஒழுக்கங்ககெட்டவர்களாக சித்தரிக்கிறது.

தலித் மக்கள் தேயிலைத் தோட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட வரலாறு, அங்கு அவர்கள் எதிர்கொண்ட உழைப்புச் சுரண்டல், வன்கொடுமை, பாலியல் வதை, வறுமை போன்ற வரலாற்று உண்மைகளை மூடி மறைத்துவிட்டு – வெறுமனே தலித் பெண்களை பாலியல் ரீதியாக இழிவாக சித்தரிப்பதை – அக்கால சமூக உண்மை என்றோ, பிரதிபலிப்பு என்றோ எப்படி ஏற்க முடியும்? மேலோங்கிய சாதிய வக்கிரமில்லாமல் இத்தகைய கதையை புதுமைப்பித்தன் எழுதியிருக்கவே முடியாது. இலக்கிய "க்ளாசிக்'குகள் அத்தனையையும் தலித் மக்கள் படித்துவிட முடிவது சாத்தியமில்லாதது. அப்படி வாசித்துவிடும் அனைவருக்கும் இந்த இழிவுபடுத்தலை இனங்காணும் அல்லது எதிர்க்கும் துணிவு உண்டாவதில்லை. இக்கதை தன்னை, தன் மக்களை இழிவுபடுத்துவதாக ஒரேயொருவர் உணர்ந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை அவருக்கு இருக்கிறது.

"மாதொருபாகனி'ல் உண்மையான ஊரின் பெயரிட்டு, அங்கு வாழும் குறிப்பிட்ட சமூக மக்கள் குறித்து இழிவான எதிர்மறையான குறிப்புகளை அதிலும் பாலியல் ரீதியான சித்தரிப்புகளை பெருமாள் முருகன் எழுதியது தவறான செயலே. அதுவொரு உள்நோக்கம் மிகுந்த செயல் இல்லாமல் போனாலும் அறிவற்ற, பக்குவமற்ற செயல் ஆகாதா?

ஓர் ஊரில் வசிக்கும் பெண்களில் சிலர் இப்படித்தான் தவறான முறையில் பிள்ளை பெற்றார்கள் என்று எழுதினால் அது அந்த ஊர்களில் வாழ்ந்த பெண்களின் அந்தரங்க உரிமையை நிச்சயம் பாதிப்பதாகிறது. கருத்துரிமை பிற உரிமைகளை பாதித்தல் ஆகாது என்ற வகையில், பெருமாள் முருகனின் சர்ச்சைக்குரிய பகுதிகள் எதிர்ப்புக்கு உள்ளானது நியாயமானதே என்றோ, நடந்ததைத் தானே எழுதினார், அதுவும் நடைமுறையில் இருந்த ஒரு விஷயத்தைத் தானே எழுதினார் என்றோ இதைப் புறக்கணித்துவிட முடியாது. ஏனென்றால் அவர் தான் வாழ்கிற பகுதியில் இன்றும் இருக்கும் ஊர்களின் பெயரை குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

ஆக, அவை நேரடியாக அவ்வூரை சேர்ந்தவர்களைத்தான் குறிக்கிறது எனும் போது அப்பகுதியினர் தம் எதிர்ப்பை பதிவு செய்வதும் நியாயமானதே. ஆனால், பெருமாள் முருகனை எதிர்த்தவர்கள் ஆதிக்க சாதியினர் என்பதால் அவர்கள் தலித் அமைப்பினரைப் போல நீதியை நீதிமன்றத்தில் கோரவில்லை. தங்களுக்கு பழக்கப்பட்ட வழியில் சட்டத்திற்குப் புறம்பான முறையில் பெருமாள் முருகனை அவர்கள் பணிய வைத்தனர். அதை மட்டுமே நாம் கண்டிக்கலாம்.

கருத்துச் சுதந்திரத்தை விடவும் அந்தரங்க உரிமை முதன்மையானது. 'துன்பக்கேணி'யும் 'மாதொருபாகனு'ம் சாதியின் இருண்ட பக்கங்களை அம்பலப்படுத்துவதாக சிலர் வாதிடுகின்றனர். அதில் உண்மையில்லை. மாறாக இவ்விரண்டு படைப்புகளுமே தலித் மக்களை, பெண்களை மோசமாக இழிவுபடுத்துகின்றன. மாதொருபாகனை ஆதரித்து போராட்டம் செய்த பெண்களில் சிலர் பெண்களாகிய எங்களுக்கே அது பாதிப்பை உண்டாக்கவில்லை என்ற ரீதியில் வாதிட்டனர். உண்மையில்

"மாதொருபாகன்' நாவலில் இடம் பெறும் ஊரில் உள்ள பெண்களே இதற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள். அவர்கள் இதை எதிர்ப்பார்களெனில் வேறு யாருடைய ஆதரவும் நிற்காது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் கவிஞரின் பெயரை குறிப்பிட்டு ஒரு மோசமான வசனம் ஒரு திரைப்படத்தில் இடம் பெற்றபோது, "மாதொருபாகனை' ஆதரித்தவர்களில் பலரும் அதை எதிர்த்து திரைக்கதை எழுத்தாளரை துரத்தி அடிக்கப் பாய்ந்தனர். அந்த எதிர்ப்புணர்வு எந்த அளவிற்கு நியாயமானதோ அதே நியாயத்தை இந்தப் பிரச்சனையிலும் நாம் காண முடியும்.

புதுமைப்பித்தன், பெருமாள் முருகன் போன்றவர்களின் படைப்புகளுக்கு கிடைத்த எதிர்ப்புகளில் இருந்து நாம் கற்க வேண்டிய பாடம், எத்தரப்பு மக்களையும் இழிவுபடுத்தத் துணியக் கூடாது என்பதே. புனைவில் எதிர்மறையான விஷயங்களை எழுதும் போது அவை சமூக உண்மையாகவோ, நடந்த கதையாகவோ இருந்தாலும் உண்மையான அடையாளங்களை மறைப்பதே அற விதி.

கதைக்களம், கதாபாத்திரங்கள் எல்லாவற்றையும் 100 சதவிகித புனைவாக மாற்றிவிடுவதே சரியானது. வரலாற்று ரீதியான நிகழ்வை புனைவாக மாற்றும் போது அதில் ஆய்வு உண்மைகளே மேலோங்கி இருக்க வேண்டும். திரிபுகளும், சார்பு நிலைகளும் கூடாது. அதோடு எழுத்தாளரின் நிலைப்பாடு எதிர்மறையான விஷயத்திற்கு துணை போகாமல் அதை கேள்விக்குட்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.அத்தகைய எழுத்தாளரும் அவரது படைப்புகளுமே சமூகத்தில் உயர் இடத்தைப் பெற தகுதியுடையனவாகின்றன.

இது எழுத்தாளர்களுக்கு தெரியாதா என்றால் இந்திய சாதிய உளவியலை இதற்கு காரணமாக்குவதைத் தவிர வேறு வழியில்லை. இங்கு எழுத்தாளர்களும் தீவிர சாதிய நோயால் பீடிக்கப்பட்டவர்களாகவே இருந்து வருகின்றனர். எல்லோரையும் சமமாகக் கருத வேண்டும், எவருடைய அந்தரங்க உரிமையிலும் தலையிடக் கூடாது, பெண்கள் வெறும் பாலியல் பண்டமல்ல, எந்த தொழில் செய்பவருக்கும்/சாதிய பொருளாதார அடுக்கில் எவ்விடத்தில் இருப்பவருக்கும் மாண்புரிமை உண்டு என்பது போன்ற வாழ்வியல் அறங்கள் குறித்த அறிவு அவர்களுக்கும் இருப்பதில்லை.

பாகுபாடுகளையும் சகமனிதரை தாழ்த்துவதையும் பாலின அசமத்துவத்தையுமே சாதிய வாழ்க்கை முறை இங்கு ஒவ்வொருவருக்கும் போதிக்கிறது என்பதால் இங்கு படைப்புகளுமே அதை அடிப்படையாகக் கொண்டே உருவாகின்றன. புதுமைப்பித்தனும் பெருமாள் முருகனும் மட்டுமல்ல... எல்லா எழுத்தாளர்களையுமே காலம் இந்தப் புள்ளியில் நிறுத்தவே செய்யும். மனித அறவுணர்விற்கு நேர்மையாக நின்று தம் கருத்துச் சுதந்திரத்திற்கு சுயக் கட்டுப்பாடு விதித்துக் கொள்ளாதவர்களை அது தண்டிக்கவும் செய்யும்.

ஒருவர் எழுதக் கூடாது என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனமோ அதற்கு இணையானதே எதிர்க்கக் கூடாது என்று சொல்வதும். ஒரு படைப்போ கருத்தோ தன் மாண்புரிமையை பாதிப்பதாக ஒருவர் கருதும் போது அவர் அந்த படைப்பின் மீதான தன் எதிர்ப்பை பதிவே செய்யக் கூடாது என கருத்துச் சுதந்திரவாதிகள் சொல்வார்களெனில் அது சர்வாதிகார சிந்தனையன்றி வேறில்லை. இந்த எதிர்ப்பு ஒரு படைப்பு வெளியாகி எத்தனை ஆண்டுகள் கழித்தும் தெரிவிக்கப்படலாம்.எழுத்தாளர் மரித்துப் போயிருந்தாலும் படைப்பும் அதில் உள்ள கருத்தும் எக்காலத்திற்கும் உயிரோடு இருக்கப் போகிறது.எதிர்கால தலைமுறை ஒரு படைப்புக்கு கொடுக்கப்பட்ட ஆதரவுகளோடு அது எதிர்கொண்ட எதிர்ப்புகளையும் சேர்த்தே தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் விஷயங்களை சீர்தூக்கி அவற்றால் நியாயங்களை அடைய முடியும்.

ஆனால் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கும் முறைகள் உள்ளன. சட்டப்பூர்வமான நடவடிக்கையும் ஜனநாயக வழியிலான போராட்டங்களுமே அதற்கு தீர்வாக முடியும். புதுமைப்பித்தனின் "துன்பக்கேணி'யை பாடப்புத்தகத்திலிருந்து நீக்க வேண்டுமென்றுதான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அதை எதிர்த்தவர்கள் ஒட்டுமொத்தமான தடையைக் கோரவில்லை.ஆனால், பெருமாள் முருகனை எதிர்த்தவர்கள் பல வகையான அத்துமீறல்களிலும் வன்முறைகளிலும் ஈடுபட்டனர்.ஓர் எழுத்தாளர் தன் எழுத்தையே துறக்கும் அளவிற்கு அச்சுறுத்துதல் அவரது அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயலன்றி வேறில்லை. இப்படியொரு அத்துமீறல் எழுத்தாளர் மீது நிகழ்த்தப்படும்போது அரசு தலையிட்டு வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

பெருமாள் முருகனை ஆதரித்தோரும் அவரை பாதுகாக்காமல் அவரது படைப்பை பாதுகாக்கும் முயற்சியிலேயே கவனம் செலுத்தினர். "மாதொருபாகனை' வாசிக்கும் போராட்டமெல்லாம் நடத்தினார்கள். தலித் மக்களையும் பெண்களையும் இழிவுபடுத்தும் "மாதொருபாகனை' கருத்துச் சுதந்திரத்தை காக்கும் அவசரத்தில் தலித் ஆர்வலர்களும் பெண்ணுரிமைப் போராளிகளுமே ஆதரிக்க நேர்ந்தது மிகக் கொடுமையானது. தகுதியற்ற ஒரு படைப்பை எல்லா தரப்பிற்கும் கொண்டு சேர்க்க இவர்கள் பாடுபட்டது வேடிக்கையின் உச்சம்.

சமூகத்தின் ஒவ்வொரு அங்கமும் ஓர்மையுடன் செயல்பட்டாலொழிய கருத்துச் சுதந்திரத்தையும் பிற உரிமைகளையும் நாம் நிலைநிறுத்த முடியாது. ஒரு படைப்பால் தன் மாண்புரிமை பாதிக்கப்பட்டதாகக் கருதும் ஒரு தனிநபர் அல்லது குழு, எதிர்ப்பாளர்களால் தன் எழுதும் உரிமை பறிக்கப்பட்டதாகக் கருதும் ஓர் எழுத்தாளர், இருவருமே சட்டப்பூர்வமான தீர்வுகளுக்காக நீதிமன்றத்தை அணுகும்போது – நீதிமன்றம் ஊழலுக்கோ மிரட்டலுக்கோ சாதி, மத, சுயநலன்களுக்கோ பணிந்துவிடாமல் – இருக்கும் அரசமைப்புச் சட்டத்தின் வரையறைகளின்படி நீதியை வழங்கினால் மட்டுமே இது போன்ற பிரச்சனைகளுக்கு நியாயமான தீர்வுகளை நம்மால் எட்டமுடியும். காவல் துறை, நீதிமன்றம், அரசு நிர்வாகம் மற்றும் ஊடகங்கள் என அனைத்து நிறுவனங்களுமே ஒருமித்த பொறுப்புணர்வுடன் செயல்படும் போதே கருத்துச் சுதந்திரமும் அதன் மீதான எதிர்ப்பும் அர்த்தம் பெறும்.

சமத்துவம் மலர்ந்து சிரிக்கும் சமூகத்தில்தான் எல்லா சுதந்திரங்களும் உயிர் பெறுகின்றன. ஆக, இங்கு சமத்துவத்தை மலரச் செய்வதற்குதான் அடிப்படையில் நாம் அனைவரும் போராட வேண்டும். மத ஆதிக்கத்தையும் சாதியத்தையும் வேரறுக்கும் போதுதான் சமத்துவம் பிறக்கும் என்ற பழைய பாடத்தை புதிதாக கற்க வேண்டிய கால நெருக்கடிக்கு நாம் ஆட்பட்டு நிற்கிறோம்.

இந்துத்துவவாதிகளிடமும் சாதியவாதிகளிடமும் ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு சுதந்திரமாக இயங்க வேண்டுமென எதிர்பார்ப்பது அறியாமையன்றி வேறில்லை. சாதி ஒழிப்புக்கும் மத ஆதிக்கத்திற்கும் எதிரான காத்திரமான, கருத்தியல் ரீதியான போராட்டங்களை முன்னெடுக்காமல், மக்களை சமத்துவப்படுத்தாமல், அவர்களுக்கு பகுத்தறிவை ஊட்டாமல் வெறுமனே சுதந்திரத்திற்கு மட்டும் குரல் கொடுப்பது காற்றில் கட்டடம் கட்டுவதற்கு ஒப்பானது. நமது போராட்டம் முதலில் சமத்துவத்திற்கானதாக இருக்கட்டும்.கருத்துச் சுதந்திரம் மட்டுமல்ல, எச்சுதந்திரமும் அதன்மீது அழகாக எழுந்து வரும்.

Pin It