கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

"ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல மனமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற் போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு ‘யோக்கிதை’ இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.


இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும் நான் அத்தொண்டுக்கு தகுதியுடையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகிறேன்."

- பெரியார் ஈ.வே.ரா.

இவ்வாறு தன் வாழ்நாள் முழுவதும் சாதி, மத எதிர்ப்புக் கருத்துக்களையும், பெண் உரிமைக் கருத்துக்களையும் எதிர்ப்புக்களை கண்டு அஞ்சாமல், தன் உடல் நலனைக் கருத்தில் கொள்ளாமல், இரவு பகல் பாராமல் மக்கள் தொண்டாற்றியவர் தந்தை, பெரியார். தான் வாழும் காலத்திலேயே தனது கருத்துக்களை பிறர் நூல்கள் வெளியிட்டுக் கொளள இசைவளித்தவர். ஆனால் பெரியாருக்குப் பின் அவரது கருத்துக்கள் இன்றைய இளம் தலைமுறையினருக்கு முழுமையாகப் போய்ச் சேராத நிலை இருக்கிறது. இந்துத்துவ சக்திகள் நாடெங்கும் வலுப் பெற்று வரும் இந்நேரத்தில், இந்த நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளதற்கு முக்கிய காரணம், பெரியாரின் சொத்துக்களுக்கு மட்டுமல்ல, பெரியாரின் கொள்கைகளுக்கும் ஏகபோக வாரிசாக செயல்பட்டு வரும் கி.வீரமணிதான்.

பெரியாரின் கொள்கைகளைப் பரப்புவதை சமுதாயப் பணியாகக் கொள்ள வேண்டிய கி.வீரமணி ஒரு பக்கம் பொறியியல் கல்லூரி, கல்வியல் கல்லூரி, மருந்தியல் கல்லூரி என கல்வி வணிகத்தில் இயக்கத்தை திசை திருப்பி விட்டுள்ளார். மறுபக்கம் அறக்கட்டளைகள், தன்னார்வ குழுக்கள் என இவரது செயல்பாடு பெரியாரின் கருத்துக்ணகளைப் பரப்புவதைத் தவிர பிற தளங்களில் பரந்து விரிந்து சென்றுள்ளது. இந்தச் சொத்துக்களைக் காப்பாற்றும் பொருட்டும், தனது செயல்பாடுகளுக்கு அரசினால் எவ்வித ‘இடையூறும்’ ஏற்பட்டு விடக் கூடாது என்பதன் அடிப்படையிலேயே இவரது அரசியல் பணியும் இருக்கிறது. ஆகவே ஜெயலலிதா, கருணாநிதி என யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை வலிந்து ஆதரிப்பதும், அவர்களின் மக்கள் விரோதச் செயல்பாடுகளை முதல் ஆளாக நின்று வரவேற்பதுமாக இருக்கிறார். அதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறார். ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட பொழுது, அதற்கு எதிராக பெரியாரின் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் எதிர்த்தாக்குதல் நடத்தினர், ஆனால் கி.வீரமணியோ, ஆளுங்கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது என்று அறிக்கை விட்டார். தனது தலைவரை வேதாந்தி தரக் குறைவாக விமர்சித்த பொழுது கொதித்தெழுந்த கடைக்கோடி திமுக தொண்டனின் உணர்ச்சியில் சிறிய அளவு கூட தனது தலைவர் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட பொழுது வராமல் மரத்துப் போய்க் கிடந்தார் கி.வீரமணி.

அதே போல பெரியாரின் கருத்துகளைப் பரப்ப வேண்டிய சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமோ ஆதினங்களே பாராட்டும் வண்ணம் கி.வீரமணி எழுதிய வாழ்வியல் சிந்தனைகளை நூலாக வெளியிட்டு மகிழ்கிறது.

இவ்வாறு பெரியார் விட்டுச் சென்ற சொத்துக்கள் சிலருக்கு மட்டும் பயன்பட்டுக் கொண்டிருக்க, பெரியாரின் கருத்துக்களோ யாருக்கும் பயன்படாமல் பெரியார் திடலில் தூசு படிந்து கிடக்கிறது.

பெரியாரின் கொள்கைகளாக இதுவரை வெளி வந்திருப்பது ஆனைமுத்து தொகுத்த பெரியாரின் சிந்தனைகள் மூன்று தொகுதிகள் மட்டுமே. இதைத்தான் அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆய்வுக்கு பயன்படுத்துகின்றனர். இன்னும் யாருக்கும் தெரியாத கருத்துக்கள், விபரங்கள், குடியரசு, புரட்சி முதலிய ஏடுகளில் உள்ளன. அதை தொகுப்பதற்கு எவ்வித முயற்சியும் எடுக்காத கி.வீரமணி, தற்பொழுது தந்தை பெரியார் திராவிடர் கழகம் அதை நூலாக வெளியிட முயற்சி எடுக்கும் பொழுது அறிவுசார் சொத்துரிமை என்று கூறி அதை வெளியிடாமல் தடுப்பதற்கு நீதிமன்றம் சென்றுள்ளார். பகவத் கீதை, ராமாயணம் போன்ற புராணக் குப்பைகள் எவ்வித தடையும் இல்லாமல் பலராலும் பரப்பப்படும் பொழுது பெரியார் வழியில் நடப்பதாகக் கூறும் கி.வீரமணி பெரியார் கருத்துக்களை தானும் பரப்பாமல் பிறரது முயற்சிகளுக்கும் குழி பறிக்கும் வேலையைச் சரியாகச் செய்கிறார்.

இந்தப் பிரச்னைக்கு ஒரே வழி. பெரியாரின் எழுத்துக்கள் அனைத்தையும் நாட்டுடைமையாக்குவதுதான். இதன் மூலமே பெரியாரை வீரமணியிடமிருந்து மீட்டெடுத்து அவரது கருத்துக்களை அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்க முடியும். ஆனால் இந்தப் பணியை கி.வீரமணியிடமிருந்து ‘சமூக நீதி காத்த கி.வீரமணி’ விருது பெறும் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் செய்வாரா என்பது கேள்விக்குறிதான்.

(தமிழக முதல்வர் கருணாநிதிக்கு சமூக நீதிக்கான வீரமணி விருது வழங்கும் கி.வீரமணி, ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சியில் இருந்த பொழுது அவருக்கு ‘சமூக நீதிக்கான பெரியார்’ விருதை வழங்கினார். ஆக, ஆசிரியர் கி.வீரமணியும் ஜாதி பார்த்துதான் விருது வழங்குகிறாரே?)