இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து, ஏன் அதற்கு முன்னரும்கூட, அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் ஓய்வு ஒழிச்சலின்றி விவாதிக்கப்பட்டு வரும் ஒரு பொருளாக இடஒதுக்கீடு இன்றுவரை நீடிக்கிறது. இனி வரும் காலங்களிலும் இது தொடரும் வாய்ப்பே உள்ளது. பிறப்பின் அடிப்படையில் மக்களை சாதிகளாகப் பிரித்தும், அவர்கள் ஒவ்வொருவருக் கும் படிநிலை கருத்தாக்கத்தை உருவாக்கியும், அதனடிப்படையில் தீண்டாதாராகச் சிலரையும், கீழோராகப் பலரையும் பகுத்தும், எப்போதும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளவும் ஒருவரையொருவர் முன்னேறவிடாமல் தடுத்தும் - இதற்கு மத அங்கீகாரம் கொடுத்து கற்பித்தும், கடைப்பிடித்தும் வருகின்ற இந்து மதக் கோட்பாடுகள், தொடர் சதிக்கு வழிவகை செய்கின்றன. இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் இடஒதுக்கீடு குறித்த விவாதங்களைப் புரிந்து கொள்ள இயலாது.

Supreme Court
இந்திய அரசியலமைப்புச் சட்டம், சனவரி 26, 1950 அன்று நடைமுறைக்கு வந்த சில மாதங்களிலேயே உச்ச நீதிமன்றத் தீர்ப்பொன்றின் காரணமாக (செண்பகம் துரைராஜன் வழக்கு) அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் சட்டத் திருத்தம், இடஒதுக்கீடு உரிமையைப் பாதுகாக்கவே (பெரும் போராட்டத்தின் காரணமாக) கொண்டு வரப்பட்டது. அன்று தொடங்கி இன்றுவரை, சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டினைப் பாதுகாக்க வேண்டிய தேவை பல நேரங்களில் எழுந்துள்ளது. குறிப்பாக, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் இந்தச் சிக்கல்களுக்குப் பலமுறை வித்திட்டுள்ளன.

இடஒதுக்கீட்டிற்கு உச்ச வரம்பு எதையும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்படுத்தாத நிலையில் - ‘சமூக நீதி' என்ற போர்வையிலும் ‘தகுதி' என்ற பெயரிலும் - இடஒதுக்கீடு 50 சதவிகிதத்திற்கும் மிகாமல் இருந்தால் நல்லது என்று 1962 ஆம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்றம் அடித்தளம் அமைத்து வைத்திருந்தது (General Manager, Southern Railway Vs. Rangachari, AIR, 1962 SC 36).

அதன் பிறகு 1990 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் பிரதிநிதித்துவம் குறித்த மண்டல் முழு பரிந்துரைகள் நடைமுறைப் படுத்தப்பட்டபோது - சமூகத் தளத்திலும், கல்வியிலும் முன்னேறிய சமூகத்தினர் நடத்திய கிளர்ச்சியால், மீண்டும் இது குறித்த விவாதங்கள் சூடு பறந்தன. மண்டல் பரிந்துரைகள் நடைமுறைப் படுத்தப்பட்டபோது, அதனை எதிர்த்து மருத்துவக் கல்லூரி ஒன்றில் மட்டுமே மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆனால், அந்த எதிர்ப்பு நாடு முழுவதும் நடைபெற்றது போன்ற பாவனையை ஊடகங்கள் அதீத முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தின.

அண்மையில் மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவிகித இடஒதுக்கீடு அறிவித்தபோதும், டில்லியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து பல நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் சிகிச்சையின்றி பரிதவித்தனர், இறந்தனர். தற்போதுள்ள சட்ட நிலைப்படி, சட்டபூர்வமற்ற வேலை நிறுத்த காலத்திற்கு ‘வேலை செய்யாவிடில் ஊதியம் இல்லை' என்ற அடிப்படையில் சம்பளம் தரப்படுவதில்லை. ஆனால், இந்த இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களுக்கு வேலைநிறுத்தம் செய்த நாட்களுக்கும் ஊதியம் வழங்கச் சொல்லி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. இது, ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்டவிதிகளுக்கு முரணானது என்றும், எனவே இம்முடிவை மறு ஆய்வு செய்ய வேண்டுமென்று வேறு தரப்பினர்களால் கோரப்பட்டு, அம்மனு தற்போது நிலுவையில் உள்ளது.

இறுதியில் 1992 இல் உச்ச நீதிமன்றம் ‘இந்திரா சகானி' வழக்கில் (மண்டல் வழக்கு) வழங்கிய தீர்ப்பு, இடஒதுக்கீடு 50 சதவிகிதத்தை மீறக் கூடாது என உறுதியாகக் கூறியது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், சமூகத்திலும் கல்வியிலும் பின் தங்கிய வகுப்பினரிடையே உள்ள பொருளாதாரத்தில் மேம்பட்ட நபர்களை ‘கிரீ மிலேயர்' (Creamy Layer) என்று கண்டுணர்ந்து அழைத்தது (க்ரீமிலேயர் என்பது சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கிய வகுப்பினரிடையே பொருளாதார அடிப்படையில் முன்னேற்றம் பெற்ற ஒரு பிரிவினரை, பொருளாதார அடுக்கில் வளம் பெற்ற அடுக்காகக் குறிப்பிட இச்சொல்லைப் பயன்படுத்தியிருப்பதால், இதனைத் தமிழில் ‘வளஅடுக்கு' என்றழைக்கலாம்). இப்பிரிவினர், தங்கள் பொருளாதார அடிப்படையின் காரணமாக இடஒதுக்கீட்டின் பயன்களைப் பெறத் தகுதியற்றவர்கள் என அறிவித்தது. இந்த ‘வள அடுக்கு' விதி, மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டுமே பொருந்தும் என்று 9 நீதிபதிகளடங்கிய பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது.

‘ஈ.வி. சின்னையா (எதிர்) ஆந்திரப்பிரதேச அரசு' (AIR 2005 SC 62) வழக்கிலும்கூட, ‘வள அடுக்கு' விதி தாழ்த்தப்பட்டவர்கள்/பழங்குடியினருக்குப் பொருந்தாது என 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் ஒன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இச்சூழலில், 19.10.2006 அன்று ‘எம். நாகராஜ் (எதிர்) இந்திய ஒன்றியம்' (M. Nagaraj Vs Union Government (2006) 8 SCC 212) என்ற வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ‘வள அடுக்கு' விதி, தாழ்த்தப்பட்டவர்கள்/பழங்குடியினருக்கும் பொருந்தும் என்று கூறியதாக பரவலாக அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்துள்ளன.

1992 இல் வழங்கப்பட்ட ‘மண்டல்' வழக்கில் சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு, முதல்நிலைப் பணிநியமனத்திற்கு மட்டுமே பொருந்தும் என்றும், பணி உயர்வுக்குப் பொருந்தாது என்றும் தீர்ப்பளித்திருந்தது. இதனை எதிர்கொள்ளும் விதமாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 164ஏ என்ற பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது. பணி உயர்வில் இடஒதுக்கீடு இருந்தாலும் இம்முறையில் பணி உயர்வு பெறும் நபர் அவருக்கு நிகராகப் பணி உயர்வுக்குத் தகுதியான மற்றவருடன் போட்டி நிலவும் சூழலில், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வந்த நபருக்கு பணிமூப்பு அளிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மீண்டும் முட்டுக்கட்டை போட்டது. இதனைச் சமன் செய்ய பிரிவு 16(4)ஏ திருத்தம் செய்யப்பட்டது. மேலும், இடஒதுக்கீடு செய்யப்பட்ட பதவிகள் கடந்த காலங்களில் நிரப்பப்படாமல் இருப்பின் அவற்றை நிரப்பும்போது, அந்த இடஒதுக்கீட்டிற்கு உச்ச நீதிமன்றம் விதித்த 50 சதவிகித உச்ச வரம்பு பொருந்தாது என்றும் பிரிவு 16 (4)பி என்ற திருத்தம் செய்யப்பட்டது. இந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்குதான் ‘நாகராஜ் வழக்கு'.

இந்த வழக்கில், ‘‘மேற்படி சட்டத்திருத்தங்கள் அரசியலமைப்புச் சட்டப்படி சரியானதே, குறைகூறத்தக்கன அல்ல'' என்றுதான் 19.10.2006 நாளிட்ட தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் சொல்லியிருந்தது. எனினும், ‘மண்டல்' வழக்கில் விவாதிக்கப்பட்ட ‘வள அடுக்கு' இவ்வழக்கிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களில் உள்வாங்கப்பட்டதால் உறுதிப்படுத்தப்பட்டதே அன்றி வேறல்ல. ‘மண்டல்' வழக்கில் உருவாக்கப்பட்ட ‘வள அடுக்கு' (Rule of / against creamy layer) 9 நீதிபதிகளடங்கிய பெஞ்சால் வழங்கப்பட்டது. இந்த விதி ‘இதர பிற்படுத்தப்பட்ட பிரிவின ருக்கு' மட்டுமே பொருந்தும் என்பதோடு, தாழ்த்தப்பட்டவர்/பழங்குடியினருக்குப் பொருந்தாது என்றும் மிகத் தெளிவாக ‘மண்டல்' வழக்கில் கூறப்பட்டுள்ளது. ‘மண்டல்' வழக்குகூட இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு செய்த மத்திய அரசின் இரு அலுவலகக் குறிப்பாணைகளை செல்லாததென அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டதே.

மேலும், ‘நாகராஜ் வழக்கில்' வழங்கப்பட்ட தீர்ப்பு மேற்சொன்ன சட்டத் திருத்தங்களை உறுதி மட்டுமே செய்தது. இவ்வழக்கில் வள அடுக்கு விதி தொடர்பாக உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள், எவ்விதத்திலும் தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு குறித்ததாகக் கருதத் தீர்ப்பில் ஏதுமில்லை. தீர்ப்பின் இறுதி முடிவுகள் பகுதியில்தான் (பத்தி எண் 122) இது குறித்து கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது :

‘‘50 சதவிகிதத்திற்கும் மிகாமல் இருத்தல், வள அடுக்கு அடிப்படை மற்றும் இடஒதுக்கீட்டிற்கான வற்புறுத்தும் காரணங்களான பின்தங்கிய தன்மை, பிரதிநிதித்துவத்தின் போதாமை மற்றும் முழு அளவிலான நிர்வாகத் திறன் என்பன போன்ற அரசியலமைப்புச் சட்ட வரையறைகள், இவை இல்லாமல் போனால் பிரிவு 16 இல் கூறப்பட்டுள்ள சமத்துவ வாய்ப்பு வழங்கும் அமைப்பு சிதறிவிடும், ஆகியவற்றை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.''

கூடுதலாக, ‘மண்டல்' வழக்கின் தீர்ப்பை 9 நீதிபதிகளடங்கிய பெஞ்ச் வழங்கியது. அதில் ‘வள அடுக்கு' விதி தாழ்த்தப்பட்டவர்/பழங்குடியினரிடையே வள அடுக்கு உண்டா, ஏன் ‘வள அடுக்கு' உள்ளதாகக் கருதப்படக் கூடாது போன்ற விவாதங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இது போன்றதொரு மனநிலையை உருவாக்கி அடுத்த கட்டமாக, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரிடையேயும் வள அடுக்கு விதி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்கக் கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை. இது, சாதி இந்து மனநிலையின் ஒரு கருத்தாக்கத் தந்திரமே.

II

சிக்கலான சட்ட நுணுக்கங்களை விலக்கிவிட்டுப் பார்த்தால், சில உண்மைகள் தெரியவரும். மண்டல் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட காலகட்டத்தையும் , அதற்கெதிராக வழக்குத் தொடரப்பட்டு, அதன் மீதான தீர்ப்பு வழங்கப்பட்ட காலகட்டத்தையும் உற்று நோக்கினால், அப்போது அரசியல் வலிமையற்ற ஓர் மய்ய அரசு இருந்ததை உணரலாம். டாக்டர் அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தபோது, ஒரு வலிமையான மய்ய அரசு தேவை என்பதை வலியுறுத்தியது எவ்வளவு தொலைநோக்கானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்தப் பின்னணியில்தான், 1980களுக்குப் பிறகான காலகட்டம் முதல் நீதித்துறை, ‘நீதித்துறை செயல்பாடுகள்' என்ற பெயரில், சட்டத்துறைக்கு கடிவாளம் போடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதைப் புரிந்து கொள்ள முடியும். நீதித்துறை செயல்பாடுகள் என்ற கொள்கைக்கு அடிப்படையாக விளங்கும் கொள்கை - ‘அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறு' என்பதாகும். இது, 1973 ஆம் ஆண்டு ‘கேசவானந்தா பாரதி' என்ற வழக்கில் 13 நீதிபதிகளடங்கிய இந்திய உச்ச நீதிமன்ற பிரிவு வகுத்தளித்ததாகும். இதன்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளாக, சம உரிமை, சமூக நீதி, மக்களாட்சி, மதச்சார்பின்மை போன்றவை அடையாளம் காணப்பட்டு, இவற்றைப் பாதிக்கும் வகையில் எந்த சட்டமும், ஏன் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம்கூட செய்ய, நாடாளுமன்றத்திற்கோ சட்டமன்றங்களுக்கோ அதிகாரமில்லை என்றது உச்ச நீதிமன்றம். எந்தெந்த செயல்கள் அரசியலமைப்புச் சட்ட அடிப்படைக் கூறுகளுக்கு எதிரானவை என்பதைத் தீர்மானிக்கும் முழு தனித்த உரிமையை, உச்ச நீதிமன்றம் தன்னிடம் மட்டுமே இருக்கும் என்று தக்கவைத்துக் கொண்டது.

இந்த அடிப்படையில் மய்ய/மாநில அரசுகளின் பல செயல்பாடுகளை உச்ச நீதிமன்றம் செல்லாதது என அறிவித்துள்ளது. இதிலும் உச்ச நீதிமன்றத்தின் அளவுகோல் சமமானதாக இல்லை. சமத்துவச் சமூகம் என்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஓர் அடிப்படைக் கூறு என்று அறிவித்திருந்தாலும், ‘பால்கோ' (பாரத் அலுமினியம் கார்ப்பரேஷன்) வழக்கில் லாபம் ஈட்டும் அந்நிறுவனத்தை அன்றைய பா.ஜ.க. அரசு தனியார்மயமாக்கியதை ‘கொள்கை முடிவு' என்றும், எனவே அக்கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறி ஒதுங்கிக் கொண்டது. அதேபோல், என்.சி.ஈ.ஆர்.டி. வழக்கில் மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக பாடத்திட்டத்தில் மதங்களைப் பற்றி பாடங்களைச் சேர்ப்பதில் எந்தத் தவறுமில்லை என்று பா.ஜ.க. ஆட்சியின் முடிவுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது. சமூக நீதி, அரசியலமைப்புச் சட்டத்தின் ஓர் அடிப்படைக் கூறு என்பதை ஆதாரமாக்கிக் கொண்டுதான் இந்திரா சகானி (மண்டல்) வழக்கில் 1992இல் தீர்ப்பு வழங்கியபோது, 50 சதவிகிதத்திற்கும் அதிகமான இடஒதுக்கீடு செய்வது ‘அடிப்படைக் கூறு' கொள்கைக்கு எதிரானது என்றது உச்ச நீதிமன்றம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு என்று ஒன்று குறிப்பிடப்பட வில்லை. ‘சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய வகுப்பினருக்கு' இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில், பொருளாதார அடிப்படை என்பது நிரந்தரமற்றது. இன்று பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு குடும்பம், பல்வேறு சூழ்நிலைகளினால் முன்னேறலாம். ‘இந்து இந்தியா'வில் பொருளாதார முன்னேற்றம், சமூக உயர்வை ஒருபோதும் பெற்றுத் தராது. இங்கு எவ்வளவு பெரிய சமூக உயர்வும் சமத்துவத்தைத் தந்துவிடுவதில்லை. இதற்கு எவ்வளவோ எடுத்துக்காட்டுகளைச் சுட்ட முடியும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அரசியலமைப்புச் சட்டம் வரையறுக்கப்படும்போது, இடஒதுக்கீட்டிற்குப் பொருளாதாரம் ஓர் அடிப்படையாகக் கருதப்படவில்லை.

தற்போதைய சூழலில் ரூ. 2.5 லட்சம் ஆண்டு வருமானம் ஈட்டக்கூடிய மற்ற பின்தங்கிய வகுப்பினரும், அதே அளவுக்கு குறையாத வருமானம் ஈட்டக் கூடியதாகக் கருதப்படும் சில தொழில் புரியும் பின்தங்கிய வகுப்பினரும் வளஅடுக்கு விதியின்படி, இடஒதுக்கீடு பெறத் தகுதியற்றவர்கள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புரைத்துள்ளது. எடுத்துக்காட்டாக, வழக்கறிஞர் தொழில்புரியும் எல்லோருக்குமே மேற்கூறிய அளவிற்கு ஆண்டு வருமானம் ஈட்ட முடியும் என்று கூற முடியாது. ஓராண்டில் இந்த வருமானத்தை ஈட்ட முடிந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் அதே அளவு வருமானம் ஈட்ட முடியும் என்பது நிச்சயமற்றது. இந்த எடுத்துக்காட்டு, அனைத்து தொழில்களுக்கும் பொருந்தக்கூடியதே. எனவே, பொருளாதார அடிப்படையை இடஒதுக்கீட்டிற்கு சரியான அளவுகோலாகக் கருத முடியாது.

எனினும், உச்ச நீதிமன்றம், சமூக நீதி, சமத்துவம் என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் ‘வள அடுக்கு' விதியை உருவாக்கியது. வள அடுக்கு விதியை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நாடாளுமன்றம் சட்டமியற்றி இருக்கலாம். ஆனால், மய்ய அரசின் வலிமையற்றத் தன்மை காரணமாக இதுகுறித்த எதிர்நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்ட வகுப்பினர், சில ஆண்டுகளாக மட்டுமே பொருளாதார முன்னேற்றம் பெறத் தொடங்கியுள்ள நிலையில், அதையே காரணமாக முன்னிறுத்தி, இடஒதுக்கீட்டினை மறுப்பது, பிரதிநிதித்துவ சமத்துவக் கொள்கைக்கு எதிரானதாகும். எனவே, இந்த விதியை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நடைமுறைப்படுத்துவதை அரசியல் சக்திகள் மறுபரிசீலனை செய்தல் வேண்டும். இந்நிலையில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இவ்விதியை நீட்டிக்க எடுக்கப்படும் எந்த ஒரு முயற்சியும் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். இதற்கு முற்போக்கு அரசியல் சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

இக்கட்டுரையாளர், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்
Pin It