இந்தியாவில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான அமைப்புகளில் உச்ச அமைப்பு “தேசிய சுற்றுச்சூழல் மேல்முறையீட்டு அதிகாரக் குழு”. ஆனால் நாட்டின் சுற்றுச்சூழலை கெடுப்பதில் இந்த அமைப்பு முனைந்து செயல்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதைப் புரிந்து கொள்ள இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் எவ்வாறு இயங்குகின்றன என்பது பற்றிய ஒரு சுருக்க அறிமுகம் தேவை.
உலகமயமாதல் சூழலில் குறு மற்றும் சிறு தொழில்கள் மூடப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் பெருந்தொழில்கள் மட்டுமே ஓங்கி வளர்ந்து வருகின்றன. 1986ம் ஆண்டின் சுற்றுச்சூழல் (பாதுகாப்புச்) சட்டத்தின் கீழ், புதிதாக தொடங்கப்படும் பெருந்தொழில்களுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமே உள்ளது. இந்த அனுமதியைப் பெற விரும்பும் தொழில் நிறுவனங்கள், (1) சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை (Environmental Impact Assessment Report), (2) சுற்றுச்சூழல் நிர்வாகத் திட்டம் (Environment Management Plan), (3) சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த பொதுமக்கள் கருத்து கேட்பு அறிக்கை (Public Hearing Report) ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். இவற்றின் அடிப்படையில் மத்திய அரசு, குறிப்பிட்ட நிறுவனம் தொடங்க உத்தேசித்துள்ள தொழிற்சாலையை அனுமதிக்கலாம் - அல்லது - மறுக்கலாம்.
கடந்த 1986 முதல் 2006 வரையுள்ள 20 ஆண்டுகளில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 4,016 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. அதன் பிறகு இந்தியா மின்னல் வேகத்தில் முன்னேறியுள்ளது(!) என்று நம்புவதற்கு இடமுள்ளது. எப்படியென்றால், 2006 செப்டம்பர் மாதம் முதல் 2008 ஆகஸ்ட் மாதம் வரையுள்ள இரண்டே ஆண்டுகளில் 2,019 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு மாதத்துக்கு சராசரியாக 84 திட்டங்கள் அல்லது ஒவ்வொரு வேலை நாளிலும் 4 தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் எத்தனை தொழில் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த ஆய்வறிக்கைகள் முறையாக பரிசீலிக்கப்பட்டன என்பது யாருக்கும் தெரியாத ரகசியம்.
இதற்கான காரணங்கள் என்ன?
வேறு என்னவாக இருக்க முடியும்! தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களின்படி 2003 முதல் 2007 வரையுள்ள 5 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி 52 கோடி ரூபாயை நன்கொடையாக வாங்கியுள்ளது. இவற்றில் சுமார் 39 கோடி ரூபாய், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழில் நிறுவனங்களிடம் வாங்கப்பட்டுள்ளது. சுரங்க நிறுவனங்கள் 1 கோடியே 50 லட்ச ரூபாயும், பெரும் கட்டடம் கட்டும் தொழில் நிறுவனங்கள் 2 கோடியே 40 லட்ச ரூபாயும், டாடா குழும நிறுவனங்கள் 39 கோடி ரூபாயையும் காங்கிரஸ் கட்சிக்காக வாரி வழங்கியுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு நிதி கொடுத்த நிறுவனங்களின் பட்டியலில் விடியோ கான், ரான் பாக்ஸி, லுபின், எல் அண்ட் ட்டி, ஜிண்டால் ஸ்டீல், ஐ.டி.சி., மஹிந்திரா - மஹிந்திரா, ஜிஎம்ஆர் போன்ற நிறுவனங்களும் உள்ளன. இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை எதிர் கட்சியான பாரதிய ஜனதாவுக்கும், மற்ற கட்சிகளுக்கும்கூட உரிய பங்கை செலுத்தியுள்ளன. கணக்கில் வந்த தொகையே இதுவென்றால்...???!!!
இதன் பிரதிபலனாக ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் செய்ய வேண்டியது என்ன?
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளை செயல்பட விடாமல் முடக்குவதுதான்! அதில்தான் நமது தலைவர்கள் தேர்ந்தவர்கள் ஆயிற்றே!
1986ம் ஆண்டின் சுற்றுச்சூழல் (பாதுகாப்புச்) சட்டத்தின் கீழ், சில கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தொழிற்சாலைகள், அதன் செயல்பாடுகள் அல்லது செய்முறைகள் தடை செய்யப்பட்டுள்ளன அல்லது குறிப்பிட்ட பாதுகாப்பு அமைப்புகளுடன் அவை நடத்தப்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த சுற்றுச்சூழல் சட்டத்தின்படியே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் புதிய தொழில்களுக்கு அனுமதி வழங்கி வருகிறது. சுற்றுச்சூழல் (பாதுகாப்புச்) சட்டத்தால் தடை செய்யப்பட்ட அல்லது நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்ட அம்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள், மேல்முறையீடு செய்வதற்காக “தேசிய சுற்றுச்சூழல் மேல்முறையீட்டு அதிகாரக் குழு”வை அமைப்பதற்காக கடந்த 1997ம் ஆண்டு ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்த அதிகாரக் குழுவுக்கு உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஒருவர் தலைவராக நியமிக்கப்படவேண்டும். துணைத்தலைவராக நியமிக்கப்படும் நபர், மத்திய அரசின் செயலர் பதவியை அல்லது அதற்கு குறைவில்லாத பதவியை குறைந்தது இரண்டு ஆண்டுகள் வகித்தவராக இருக்க வேண்டும். மேலும் இவர் சுற்றுச்சூழல் குறித்த பிரச்சனைகளில், ஆட்சி முறையில், சட்டவியலில், நிர்வாகத்தில் அல்லது தொழில்நுட்பத்தில், வல்லுநர் திறன் அல்லது அனுபவம் கொண்டிருக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிர்வாகம், சட்டம், திட்டமிடல் அல்லது வளர்ச்சி போன்ற துறைகளில் தொழில்நுட்ப அறிவு அல்லது அனுபவம் பெற்ற மூன்று பேர் வரை இந்த அதிகாரக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்படலாம். அனைத்து பதவிகளும் குடியரசுத் தலைவரால் நிரப்பப்பட வேண்டும்.
1997ம் ஆண்டு தேசிய சுற்றுச்சூழல் மேல்முறையீட்டு அதிகாரக் குழு அமைக்கப்பட்டபோது, அதன் தலைவராக உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி என். வெங்கடாசலா நியமிக்கப்பட்டார். மூன்றாண்டுகள் அந்தப் பதவியிலிருந்த அவர், 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். அது முதல் கடந்த 10 ஆண்டுகளாக தேசிய சுற்றுச்சூழல் மேல்முறையீட்டு அதிகாரக் குழுவின் தலைவர் பதவி நிரப்பப்படாலேயே இருக்கிறது. இந்நிலையில் கடந்த 2006ம் ஆண்டில் இந்த குழுவின் துணைத்தலைவரும் ஓய்வு பெற்றார். தற்போது மூன்று தொழில்நுட்ப உறுப்பினர்களும், மிகச் சில பணியாளர்களும் மட்டுமே இந்த உயர்நிலை அதிகாரக் குழுவில் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது இந்த அதிகாரக் குழுவில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையில் வனத் துறை இயக்குநராக இருந்த ஜே.ஸி. காலா, உத்தர பிரதேச மாநிலத்தில் முதன்மை வனத்துறை அதிகாரியாக இருந்த குஷாலேந்தர் பிரசாத், தமிழ்நாடு அரசின் செயலாளராக இருந்த ஐ.வி. மணிவண்ணன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். தேசிய சுற்றுச்சூழல் அதிகாரக் குழு சட்டம் வரையறுத்துள்ள விதிமுறைகளின்படி இந்த அதிகாரக் குழுவின் உறுப்பினர் பதவியை வகிப்பதற்கு இந்த மூவருக்கும் முழுத் தகுதி உள்ளதென்பதை ஏற்க முடியாது என்று அண்மையில் வழங்கப்பட்ட தீர்ப்பொன்றில் தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏ.பி. ஷா மற்றும் எஸ். முரளிதர் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனவே, தலைவரோ, துணைத்தலைவரோ இல்லாத நிலையில் தேசிய சுற்றுச்சூழல் அதிகாரக் குழு சட்டம் நிர்ணயித்துள்ள தகுதிகளை முழுமையாக பெறாத மூன்று உறுப்பினர்களே இந்தியாவின் சுற்றுச்சூழலையும், பல கோடி மக்களின் வாழ்க்கையையும் தீர்மானிக்கின்றனர்.
மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகமோ, அதன் துணை அமைப்புகளோ எடுக்கும் முடிவுகளால் பாதிக்கப்படும் ஒரு நபர், சர்ச்சைக்குரிய அந்த முடிவு மேற்கொள்ளப்பட்ட 30 நாட்களுக்குள், மேல்முறையீடு செய்ய வேண்டும். உரிய காரணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் இந்த காலக்கெடு 90 நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம். தலைவரோ, துணைத்தலைவரோ, உரிய தகுதிபெற்ற உறுப்பினர்கள் இல்லாமல் போவதாலோ இந்த அதிகாரக் குழுவின் அதிகாரம் பாதிக்கப்படாது என்று சட்டம் தெளிவாக கூறுகிறது. மேலும் இந்த அதிகாரக் குழுவின் வரம்புக்கு உட்பட்ட விவகாரங்களை வேறு எந்த உரிமையியல் நீதிமன்றமும் விசாரிக்க முடியாது.
சுற்றுச்சூழல் நீதிக்கான உயர்நிலை அமைப்பு ஒன்றில் தலைவரோ, துணைத்தலைவரோ இல்லாத நிலையில் கடந்த 2006ம் ஆண்டில் நீர்ப்படுகைப் பகுதியில் அணை கட்டி மின்சாரம் தயாரிக்கும் 3 திட்டங்களுக்கு இந்த மேல்முறையீட்டு அதிகாரக் குழு அனுமதி வழங்கியுள்ளது. 2007ம் ஆண்டில் 25 புனல் மின்சாரத் திட்டங்களுக்கும், 2008ம் ஆண்டில் 11 புனல் மின்சாரத் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2006 – 2008 ம் ஆண்டுகளில் மட்டும் 587 கனிமச் சுரங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவற்றை எதிர்த்து பதிவு செய்யப்படும் மேல்முறையீடுகள் அற்ப காரணங்களுக்காக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. கோவா மாநிலத்தில் இரும்பு சுரங்கம் அமைப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 102 பேர். அவர்கள் அனைவருமே அந்த சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும் இந்த சுரங்கத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இது குறித்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த தேசிய சுற்றுச்சூழல் மேல்முறையீட்டு அதிகாரக் குழு, சுற்றுச்சூழல் அமைச்சகமும் – சீராய்வு நிபுணர் குழுவும் அப்பகுதி மக்களின் எதிர்ப்புகளை முறையாக பரிசீலித்த பிறகே சுரங்கம் அமைக்க அனுமதி வழங்கியதாகக் கூறி, அந்த மேலாய்வு மனுவை தள்ளுபடி செய்தது.
இது போன்று பல திட்டங்களுக்கான பொதுமக்கள் கருத்து கேட்பு நிகழ்வுகளின் அறிக்கைகளை வழங்குவதில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உள்நோக்கத்துடன் தாமதம் செய்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதேநேரத்தில், இந்த திட்டங்களுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் காலம் கடந்து வருவதாக கூறி தேசிய சுற்றுச்சூழல் மேல்முறையீட்டு அதிகாரக் குழு, அவற்றை தள்ளுபடி செய்வது மிகப்பெரிய அநீதி என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
உத்தராஞ்சல் மாநிலம் உத்தரகாசி பகுதியில் லோஹரிநாக்-பாலா என்ற புனல் மின்நிலையத்தை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த மேல்முறையீட்டு மனுவை, அம்மனு 23 நாட்கள் தாமதாக பதிவு செய்யப்பட்டதாகக் கூறி தேசிய சுற்றுச்சூழல் மேல்முறையீட்டு அதிகாரக் குழு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, இந்த மேல்முறையீட்டு மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம் தேசிய சுற்றுச்சூழல் மேல்முறையீட்டு அதிகாரக் குழுவுக்கு உடனடியாகத் தலைவரை நியமிக்கும்படி மத்திய அரசுக்கு 2005, பிப்ரவரி 8ம் தேதி உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு வெளிவந்து 4 ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும் தேசிய சுற்றுச்சூழல் அதிகாரக் குழுவுக்குத் தலைவர் நியமிக்கப்படாததை சுட்டிக்காட்டியும், தில்லி உயர் நீதிமன்றம் 2005ம் ஆண்டில் பிறப்பித்த தீர்ப்பை செயல்படுத்துமாறு உத்தரவிடக் கோரியும் விமல்பாய் என்பவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கை பதிவு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி எஸ். முரளிதர் ஆகியோர், சுற்றுச்சூழல் குறித்த விவகாரங்களில் அதிகபட்ச அதிகாரம் கொண்ட தேசிய சுற்றுச்சூழல் மேல்முறையீட்டு அதிகாரக் குழுவை முழுமையாக இயங்கவிடாமல் இருப்பது, தூய்மையான சுற்றுச்சூழலுக்கான குடிமக்களின் உரிமைகளை மறுக்கும் செயலாகும் என மத்திய அரசை கண்டித்துள்ளனர். மேலும், இந்த புதிய தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில் (11-02-2009) இருந்து 12 வாரங்களுக்குள் இந்த குழுவுக்கான தலைவர், துணைத்தலைவரை நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளனர். மேலும் இந்த வழக்கின் செலவுத்தொகையாக இந்த வழக்கின் மனுதாரர் விமல்பாய்க்கு மத்திய அரசு 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தில்லி உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்காவது மத்திய அரசு செவி சாய்க்குமா என்பது தெரியவில்லை.
பின்குறிப்பு: தேசிய சுற்றுச்சூழல் மேல்முறையீட்டு அதிகாரக் குழுவின் தலைவர் நியமிக்கப்படாத இந்த எட்டரை ஆண்டு காலமும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சர் பொறுப்பு தமிழகத்தை சேர்ந்தவர்களிடமே இருந்தது. தமிழக முதல்வரின் கருணாநிதியின் அன்புக்குரிய டி.ஆர்.பாலுவும் (13-10-99 முதல் 21-12-2003 வரை), ஆ. ராசாவும் (23-05-2004 முதல் 17-05-2007 வரை) மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் காபினெட் அமைச்சராக இருந்தவர்கள். இவர்களைத் தொடர்ந்து தி.மு.க.வைச் சேர்ந்த செ. ரகுபதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் இணை அமைச்சராக இருந்தார்.