பொருளாதார அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்ட இட ஒதுக்கீடுகளுக்கு ஆதரவான, எதிரான வாதங்கள் இந்தியாவிற்கு புதியவை அல்ல, அரசியலமைப்பு நிர்ணய சபை தொட்டு இன்று வரை பொருளாதார அளவுகோலை அடிப்படையாகக் கொண்ட இட ஒதுக்கீடு குறித்த விவாதங்களை காணலாம். இருப்பினும், பொருளாதார அடிப்படையை மட்டுமே அளவுகோலாகக் கொண்ட இட ஒதுக்கீட்டை அரசியல் நிர்ணய சபை ஒருபோதும் ஆலோசிக்கவில்லை. பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ஆதரித்த உறுப்பினர்களும் கூட, சமூக ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினர் அல்லது வேறு சில வகைகளில் பின்தங்கிய வகுப்பினர்களுக்காகவே ஆதரித்தனர். அரசியலமைப்புச் சட்டம் 1950 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, வெவ்வேறு அரசுகளால் நியமிக்கப்பட்ட பல ஆணையங்கள் இட ஒதுக்கீடுகள் குறித்து விவாதித்தன.
சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக, 1946 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அரசியலமைப்பு நிர்ணய சபை, சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் பெறுவதற்கான ஒரு வழியாக இட ஒதுக்கீட்டை கருதியது.
அரசியலமைப்பு நிர்ணய சபையில் பரந்து விரிந்து நடந்த பல விவாதங்களின் நோக்கம் என்னவென்றால், எண்ணிக்கையில் சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்று வேறுபாடில்லாமல், ஒவ்வொரு தரப்பு மக்களுக்கும், நாட்டின் நிர்வாகத்தில் சரியான பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்பதேயாகும். அத்தகைய பிரதிநிதித்துவத்தை எவ்வாறு அடைவது என்பதில் மட்டுமே சபை உறுப்பினர்கள் வேறுபட்டனர்.அரசியலமப்பு நிர்ணய சபையால் நியமிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள், சிறுபான்மையினர், பழங்குடியினர் விவகாரங்களுக்கான, ஆலோசனைக் குழு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று சட்டமன்றங்களிலும், பாராளுமன்றத்திலும் பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டைப் பரிந்துரைத்தது. மேலும் 1949 ஆம் ஆண்டு மே மாதம் இந்த பிரச்சினை மீண்டும் எழுந்தபோது அரசியலமைப்பு நிர்ணய சபையில் தனது கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது. பின்னர் இந்த முன்மொழிவு அரசியல் நிர்ணய சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. மெட்ராஸ் மாகாண சட்டமன்றத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான எஸ்.நாகப்பா இட ஒதுக்கீட்டை ஆதரித்து வாதிட்டார். பட்டியல் சாதியினர் பொருளாதார, அரசியல், சமூக ரீதியாக சிறுபான்மையினர் என்பதால், அவர்களுக்கு இட ஒதுக்கீடு மூலம் பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும் வாதிட்டார்.
"ஒவ்வொரு ஹரிஜனக் குடும்பத்திற்கும் பத்து ஏக்கர் நன்செய் நிலம், இருபது ஏக்கர் புன்செய் நிலம், ஹரிஜனங்களின் அனைத்துக் குழந்தைகளுக்கும் பல்கலைக்கழகப் படிப்பு வரை இலவசக் கல்வி, அரசுத் துறைகளில் ஐந்தில் ஒரு பங்கு இடம் ஆகியவை வழங்கப்பட்டால், இட ஒதுக்கீட்டை ஒழிக்க நான் தயாராக இருக்கிறேன்" என்றார். அதை எதிர்த்த ஐக்கிய மாகாணத்தைச் சேர்ந்த மோகன் லால் கெளதம் என்பவர், ஹரிஜன்களுக்கு, அதாவது தலித்களுக்கு, அவ்வளவு பெரிய சலுகைகள் கொடுத்தால், ஒவ்வொரு பார்ப்பனரும் தலித்தாக மாறி சகல சவுகரியங்களுடன் அரசு தரும் இலவசங்களை, சலுகைகளை அனுபவிக்க விரும்புவார்கள் எனக் கூறினார். மோகன் லாலின் இந்த கருத்திற்கு எதிர்வினை ஆற்றிய நாகப்பா, "இந்து மதத்தின் மற்ற உயர்சாதிகளின் கழிவுகளை அப்புறப்படுத்தவும், அவர்களின் மலத்தை அள்ளவும் தயாராகாத வரை ஒரு இந்து, தலித்தாக மாறவே முடியாது" என்று பதிலடி கொடுத்தார்.
அண்ணல் அம்பேத்கரால் பயன்படுத்தப்பட்ட "தொழிலாளர் பிரிவினை" என்ற கருத்தாக்கத்துடன் தொடர்புடைய தீண்டாமையினால் ஏற்படுகிற களங்கம் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்நாள் முழுவதும் சமூக, கல்வி, பொருளாதார ரீதியாக பாகுபடுத்தப்படுத்துவதற்கு வழிவகுத்தது. இந்த வரலாற்றுப் பாகுபாட்டை களைவதற்கான முதன்மை வழியாக இட ஒதுக்கீடு என்பதே அரசியலமைப்பு நிர்ணய சபையில் முதன்மை விவாதமாக இருந்தது. சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட வகுப்பினர் அரசுத்துறை பணிகளில் போதுமான பிரதிநிதித்துவத்தை அடைவதற்கான வழியாக இட ஒதுக்கீடு கருதப்பட்டு அதனடிப்படையில் அரசியலமைப்பு நிர்ணய சபையில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இட ஒதுக்கீட்டை எதிர்த்த சிலர், இட ஒதுக்கீட்டை சமூக ஏற்றத்தாழ்வுக்கான தீர்வாகத் தேர்ந்தெடுப்பதை எதிர்த்து வாதிட்டனர், ஆனால் அவர்கள் ஒருபோதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்வதை எதிர்க்கவில்லை. சிறுபான்மையினருக்கான துணைக் குழுவின் தலைவர் எச்.சி.முகர்ஜி, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான பொருத்தமான தீர்வு பொருளாதாரமே தவிர இட ஒதுக்கீடு போன்ற அரசியல் பாதுகாப்பு அல்ல என்றார். முஸ்லீம் லீக்கிலிருந்து ஐக்கிய மாகாணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரான ஜி.எச் லாரி, மத சிறுபான்மையினர், பட்டியல் சாதியினரின் பிரதிநிதித்துவம் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையின் மூலம் உறுதிசெய்யப்பட வேண்டும், இட ஒதுக்கீட்டின் மூலம் அல்ல என்று வாதிட்டார்.
ஐக்கிய மாகாணங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரான மகாவீர் தியாகியும், மெட்ராஸ் மாகாணத்தைச் சேர்ந்த பேராசிரியரும் இறையியலாளருமான ஜெரோம் டிசோசா ஆகிய இருவரும் சாதி அடிப்படையில் பயனாளிகளை வகைப்படுத்துவதற்கு எதிராக குரல் எழுப்பினர். சமூகப் பாகுபாட்டின் மற்ற அளவுகோல்களைப் பயன்படுத்தப் பரிந்துரைத்தனர். வர்க்க அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ஆதரிப்பவரான தியாகி, பிழைப்புக்கு போதுமான வருமானம் ஈட்டித்தராத வேலைகளைச் செய்பவர்களைக் கண்டறிந்து, அதனடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்களை வகைப்படுத்த வேண்டும் என்று வாதிட்டார்.
"சமூக அடிப்படையிலான வகைப்படுத்துவதை நான் நம்பவில்லை, ஆனால் பொருளாதார அடிப்படையிலும், அரசியல் அடிப்படையிலும், கருத்தியல் அடிப்படையிலும் சிறுபான்மையினர் இருப்பதால் அதனடிப்படையில் சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும்" என்று தியாகி வலியுறுத்தினார். பட்டியலின பிரிவுக்குப் பதிலாக, நிலமற்ற தொழிலாளர்கள், செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் அல்லது இதே போன்ற வேலைகளைச் செய்து, வாழ்வதற்கு போதுமான அளவு வருமானம் கிடைக்காத நபர்களுக்குச் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். செருப்பு தைப்பவர்கள், சலவைத் தொழிலாளர்கள் மற்றும் பிற வகுப்பினர் தங்கள் பிரதிநிதிகளை இட ஒதுக்கீடு மூலம் அனுப்பட்டும், ஏனென்றால் அவர்கள் உண்மையில் எந்த பிரதிநிதித்துவத்தையும் பெறவில்லை என்று தியாகி வாதிட்டார். தியாகியின் பொருளாதார அளவுகோல் 103 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தில் இருந்து வேறுபட்டது, ஏனெனில் அவர் இட ஒதுக்கீட்டின் அளவுகோலாக வருமானத்தைக் கருதவில்லை. தொழிலாளர்கள் செய்யும் தொழில், தொழிலாளர் வர்க்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.
ஒரு நபரின் ஜாதி அல்லது மதம் இட ஒதுக்கீட்டிற்கான அடிப்படையாக இருக்கக்கூடாது என்று டிசோசா வாதிட்டார். மாறாக, "தனிநபர்களின் குறைபாடுகள், தேவை, சமூகப் பின்னணியை மனதில் வைத்து" இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அவர் வாதிட்டார். "ஒரு மனிதன் ஏழையாக இருப்பதால் அவனுக்கு உதவ வேண்டும், ஏனென்றால் அவனுடைய பிறப்பும் வளர்ப்பும் சமூக, அரசியல் மற்றும் கல்வியில் முன்னேற வாய்ப்பளிக்கவில்லை." என்றார் டிசோசா.
அரசியலமைப்பு நிர்ணய சபையின் இறுதி வாக்கெடுப்பு முடிவுகள் சாதியப் பாகுபாட்டின் அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக இருந்தது. ஜனவரி 1950 இல், அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசுப் பணிகளில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாத, பட்டியலின, பழங்குடியினர், சமூக ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு செய்ய அரசிற்கு அதிகாரம் வழங்கியது. மக்களவையிலும், மாநில சட்டமன்றங்களிலும், அந்தந்த குறிப்பிட்ட மாநிலத்தில் வசிக்கும் பட்டியலின, பழங்குடியின மக்கள் தொகைக்கு ஏற்ப, பட்டியலின, பழங்குடியின வேட்பாளர்களுக்கு இடங்களை ஒதுக்க வேண்டும். அரசியல் சிறுபான்மையினர்களான பட்டியலின, பழங்குடியின உள்ளிட்ட குடிமக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கான ஒரு கருவியாக இட ஒதுக்கீடு இருக்கும் என்பது இந்திய அரசியலமைப்பின் கண்ணோட்டமாகும்.
அடுத்த ஆண்டு, பொருளாதார அளவுகோல்களைப் பின்தங்கிய நிலைக்கான குறியீடாகப் பயன்படுத்துவது குறித்த கேள்வி மீண்டும் எழுந்தது. 1951 ஆண்டு மே மாதம், சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய குடிமக்கள், பட்டியலின, பழங்குடியின வகுப்பினரின் முன்னேற்றத்திற்கான சிறப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்கான அதிகாரத்தை அரசுகளுக்கு வழங்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. சமூக குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு இருந்த நோக்கத்தை ஒட்டி செய்யப்பட்ட இந்தத் திருத்தம் குறித்து முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் "நமது சமூக வாழ்க்கையிலும், நமது சமூக கட்டமைப்புகளிலும் எல்லையற்று வளர்ந்துள்ள பிரிவினைகளை சாதி, மதம் என எப்பெயரிட்டு அழைத்தாலும் அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அவசியத்தை இச் சட்டத் திருத்தம் பூர்த்தி செய்கிறது என்று குறிப்பிட்டார்.
ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்த வழக்கறிஞரும் பொருளாதார நிபுணருமான கே.டி.ஷா, முன்மொழியப்பட்ட திருத்தம் பின்தங்கிய நிலையைத் தீர்மானிப்பதற்கு பொருளாதார அளவுகோல்களை அல்லாமல் சமூக மற்றும் கல்வி அளவுகோல்களை நம்பியிருப்பதை விமர்சித்தார். தனிப்பட்ட குடிமக்களை அல்லாமல் "குடிமக்களை வகுப்புகளாக" வகைப்படுத்துவது குறித்தும் ஷா கேள்வி எழுப்பினார். சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய குடிமக்களின் முன்னேற்றத்திற்கான ஏற்பாடுகளால் இந்தியாவின் ஏழை குடிமக்களுக்கு எந்த பயனும் அளிக்காது என்றும், அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து அவர்களின் வாழ்க்கையிலும், வேலைத் தரத்திலும் எந்தப் முன்னேற்றத்தையும் ஏற்படவில்லை என்று வாதிட்டார்.
இதற்குப் பதிலளித்த நேரு, சமூகப் பின்னடைவு என்பது பொருளாதாரக் காரணங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்தக் காரணிகளின் விளைவாகும் என்று பிரகடனம் செய்தார். பொருளாதாரப் பின்னடைவுயெனக் குறிப்பிட்டுச் சொல்வதென்பது எல்லாவற்றிலும் பின்னடைவு என்பதாக ஆகாது. ஆனால், சமூகம், கல்வி, பொருளாதாரம் என எந்த அடிப்படையில் பின்தங்கி இருப்பவர்களுகு உதவ வேண்டும் என்றும் வாதிட்டார் நேரு. இத்தகைய விவாதங்களிலிருந்து, சமூகம், கல்வி, பொருளாதாரம் முதலான எல்லாவற்றுள்ளும் பின்னடைவை உருவாக்குகின்ற சமூகக்கட்டமைப்பு குறைபாட்டை, அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் சரிசெய்யப்பட வேண்டுமென்பது தெளிவாகின்றது.
மக்கள் கூட்டாக அனுபவிக்கும் சமூகப் பாகுபாட்டிற்கு மாறாக, தனி நபர்களுக்கு உள்ள குறைபாடுகள், அவை ஒருவருக்கு ஒருவர் மாறுபடும் தன்மை கொண்டதால், அவற்றை அரசியலமைப்புச் சீர்திருத்தம் அல்லது இட ஒதுக்கீடு போன்று அரசியலமைப்பு ரீதியாகச் சரி செய்ய முயற்சிக்கூடாது.
1951 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட முதல் திருத்தமானது, அரசால் நடத்தப்படும் அல்லது அரசு உதவி பெற்று நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் பட்டியலின, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கான இட ஒதுக்கீடு, கட்டண விலக்கு, சலுகைகளுக்கு அடிப்படையாக அமைந்தது. இத்தகைய நடவடிக்கைகளின் அடிப்படை நோக்கம் என்னவென்றால், அரசுத் துறைகளிலும் சட்டமன்றங்களிலும் பாராளுமன்றத்திலும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்பட வேண்டுமெனில், கல்வி நிறுவனங்களிலும் அவர்களின் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே.
1953 ஆம் ஆண்டில், அப்போதை இந்திய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், குடிமக்களை "சமூக ரீதியாகவும் கல்வியிலும் பின்தங்கியவர்களை" வகைப்படுத்துவதற்கான அளவுகோல்களை வரையறுப்பதற்காக மாநிலங்களவை உறுப்பினரும் சிறந்த குஜராத்தி இலக்கியவாதியுமான காகா கலேல்கர் தலைமையில் முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை நியமித்தார். 1955 ஆம் ஆண்டு ஆணையம் சாதிய படிநிலையில் கீழ்நிலை, சாதியின் பெரும்பான்மையோர் கல்வியில் முன்னேற்றம் இல்லாதிருத்தல், அரசுத் துறைகளில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாமை, வர்த்தகம், தொழில் துறையில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாமை அளவுகோல்களை வகுத்தது. இந்த அளவுகோல்களின் அடிப்படையில் 2,399 சாதிகளைச் சேர்ந்தோரை "சமூக ரீதியிலும் கல்வியிலும் பின்தங்கியவர்கள்" என்று இந்த ஆணையம் அடையாளம் கண்டது.
இருப்பினும், சாதியைப் பின்தங்கிய நிலையைத் தீர்மானிப்பதற்கான ஒரு அளவுகோலாக வைப்பதை அரசு நிராகரித்தது, அது "சாதியின் அடிப்படையில் இருக்கும் வேறுபாடுகளைப் பேணுவதற்கும் நிலைநிறுத்துவதற்கும்" மட்டுமே உதவும் என்று கூறியது. இறுதியாக, "சாதியின் அடிப்படையில் செல்வதை விடப் பொருளாதார அடிப்படையில் செயல்முறை மேற்கொள்வது நல்லது" என்றும், மாநில அரசுகள் அவர்கள் தேர்ந்தெடுக்கும் அளவுகோல்களின்படி பின்தங்கிய நிலையை வரையறுக்கச் சுதந்திரம் இருப்பதாகவும் ஒன்றிய அரசு அறிவித்தது. காலேல்கர் ஆணையம் அறிக்கை நிராகரிக்கப்பட்டு, 40 ஆண்குகளுக்குப் பிறகு மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் வரை, ஏற்கனவே இட ஒதுக்கீடு தரப்பட்ட பட்டியலின, பழங்குடியினரைத் தவிர்த்த மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒன்றிய அரசின் இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை.
1979 ஆம் ஆண்டில், ஜனதா கட்சியின் அரசு, மக்களவை உறுப்பினரான பிபி மண்டல் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தது. அதன்படி, மண்டல் ஆணையம் சமூக ரீதியிலும் கல்வியிலும் பின்தங்கிய வகுப்பினரை அடையாளம் காண்பதற்கான அளவுகோல்களை நிர்ணயிக்கும் பணியை மேற்கொண்டது. மேலும், இக்குழுக்களின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும், அத்தகைய குழுக்களுக்கு அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு செய்வதற்கான விருப்பத்தை ஆராயவும் மண்டல் ஆணையம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
1980 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட மண்டல் ஆணையத்தின் அறிக்கை, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காண்பதில் சாதிக்குப் பதிலாகப் பொருளாதார அளவுகோல்களைப் பயன்படுத்துவது "இந்தியச் சமுதாயத்தில் சமூகப் பின்தங்கிய நிலையின் தோற்றத்தைப் புறக்கணிப்பதாகும்" என்று குறிப்பிட்டது. சமூகப் பின்தங்கிய நிலை என்பது சாதியப் படிநிலையின் விளைவாகும். மேலும் பல்வேறு வகையான பிற்படுத்தப்பட்ட நிலைகளுக்கும் இட்டுச் செல்கிறது என்று அறிக்கை தெரிவித்தது. சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய நிலையை அளவிட, புள்ளிகளின் அடிப்படையில் குறிகாட்டிகள்(Indicator) உருவாக்கப்பட்டன. மூன்று புள்ளிகளுடைய நான்கு சமூகக் குறிகாட்டிகள், இரண்டு புள்ளிகளுடைய மூன்று கல்விக் குறிகாட்டிகள், ஒரு புள்ளிகளுடைய நான்கு பொருளாதார குறி காட்டிகள் ஆகிய 11 குறிகாட்டிகள் உருவாக்கப்பட்டன.
ஒரு சாதியில் உள்ள ஒட்டுமொத்த குடும்பங்களின் சராசரி சொத்து மதிப்பு தேசியச் சராசரி சொத்துமதிப்பை விட 25% குறைவாக இருத்தல், குடிசை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை தேசியச் சராசரியை விடக் குறைந்தது 25% அதிகமாக இருத்தல், 50 விழுக்காட்டிற்கு மேற்பட்ட குடும்பங்கள் 500 மீட்டர் தள்ளிச் சென்று குடிநீர் பெற வேண்டிய நிலையில் இருத்தல், தேசியச் சராசரியை விடக் குறைந்தது 25% கடன்களை வாங்கிய குடும்பங்கள் ஆகிய நான்கு பொருளாதார குறி காட்டிகள் பயன்படுத்தப்பட்டன. இவ்வகைப்பட்ட சமூக, கல்வி, பொருளாதாரக் குறி காட்டிகளை முதுகெலும்பாகக் கொண்டு, மண்டல் ஆணையம் 3,743 சாதிகளை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகக் கண்டறிந்து, அவர்களுக்கு இட ஒதுக்கீடு, பிற கல்விச் சலுகைகள், சிறு தொழில்களை அமைப்பதற்கான நிதி, தொழில்நுட்ப உதவிகளைப் பரிந்துரைத்தது.
சாதிய அடையாளத்தின் காரணமாக ஒதுக்கப்படுவது பின்தங்கிய நிலையின் முதன்மை காரணியாகக் கண்டறியப்பட்டது. அதே நேரத்தில் அதன் விளைவாகக் கல்வி, பொருளாதாரக் குறைபாடுகள் கூட்டுக் காரணிகளாகக் கண்டறியப்பட்டன.
1990 ஆம் ஆண்டில் வி.பி.சிங் அரசு மண்டல் ஆணையம் அறிக்கையின் பட்டியலிலும், மாநில அரசுகளின் பட்டியலிலும் இடம் பெற்றுள்ள சாதிகளுக்கு மண்டல் ஆணைய அறிக்கையைச் செயல்படுத்துவதாக அறிவித்தது. ஒன்றிய அரசின் பணிகளில் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசு அலுவலக குறிப்பாணையின் மூலம் உத்தரவிட்டது. 1991 ஆம் ஆண்டு, பி.வி. நரசிம்மராவ் அரசு, ஒன்றிய அரசின் பணிகளில் 10% இடங்களை "ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீட்டுத் திட்டங்களின் கீழ் வராத பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்ற பிரிவினருக்கும் ஒதுக்க வேண்டும் என்று மேற்சொன்ன அலுவலக குறிப்பாணையை மாற்றியது. SC, ST, OBC வகுப்பினர் ஏற்கனவே இட ஒதுக்கீடு பெறுவதால், உயர்சாதியினர் மட்டுமே பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவினராக அடையாளம் காணப்படுவார்கள். அவர்களை அடையாளம் காண்பதற்கான அளவுகோல்கள் பற்றிய உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்படிப் தொடரப்பட்ட இந்திரா சஹானி வழக்கில், சமூக பாதகத்தை அனுபவிக்காத வகுப்பினரை, பொருளாதார அளவுகோல்களின் அடிப்படையில் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று வகைப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்பு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. மண்டல் ஆணையம் கண்டறிந்தபடி, சமூக பின்தங்கிய நிலை, கல்வி மற்றும் பொருளாதார பின்தங்கிய நிலைக்கு வழிவகுக்கிறது என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. அதன்படி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
சுதந்திர இந்தியாவில் உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு தரும் 103 வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு, 1991 ஆம் ஆண்டின் நரசிம்மராவின் அலுவலக குறிப்பாணை மட்டுமே ஒரே முன்னுதாரணமாகும். இரண்டும் அவற்றை வழங்கும் அமைப்பின் அதிகாரத்தின் அடிப்படையில் மட்டுமே வேறுபடுகின்றன. 1991 ஆண்டின் அலுவலக குறிப்பாணைத் திருத்தம், அத்தகைய இட ஒதுக்கீடுகளைச் செய்ய அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது என்ற அனுமானத்தின் அடிப்படையில் நிர்வாக அதிகாரியால் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் தற்போதைய திருத்தம் அரசியலமைப்பை மாற்றியமைத்து, அத்தகைய இட ஒதுக்கீடுகளைச் செய்ய அரசிற்கு வெளிப்படையாக அதிகாரம் அளிக்கிறது. சஹானி வழக்குத் தீர்ப்பில் நீதிமன்றம் அனுமதிக்காததை திருத்தும் வகையில் இப்போது அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டுள்ளதால், சஹானி வழக்கின் தீர்ப்பை வைத்து தற்போதைய திருத்தத்தை எதிர்க்க முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பு கோட்பாட்டை மீறுகின்றன என்ற அடிப்படையில் மட்டுமே அரசியலமைப்புத் திருத்தங்களை உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்ய முடியும்.
சமூக, அரசியல் தளங்களில் சமூக ரீதியாக ஒதுக்கப்பட்ட குழுக்களுக்கான பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கான அரசியல் பாதுகாப்பே இட ஒதுக்கீடுகளின் நோக்கம் என்று மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கண்ணோட்டத்தில், தனிப்பட்ட பொருளாதார அளவுகோல்களின் அடிப்படையில் மட்டுமே உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் கருத்தாக்கம் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இல்லை.
வழக்கறிஞரான மாளவிகா பிரசாத் தேசிய சட்ட ஆய்வுகள், ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தில் (National Academy of Legal Studies and Research) அரசியலமைப்புச் சட்டத்தை பயிற்றுவிக்கிறார்.
நன்றி: caravanmagazine.in இணையதளம் (2019, மார்ச் 28 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)
தமிழ் மொழியாக்கம்: விஜய் அமெரிக்கா