சென்னை உயர் நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு:
.
தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 28.9.2006 அன்று வெளியிட்ட விளம்பரத்தில், ‘‘ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் புத்த மதத்திற்கு மாறிய பிறகு, ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவருக்கு (இந்துக்களுக்கு) அனுமதிக்கப்படுகிற சலுகைகளுக்கு உரிமையுடையவர் ஆக மாட்டார்'' என்று சட்டத்திற்குப் புறம்பாக அறிவித்திருந்தது. இந்த அநீதியைக் களைந்தெறிய, வேலூர் ஊரிசு கல்லூரியின் பேராசிரியர் அய். இளங்கோவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் 6.11.2006 அன்று மனு தாக்கல் செய்திருந்தார். இவர் சார்பாக, வழக்கறிஞர் டி. அரிபரந்தாமன் வாதாடினார். இவ்வழக்கை, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா மற்றும் நீதிபதி கே.சந்துரு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இத்தீர்ப்புரையை 23.11.2006 அன்று, உயர் நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு வழங்கினார். இத்தீர்ப்பின் முழு பகுதியை, அதன் முக்கியத்துவம் கருதி அப்படியே வெளியிடுகிறோம்.
தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழு வெளியிட்ட விளம்பர எண்.084, பவுத்தத்திற்கு மாறியிருக்கிற தலித்துகளுக்கு இழைக்கும் அநீதியைப் பொறுக்க இயலாமல், சமூக உணர்வுள்ள ஓர் ஆங்கிலப் பேராசிரியரான மனுதாரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
‘இந்து' உள்ளிட்ட அனைத்து முன்னணி நாளிதழ்களிலும் 28.9.2006 அன்று, தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட இந்த விளம்பரம் வெளிவந்துள்ளது. இவ்விளம்பரம், தமிழ் நாடு தலைமைச் செயலகத்திலும், தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலகத்திலும் உதவியாளர்கள் பணிக்கும், தமிழ் நாடு தலைமைச் செயலகத்திலும், தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திலும் தனி எழுத்தர்கள் பணிக்கும் விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. தலைப்பு 5(டி) இல் ஒவ்வொரு பதவிக்கும் நேரடித் தேர்வில் இடஒதுக்கீடு பின்பற்றப்படும் என்று சொல்லியிருந்தாலும், விண்ணப்பதாரர்கள் தமிழ் நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளையும் பார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள்.
வழிகாட்டு நெறிமுறைகளின் பத்தி 11 இல் சேர்க்கப்பட்டிருக்கும் குறிப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது : ‘‘பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவர் பவுத்தத்திற்கு மாறி இருந்தால், இந்து ஆதி திராவிடர் சாதிக்கு வழங்கப்படும் சலுகைகளைப் பெறும் தகுதி அவர்களுக்குக் கிடையாது.''
இது, அரசமைப்புச் சட்டத்திற்கு நேர்ந்த மிக வெளிப்படையான அவமதிப்பாகும். 4.6.1990 நாளிட்ட திருத்தச் சட்டம் 1990 (மத்திய சட்டம் 15, 1990) இன்படி, அரசமைப்புச் சட்டத்தின் பட்டியல் சாதிகள் ஆணை, பவுத்தர்களையும் இணைத்துக் கொள்ளும் வகையில் திருத்தப்பட்டது. அதன்படி பவுத்தர்களாக மாறிய பட்டியல் சாதியினரும் நாடாளுமன்றத்தின் இடஒதுக்கீடு விதிகள் அனைத்திற்கும் தகுதியானவர்கள் ஆவர். இந்திய அரசு இந்த ஆணையை அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியது. இந்தத் திருத்தம் நடைமுறைக்கு வந்து 16 ஆண்டுகள் ஆகியும், தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்னமும் தனது தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்ளாமல், தான் நடத்தும் பல தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் திருத்திக் கொள்ளாமல் இருப்பது, மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
இந்நிலையில், தமிழ் நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் தனது வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடப்பது கட்டாயமானது என்றும், அது சட்டப்படியானது என்றும் பல்வேறு நீதிமன்றங்களில் பல்வேறு காலங்களில் வாதிட்டும் இருக்கிறது. எதிர் மனுதாரரான தமிழ் நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம், அரசமைப்புச் சட்டத்தின் 315 ஆம் பிரிவின் கீழ் அமைக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் யாரும் அறிவுறுத்தாமலேயே அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகளை நடைமுறைப்படுத்தும் கடப்பாடு உள்ளவர்கள். அதற்கு மாறாக கொடுக்கப்படும் எந்த நெறிமுறைகளையும் ஏற்றுக் கொள்ள மறுக்க வேண்டியவர்கள்.
இருப்பினும், இந்த மனு குறித்த தகவல் ஆணையிலும், இந்த நீதிமன்றத்தால் கேட்கப்பட்டபோதும், தமிழ் நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்திற்காக வாதாடும் வழக்கறிஞர் திரு. சுரேஷ் குமார் இத்தனை ஆண்டு காலமாக, இடஒதுக்கீட்டைப் பொறுத்த வரையில் மாநில அரசின் வேண்டுகோளின் படியே செயல்படுவதாக ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், 320 ஆம் பிரிவின்படி, மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கும் அதே நேரத்தில், 3204 ஆம் துணைப் பிரிவின்படி, அரசமைப்புச் சட்டத்தின் 164 ஆவது துணைப் பிரிவின் கீழுள்ள வைகளை செயல்படுத்துவது குறித்தும், 320 ஆவது பிரிவை நடைமுறைப்படுத்த வேண்டிய முறைகள் குறித்தும், தமிழ் நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தை ஆலோசிக்கத் தேவையில்லை என்பதையும் வழக்கறிஞர் நம் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஆகையால், தங்கள் தேவையை பொருத்தமாக மாற்றி அமைக்கும்படி மாநில அரசுக்கு அறிவுறுத்த வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அப்படி மாற்றினால் எதிர்காலத்தில் அவர்கள் அதற்கேற்றவாறு செயல் பட இயலும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்புமையை எங்களால் ஏற்றுக் கொள்ள இயலாது. இந்தச் சூழலில் தலித்துகள் பவுத்தத்திற்கு மாறுவதற்கும், அரசமைப்புச் சட்டத்தில் இது தொடர்பாக செய்யப்பட்ட திருத்தத்திற்கான வரலாற்றுக் காரணங்களையும் நாம் குறிப்பிட வேண்டியுள்ளது. நேருவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய மைக்கேல் பிரோஷெரால், அம்பேத்கர் புதிய அரசமைப்புச் சட்டத்திற்கான பிரச்சாரத்தின் தலைமைச் சிற்பியாகவும், இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால் களத் தளபதியாகவும் வர்ணிக்கப்பட்டார்.
சமூக நீதிக்காக தலித்துகள், பவுத்தத்திற்கு மாறுவதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். 3.10.1954 அன்று அகில இந்திய வானொலியில் அம்பேத்கர் பின்வருமாறு அறிவித்தார்: ‘‘என்னுடைய சமூக தத்துவத்தை மூன்று வார்த்தைகளில் அடக்கிவிடலாம்: சுதந்திரம், சமத்துவம், சகோ தரத்துவம். அதனால் நான் பிரெஞ்சு புரட்சியிலிருந்து எனது தத்துவத்தை கடன் வாங்கியதாக யாரும் சொல்ல வேண்டாம். எனது தத்துவத்தின் வேர்கள் மதத்தில் இருக்கின்றதே அன்றி அரசியலில் அல்ல. நான் அவற்றை எனது ஆசான் புத்தரின் போதனைகளிலிருந்தே புரிந்து கொண்டேன். எனது தத்துவத்திற்கு ஒரு நோக்கம் உள்ளது. நான் (பவுத்தத்திற்கு) மத மாற்றப் பணிகளை செய்ய வேண்டும்.''
14.10.1956 அன்று நாக்பூரில் நடைபெற்ற ஒரு விழாவில் 2,50,000 மக்களுடன் அவர் பவுத்தத்தை தழுவிக் கொண்டார். பவுத்தத்திற்கு தீக்ஷை எடுத்த பிறகு அந்த மாபெரும் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தனது உரையில் மதமாற்றத்தின் கதையையும், அது தன்னிடம் ஏற்படுத்திய தாக்கத்தையும் பின்வருமாறு விளக்கினார் : ‘‘இந்து மதத்தைக் கைவிடும் இயக்கத்தை நான் 1935 ஆம் ஆண்டு நாசிக்கில் தொடங்கினேன். அன்று முதல் நான் அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். 1935 ஆம் ஆண்டு இயோலாவில் ஒரு மாபெரும் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில்தான் ஒரு தீர்மானம் மூலம் இந்து மதத்தைக் கைவிடும் முடிவு எடுக்கப்பட்டது. நான் இந்துவாகப் பிறந்திருந்தாலும், ஓர் இந்துவாக இறக்க மாட்டேன் என்று கூறினேன். இந்த மதமாற்றம் எனக்கு மிகுந்த நிறைவையும், கற்பனைக்கெட்டாத மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. நான் நரகத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டது போல் உணர்கிறேன்.''
அதே உரையில், அவர் ஏன் பவுத்தத்தைத் தழுவ தேர்ந்தெடுத்தார் என்பதைப் பின்வரும் வரிகளில் கூறுகிறார் : ‘‘உண்மையில் இது (பவுத்தம்) புதியதோ, வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதோ அன்று. பவுத்தமே இந்த நாட்டின் மதம். அது ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது. நான் இந்த மதத்தை முன்பே தழுவவில்லை என்பதற்காக வேதனைப்படுகிறேன். புத்தரின் போதனைகள் அழிவில்லாதவை. ஆனாலும் புத்தர் அவற்றை எந்த வித குறைகளுமற்றவை என்று அறிவிக்கவில்லை. புத்தரின் மதம் காலத்திற்கு ஏற்ற வகையில் மாறும் தன்மை உடையது. இது வேறு எந்த மதத்திலும் இல்லாத ஒரு தன்மையாகும்.''
அவர் அரசமைப்புச் சட்டத்தின் 15 மற்றும் 16ஆவது பிரிவுகளில் மிக ஆழமாக செதுக்கிய இடஒதுக்கீட்டின் பலன்கள், வேறு மதத்திற்கு மாறுவதால் மறுக்கப்படலாம் என்பதை உணர்ந்து, தனது மாபெரும் மதமாற்ற உரையில் பின்வருமாறு எழுதினார் : ‘‘வாழ்வியல் பலன்களைவிட சுயமரியாதையே முக்கியமானது. நமது போராட்டம் மாண்பிற்கும், சுயமரியாதைக்குமானது. வெறும் பொருளாதார வளர்ச்சிக்கானது மட்டும் அல்ல.''
இந்த அழைப்பினால், அரசமைப்புச் சட்டம் தங்களுக்கு வழங்கியுள்ள இடஒதுக்கீட்டு உரிமை மறுக்கப்படும் நினைப்பேயின்றி, ஆயிரக்கணக்கானவர்கள் பவுத்தத்தைத் தழுவினர். உண்மையில், மதமாற்றத்தின் தேவையை விளக்கும்போது, தலித்துகளின் பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகள் மதமாற்றத்தினால் பாதிக்கப்படாது என அம்பேத்கர் வாதாடினார். மேலும், இந்த உரிமைகளைவிட சமூக பலமே தேவை என, அவர் தீண்டத்தகாதவர்களுக்கும், தலித்துகளுக்கும் விடுத்த அழைப்பில் பின்வருமாறு கூறினார் : ‘‘நீங்கள் மனிதர்களாக மதிக்கப்பட, மதம் மாறுங்கள்; ஒன்று சேர மதம் மாறுங்கள்; பலம் பொருந்தியவர்களாக மாற மதம் மாறுங்கள்; சமத்துவம் பெற மதம் மாறுங்கள்; விடுதலை பெற மதம் மாறுங்கள்; உங்களுடைய அன்றாட வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்க மதம் மாறுங்கள்.''
ஆனாலும், பவுத்தத்திற்கு மாறும் சிக்கல், மதம் மாறிய பவுத்தர்களுக்கு இடஒதுக்கீட்டின் பலன்கள் கிடைக்குமாறு அவர்களின் நலன்களைக் காக்கும் வகையில் அரசை விழிப்புறச் செய்யவில்லை. பல தளங்களில் நடந்த தொடர் பிரச்சாரங்களுக்குப் பிறகு, அரசு இந்தச் சிக்கலில் தனது நிலையை மாற்றிக் கொள்வது சரியென நினைத்தது. இதற்கான யோசனை, அம்பேத்கரின் பிறந்த நாள் நூற்றாண்டான 1990 ஆம் ஆண்டு ஏற்பட்டது. மத்திய அரசு நாட்டின் உயரிய விருதான ‘பாரத் ரத்னா'வை இறப்பிற்குப் பின்னான விருதாக டாக்டர் அம்பேத்கருக்கு வழங்கியது. அதோடு நாடாளுமன்றத்தில் அவரது உருவப்படத்தையும் திறந்து வைத்தது. இது போன்று விழாக்களைக் கடந்து, அம்பேத்கருக்கு உண்மையான இரங்கலைச் செலுத்தும் வகையில், பவுத்தத்திற்கு மாறிய தலித்துகளுக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதியைத் துடைத்தெறியும் வகையில், அதே பிறந்த நாள் நூற்றாண்டில், அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய நினைத்தது. இந்த வகையிலேயே மேலே குறிப்பிடப்பட்ட அந்த அரசமைப்புச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.
மாநில அரசும், அரசமைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும், கடந்த 16 ஆண்டுகளாக இந்த விசயத்தில் உறங்கிக் கிடந்தது. இதனை எதிர்த்து ஒரு மனு தாக்கல் செய்யப்பட்ட பிறகே விழித்துக் கொள்வதும், தற்பொழுது இதனை நடைமுறைப்படுத்த நீதிமன்ற ஆணையைக் கோருவதும் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்காக வாதாடும் வழக்கறிஞர் கோரியிருப்பதைப் போன்ற ஒரு நீதிமன்ற ஆணை தேவையற்றது மட்டுமல்ல, அவர்களின் இந்தக் கோரிக்கை அவர்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்திலிருந்து அவர்கள் நழுவுவதாகவே ஆகும். தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்காக வாதாடிய வழக்கறிஞரின் வேண்டுகோளை நிராகரிப்பதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
மாறாக, ஒரே எதிர் மனுதாரரான தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு நாங்கள் கீழ்க்காணும் ஆணையை வழங்குகிறோம். அவர்களது வழிகாட்டும் நெறிமுறைகளின் பத்தி 11 இல் இணைக்கப்பட்டுள்ள கீழ்க்காணும் வரிகளை நீக்க வேண்டும்.
‘‘பட்டியல் சாதியை சேர்ந்த ஒருவர் பவுத்தத்திற்கு மாறி இருந்தால், இந்து ஆதிதிராவிடர் சாதிக்கு வழங்கப்படும் சலுகைகள் பெறும் தகுதி அவர்களுக்கு கிடையாது.'' மேலும், இந்தத் தவறை சரி செய்தமை குறித்து தமிழ் நாட்டில் அதிகமாக விற்பனையாகும் முன்னணி ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்களில் பொருத்தமான விளம்பரம் அளிக்க வேண்டும்.
தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் யோசனையற்ற செயல்பாட்டால், கடந்த 16 ஆண்டுகளாக நடந்த அநீதியை எங்களால் துடைக்க இயலாத நிலைமை வேதனையானது. இருப்பினும், எதிர்மனுதாரர் தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், உடனடியாக இதே பணிகளுக்கு இன்றிலிருந்து பத்து நாட்களுக்குள், நாளிதழ்களில் சரியான விளம்பரங்கள் மூலம் விண்ணப்பங்களைப் பெற வேண்டுமென தெளிவாக அறிவுறுத்துகிறோம்.
தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்காக வாதாடிய வழக்கறிஞர், முந்தைய விளம்பரத்தின்படி தேர்வுகள் 7.1.2007 அன்று காலை நடப்பதாக முன்பே முடிவாகி விட்டதாகவும், அதற்கான அத்தனை ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டதாகவும், அதனால் நீதிமன்றம் தேர்வு நாட்களில் மாற்றம் செய்ய வேண்டாம் எனக் கோருவதால், அதில் இருக்கும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அவர்கள் முடிவு செய்த தேர்வு நாளில் நாம் எந்த மாற்றமும் செய்யவில்லை.
இந்தப் புதிய விளம்பரத்தின் அடிப்படையில் வரும் விண்ணப்பங்களையும் பரிசீலித்து, அந்த விண்ணப்பதாரர்களுக்குத் தேவையான நுழைவுச் சீட்டுகளை அவர்கள் வழங்க வேண்டும். மேலும், பழைய விளம்பரத்தின்படி விண்ணப்பித்த பவுத்தத்திற்கு மாறிய பட்டியல் சாதி விண்ணப்பதாரர்கள், இடஒதுக்கீட்டின் கீழ் பரிசீலிக்கப்பட வேண்டுமே அன்றி, அவர்களின் யோசனையற்ற பழைய வழிகாட்டு நெறிமுறைகளின்படி அல்ல.
தமிழாக்கம் : பூங்குழலி