இந்தியாவிலேயே தருமபுரி வழக்கில்தான் சட்ட ரீதியாக இவ்வளவு இழப்பீட்டுத் தொகை முதன் முறையாகப் பெறப்பட்டுள்ளது! இதற்காக தாங்கள் முன்னெடுத்த நடவடிக்கைகளைப் பற்றி சொல்லுங்கள்.

தருமபுரி வழக்கில் முதன்முறையாக இவ்வளவு பெரிய தொகை வழங்கப்பட்டு இருக்கலாம். ஆனால், சட்ட நடவடிக்கைகள் என்பது பரமக்குடி துப்பாக்கிச் சூட்டின் போதே எடுக்கப்பட்டிருக்கிறது. வழக்குரைஞர் ரத்தினம் அவர்களும் நாங்களும் சேர்ந்து உண்மை அறியும் குழுவாகச் சென்று எங்கள் அறிக்கையை அரசுக்கு அளித்தோம். அந்த அறிக்கையில் பரமக்குடி துப்பாக்கிச் சூடு எவ்வாறு திட்டமிட்டபடி நடத்தப்பட்டது என்பதைத் தெளிவாக விளக்கியிருந்தோம்; தேவர் ஜெயந்தியைப் போல இம்மானுவேல் சேகரன் பிறந்தநாள் பெரிய அளவில் கொண்டாடப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம் என்பதை விளக்கித் தெளிவாகக் கூறினோம்.

அதன் தொடர்ச்சியாகத்தான் சம்பத் கமிஷன் போடப்பட்டது. ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்ட சூழ்நிலையில் அதை மாற்றி ஒருவருக்கு

5 லட்சம் ரூபாய் என்ற அளவில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. அதேபோலத் தான் இவ்வழக்கும். தருமபுரி வன்கொடுமை 7.11.2012 அன்று நடைபெறுகிறது. 8.11.2012 அன்று அது சிறு செய்தியாக வெளிவந்தது. 9.11.2012 அன்று "இந்து' ஆங்கில நாளிதழ் விரிவான செய்தியை வெளியிட்டது. பாதிக்கப்பட்டவர்கள் தலித்துகள் என்பதையும், அதை நிகழ்த்தியவர்கள் சாதி இந்துக்கள் என்பதையும் தெளிவாகப் பதிவாக்கியது.

இந்தத் தருணத்தில்தான் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, பள்ளிக் குழந்தை ஒன்று பேருந்தின் ஓட்டை வழியாக விழுந்து இறந்து போனதை, செய்தியை அடிப்படையாகக் கொண்டே வழக்காக

எடுத்துக் கொண்டார். தருமபுரி நிகழ்வையும் அதைப் போன்ற வழக்காக மாற்ற வேண்டும் என்று வழக்குரைஞர் ரத்தினம் மனு கொடுக்கலாம் என்று ஆலோசனை சொல்ல, வழக்குரைஞர் செங்கொடியின் பெயரில் நாங்கள் மனு கொடுக்க, அதை வழக்காகவே கொடுக்கலாம் என அப்போதைய நீதிபதி இக்பால் அவர்கள் அறிவுறுத்தினார். பிறகு அது வழக்காக மாற்றப்பட்டது.

சிறப்புத் திருமணச்சட்டம் 1954 இன் படி, சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கான பாதுகாப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதா?

சாதி, மதம் என்று எல்லாவற்றையும் கடந்து ஆண், பெண் என்று இருந்தாலே போதும். அச்சட்டம் திருமணத்தை உறுதிப்படுத்துகிறது. அது மட்டுமல்ல; அப்படி திருமணம் செய்து கொள்கிறவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் தெளிவாக இருக்கின்றன. எனவே, சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்பவர்கள் தங்களைப் பாதுகாப்பாக உணரலாம்.

தருமபுரி நிகழ்வில் காவல் துறையின் நடவடிக்கைகள் எப்படி இருந்தன?

அவர்கள் வழக்கமான நடவடிக்கைகளை எடுத்து இருந்தனர். 307, 433 ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாங்கள் கூடுதலாக அழுத்தம் தந்தோம். ஏனென்றால் தருமபுரியில் நடந்தது போன்ற தாக்குதல் அண்மைக் காலத்தில் எங்கும் நடக்காதது; மிகவும் மோசமானது.

 என்னென்ன மாதிரியான இழப்பீடுகளைக் கேட்டிருக்கிறீர்கள்?

தருமபுரி வன்கொடுமையால் ஏற்பட்ட இழப்புகள் எல்லாவற்றையும் நீதிபதி இக்பால் செய்தித்தாளில் ஏற்கனவே படித்திருந்ததால் அவருக்கு எங்கள் மனுவின் கரு என்னவென்று புரிந்து கொள்வது மிகவும் எளிதாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989இன்படி அனைத்து வகையான மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். மருத்துவ வசதிகள், பாதுகாப்பாக தங்குவதற்கான ஏற்பாடுகள், உணவு, உடை என அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என்பன போன்றவை.

இவையெல்லாம் அவர்களுக்குத் தரப்பட்டன. சிறப்பு முகாம்களை நடத்தி அவர்களுக்குத் தேவையான சான்றிதழ்கள், பட்டா போன்றவை வழங்கப்பட்டன.

இதற்கிடையில் நீதிபதி இக்பால் அவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றுச் சென்றுவிட்டதால் வழக்கு நீதிபதி தர்மாராவ் அவர்களிடம் வந்தது. மக்களுக்குத் தரப்படவேண்டிய இழப்பீடு, இடிக்கப்பட்ட, கொளுத்தப்பட்ட வீடுகளை சீர்படுத்த பணம் தரப்பட வேண்டும். அரசு மதிப்பீட்டின்படி 7.32 கோடி ரூபாய் தரப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மாவட்ட நிர்வாகமே பணம் தரும் பொறுப்பை எடுத்துக் கொண்டது. அதற்குப் பிறகு பணம் தரப்படாமல் விடுபட்டவர்களுக்கான விவாதம் வரும்போது 6.09 கோடி ரூபாய் தான் தரப்பட்டது எனத் தெரியவர, அதற்காக ஒரு மனு போட்டோம். இப்போது வழக்கு நீதிபதிகள் பானுமதி, ரவிச்சந்திரன் ஆகியோரிடம் வர பணம் முழுமையாகத் தரப்படவேண்டும் என்றும் அதற்கு விதி எண் 13இன் படி ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் ஆணை வழங்கப்பட்டது. அதன்படி, 2 அய்.ஏ.எஸ்., 3 டி.ஆர்.ஓ. மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் உள்ள பிற பயனுள்ள பிரிவுகளைப் பற்றி சொல்லுங்கள்?

தோண்டத் தோண்ட நிறைய செய்திகள் இச்சட்டத்தில் இருக்கின்றன. தலித் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு நிர்வாகத்திற்கு இருக்கிறது. ஏற்கனவே தலித் மக்கள்மீது தாக்குதல் நடந்த பகுதியாக இருந்தால் இனிமேல் நடக்காமல் இருப்பதற்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். தாக்குதல் நடக்கலாம் என்னும் சூழ்நிலை உள்ள பகுதிகளைக் கண்டறிந்து, அப்பகுதிகளுக்கு காவல்துறையினர் பாதுகாப்பைத்தர வேண்டும். நத்தம் பகுதி தாக்குதல் நிகழக் கூடிய பகுதியாக காவல்துறைக்கும் நிர்வாகத்திற்கும் தெரிந்திருந்தும் காவல்துறையினரின் மெத்தனப் போக்குதான் இந்தத் தாக்குதலுக்குக் காரணம். இந்தச் சட்டத்தின்படி தலித்துகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஆயுதம் வழங்கப்பட வேண்டும்.

விதி 16இன் படி, வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தினை முன்வைத்து மாநில அளவிலான ஒரு கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும். அதற்கு மாநில முதல்வர் தலைவராகவும் சட்டமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்களாகவும் இருப்பர். அக்குழு ஒவ்வொரு ஆண்டும் சனவரி மற்றும் சூலை மாதங்களில் கூடி எத்தகைய முறைகளில் இச்சட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது; வன்கொடுமைகளுக்கு எதிராக என்ன விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன; எவ்வளவு நிவாரணங்கள் வழங்கப்பட்டன என்றெல்லாம் ஆய்வுகளை நடத்த வேண்டும். தமிழ்நாட்டைப் பொருத்தவரை, கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு அப்போதைய துணை முதல்வர் தலைமையில் 2008 இல் ஒருமுறை கூட்டம் நடத்தப்பட்டது. அதன்பிறகு மீண்டும் வழக்கு நடத்தப்பட்டது. பிறகு ஆட்சி மாறி, இவர்கள் வந்தவுடன் புதிய ஆட்சி பொறுப்பேற்று குழு அமைக்கிறோம் என்றார்கள். இன்னும் கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை. அதற்காக தற்போது ஒரு மனுவை தயாரித்திருக்கிறேன். தருமபுரி கலவரம், மரக்காணம் கலவரம், பாட்டாளி மக்கள் கட்சியின் தாக்குதல் போன்றவற்றிற்கு சரியாக எதிர்வினையாற்றியிருக்கும் அரசு, இந்தக் குழுவையும் அமைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்கிறோம்.

இப்படி தாக்குதல் நடைபெறும் போதெல்லாம் சட்ட நடவடிக்கைகளால்தான் தலித்துகள் மீள்வாழ்வைப் பெறமுடியுமென்றால், நல அரசு (welfare state) என்னும் ஓர் அரசு அமைப்பு இருப்பதன் பொருள் என்ன?

தலித் மக்கள் இங்கே முழுவதும் அரசியல்மயப்படுத்தப்படவில்லை. அவர்களை ஓரணியில் திரட்டும் அமைப்புகள் குறைவாகவே இருக்கின்றன. அவையும் அரசியல் மய்ய நீரோட்டத்தில் ஏதாவது ஒர் அணியைச் சார்ந்தவையாகவே இருக்க வேண்டியுள்ளது. அரசியல் அதிகாரம் இல்லாததினால்தான் சட்டத்தை நாடவேண்டியுள்ளது. அம்பேத்கரின் போராட்டங்களையே பார்த்தால்கூட சட்டத்தை நடைமுறைப் படுத்தச் சொல்லிதான் போராடி இருக்கிறார். அது மகத் குளமானாலும் சரி, காலாராம் கோயில் நுழைவுப் போராட்டமானாலும் சரி, இருக்கும் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் அவர் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்.

அரசமைப்புச் சட்டத்தில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்களை நடைமுறைப்படுத்த நாம் போராடிக் கொண்டிருக்கும் சூழலில், ராமதாஸ் போன்றவர்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கோருகிறார்களே?

முதலில் ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இச்சட்டத்தில் அவர்களால் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் சாதி உணர்வைத் தூண்டுவதற்காக இப்படிப் பேசுகிறார்கள். 1955 ஆம் ஆண்டு பி.சி.ஆர். சட்டம் பொதுவெளிகளில் தலித்துகளுக்கு உள்ள உரிமை மறுத்தலை தடுத்து நிறுத்தவும் அவர்களுக்கான உரிமைகளை நிலைநாட்டவும் கொண்டு வரப்பட்டது. அச்சட்டத்திற்கு இப்போது அவசியமே இல்லை. உணவகங்களில் எல்லோரும் சாப்பிடுகிறோம். பேருந்து, தொடர் வண்டி, திரையரங்குகள், "மால்'கள் என எல்லா இடங்களிலும் எவரும் தலித்துகளை இப்போது தடை செய்ய முடியாது.

ஆனால், 1989 வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தனி மனித வாழ்வுக்கான உரிமைகளைப் பற்றி பேசுகிறது. வன்கொடுமை நடக்காமல் தடுப்பது, வன்கொடுமை நடந்தால் சட்டத்தை நடைமுறைப் படுத்துவது, மீள் உருவாக்கம் செய்வது, மறுவாழ்வு என அச்சட்டம் தன்னளவிலேயே பல பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. இவற்றை வைத்துதான் நாம் பேசுகிறோம்; சட்ட நடவடிக்கைகளை எடுக்கிறோம். இச்சட்டம் சொல்லும் எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தருமபுரி தாக்குதல் சம்பவத்திற்கு வாங்கிய நீதிமன்ற ஆணைதான் அம்மக்களுக்கு சிறிது பயனையும் பெரிய அளவில் நம்பிக்கையையும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. அப்படியிருக்க அவர்கள் எதை மாற்றப்போகிறார்கள்? எந்தெந்த பிரிவுகளை மாற்ற வேண்டும் என்று கூட அவர்கள் இன்னும் சொல்லவில்லை. முதலில் சட்டத்தையே நீக்க வேண்டும் என்றவர்கள் பிறகு மாற்ற வேண்டும் என்று பின்வாங்கியுள்ளார்கள்.

தருமபுரி வழக்கை சி.பி.அய். க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை என்ன ஆனது?

தற்பொழுது சி.பி.சி.அய்.டி. விசாரணை நடத்துகிறது. இதுகூட மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட விசாரணை அமைப்புதான். அதில் நமக்கு நம்பிக்கை இல்லை. இன்னும் சொல்லப் போனால், சி.பி.சி.அய்.டி. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது என்று தடை ஆணை வேறு பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் தாக்குதலில் ஈடுபட்டார்கள்; கொள்ளையடித்தார்கள். ஆனால் அதில் நூற்றுக்கணக்கானவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து எவ்வளவு பொருட்கள் மீட்கப்பட்டன என்ற விவரம் இதுவரை இல்லை. எனவே, முறையான சி.பி.அய். விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை அப்படியேதான் இருக்கிறது. அது மிகவும் நியாயமான ஒன்றுதான்!

சந்திப்பு : யாழன் ஆதி

Pin It