People
வியன்னாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அய்க்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையில், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவிவரும் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தவும், உலக நாடுகளில் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் ‘அய்க்கிய நாடுகள் - ஜனநாயக நிதியம் என்ற அமைப்பை அய்.நா. உருவாக்க வேண்டும்' என்றும், அந்த அமைப்பை உருவாக்க, உலக நாடுகள் தாராளமாக நிதியுதவியும் ஆலோசனையும் வழங்க வேண்டும் என்றும் அந்தத் தீர்மானத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி உருவாக்கப்பட்ட ‘அய்க்கிய நாடுகள் - ஜனநாயக நிதிய'த்தின் தொடக்க விழா, கடந்த செப்டம்பர் 15 அன்று, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், இந்திய ஜனநாயகத்தை வானளாவப் புகழ்ந்தார். "எங்கள் ஜனநாயகம் வயது வந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்குரிமை அளித்து, அவர்களை மதிப்பிற்குரியவர்களாக்குகிறது. தனித்துவமான நீதித்துறையும், சுதந்திரமான ஊடகங்களும், தன்னதிகாரம் கொண்ட தேர்தல் முறையும், வலுவான அரசியல் சட்டம், எங்கள் ஜனநாயகத்திடம் இருக்கின்றன. ஜனநாயக நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக வளமான அனுபவம் நிறுவனக் கட்டமைப்புகளும் கொண்டுள்ள நாங்கள், எப்போது வேண்டுமானாலும் உலக நாடுகளுக்குப் பயிற்சி அளிக்கத் தயாராக இருக்கிறோம்'' என்று பெருமை பொங்க பேசிய பிரதமர், கையோடு அய்க்கிய நாடுகள் ஜனநாயக நிதியத்திற்கு, 45 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாகவும் உறுதியளித்துவிட்டு நாடு திரும்பினார்.

அதே அய்க்கிய நாடுகள் அவையில் ஓராண்டிற்கு முன்பு பேசிய வாஜ்பாய், ‘உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடாகத் திகழும் இந்தியாவிற்கு அய்.நா. அவையில் நிரந்தர இடம் கொடுக்கப்பட வேண்டும். அது, உலக நாடுகள் இந்திய ஜனநாயகத்திற்குச் செய்யும் மரியாதையாகும்' என்றார். குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்யும்போது, தான் செல்லுமிடமெல்லாம், "ஜனநாயகத்திற்கு இந்தியாதான் வழிகாட்டி' என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.

இது போன்ற நடவடிக்கைகளின் மூலம் உலக அரங்கில் இந்தியாவை ‘ஜனநாயக தாதா'வாகச் சித்தரிக்க இந்திய ஆட்சியாளர்கள் முயன்று வருகிறார்கள். அதன் மூலம் இந்தியா உலகின் அதிகாரப்பூர்வ வல்லரசாக மாற வேண்டும். அய்.நா. அவையில் ‘தடுத்து நிறுத்தும்' அதிகாரத்துடன் கூடிய நிரந்தர இடம் வேண்டும் என்பது தான் அவர்களின் ஆசை. அந்த இடம் கிடைக்குமேயானால், தெற்காசியப் பகுதிகளில் ஏகோபித்த, எதேச்சதிகார சக்தியாக விளங்க முடியும். அதே நேரத்தில் ஆசியா முழுவதிலும் மெல்ல மெல்ல வலுவாகக் காலூன்றி வரும் அமெரிக்காவுடன் ஆதிக்கப் பேரம் பேச முடியும் என்று ஆட்சியாளர்கள் எண்ணுகிறார்கள். அதற்காகத்தான் 40 கோடி இந்தியர்கள் படிப்பறிவற்றவர்களாய் இருந்தாலும்கூட, 26 கோடி இந்தியர்கள் ஒரு வேளை உணவுடன் காலம் கழித்தாலும்கூட, வெட்கமில்லாமல் தங்களை ‘வல்லரசு' என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறார்கள்.

இந்திய ஆட்சியாளர்கள் உலக நாடுகளிடம் சொல்லிக் கொண்டிருப்பதைப் போல், இந்திய ஜனநாயகம் உலகத்திற்கே வழிகாட்டக் கூடியதாக இருக்கிறதா? உண்மையில் அது முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் அழிவை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. இந்திய ஆட்சியாளர்களும் பகட்டுவாத மேல்தட்டு ஊடகங்களும் அதை மூடிமறைக்க முயல்கின்றன. ஆனாலும், நிலைமை இந்திய ஆட்சியாளர்களின் கை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெற்ற இந்தியாவின் அனைத்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் பேசிய இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். அந்த அச்சுறுத்தலை உருவாக்கியிருப்பவர்கள் வேறு எந்த வெளிநாட்டு சக்தியுமல்ல; வெளிநாட்டு உதவியுடன் இயங்கும் சக்திகளும் அல்ல.

உணவு, குடிநீர், இருப்பிடம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக, கடந்த அய்ம்பதாண்டுகளுக்கும் மேலாக ஊழல் மலிந்த இந்திய ஆட்சியாளர்களிடம், குரூரமான அதிகார வர்க்கத்திடம் கெஞ்சிக் கொண்டிருந்த உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களே, இந்திய ஆட்சியாளர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறார்கள். வங்கம் தொடங்கி தமிழகம் வரை 12 மாநிலங்களில் 112 மாவட்டங்களில் நக்சல் போராளிகள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆந்திராவில் மட்டும் 8 மாவட்டங்கள் நக்சல் போராளிகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளன என்பதை, நாட்டின் பிரதமரே பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். ‘நக்சல்களை' ஒடுக்க, அனைத்து மாநில காவல் துறையினரையும் ஒருங்கிணைத்து, துணைநிலை ராணுவத்திற்கு இணையான ராணுவ அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

Ambedkar giving constitutional law to Rajendra prasad in fron of Nehru, Patel,  Rajaji
புதிதாக ஒரு ராணுவ அமைப்பையே உருவாக்க வேண்டிய அளவிற்கு நக்சல் போராளிகள், ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியைத் தந்து கொண்டிருக்கிறார்கள். மக்களாட்சி என்ற பெயரில் நடந்து கொண்டிருக்கும் ஊழலும் சீர்கேடுகளும் மலிந்துவிட்ட ஆட்சி நிர்வாகத்தை எதிர்த்து நக்சல்கள் ஆயுதமேந்திப் போராடுகிறார்கள். மக்களை ஏமாளிகளாக எண்ணி, ஆணவத்துடன் நடந்து கொள்ளும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் குவிந்து கிடக்கும் இந்தியாவில், இனி மக்கள் தங்கள் உரிமைகளைக் காத்துக் கொள்ள வேறுவழிகளைத் தேட வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

கடந்த அய்ம்பதாண்டு காலமாக விடியலைக் கொண்டு வரும் என்று ஏழை எளிய பாமர மக்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்திய ஜனநாயகம், அரசமைப்புச் சட்டம் மக்களுக்குக் கொடுத்த அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தர தவறிவிட்டது. சாதிய ஒடுக்குமுறைகளிலும் தீண்டாமைக் கொடுமையிலும் வறுமையிலும் அறியாமையிலும் தவித்துக் கொண்டிருக்கும் இருபது கோடி தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களை தீண்டாமையிலிருந்தும் இந்திய ஜனநாயகத்தால் இப்போது வரை விடுவிக்க முடியவில்லை. நாடு முழுவதிலும் இரண்டு கோடிகளுக்கும் மேலாக சிறார்கள் கல்வியை இழந்து, எதிர்காலத்தை இழந்து கொத்தடிமைகளாகவும் கூலிகளாகவும் அழிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை மீட்க இந்த ஜனநாயகத்தால் முடியுமா? இந்திய ஜனநாயகம் வெட்கித் தலைகுனிய வேண்டும். நாடு முழுவதிலும் 10 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மக்கள், மனிதக் கழிவை கையால் அள்ளி முகத்தில் வழிய தலையில் சுமந்து கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட மக்களாட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்திய ஆட்சியாளர்கள்தான் உலகத்திற்கு ஜனநாயகம் பற்றி வகுப்பெடுக்கப் போவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.

நாட்டின் விவசாயம் ஆட்சியாளர்களின் அக்கறையின்மையால் பாழடைந்து கொண்டிருக்கிறது. பன்னாட்டு விவசாய நச்சுக்கள் இந்திய வேளாண்மையின் தனித்தன்மையை அழித்துவிட்டிருப்பதால், 45 கோடி விவசாயக் கூலிகள் பட்டினி கிடக்கிறார்கள். பாதுகாப்பும் உத்திரவாதம் இல்லாத முறைசாராத தொழில்களை நம்பி வாழும் 70 கோடி இந்தியர்களின் உழைப்பு, ஆதிக்கச் சாதி ஆண்டைகளாலும், கள்ள முதலாளிகளாலும் சுரண்டப்பட்டு வருகிறது. உலகமயமாக்கலினாலும், தனியார்மய, தாராளமயமாக்கலினாலும் இந்தியப் பொருளாதார இறையாண்மை பன்னாட்டுப் பெரு முதலாளியத்தால் சூறையாடப்பட்டு வருகிறது. கட்டுப்பாடற்ற, கண்காணிப்பற்ற சந்தையாகவும், உலகப் பெரு முதலாளியத்தின் மலிவு விலை மனிதக் கிடங்காகவும் வேகமாக நாடு மாறிவருகிறது. ஒரு பக்கம் படுபாதகமான வறுமைக் குழிக்குள் 75 கோடி இந்திய மக்கள் புதைந்து கொண்டிருக்கிறார்கள்; மறுபக்கம் திகைப்பூட்டும் அளவிற்கு செல்வவளம் குவிந்து கொண்டிருக்கிறது. நாட்டின் பெரும்பான்மைக்கும் அதிகமான மக்களின் வாழ்க்கையை, தனிமனித உரிமைகளை, கடந்த அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாகக் காத்து, வளப்படுத்தத் தவறிய இந்திய ஜனநாயக ஆட்சிமுறை, வேறு யாருக்காக இயங்கிக் கொண்டிருக்கிறது? இனி மேலும் இந்த ஜனநாயகத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது?

இந்த அவல வாழ்க்கையை வாழத்தானா இத்தனை காலம் வாக்குச் சீட்டை சுமந்து கொண்டு, நீண்ட நெடிய வரிசையில் கால்கடுக்க நின்று வாக்களித்தார்கள் 70 கோடி ஏழை இந்தியர்கள்? வயதுக்கு வந்த ஒவ்வொரு குடிமக்களையும் வாக்குரிமை கொடுத்து மதிப்பிற்குரியவர்களாக்குகிறோம் என்கிறார்களே! அந்த "மதிப்பு' என்ன? அந்த மதிப்பு தந்த வாழ்க்கைதான் என்ன? வாக்குச் சீட்டு இல்லாத இந்தியர்களுக்கு இந்திய ஜனநாயகம் என்ன மதிப்புத் தரும்? வாக்குச் சீட்டுகள்தான் மதிப்பிற்குரியவைகளா? அல்லது வாக்களிக்கும் மக்கள் மதிப்பிற்குரியவர்களா? இந்திய ஜனநாயகம் என்ன பதில் சொல்கிறது? சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் நாட்டில் சமச்சீர்மை நிலவும் என்று தனது முகப்புரையில் குறிப்பிடும் இந்திய அரசமைப்புச் சட்டம் என்ன பதில் சொல்கிறது? சட்டத்தை உருவாக்கியவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள்?

1947 ஆகஸ்ட் 29 இல் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்ட வரைவுக்குழு, 18 மாதங்கள் சுமார் அறுபது நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களை ஆய்ந்தறிந்து, 1948 பிப்ரவரி 21 இல் வரைவு அரசமைப்புச் சட்டத்தை அரசியல் நிர்ணய சபையிடம் அளித்தது. ஏராளமான விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் எதிர்கொண்டது முதல் வரைவு. அவற்றைப் பரிசீலித்து பரிந்துரைகளை வரைவுக் குழுவிடம் அளிக்க வேண்டும் என்று சிறப்புக்குழு ஒன்றை அரசியல் நிர்ணய சபை உருவாக்கியது. சிறப்புக்குழு அளித்த பரிந்துரையில் சிலவற்றை சேர்த்துக் கொண்டு மீண்டும் 1948 அக்டோபர் 26 அன்று இரண்டாவது வாசிப்பிற்காக அரசமைப்புச் சட்டம் அரசியல் நிர்ணய சபையின் முன் வைக்கப்பட்டது.

1948 நவம்பர் 4 இல் அதை அறிமுகப்படுத்திப் பேசிய அரசமைப்புச் சட்ட வரைவுக்குழு தலைவர் டாக்டர் அம்பேத்கர், "மற்ற நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களை அப்படியே கண்மூடித்தனமாகப் பின்பற்றி இந்திய அரசமைப்பு ஆவணம் எழுதப்படவில்லை. நாட்டின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டே அரசமைப்பு ஆவணம் மிக நீளமாக உருவாக்கப்பட்டது'' என்றார். இதன் மூலம் நாட்டில் நிலவிய அனைத்து வகை ஏற்றத் தாழ்வுகளுக்கும் அரசமைப்புச் சட்டம் தீர்வைத் தர வேண்டும் என்பது, அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் நோக்கமாக இருந்ததை நாம் உணர முடியும்.

Human face
1948 நவம்பரிலிருந்து, 1949 அக்டோபர் வரை அரசமைப்புச் சட்ட வரைவின் ஒவ்வொரு பிரிவையும் தனித் தனியாக அலசி ஆராயும் பணி மேற்கொள்ளப்பட்டது. இரண்டாவது வாசிப்பு நவம்பர் 16 ஆம் நாள் முடிவடைந்தது. மறுநாள் அரசியல் நிர்ணய சபையால் இறுதியாக்கப்பட்ட அரசமைப்புச் சட்ட வரைவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார் டாக்டர் அம்பேத்கர். அத்தீர்மானத்தின் அடிப்படையில், மூன்றாவது வாசிப்பு மேற்கொள்ளப்பட்டது. 1949 நவம்பர் 26 ஆம் நாள், அம்பேத்கர் கொண்டு வந்த தீர்மானம் அரசியல் நிர்ணய சபையால் நிறைவேற்றப்பட்டு, வரைவு அரசமைப்புச் சட்டம் முழுமையாக ‘இந்திய இறையாண்மை மக்களாட்சிக் குடியரசின்' அரசமைப்புச் சட்டமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மக்களாட்சி, சமூக நீதி, மக்கள் ஒற்றுமை, நீதிப்புனராய்வு ஆகிய அரசமைப்பு மாண்புகளைக் கொண்டு, இந்திய மக்கள் தலைமுறை தலைமுறையாக சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம் போன்ற உயர்ந்த நெறிமுறைகளை உருவாக்கிப் பாதுகாத்து வரவேண்டும் என்பதே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை நோக்கம் என்கிறார் டாக்டர் அம்பேத்கர். விலைமதிப்பற்ற அவரது வார்த்தைகளே, இந்திய அரசமைப்பு ஆவணத்தின் முகப்புரையின் அடிநாதமாக விளங்குகிறது.

‘இந்திய மக்களாகிய நாம்' இந்தியாவை ஓர் ‘இறையாண்மை மக்களாட்சி குடியரசாக' உருவாக்கி, அதன் குடிமக்கள் அனைவருக்கும் சுதந்திரம் நீதியும் சமத்துவம் கிடைக்கச் செய்வதுடன் அவர்களிடையே சகோதரத்துவம் தழைக்க உறுதியான முடிவை மேற்கொள்கிறோம் என்று தொடங்குகிறது அரசமைப்புச் சட்ட முகப்புரை. ‘நீதி' என்பதை சமூக, பொருளாதார, அரசியல் நீதி என்றும், ‘சுதந்திரம்' என்பதை சிந்தனை, கருத்து வெளிப்பாடு, வழிபாடு ஆகியவற்றில் சுதந்திரம் என்றும் விளக்கியுள்ளது அரசமைப்புச் சட்ட முகப்புரை. சமத்துவம் என்றால், அனைத்து வாய்ப்புகளிலும் அந்தஸ்திலும் சமத்துவம் என்கிறது. ‘மக்களுக்கு உறுதியளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளையும் சுதந்திரத்தையும் கொண்ட ‘மக்களாட்சி' அமைப்பாக இந்திய அரசியல் திகழ வேண்டும் என்று மக்களுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது' என்று பிரகடனம் செய்துள்ளது அரசமைப்புச் சட்ட முகப்புரை. ஆனால், கடந்த அய்ம்பதாண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் நடைபெற்று வரும் ‘மக்களாட்சி' அரசமைப்பு, முகப்புரை பேசும் எவற்றையேனும் உறுதி செய்திருக்கிறதா?

சமூக நீதி, அரசியல், பொருளாதார சமத்துவம் என்றேனும் இந்திய நாட்டில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறதா? இனிமேலாவது சமத்துவத்தையும் சமூக நீதியையும் இந்திய ஜனநாயகம் உருவாக்குமா? அதற்கு ஏதேனும் வாய்ப்பிருக்கிறதா? நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை, இந்திய மக்களாட்சியாளர்கள் இழந்து நிற்கிறார்கள். பொதுத் துறைப் பொருளாதாரம் தனியார்களுக்குப் போய் சேர்ந்துவிட்ட நிலையில், இனி அரசு தன்னை இயக்கிக் கொள்ளவே தனியார்களிடம் கையேந்த வேண்டிய நிலை வரும் அல்லது ‘பறிப்பு' வேலையில் ஈடுபடும். இந்திய மக்களாட்சி நடைமுறையால், நாட்டில் சமூக, பொருளாதார, அரசியல் சமத்துவத்தை இனி உருவாக்க முடியாது என்பது உறுதியாகிறது.

தங்களுக்கு அரசமைப்புச் சட்டம் உறுதியளித்திருக்கின்ற உரிமைகளை மறுக்கிற அல்லது உருவாக்கித் தராத ‘மக்களாட்சியை' இன்னும் மக்கள் நம்பவேண்டுமா? குடியுமை மாண்புகளைப் பெற்றுத் தராத ‘மக்களாட்சி' அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக இயங்குகிறது. அதை அப்படி இயக்குபவர்கள் யார்? அரசியல்வாதிகளும் அதிகாரவர்க்கம்தான் எனில், அந்த அரசியல்வாதிகளை உருவாக்கும் மய்யங்கள் எவை? அந்த மய்யங்களே உலகின் மிகப் பெரும் இந்திய ஜனநாயகத்தை ‘மந்தை ஜனநாயக'மாக மாற்றி வைத்திருக்கிறது. இந்திய மக்களால் இனி ஒருபொழுதும் அழிக்க முடியாதவைகளாக மாறிவிட்டிருக்கும் அந்த மய்யங்கள் எவை? மந்தை ஜனநாயகம் என்பது என்ன?

- விரியும் இருள்
People
Pin It