“அரசியல் சார்ந்த நமது மக்களாட்சித் தன்மையை, சமூகத் தளத்திற்கும் மாற்றியாக வேண்டும். அரசியல் ஜனநாயகத்திற்கு அடித்தளமாக சமூக ஜனநாயகம் விளங்க வேண்டும். அப்போதுதான் அரசியல் ஜனநாயகம் நிலைத்து நிற்கும்.
சமூக ஜனநாயகம் என்பதன் பொருள் என்ன?
சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை அங்கீகரிக்கும் வாழ்வியல் நெறியே சமூக ஜனநாயகம். சுதந்திரம்-சமத்துவம்-சகோதரத்துவம் இவை மூன்றும் தனித் தனி அங்கமாகக் கருதப்படக் கூடாது. இவை மூன்றும் ஒன்றிணைந்து விளங்க வேண்டும். ஒன்றிருந்து மற்றொன்று இல்லையெனில், அது ஜனநாயகத் தன்மையின் நோக்கத்தையே அழித்து விடும்.
சுதந்திரத்தை சமத்துவத்திலிருந்து பிரிக்க முடியாது. சமத்துவத்தை சுதந்திரத்திலிருந்து பிரிக்க முடியாது. சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் - சகோதரத் துவத்திலிருந்து பிரிக்க முடியாது. சமத்துவமற்ற, சுதந்திரம் ஒரு சிலரின் ஆதிக்கத்திற்கே வழி வகுக்கும். சுதந்திரமற்ற சமத்துவம், தனி மனித முயற்சிகளைப் பாழடித்து விடும். சகோதரத்துவமற்ற சுதந்திரமும், சமத்துவமும் இயல்பான உறவை ஏற்படுத்தாது.
இந்திய சமுதாயத்தில் இரண்டு தன்மைகள் முழுவதுமாக இல்லை என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்
சமத்துவம், சமூகத் தளத்தில், இந்தியா படி நிலைப்படுத்தப்பட்ட - சமத்துவமற்ற சமுதாயமாகவே உள்ளது. இது ஒரு சிலரின் முன்னேற்றத்தையும், பலரின் வீழ்ச்சியையுமே வெளிப்படுத்துகின்றது. பொருளாதாரத் தளத்தில், ஒரு சிலர் மட்டுமே பெரும் செல்வத்துடன் வாழ்கின்றனர்; பலர் கடும் வறுமையால் வாழும் முரண்பாடு உள்ளது.”
(25.11.49 அன்று அரசியல் நிர்ணய அவையின் இறுதிக் கூட்டத்தில் ஆற்றிய பேருரை)