கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

human chain against caa

• ரேஷன் கார்டு, ஓட்டுப் போட அட்டை - ஆதார், கார் ஓட்ட உரிமம் - இதுதான் நமக்குத் தெரிந்த நம்மிடம் உள்ள அடையாள அட்டைகள். ஆனால், டில்லியில் மோடி ஆட்சிக்கு இந்த அடையாள அட்டைகள் போதாதாம்; புதுப்புது அடையாளங்களைக் கேட்கிறது.

• அது என்ன அடையாளம் தெரியுமா? நாம் இந்த நாட்டின் குடிமக்களாக - அதாவது இந்தியாவைச் சார்ந்தவர்கள்தான் என்பதை நாமே நிரூபிக்க வேண்டுமாம்; அப்போதுதான் இந்த நாட்டில் இருக்க முடியுமாம்; இல்லாவிட்டால் நாம் நாடற்ற அனாதைகளாம்!

• நாம் - இந்த நாட்டின் குடிமக்கள் என்பதை நிரூபிக்க புதிய கணக்கெடுப்பு நடத்தப் போகிறார்கள். இது எப்போதும் எடுக்கப்படும் ‘சென்சஸ்’ - அதாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அல்ல. அதில் நாம் சொல்வதைக் கேட்டு எழுதிக் கொண்டு போய் விடுவார்கள். இப்போது எடுக்கப்படும் கணக்கு என்பது வேறு; அது என்ன புது கணக்கெடுப்பு?

• அதற்குப் பெயர் ‘தேசிய மக்கள் தொகைப் பதிவேடு’. இதற்கு நாம் 21 கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். ஒவ்வொன்றுக்கும் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும். நம்முடைய செல்போன், ஆதார், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் எண். இவைகளைப்போல பலப்பல. எல்லாவற்றையும்விட, நமது அப்பா அம்மா பிறந்த தேதி; பிறந்த ஊர்; அதற்கான பிறப்பு சான்றிதழ் தர வேண்டுமாம். நம்மிடம் நமக்கான ‘பர்த் சர்டிபிகேட்டே’ (பிறப்பு சான்றிதழே) பலரிடம் இல்லாதபோது அம்மா, அப்பா பிறப்பு சான்றிதழுக்கு எங்கே போவது?

• இந்த ஆவணங்கள் நம்மிடம் இல்லை என்றால் - அதை ஒரு அதிகாரி குறித்துக் கொள்வார். பிறகு மற்றொரு கணக்கெடுப்பு அடுத்து வரும். அதற்குப் பெயர் ‘தேசிய குடியுரிமைப் பதிவேடு’. அதற்கு ஒரு அதிகாரி வருவார். நம்மிடம் இல்லாத ஆவணங்களைக் காரணம் காட்டி நீ இந்த நாட்டில் வாழும் தகுதிக்கே உரியவர் அல்ல என்று கூறும் அதிகாரம் அந்த அதிகாரிக்கு உண்டு. அவர் சந்தேகத்துக்கு உரியவர் என்று ஒரு குறிப்பு எழுதினாலே போதும். அவர் மனசு வச்சால் தான் நமக்கு வாழ்க்கை; இல்லையேல், தடுப்புக் காவல் முகாம் என்று சிறைக்குள்ளே தள்ளுவார்களாம். அசாம் மாநிலத்தில் அதுதான் நடக்கிறது.

• 1987க்குப் பிறகு பிறந்திருந்தால்இந்தியக் குடிமகனாக பெற்றோர்களில் ஒருவர் இருந்தால் போதும். 2004க்குப் பிறகு பிறந்தவர்கள் என்றால் பெற்றோர்களில் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், பெற்றோர்களில் ஒருவர் சட்ட விரோதமாகக் குடியேறியவராக இருக்கக் கூடாது. இப்போது பா.ஜ.க. ஆட்சி கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் 2014ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் குடியேறியுள்ள இந்துக்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிக்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகிய மதப் பிரிவைச் சார்ந்தவர்கள் மட்டும் குடியுரிமைப் பெறலாம். ஆனால் இஸ்லாமியர்களாக இருந்தால் அவர்களுக்கு குடியுரிமை கிடையாது என்று மக்களின் குடியுரிமையை மதத்தின் பெயரில் பிரிக்கிறது.

• குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதே குடியுரிமைப் பதிவேடு ஒன்றை உருவாக்குவதற்குத்தான். குடியுரிமைப் பதிவேடு வந்தால் பாதிப்பு இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல; இந்துக்களுக்கும்தான். அசாமில் இப்போது 12 இலட்சம் இந்துக்கள், நாடற்றவர்களாக்கப்பட்டு விட்டார்கள். அவர்களுக்கு மீண்டும் குடியுரிமை வழங்கி, இஸ்லாமியர்களை மட்டும் தனிமைப்படுத்தவே குடியுரிமை திருத்தச் சட்டம் வந்திருக்கிறது.

• இந்த நாட்டில் நாம் குடிமக்களாக தலைமுறை தலைமுறையாக வாழ்கிறோம். வீடு இல்லை; தண்ணீர் இல்லை; சுகாதார வசதி இல்லை; செம்மஞ்சேரி களுக்கும், கண்ணகி நகர்களுக்கும் ஒண்டக்கூட இடம் இல்லாத இடத்தில் ஆடு, மாடு போல அடைக்கப்படுகிறோம். இந்தப் பிரச்சினைகளை எல்லாம் தீர்க்க வக்கில்லாத ஆட்சி; இந்த நாட்டுக்கு சொந்தக்காரனா என்பதற்கு ஆதாரங்களைக் கேட்கிறது. அதுவும் ஈழத் தமிழராக அடைக்கலம் தேடி வந்தவர்களுக்கும் குடியுரிமை இல்லை.

• பசியும், வறுமையும், ஏழ்மையும், மதம் பார்த்து வருவதில்லை. அது எல்லோருக்கும் பொதுவாக இருக்கும்போது மதவெறி தான் நமது பிரச்சினையைத் தீர்க்கப் போகிறதா?

• பார்ப்பனர், பணக்காரர், பங்களாவாசிகள், மெத்தப் படித்து இலட்சம் இலட்சமாக சம்பளம் வாங்கும் வசதிக்காரர்களிடம் வேண்டுமானால் எல்லா சான்றிதழ்களும் இருக்கும். அவர்களுக்கு எப்போதும் சொகுசு வாழ்க்கைதான். அன்றாடம் காய்ச்சியான நாம் எங்கே போய் பிறப்பு சான்றிதழ்களையும், அப்பா, அம்மா பிறப்பு சான்றிதழ்களையும் தேடுவது?

• ‘இந்து’, ‘இந்து’ என்று கூறி நம்மை ஒடுக்கப்பட்ட ஜாதியாக்கி வைத்து விட்டான். இப்போது இந்துக்களுக்கான நாட்டையே உருவாக்கி இருக்கிற ‘ஒண்டிக் குடித்தனத்தையும்’ புடுங்குவதற்கு வருகிறது, புதிய கணக்கெடுப்புகள்.

• இளைஞர்களே! தோழர்களே! சகோதரர்களே! இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் நமது தலைக்கு மேல் தொங்கும் கத்தி. இதை எதிர்த்து முறியடிக்க வேண்டியது நமது கடமை!

• தமிழக அரசே; ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் -

• மக்களை இந்து-முஸ்லீம் என்று கூறுபோடும் -

• குடியுரிமை திருத்தச் சட்டம் - மக்கள் தொகைப் பதிவேடு - தேசிய குடியுரிமைப் பதிவேடுகளை எடுக்காதே!

• மத்திய அரசின் மிரட்டலுக்கு அடிபணியாதே!

- என்று உரத்து முழங்குவோம், வாருங்கள்!

- குடியுரிமையைப் பறிக்கும் கணக்கெடுப்புகளைப் புறக்கணிப்போம்!

(மயிலாப்பூர் பகுதியில் நடந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் வழங்கப்பட்ட துண்டறிக்கை)