தமிழ்நாடு தேர்வாணையத்தின் அதிர்ச்சி அறிவிப்பு
தமிழ்நாட்டில் மாநில அரசுப் பணிகளுக்கு 9,351 பேர் தேர்வு செய்ய தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) 2018 பிப்ரவரியில் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், 07.11.2016 அன்று திருத்தப்பட்ட தேர்வாணைய விதிமுறைகளின்படி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
2016இல் செய்த திருத்தம், தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு இந்தியா முழுவதும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்; நேப்பாளம், பூட்டான் ஆகிய வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று கூறுகிறது. அதுமட்டுமின்றி, பாகிஸ்தான், திபெத் போன்ற நாடுகளிலிருந்து வந்த அகதிகளும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறுகிறது.
இவ்வாறு வருபவர்களுக்கு இப்பொழுது தமிழ் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, இரண்டாண்டுகளுக்குள் அவர்கள் தமிழ் கற்றுக் கொண்டால் போதும் என சலுகை வழங்குகிறது, தமிழ்நாடு அரசு!
நேரடியாக 31 விழுக்காட்டுப் பொதுப்பட்டியலில் உள்ள பணியிடங்களை பிற மாநிலங்கள் மற்றும் பிறநாடுகளைச் சேர்ந்தவர்கள் பறித்துக் கொள்ள வாய்ப்பளிக்கிறது தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு! அதுமட்டுமின்றி, இட ஒதுக்கீட்டுப் பட்டியலிலும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பறித்துக் கொள்ள வாய்ப்பளித்துள்ளது.
தேர்வானோர் தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டு அடிப்படையில் வேலைக்கு சேர்க்கப்படுவர் என்று அவ்விளம்பரம் கூறுகிறது. ஏற்கெனவே அந்தந்த மாநிலங்களில் இட ஒதுக்கீட்டைப் பெற்று வரும் ஜாதியினருக்கு, தமிழ்நாட்டு மக்களுக்கான 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்குரிய இடங்களையும் அபகரிக்க வாய்ப்பளிக்கிறது தமிழ்நாடு அரசு!
1956ஆம் ஆண்டு மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, அந்தந்த மாநிலங்களில் வரலாற்று வழியில் நீண்டகாலமாக வாழ்ந்து வந்த ஜாதியினருக்கு மட்டுமே இட ஒதுக்கீட்டுப் பட்டியிலில் இடம் அளிக்கப்படு கிறது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மராட்டியம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தமிழர்கள் பரம்பரையாகவும், இருபது முப்பது ஆண்டுகளுக்கு மேலாகவும், இன்றைக்கும் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வந்தாலும்கூட, அவர்களது ஜாதி, இட ஒதுக்கீட்டுப் பட்டியிலில் ஏற்கப்படாமல், தமிழர்கள் அனைவரும் “பொதுப் பட்டிய”லிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில்தான், தமிழ்நாடு முழுவதுமுள்ள பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கான 1058 இடங்களில், கணிசமான வெளி மாநிலத்தவர்கள், குறிப்பாகப் பொதுப் பட்டியலில் 68 விழுக்காட்டினர் தேர்வு செய்யப்பட்டுள்ள செய்தி வெளிவந்தது. தமிழ் மக்களுக்குரிய இடங்களை ஆக்கிரமிக்கும் இந்த வெளி மாநிலத்தவருக்கு வேலை தரக் கூடாது என்பதை வலியுறுத்தி பல போராட்டங்கள் நடந்துவருகின்றன.
அடுத்து, அதைவிடவும் பேரிடியாக இப்பொழுது வெளி மாநிலங்கள் - வெளி நாடுகளிலிருந்து தமிழ்நாட்டு அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு இப்போது விளம்பரம் கொடுத்துள்ளது.
இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட் டுள்ளதாவது:
ஒரு விண்ணப்பதாரர் கீழ்காணும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
(அ) விண்ணப்பதாரரின் குடியுரிமை:-
i) இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும் அல்லது
ii) நேபாளம் அல்லது பூட்டான் அரசின் குடிமகனாக இருத்தல் வேண்டும். அல்லது
iii) இந்தியாவில் நிரந்தரமாகக் குடியமரும் நோக்கத்துடன் 1962 ஜனவரி 1ஆம் நாளுக்கு முன்பு திபெத்திலிருந்து இந்தியாவிற்கு வந்துவிட்ட அகதியாக இருத்தல் வேண்டும். அல்லது
iஎ) இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டு பாகிஸ்தான், பர்மா, ஸ்ரீலங்கா, வியட்நாம், கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, உகாண்டா, தான்சானியா ஐக்கியக் குடியரசு (முன்னாள் தங்கனிகா மற்றும் சான்சிபார்), ஜாம்பியா, மாலவி, சயர், எதியோப்பியா ஆகிய நாடுகள் ஏதாவதொன்றிலிருந்து இந்தியாவில் நிரந்தரமாகக் குடியமரும் நோக்குடன் இடம் பெயர்ந்து வந்தவராக இருத்தல் வேண்டும்.
எ) மேற்கூறிய மூன்றாம் அல்லது நான்காம் வகையைச் சேர்ந்த விண்ணப்பதாரர் அல்லது நேபாளத்தின்அல்லது பூட்டான் அரசின் குடிமகன் ஒருவர் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் தகுதிச் சான்றிதழைப் பெற வேண்டும்.
குறிப்பு:
1) போதுமான தமிழறிவு இல்லாதோரும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் தேர்வு பெற்றுப் பணியில் நியமிக்கப்பட்டால், பணியில் நியமிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழில் இரண்டாம் வகுப்பு மொழித் தேர்வில் (முழுத் தேர்வு) தேர்ச்சிப் பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெறத் தவறுபவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள்.
2) சில பதவிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட தமிழ்மொழிக் கல்வித் தகுதி பெற்றிருப்பது கட்டாயமாகும். அவ்வாறு அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு மேற்குறிப்பிட்ட விதி பொருந்தாது.
- என்று தேர்வாணையத்தின் அறிவிப்பு கூறுகிறது.