நெய்வேலி லிக்நைட் கார்ப்பரேசன் எனப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் 1956-இல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தில் பழுப்பு நிலக்கரியும் அதை வைத்து மின்சாரமும் தயாரிக்கப்படுகிறது. இந் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 8,672.84 கோடி ஆகும். இதன் நிகர வருமானம் 23.068.81 கோடி ஆகும். ஒன்றிய அரசு ரூபாய் 360 கோடி மதிப்புள்ள என் எல் சி யின் 3.56 சதவீத பங்குகளை விற்க முடிவு செய்தது. இப்பங்குகளை தமிழ் நாடு அரசின் ஐந்து பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கியுள்ளன.

இந்திய ஒன்றிய அரசின் சுரண்டல் நிறுவனமான என்.எல்.சி தமிழ்நாட்டில் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரிக்கு எந்தவிதமான ராயல்டியும் வழங்கப்படுவதில்லை. அனைத்தையும் இந்திய ஒன்றிய அரசே கபளீகரம் செய்கிறது. நெய்வேலி என்.எல்.சி முதல் சுரங்கத்தை விரிவாக்கம் செய்ய ஒன்பது கிராமங்களில் இருந்து மூவாயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்களையும் இரண்டாவது சுரங்கத்தை விரிவாக்கம் செய்ய 25 கிராமங்களிலிருந்து பத்தாயிரம் ஏக்கர் நிலங்களையும் மூன்றாவது சுரங்கத்திற்காக 26 கிராமங்களில் உள்ள 12 ஆயிரம் ஏக்கர் நிலங்களை பயன்படுத்த உள்ளது.NLC INDIA2023 மார்ச் 09-ஆம் தேதி தேதி என்.எல்.சியின் இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக வளையமாதேவி கிராமத்து நிலங்களைக் கையகப்படுத்தி அவற்றைச் சமன்படுத்தும் வேலையில் என்.எல்.சி இறங்கியது. இதை எதிர்த்து மக்கள் கடும் போராட்டம் நடத்தினர். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாதபடி காவல்துறை குவிக்கப்பட்டது. மக்களைக் காணச் சென்ற அரசியல் கட்சியினர் இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர். இதனால் கோபப்பட்ட மக்களின் போராட்டம் வெடித்து கடையடைப்பு உள்ளிட்ட பெரும் போராட்டங்கள் கடலூர் மாவட்டத்தையே திகைக்க வைத்தன. என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்தை உடனே கைவிட வேண்டும் என்பதுதான் மக்களின் ஒற்றைக் கோரிக்கையாகும்.

ஆண்டுக்கு ரூபாய் 11 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டும் என்.எல்.சி-யின் இலாபம் மட்டும் 2ஆயிரம் கோடி ஆகும். நிலம் வழங்கியவர்களுக்கு இலாபத்தில் ஒரு பகுதி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஆனால் அதைச் செய்யாமல் ஸ்என்.எல்.சி நிறுவனம் இலாபத்தை வட மாநிலங்களில் முதலீடு செய்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 45 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டிய என்.எல்.சி கடலூர் மாவட்டத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்ய 447 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது. இது வெறும் ஒரு சதவீதம் மட்டுமே ஆகும்.

மேலும் என்.எல்.சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு சரியாக வழங்கப்படுவதில்லை. இதுவரை 37,256 ஏக்கர் நிலத்தை என்.எல்.சி க்குக் கொடுத்த 25 ஆயிரம் குடும்பங்களுக்கு போதிய இழப்பீடு வழங்கப்பட வில்லை. அக் குடும்பங்களைச் சேர்ந்த 1827 பேருக்கு மட்டும்தான் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களும் ஓய்வுபெற்று விட்டனர். இப்போது 3500 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு என்.எல்.சியில் நிரந்தரப் பொறியாளர்களாகப் பணியமர்த்தப்பட்ட 299 பேரில் ஒருவர்கூட தமிழர் இல்லை.

நெய்வேலியில் நிலக்கரி நிறுவனம் தொடங்குவதற்கு முன்பு 10 அடியில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் இப்போது 1000 அடிக்குக் கீழ் சென்றுள்ளது. என்.எல்.சி நிறுவனம் நிலத்தடி நீரை ராட்சதக் குழாய்கள் மூலம் உறிஞ்சி கடலில் வெளியேற்றுவதால் 8 கிலோமீட்டர் அளவுக்குக் கடல்நீர் நிலத்தடியில் புகுந்துள்ளது. என்.எல்.சி-யால் ஏற்படும் ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சனைகளால் கடலூர் மக்கள் அவதிப் படுகின்றனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைவிட நூறு மடங்கு பிரச்சனை என்.எல்.சி-யால் ஏற்படுகிறது. என்.எல்.சி-யால் ஏற்படும் காற்று மாசு, நிலத்தடி நீர்மட்டம் சரிவு போன்றவற்றால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை ஆகிய ஐந்து மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும். என்.எல்.சி-க்காக 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் 17 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். நெல், கரும்பு, வாழை. முட்டைக்கோஸ் போன்ற பயிர்களின் மூலம் ஏக்கர் ஒன்றிற்கு ஆண்டுக்குப் பத்து இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டித்தரும் நிலங்களே அவையாகும்.

தமிழ்நாட்டில் ஒரு நாள் மின்சாரத் தேவை 18 ஆயிரம் மெகாவாட் முதல் 22 ஆயிரம் மெகாவாட் ஆகும். என்.எல்.சி- இரண்டாயிரம் மெகாவாட் மின்சாரம்தான் தயாரிக்கிறது. அதில் தமிழ்நாட்டிற்கு 800 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது. மீதி ஒன்றிய அரசு எடுத்துக் கொள்கிறது.

ஒடிசா, உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம், இராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களின் மக்கள் நலன் திட்டங்களுக்கு இலாபத்தின் பகுதியை செலவழிக்கும் என்.எல்.சி - நிறுவனம் தமிழ்நாட்டின் நலனுக்கோ, நிலம் கொடுத்த கடலூர் மக்களுக்கோ எதுவும் செய்யவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் குஜராத், ஒடிசா, உத்திரப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் 55ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்த என்.எல்.சி- தமிழ்நாட்டில் ஒரு முதலீடும் செய்யவில்லை.

2025-ஆம் ஆண்டு இந்திய ஒன்றிய அரசால் என்.எல்.சி- தனியாருக்கு விற்கப்பட உள்ளது. இரண்டாவது சுரங்கத்திற்காக 1985- இல் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 10 ஆயிரம் ஏக்கர் 37 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதில் 40 ஆண்டுகளுக்கு பழுப்பு நிலக்கரி எடுக்கலாம். இந்த நிலையில் தற்போது கையகப்படுத்தப்படும் 25ஆயிரம் ஏக்கர் நிலங்களையும் சேர்த்து தனியாருக்குத் தாரைவார்ப்பதே இந்திய ஒன்றிய அரசின் திட்டமாகும்.

இதை இப்போதே தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழ்நாட்டின் வளங்கள் யாவும் நம் கண்முன்னே பறிபோய் தமிழ்நாடு பாலைவனமாவது உறுதி. எனவே நமது ஒன்றுபட்ட போராட்டமே தமிழ்நாட்டின் வளங்களைக் காக்கும். கொள்ளை போகும் வளங்களைக் காப்பாற்ற வேண்டுமென்றால் கார்ப்பரேட் அடிவருடி அரசுகளை நம்பிப் பயனில்லை. ஒட்டுமொத்த மக்கள் புரட்சியின் வாயிலாக உலகமயமாக்கல் என்னும் சுரண்டல் பொருளாதாரக் கொள்கையைத் கட்டமைக்கும் தூக்கி எறிந்து சோசலிசப் ஒரு புரட்சிகர பொருளாதாரத்தைக் அரசை ஏற்படுத்துவதற்கு மக்களை தயார்படுத்துவதே நமது தலையாய கடமையாகும்.

- தங்ககுமரவேல்

Pin It