தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகளை வட மாநிலத்தவர் ஏராளமாக பறித்து வருகிறார்கள். குறிப்பாக டெல்லி, உ.பி., இராஜஸ்தான், அரியானா மாநிலத்தவர்கள் அதிக அளவில் மத்திய அரசுத் துறைகளில் குவிக்கப்பட்டு வருகிறார்கள்.

• பாரதிய ஜனதா கட்சி, தனது தேர்தல் அறிக்கையில் வட மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டில் வேலை பார்ப்போருக்கு குடியிருப்புகள் கட்டித் தரப் போவதாக தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு உறுதி கூறி அந்தத் தமிழர்களிடமே வாக்கு கேட்கும் ‘துணிச்சலை’ப் பெற்றிருக்கிறது.

• அண்மையில் திருச்சி, பொன்மலை தொடர் வண்டிப் பணிமனையில் 58 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் 12 பேர் மட்டுமே.

• 2012ஆம் ஆண்டு சென்னை இரயில்வே மண்டலம் 884 காலிப் பணியிடங்களை நிரப்பியது. இதில் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் 80 பேர் மட்டுமே.

• தமிழ்நாட்டில் செயல்படும் மத்திய அரசு அதிகாரத்தின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களில் இரண்டு தலைமுறை களாகவே தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். 2018ஆம் ஆண்டு இரயில்வே வேலை வாய்ப்பு அமைப்பு வழியாக குரூப்-டி பணிக்காக 2362 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் 74 பேர் மட்டுமே.

• 2002 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் திருச்சி - திருவெறும்பூர் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் 138 பொறி யாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் தமிழ் நாட்டைச் சார்ந்த ஒருவர்கூட இல்லை. 2008ஆம் ஆண்டு 77 செயற் பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதில் 17 பேர் மட்டுமே தமிழர்கள்.

• 2008ஆம் ஆண்டு சென்னை வருமான வரித் துறை அலுவலகத்தில் 200 உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதில் 4 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 2014இல் இதே அலுவலகத்தில் 78 பணியிடங்கள் நிரப்பப்பட்டன தமிழ் நாட்டைச் சார்ந்த 3 பேருக்கு மட்டுமே வேலை.

• ஆவடி கனரக வாகனங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் 100 ‘சார்ஜ்மேன்’ பணியிடங்கள் நிரப்பப்பட்டபோது தமிழ்நாட்டைச் சார்ந்த வர்களுக்கு 15 பேருக்கு மட்டுமே வாய்ப்பு. இதே நிறுவனம் 2011ஆம் ஆண்டு 108 பயிற்சியாளர் பணிக்கு ஆள் சேர்த்த போது தமிழ்நாட்டைச் சார்ந்த 15 பேருக்கு மட்டுமே வாய்ப்பு.

மோசடிகள்; ஆள் மாறாட்டம்

• மோசடிகள் செய்தும் வடநாட்டுக்காரர்கள் தமிழ்நாட்டு வேலைகளை அபகரித்தனர். 2016ஆம் ஆண்டு அஞ்சலகத் துறை வேலை வாய்ப்புகளுக்கான தேர்வை நடத்தியது. இதில் வடநாட்டுக்காரர்கள் ஆள்மாறாட் டம் செய்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றது அம்பலமானது.

தமிழ் மொழியே தெரியாத ஒரு இராஜஸ்தான்காரர் தமிழ்மொழி தேர்வில் 25க்கு 24 மதிப்பெண் பெற்றது கண்டறியப்பட்டு, ஆள் மாறாட்ட மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. பிறகு இந்த தேர்வு நிராகரிக்கப்பட்டது.

• 2015இல் கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வுக் கூட பணியாளர்கள் பணியிடங்களை நிரப்பிய போது இரசாயன ஆய்வுக் கூட படிப்பை முடித்திருப்பது கட்டாயம் என்று அறிவித்தார்கள். ஆனால் இப் படிப்பு தமிழ் நாட்டில் எந்தப் பல்கலைக்கழகத்திலும் இல்லை. எனவே வட இந்தியர்களைக் கொண்டு நிரப்பி விட்டார்கள்.

• 2017இல் ஆசிரியர் தேர்வாணையம் மூலம் பாலிடெக்னிக்குகளில் விரிவுரையாளர் நியமனத்தின்போது தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பணியாற்று வோருக்கு முக்கியத்துவம் தராமல் 31 சதவீத இடங்களை பிற மாநிலத்தவருக்கு வழங்கப்பட்டது.

இதில் 1068 பணியிடங்களில் 68 சதவீதம் பேர் வடமாநிலங்களிலிருந்து நியமிக்கப்பட்டனர். இதை எதிர்த்து போராட்டங்கள் நடந்தன. அதன் பிறகு தேர்வு இரத்து செய்யப்பட்டது.

• 2019ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின் வாரியத்தில் 300 உதவி பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதில் நியமனமான 39 பேர் வடநாட்டுக்காரர்கள். இவர்களுக்கு தமிழே தெரியாது; ஆனாலும் நியமிக்கப்பட்டனர்.

தமிழக அரசின் துரோகம்

2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம், தமிழ்நாடு தேர்வாணையத்தில் ஒரு ஆபத்தான தமிழர்கள் உரிமைக்கு வேட்டு வைக்கக்கூடிய ஒரு திருத்தத்தை ‘ஓசைப் படாமல்’ கொண்டு வந்தார்.

தமிழ் தெரியாதவர்களும் தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்பதே அந்தத் திருத்தம். இதைப் பயன்படுத்தி தமிழ்நாடு அரசுப் பணிகளிலும் வடநாட்டுக்காரர்கள் நுழைந்து விட்டார்கள்.

சமூக நீதி பேசும் “மருத்துவர்”கள் அவ்வப்போது இதை எதிர்த்து ‘அறிக்கைகள்’ வெளியிட்டு விட்டு இப்போது அ.இ.அ.தி.மு.க. ஆட்சியே மீண்டும் வரவேண்டும் என்று கைகோர்த்து விட்டார்கள். இந்த துரோகத் துக்கு முற்றுப்புள்ளி வைக்க அ.இ.அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியை முறியடிப்போம்!

75 சதவீத வேலை வாய்ப்புகளை தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்கப் படும் என்று உறுதியளித்துள்ள தி.மு.க. கூட்டணியை ஆதரிப்போம்!

- விடுதலை இராசேந்திரன்

Pin It