தம்மம் சிந்தனையாளர் பேரவை சார்பில் ‘கலைஞரின் பன்முக ஆளுமை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் செப்.8, 2018 மாலை 5 மணியளவில் பெரியார் திடலில் உள்ள மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலக அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வுக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப் பட்டதால் மணியம்மையார் அரங்குக்கு மாற்றப் பட்டது. வெற்றி சங்கமித்ரா தலைமை தாங்கினார். வழக்கறிஞர் அருள்மொழி, ‘கலைஞரின் இந்துத்துவ எதிர்ப்பு’க் குறித்தும், இராஜன் செல்லையா ‘கலைஞரின் கலை இலக்கிய ஆளுமை’ குறித்தும், பூவிழியன், ‘கலைஞரின் சமூகநீதிப் பயணம்’ குறித்தும், விடுதலை இராசேந்திரன், ‘கலைஞரின் ஆட்சி நிர்வாகத் திறன்’ குறித்தும் பேசினர். தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளர் டி.கே.எஸ். இளங் கோவன் நிறைவுரையாற்றினார்.

விடுதலை இராசேந்திரன் உரையில் குறிப்பிட்டதாவது:

‘கலைஞரின் நிர்வாகத் திறன்’ என்ற தலைப்பின் கீழ் பேசுவதற்கு நான் பொருத்தமானவன் அல்ல; அவரோடு நெருங்கிப் பணியாற்றியவர்கள் மட்டுமே அவரது நிர்வாகத் திறன் பற்றிய புரிதல்களைப் பெற்றிருக்க முடியும். ஆனாலும், அவர் முதல்வராக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்கள் சமூக நீதியில் அவர் காட்டிய முனைப்புப் பற்றி சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கலைஞர் முதல்வரானதிலிருந்தே அவரது தனிச் செயலாளராகவும் பதவி ஓய்வுக்குப் பிறகும் கலைஞரின் செயலாளராகவும் செயல்பட்ட இராஜ மாணிக்கம், அய்.ஏ.எஸ். கலைஞர் நிர்வாகத் திறன் குறித்து அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிறார்:

karunanidhi and periyar“தலைமைச் செயலாளர் கையெழுத்துப் போட்டிருக்கிறாரே என்று படிக்காமல் ஒரு கோப்பில்கூட அவர் கையெழுத்துப் போட மாட்டார். கேள்வி கேட்பார். அதன் மூலமாக அந்தப் பிரச்சினையை உள்வாங்கிக் கொள்வார். கோப்புகள் வழியாக மட்டும் பிரச்சினைகளை, திட்டங்களை அணுகாமல், கள நிலவரம் எப்படி இருக்கிறது என்று விசாரிப்பார். அவரிடம் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், அதிகாரப் படிநிலையை உடைத்து எல்லோரிடமும் பேசுவார். உதாரணமாக, முதல்வர் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், துறைச் செயலாளர் பதவியில் இருப்பவர்கள்தான் பங்கேற்பார்கள். அதற்குக் கீழே உள்ளவர்களைக் கூட்டத்துக்கு அழைக்கும் மரபு கிடையாது. ஆனால், இவர் அதை உடைப்பார். கீழே உள்ளவர் விஷயாதி என்று தெரிந்தால், அவரை அழைத்துப் பேசுவார். அதே மாதிரி காவல் துறையை நிர்வகிக்கையில், நுண்ணறிவுப் பிரிவு சொல்கிற தகவல்களையெல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்ள மாட்டார். டி.ஜி.பியே சொன்னாலும், அதை மறுமுறை சரி பார்ப்பார். உள்ளூர்க்காரர்களிடம் விசாரிக்கச் சொல்வார். ‘சில காரியங்களை நிதானமாகச் செய்யவேண்டும்; சில காரியங்களை உடனடியாகச் செய்ய வேண்டும்; மாற்றிச் செய்தால் மோசமான விளைவுகளே ஏற்படும்’ என்பார். கோப்புகளைத் தேங்கவிட மாட்டார். ஒரே நாளில் 250 கோப்புகளில் கையெழுத்திட்ட நாட்கள் உண்டு.

அவர் வேகத்துக்கு ஈடு கொடுப்பது சிரமமாக இருக்கும். சட்டமன்றத்தில் தன்னுடைய மானியக் கோரிக்கை வருகிறது என்றால், ஒரு வாரம் தயார் பண்ணுவார். சட்டமன்றத்துக்குப் போகும்போதுகூட, “இராத்திரி ஒண்ணு படிச்சேன்யா, அதுல சந்தேகம்யா’ என்று கேட்பார். அவர் இப்படி இருக்கும்போது அதிகாரிகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பார்! அரைகுறை வேலை அவருக்குப் பிடிக்காது. ஒரு வேலைமுடியும் வரை ‘ஃபாலோ’ செய்ய வேண்டும் என்று நினைப்பார். ஒரு உத்தரவு கடைசி வரை போய்ச் சேர்ந்திருக்கிறதா என்று பார்ப்பார். தமிழராக இருக்கும் அதிகாரி வரலாறு தெரியாமல் நடந்து கொண்டால், கடிந்து கொள்வார். அண்ணா சாலையை ‘மவுண்ட் ரோடு’ என்று சொன்னால், ‘என்ன சீஃப் செக்ரட்டரி, நீங்களே இப்படிச் சொல்லலாமா?’ என்பார். ‘பிற்பட்டோர்’ என்றால் கோபம் வரும். ‘பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட் டோர்’ என்று திருத்துவார். அரசுப் பணியைச் சமூகத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாகக் கருத வேண்டும் என்று வலியுறுத்துவார். மக்களுக்குத் திட்டங்களைக் கொண்டு செல்ல ஏதாவது தடைகளைச் சொல்லிக் கொண்டே இருந்தால் பிடிக்காது. தடைகளை உடைக்க வழி சொல்லுங்கள் என்பார்.

அவருடைய வேகத்துக்கு ஈடுகொடுத்த தலைமைச் செயலர்கள் என்றால், முதன்மையானவர் கே.என்.நம்பியார், அடுத்தது சபாநாயகம்.

அமைச்சர்கள் அனுப்பும் கோப்புகளில் அவர்கள் எழுதும் குறிப்பை வைத்தே அவர்களுடைய செயல்பாடுகளை எடை போட்டு விடுவார். நிறையச் சொல்லிக் கொடுப்பார். ஆனால், சட்டமன்ற நடவடிக்கைகளில் தீவிர முனைப்பு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். ‘சட்டமன்றத்தை லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாதுய்யா, நாம ஆளுங் கட்சியே அதை முக்கியமாக நினைக்கலைன்னா, ஜனநாயகம் செழிக்காதுய்யா’ என்பார். ‘யாராவது குறை சொன்னால், அதைக் குறித்துக் கொண்டு உடனே சரி செய்ய வேண்டும், கோபப்படக் கூடாது’ என்பார். தரக் குறைவாக யாராவது பேசினால்கூட, ‘எதிர்க்கட்சிக்காரங்க நம்மை இந்திரன் சந்திரன்னா பாராட்டுவாங்க! கோமாளி, ஏமாளி, வெட்டிப்பய என்றுதான் பேசுவாங்க. ஜனநாயகத்தில் அதெல்லாம் அனுமதிக்கப்பட்டதுதான்’ என்பார். எல்லாவற்றுக்கும் மேலாக நேரம் தவறாமை. ‘ஏன்யா, சட்டமன்றம் 9 மணிக்குன்னா, 8.45க்கே வந்துட வேண்டாமா?’ என்பார். இளைஞர்களை - அவர்கள் எதிர்க் கட்சிக் காரர்களாக இருந்தாலும் சரி, தட்டிக் கொடுப்பார்.

சமூகநீதியோடு தொடர்புடையவை ஒவ்வொன்றுமே அவர் மனதுக்கு நெருக்கமானவை என்று சொல்லலாம். எல்லாச் சமுதாயத்தினரும் ஒரே இடத்தில் இணங்கி வாழும் இடமாக அவர் கொண்டு வந்த ‘பெரியார் நினைவுச் சமத்துவபுரம் திட்டம்’ அவர் இதயத்துக்கு மிக நெருக்கமான திட்டம். பெண்களுக்குச் சம சொத்துரிமையைக் கொண்டு வந்தபோது நெகிழ்ச்சியாக இருந்தார். 2006 முதல் அமைச்சரவைக் கூட்டம். ஒரு பேப்பரை எடுத்து எழுத ஆரம்பித்தார். “தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றும் வகையில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக லாம்” என்று எழுதினார். (என்னைப்போல்) பக்கத்திலிருந்து பார்த்தவர்களுக்குத்தான் தெரியும், இவை ஒவ்வொன்றுக்கும் பின்னிருந்த கனவுகள்!”

ஜாதி, மதக் கலவரங்கள் நடந்தால் மிகவும் வேதனைப்படும் கலைஞர், சட்டபூர்வமாக எடுக்கும் நடவடிக்கைகளைத் தவிர, யாரெல்லாம் இதன் பின்னணியில் இருக்கிறார்களோ, அதே சமூகத்தைச் சார்ந்த தி.மு.க. தலைவர்களை விட்டு அவர்களிடம் பேசச் சொல்வார்.

“ஏன் உங்க புத்தி இப்படிப் போகுதுன்னு கேளுங்கய்யா - என்பார்” என்று இராஜமாணிக்கம் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

மாளிகையில் அமர்ந்து கொண்டு உளவுத் துறையும் அதிகாரிகளும் கூறுவதை மட்டுமே நம்பி செயல்பட்ட ஜெயலலிதா போன்ற முதலமைச்சர் களையும் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சமூகத்தின் அடி மட்டத்திலிருந்து அரசியல் அதிகாரத்திற்கு உயர்ந்த ஒருவரின் நிர்வாகத் திறன் அதிகார எல்லைகளைக் கடந்து நிற்கும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அந்தத்துறைகளில் சிறந்து விளங்கிய ஆளுமைகளோடு எந்த நேரத்திலும் நேரடியாக தொடர்பு கெண்டு பேசுவது விவாதிப்பது என்ற அவரது பண்பு அவரது நிர்வாகத் திறனுக்கு வலிமை சேர்த்தது என்றே கூறலாம். உடனடியாக அவசரமாக எடுக்க வேண்டிய முடிவுகளிலும் அவர் முடிவெடுக்கத் தயங்கியதில்லை என்பதற்கு பெரியார் மறைந்தபோது பெரியாருக்கு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்த முடிவைக் குறிப்பிடலாம். அப்போது தலைமைச் செயலாளராக இருந்த சபாநாயகம் அவர்களை அழைத்து, ‘பெரியாருக்கு அரசு மரியாதை செய்ய வேண்டும்’ என்ற கருத்தை முன்வைத்தபோது, ‘பெரியார் எந்த அரசுப் பதவியிலும் இல்லையே’ என்று பதில் வந்தது. ‘காந்திக்கு எப்படி அரசு மரியாதை தரப்பட்டது?’ என்று கேட்டார் கலைஞர். ‘அவர் தேசத்தின் தந்தையாயிற்றே’ என்று தலைமைச் செயலாளர் கூறியபோது, “பெரியாரும் திராவிட இயக்கத்தின் தந்தை தான். ஏற்பாடுகளைச் செய்யுங்கள். இதனால் ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் பரவாயில்லை” என்று முடிவெடுத்தவர் கலைஞர். பெரியாரின் இறுதி ஊர்வலத்தை தமிழ்நாடு அரசு செய்தி விளம்பரத் துறை படமாக்கியதோடு, அதைத் தமிழ்நாடு முழுதும் தியேட்டர்களில் வெளியிட்டது. காரல் மார்க்ஸ் இறந்தபோது ஏங்கல்ஸ் அவரது மறைவுக்கு வெளியிட்ட இரங்கல் செய்தி உலகப் புகழ் பெற்றது. “மார்க்சின் மூளை சிந்திப்பதை நிறுத்திக் கொண்டது” என்றார் ஏங்கல்ஸ். அதற்கு இணையாக கலைஞர் பெரியார் மறைவுக்குக் கூறிய இரங்கல் செய்தியைக் குறிப்பிடலாம். “பெரியார் தனது சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டார்” என்று ஒற்றை வரியில் இலக்கியமாகக் கூறினார் கலைஞர்.

சமூக நீதியில் அவர் ஆட்சி காலத்தில் மிகுந்த கவலை எடுத்துச் செயல்பட்ட தலைவர் பிற்படுத்தப் பட்டோருக்கான தனி அமைச்சர் - அமைச்சகத்தை இந்தியாவிலேயே முதலில் உருவாக்கினார். அவர் முதலமைச்சராக வந்தவுடன், ஏ.என்.சட்ட நாதன் தலைமையில் பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையத்தை நியமித்தார். அப்போது கல்வி வேலை வாய்ப்புகளில் 41 சதவீத இடஒதுக்கீடு அமுலில் இருந்தது. உச்சநீதிமன்றம் 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு போகக் கூடாது என்று ஒரு தீர்ப்பில் எல்லைக்கோடு போட்டதை பெரியாரிடம் சுட்டிக்காட்டியபோது, பெரியார் கலைஞரிடம்,

“50 சதவீதத்துக்கு மேல் தானே போகக் கூடாது; 49 சதவீத அளவுக்கு உயர்த்துங்கள்” என்று ஆலோசனை கூறினார். அதேபோல் கலைஞர் இடஒதுக்கீட்டை 49 சதவீதமாக உயர்த்தினார். அதே சட்டநாதன் ஆணையம் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் வருமான வரம்பு விதிக்கலாம் என்ற பரிந்துரை இடம் பெற்றிருந்தாலும், கலைஞர் அதை நிராகரித்தார். எம்.ஜி.ஆர். தனது ஆட்சி காலத்தில் 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பு உத்தரவைப் பிறப்பித்தது, ஏ.என். சட்டநாதன் ஆணையம் பரிந்துரையைக் காட்டித்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இடஒதுக்கீடு எனும் சமூக நீதிக் கொள்கையை காலத்தின் தேவை கருதி, அது மேலும் பரவலாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மாற்றங்களைத் துணிந்து அமுல்படுத்தியவர் கலைஞர். 50 சதவீத பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதமும், இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதமும், பட்டியல் இனப் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் கடை நிலையில் இருந்த அருந்ததியர் சமூகத்தினருக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடும் வழங்கி, அதற்கு சட்டப் பாதுகாப்பையும் தந்தவர் கலைஞர். ஆந்திராவில் பட்டியல் இனத்தவருக்கான உள் ஒதுக்கீடுகளை அங்கே ஆட்சியிலிருந்த தெலுங்கு தேசம் கட்சி கொணர்ந்த போது நீதிமன்றத்தால் அது நிராகரிக்கப்பட்டது. அந்த நிலை அருந்ததியினருக்கான இடஒதுக்கீட் டிலும் இஸ்லாமியருக்கான இடஒதுக்கீட்டிலும் வந்துவிடக் கூடாது என்று உரிய கவனத்தோடு சட்டப் பாதுகாப்புடன் அதை நிறைவேற்றினார்.

எல்லாவற்றையும்விட சமூகநீதிக் கோட்பாட்டின் அடிப்படையான தத்துவம் குறித்து அவரிடம் எத்தகைய அபாரமான புரிதல் இருந்தது என்பதற்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். முதல் தலைமுறையாக ஒரு குடும்பத்தில் பட்டப்படிப்புப் படிக்க வரும் ஒருவருக்கு அவர் எந்த ஜாதியைச் சார்ந்தவராக இருந்தாலும் பார்ப்பனராக இருந்தாலும்கூட அய்ந்து கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற அவரது திட்டம், அவரது சமூக நீதியின் சமூகவியல் பார்வையைக் கூர்மையாக வெளிப்படுத்திய திட்டமாகும். ஆனால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நீக்கம் செய்து விட்டார்கள். கிராமப்புற மாணவர்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீட்டை அவர்தான் கொண்டு வந்தார். கலைஞரின் திட்டங்களையெல்லாம் எதிர்த்து வந்த ஜெயலலிதா, இத்திட்டத்தை மட்டும் ஏற்று 25 சதவீதமாக உயர்த்தினார். நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. கிராமப்புற இடஒதுக்கீடே இரத்தானது. ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினார் கலைஞர்; அதையும் நீதிமன்றம் இரத்து செய்துவிட்டது.

(தொடரும்)

Pin It