கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பெரியார் 141ஆம் பிறந்த நாள் விழா

ஜெயில் சிங் பற்றிய இந்தி மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா

சென்னை சேப்பாக்கம் அரசினர் ஓமந்தூரார் தோட்டம் நிருபர்கள் சங்கத்தின் அரங்கில் 2019, செப்டம்பர் 22ஆம் நாள் மாலை 4 மணி முதல் இரவு 8.25 மணி வரை அனைத்திந்தியப் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மதச்சிறுபான்மை யினர் பேரவையின் சார்பில் பெரியார் 141ஆம் பிறந்த நாள் விழா,  வே.ஆனைமுத்து எழுதிய “ஜெயில்சிங் பிற்படுத்தப்பட்டோரின் உரிமைக் காவலர்” எனும் ஆங்கில நூலின் இந்தி மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா, உயர்சாதி ஏழைகளுக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு நீக்கப்பட்டு உயர்சாதியினர், பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் ஆகிய எல்லா வகுப்புகளுக்கும் விகிதாசார வகுப்புவாரி இடப்பங்கீடு கருத்தரங்கம் ஆகிய மூன்று நிகழ்ச்சிகள் தோழர் வே.ஆனைத்து தலைமையில் எழுச்சியோடு நடைபெற்றன.

நிகழ்ச்சியில் பேரவையின் பொதுச்செயலாளர் கலச. இராமலிங்கம் வரவேற்புரை ஆற்றினார். பேரவையின் மூத்த உறுப்பினர் இரூர் ச.இராதாகிருட்டிணன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். “கியானி ஜெயில்சிங் பிற்படுத்தப்பட்டோரின் உரிமைக் காவலர்” என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் வே. ஆனைமுத்து எழுதிய நூலினை முனைவர் பிரேம்சந்த் பதஞ்சலி பிச்டே வர்க் கே ரட்சக் என்னும் தலைப்பில் இந்தியில் மொழியாக்கம் செய்து அளித்தார். அந்த இந்தி நூலினைப் பேரவையின் துணைத்தலைவரும் உத்தரப்பிர தேசம் லக்னோ மாநகர முன்னாள் மேயருமான முனைவர் தாவூஜி குப்தா வெளியிட்டார். புதுதில்லியில் செயல்பட்டு வருகின்ற பெரியார்-அம்பேத்கர் தொண்டு நிறுவனத்தின் உறுப்பினரும் வழக்குரைஞருமான லெனின் வினோபரும் இராணிப்பேட்டை பாரதமிகு மின் நிறுவனத்தின் சமூக நீதிப்பேரவையின் செயலாளரான வே.இராசேந்திரனும் இந்தி நூலின் முதற்படியினைப் பெற்றுச் சிறப்பித்தனர்.

பேரவையின் புரவலர்  தலைவர் வே.ஆனைமுத்து அகவை 94 ஆண்டுகள் 93 நாள்கள் (பிறந்த நாள்.21.6.1925) நிரம்பப்பெற்று வழக்கமான தம் கணீரென்ற உரத்த குரலில் ஒங்கித் தம் தலைமை உரையை ஆற்றினார். ஆங்கில நூலினை இந்தி மொழியாக்கம் செய்தவர் முனைவர் பிரேம்சந்த் பதஞ்சலி ஆவர். அவர் பீகார் மாநிலத்தில் டி.எம்.பகல்பூர் பல்கலைக்கழகத்திலும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஏக்ஷளு பூர்வாஞ்சல் பல்கலைக்கழகத்திலும் துணைவேந்தராகப் பணியாற்றியதுடன் வடஇந்தியாவில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பேரவையினை நிறுவி விகிதாசார வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கோரிக்கைக்குப் பாடுபட்டு வருகிறார். ஆனைமுத்து பதஞ்சலி யின் இல்லத்துக்கு ஒருமுறை சென்று வந்திருக்கிறார். அதன்பிறகு தில்லியில் ஆனைமுத்து நடத்திய எல்லாக் கூட்டங்களுக்கும் பதஞ்சலி தம் தோழர்களுடன் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார்.

இடஒதுக்கீடு தொடர்பான பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் இந்தியில் மொழிபெயர்க்கச் செய்து அந்த நூலினைத் தில்லியில் 1979 மார்ச்சு 23 ஆம் நாள் ஆனைமுத்து வெளியிட்டார்; அந்நிகழ்வின் 40ஆண்டுகள் 6 மாதங்கள் நிறைவடையும் இந்த நாளில் இந்தியில் இந்த இரண்டாம் நுலினை வெளியிடச் செய்துள்ளார். இந்தி மொழிபெயர்ப்பினை மனமுவந்து செய்த முனைவர் பிரேம்சந்த் பதஞ்சலி அவர்களுக்கு பேரவையின் சார்பில் பொன்னாலான வட்டவடிவில் ஜெயில் சிங்கின் முகத்தோற்றம் பதித்த கல்பதித்த கணை யாழியை வே.ஆனைமுத்து பதஞ்சலியின் வலது கைவிரலில் அணிவித்து அவரைப் பெருமைப்படுத்தினார்.

இந்தக் கணை யாழியின் எடை 8 கிராம் பொன்னும் 2.50 கிராம் கல்லும் கொண்டது. முன்னதாக வித்துவான் கேசவ சுப்பையா அவர்களால் நிறுவப்பட்டு அவருடைய தலைமையில் வளர்க்கப்பட்டு இன்று தக்கலை ப.நடராசன் அவர்களை மாநிலத்தலைவராகக் கொண்டு செயல்பட்டு வருகின்ற தமிழ்நாடு விசுவகரும நண்பர்கள் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்டமும் திருநெல் வேலி மாவட்டமும் சேர்ந்து தங்களுடைய சங்க நிதியிலிருந்து  இந்தக் கணையாழியைச் செய்துகொண்டு வந்து வே.ஆனை முத்துவிடம் கொடையாக அளித்து பேரவையின் சார்பில் முனைவர் பிரேம்சந்த் பதஞ்சலிக்கு அணிவித்துச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்கள்.

இந்த அமைப்பின் குமரி மாவட்டத்தின் சார்பில் தக்கலை ப.நடராசன், வெள்ளை மடம் ஆர்.சுப்பையா ஆகிய இருவரும் மற்றும் நெல்லை மாவட்டத்தின் சார்பில் நாங்குநேரி சு.சதாசிவம், இடைகால் ஈ.எஸ்.ஆறுமுகம், நெல்லை நகரம் எம்.ஆர்.மாணிக்கம், நெல்லை நகரம் கே.எஸ்.கைலாசம் ஆகிய நால்வரும் விழாவில் கலந்து கொண்டு கணையாழி அணி விக்கும் நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்கள்.

நிகழ்ச்சியின் மற்றுமொரு முத்தாய்ப்பாக மண்டல் குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தக் கோரி 1990 பிப்ரவரி 25 ஆம் நாள் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பென்னாத்தூர் ஒன்றியத்தின் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் பொ.சுப்பிரமணியன் தலைமையில் முழுநாள் மிதிவண்டிப் பரப்புரைப் பயணத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலைப் பகுதியில் ஒரு சிற்றூரில் பிறந்து சென்னை வந்து தொழில் வணிகம் செய்து முன்னேறி சிறப்பாக வாழ்ந்து வருகின்ற இலக்கியப் புரவலர் மாம்பலம் ஆ.சந்திரசேகர் ஒடுக்கப்பட்டோர் பேரவயின் சார்பில் பரப்புரைப் பயணம் செய்த தோழர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்து உரையாற்றினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் முத்தரையர் வரலாற்று ஆய்வுப் பேரவையின் நிறுவுநர் கு.மா.சுப்பிரமணியன், மீனவர்விடுதலை வேங்கைகள் அமைப்பின் மாநிலத்தலைவர் புதுவை மங்கையர் செல்வன், தமிழ்நாடு விசுவகரும நண்பர்கள் சங்கத்தின்  மாநிலத்தலைவர் தக்கலை ப.நடராசன், காஞ்சிபுரம் முற்போக்கு சமூக நீதிப்பேரவையின் நிறுவுநர் டாக்டர் விமுனாமூர்த்தி, மறைமலைநகர் பெரியார் சமூக நீதிப்பேரவையின் பொருளாளர் மு.அரங்கநாதன், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் பொன். சுப்பிரமணியன் ஆகியோர் புலே, பெரியார், அம்பேத்கர், லோகியா, ஆனைமுத்து, கியானி ஜெயில்சிங், வி.பி.சிங் முதலானோர் இடஒதுக்கீட்டுக்கு ஆற்றிய பங்களிப்பினை விவரித்து உரையாற்றினர்.

இந்தி நூலை வெளியிட்ட முனைவர் தாவூஜி குப்தா, இந்தி நூலை மொழியாக்கம் செய்த முனைவர் பிரேம்சந்த் பதஞ்சலி ஆகியோர் சிறப்புரையாற்றிய பின்னர் சிறப்பு விருந்தினர் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன் இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஆனைமுத்து ஆற்றிய பங்களிப்பினை விரிவாக எடுத்துரைத்ததுடன் உச்ச நீதிமன்றத் தின் தீர்ப்பு பிற்படுத்தப்பட்டோருக்கு மாபெரும் கேட்டினை விளைவித்துவிட்டு என்றும் ஆனைமுத்து கோருகின்ற எல்லா வகுப்புகளுக்குமான விகிதாசார வகுப்புவாரி இடப்பங்கீடுதான் இதற்கான ஒரே தீர்வு என்றும் பேசினார். உயர்சாதிக்கான 10 விழுக்காடு ஒதுக்கீடு அரசமைப்புச் சட்டப்படி செல்லத்தக்கா என்பது   குறித்து அவையில் ஒருவர் எழுப்பிய வினாவுக்கு து.அரிபரந்தாமன், பெரியாரும் அம்பேத்கரும் லோகியாவும் ஆனைமுத்துவும் நீதிமன்றத்தை நாடவில்லை. அரசியல் தீர்வுதான் சரியானது, மக்களிடம் சென்று பாடுபடுங்கள் என்று கூறினார்.

ப.வடிவேலு நன்றி கூறினார். மறைமலை நகர் பெரியார் சமூக நீதிப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் மா.சமத்தவமணி நிகழ்ச்சித் தொகுப்புரை வழங்கினார்.