உயர்கல்வி நிலையங்களில் பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு செய்வதற்கு வகை செய்யும் சட்ட முன் வடிவு நாடாளுமன்றத்தில் ஆகஸ்டு 25 அன்று அறிமுகம் செய்யப்பட்டது.

நாடு முழுவதும் மிகுந்த ஆவலையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தாலும், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் அறிமுகம் செய்து வைத்துள்ள சட்ட முன் வடிவு ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் உள்ளதே?

கடந்த மே மாதம் தடை பெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை ஒரே தவணையில் நிறைவேற்றுவது என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர் அர்ஜுன் சிங் அறிமுகம் செய்து வைத்துள்ள சட்ட முன் வடிவில் 2007 ஆண்டில் இருந்து தொடங்கி, மூன்று ஆண்டுகளில் படிப்படியாக நிறைவேற்றி முடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முதல் ஏமாற்றம்.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் சட்ட முன்வடிவைக் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வந்தன. தமிழகச் சட்டப் பேரவையிலும் இது தொடர் பாக தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தலைமையில், சனநாயக முற்போக்குக் கூட்டணியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து இக்கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்திருந்தனர். ஆனால் இதற்கு மாறாக, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் கடைசி நாளன்று இந்த சட்ட முன் வடிவு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன் மீதான விவாதம் நடைபெற்று நிறைவேற்றுவதற்கு வழியில்லாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது இரண்டாவது ஏமாற்றம்.

சட்ட முன் வடிவு இக்கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படவில்லை என்பது ஒருபுறமிருக்கையில், அதனை நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்று மக்களவைத் தலைவர் அறிவித்திருக்கிறார். நிலைக் குழுவினரின் பரிந்துரைக்குப் பிறகு, இன்னும் என்னென்ன மாற்றங்களோடு இச்சட்ட முன்வடிவு நிறைவேற்றி வைக்கப்படும் என்பது மர்மமாகவே இருந்து வருகிறது. இது மூன்றாவது ஏமாற்றம்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள உயர்கல்வி நிலையங்கள் மட்டுமின்றி, தனியாருக்குச் சொந்தமான உயர்கல்வி நிலையங்களிலும், தனியார் வசமுள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களிலும் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது சமூக நீதியில் அக்கறையுள்ள தலைவர்கள் மற்றும் அமைப்புகளின் நிலைபாடு. ஆனால் அர்ஜுன் சிங் அறிமுகம் செய்துள்ள சட்ட முன்வடிவில் முதல் கட்டமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உயர்கல்வி நிலையங்களில் மட்டுமே இடஒதுக்கீடு பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நான்காவது ஏமாற்றம்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உயர்கல்வி நிலையங்களிலும்கூட 17 உயர் கல்வி நிலையங்களில் விதி விலக்கு அளிக்கப்பட்டு அவற்றில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஐந்தாவது மிகப் பெரிய ஏமாற்றம்.

இடஒதுக்கீட்டிலிருந்து 8 கல்வி நிறுவனங்களுக்கு மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவை விவரம்:

1. மும்பையிலுள்ள ஹோமி பாபா கல்வி மய்யம் மற்றும் அதனுடன் இணைந்துள்ள 10 நிறுவனங்கள்.

2. டாடா அடிப்படை ஆய்வு கல்வி மய்யம், மும்பை.

3. வடகிழக்கு இந்திரா காந்தி மண்டல சுகாதார மருத்துவக் கல்வி மய்யம், சில்லாங்.

4. தேசிய மூளை ஆராய்ச்சி மய்யம், மானேசர் குர்கான்.

5. சவகர்லால் நேரு உயர் அறிவியல் ஆராய்ச்சி மய்யம், பெங்களூர்.

6. இயற்பியல் ஆராய்ச்சி மய்யம், அகமதாபாத்.

7. விண்வெளி இயற்பியல் கூடம், திருவனந்தபுரம்.

8. இந்திய தொலையுணர்வு கல்வி மய்யம், டெக்ராடூன்.

எந்த விதி விலக்கும் அளிக்கப்படாமல் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வந்தது. குறிப்பாக சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்களிலும் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று வாதிடப்பட்டு வந்தது. ஏனெனில் மத நிறுவனங்கள் மட்டுமின்றி, தனியார் பலர் சிறுபான்மை என்ற போர்வைக்குள் புகுந்து கொண்டு கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். நாடு முழுவதும் இத்தகையோர் நடத்தும் கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ளன. எனவே இந்தப் போலி நிறுவனங்களுக்கும் விதி விலக்கு அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. எனினும், இந்த நிறுவனங்களில்கூட இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வகை செய்யப்படுவதற்கு சட்ட முன் வடிவில் ஏற்பாடு செய்யப்படவில்லை. ஒட்டு மொத்தமாக சிறுபான்மை நிறுவனங்களுக்கு விதி விலக்கு அளிக்கப்படுவதாகச் சட்ட முன்வடிவில் தெரிவிக்கப்பட்டிருப்பது 6 ஆவது ஏமாற்றம்.

27 விழுக்காடு இடஒதுக்கீட்டை மூன்று ஆண்டுகளில் படிப்படியாக நிறைவேற்றலாம் என்று தெரிவிக்கப் பட்டாலும் ஒவ்வொரு ஆண்டும் அது எந்த விகிதத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்பது சட்ட முன்வடிவில் வரையறுக்கப்படவில்லை. குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தில் எந்த அளவுக்கு அதிக இடங்களை அதிகப்படுத்த முடிகிறதோ அந்த அளவுக்கு இடஒதுக்கீட்டை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று சட்ட முன்வடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் எல்லா உயர் கல்வி நிலையங்களிலும் ஒரே விகிதமாக இருக்காது. நிறுவனத்துக்கு நிறுவனம் இது மாறுபடுவதற்கு வழி வகை செய்கிறது. இதுவும் ஒரு ஏமாற்றமாகும்.

இந்த ஏமாற்றங்களுக்கு மத்தியில் இந்த சட்ட முன்வடிவில் வரவேற்கத் தக்க ஒரே அம்சம், இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் (கிரீமிலேயர்) கடைபிடிக்கப்பட மாட்டாது என்பதாகும். மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெறு வோரில் வசதி படைத்தவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கக்கூடாது என்பது தான் கிரீமிலேயர் என்ற கோட்பாட்டின் அடிப்படை.

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்ட பிறகும் கூட பெரும்பாலான இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் கிடைக்கவில்லை என்று அந்த இடங்கள் நிரப்பப்படாமல் தொடர்ந்து காலியாகவே வைக்கப்பட்டுள்ளன. சில துறைகளில் இடஒதுக்கீட்டுக்குள் வராதவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கிரீமிலேயர் என்ற மேம்பாட்டை நடைமுறைப்படுத்தினால் காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரிக்கும் என்பதால் தான், அது கூடாது என்று சமூக நீதி ஆர்வலர்கள் வாதிடுகின்றனர். இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்ட முன்வடிவில் கிரிமிலேயர் இல்லையென்பது ஆதரவு அளிக்கும் அம்சம்.

நன்றி: ‘தமிழ் ஓசை’ நாளேடு

அமைச்சரவையில் நடந்தது என்ன?

“நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக சமூக அநீதிக்கு உள்ளாக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகங்கள், கடந்த காலத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்டுமாறு கோரவில்லை. அந்த அநீதியை இப்போதிருந்தே களையுமாறு கோருகின்றன” என்று அமைச்சர் டி.ஆர்.பாலு, அமைச்சரவைக் கூட்டத்தில் கூறினார். இவருக்கு ஆதரவாக சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி இராமதாசும், இராசயன மற்றும் உரங்கள் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவியும், அமைச்சர் அந்துலேவும் குரல் கொடுத்ததுடன், “இந்த இடஒதுக்கீடு உடனடியாக ஒரே வீச்சில் அமுலாக்கப்பட வேண்டும்” என்றும் வற்புறுத்தியிருக்கிறார்கள்.

இக்கட்டத்தில், அமைச்சர் கபில்சிபல் குறுக்கிட்டு, “பிற்படுத்தப்பட்டவர்களிடையே பொருளாதார அடிப்படையில் முன்னேறிய சமூகங்களுக்கு (ஆங்கிலத்தில் - ‘கிரீமிலேயர்’), இட ஒதுக்கீடு முறையைச் செயற்படுத்தக் கூடாது” என்றார். அப்போது இத் தருணத்தில் மூத்த அமைச்சரான சரத்பவார் தலையிட்டு, ‘கிரிமீலேயருக்கு’ ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார். பிற்படுத்தப்பட்ட சமூகங்களிடையே இத்தகைய பாகுபாடு தேவையற்றது என்பதையும் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.

அதோடு இடஒதுக்கீட்டுக்கு தந்திரமாகப் பொருளாதார அளவுகோலைப் புகுத்தும் இந்த சூழ்ச்சிக்கு அமைச்சர்கள் பாலுவும், அன்புமணி இராமதாசும், அந்துலேவும் பலமான எதிர்ப்பைத் தெரிவித்தன் விளைவாகச் சட்ட வரைவிலிருந்து ‘கிரீமிலேயர்’ நீக்கப்பட்டது. சரத்பவாரின் இந்தக் கோரிக்கைக்கு, இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பலமான ஆதரவைத் தெரிவித்ததால், ‘பிற்படுத்தப்பட்ட சமூகங்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது’ என்ற கருத்து வலிமை பெற்றது. அதையொட்டி, ‘உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு செய்வதில் பொருளாதார அளவுகோலை நடைமுறைப் படுத்துவதில்லை’ என்று அமைச்சரவை முடிவெடுத்தது.

சட்டத்துறை அமைச்சர் பரத்வாஜ், “நமது நாட்டில் நடைபெற்று வருவது சட்ட ஆட்சி. எனவே அரசியல் சட்டத்துக்கு விளக்கமளிக்கக்கூடிய அதிகாரங்களைக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் ‘கிரீமிலேயர்’ கருத்துக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்” என்று வாதாடியிருக்கிறார். பரத்வாஜ் ஒரு பார்ப்பனர் ஆவார். ஆனாலும் சமூகநீதியில் நம்பிக்கையுள்ள அமைச்சர்களில் ஒருமித்த குரலே வெற்றி பெற்றது.

Pin It