kuthoosi gurusamy 263“ஏ! படுபாவிகளா! நீங்கள் நன்றாயிருப்பீர்களா? உங்களுக்குக் கண் அவியாதா! நீங்கள் நாசமாய்ப் போக! என் தலையிலேயே கைவைத்து விட்டீர்களே! என் வீடு என்ன போஸ்டாஃபீசா, இப்படித் தீ வைக்க? நான் யார் வம்புக்காவது வருகிறேனா? என்னைத் தனி அறையில் தாளிட்டு, ஒரு தடிப்பயல் முழு நிர்வாணமாக்கிவிட்டு, உடல் முழுவதையும் தேங்காய் நாரினால் தேய்த்து நாள்தோறும் குளிப்பாட்டுகிறானே!

எட்டு வயதுப் பெண்கூட இதைப் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டாளே! நான் எத்தனை வருஷமாகப் பேச்சு மூச்சில்லாமல் இந்த மானக்கேட்டை சகித்துக் கொண்டிருக்கிறேன்? என் வாயில் ஊற்ற வேண்டியதை யெல்லாம் தலையில் ஊற்றுகிறான்களே, அடிமுட்டாள் பயல்கள்! அதையும் சகித்துக் கொண்டு தானே இருக்கிறேன்? இத்தனை சாதுவான எனக்குக் கூடவா கேடு செய்யத் துணிந்துவிட்டீர்கள்? என்ன கல்நெஞ்சமடா, உங்களுக்கு?

இப்படிக்கு,
பூங்கோவில் தாயாராம்மன்,
P/O. உலகளந்த பெருமாள், திருக்கோவிலூர் டவுன்.
- இந்தக் கடிதம் ஒன்று எனக்குக் கிடைத்தது (கனவில் என்க!)

இது என்ன அக்கிரமம் என்று கருதி, பெண் என்றால் ‘பேயும்’ இரங்கும் என்பதை நினைத்துக்கொண்டு, சிறிது இரக்கப்பட்டேன்! விஷயத்தை விசாரித்தேன்!

வெள்ளிக் கிண்ணங்கள் - ரூ. 350
வெள்ளிப் படிகம் - ரூ. 300
வெள்ளிச் சடார் - ரூ. 250
வெள்ளிக் கவசம் - ரூ. 500
தங்கக் குண்டுகள் 6 - ரூ. 150

-முதலியன, முதலியன! ஆக மொத்தம் 2,400 ரூபாய் மதிப்புள்ள நகைகள்! தொலையட்டும் என்றாலும், 3 பெரிய தாலி ரூ. 120, சங்கிலியுடன் ஒரு தாலி ரூ. 150! இவைகளும் போய்விட்டனவாம்!

19-ந் தேதி இரவு அம்மன் சந்நிதித் கதவுகளைப் பிளந்தும், மூலஸ்தான கதவுக்குத் தீ வைத்தும், அம்மனை நெருங்கித் திருடியிருக்கிறார்கள், கொஞ்சமும் கூச்சமோ அச்சமோ இல்லாதவர்கள்!

இம்மாதிரிப் பல ஊர்களில் கோவில் திருட்டுகள் நடந்திருக்கின்றன. திருட்டுத் தொழிலை உத்யோகமாக (வாழ்க்கைப் பிழைப்பாக) வைத்திருப்பவர் யாரும் திருடியிருக்க முடியாது! ஏனெனில் “கடவுளிடம்” வேண்டிக்கொண்டு (விகிதாசாரம் பேரம் பேசிக்கொண்டு) தான் இவர்கள் திருடவே புறப்படுகிறார்கள்! ‘சாமி’யைத் தொட்டாலே கண்ணைக் குத்திவிடும் என்று நம்புகிறவர்களே, இவர்கள்!
இதுசாமியல்ல! கல்தான்! செம்புதான்! கட்டைதான் நாம் தான் நாள்தோறும் கையாண்ட வருகிறோமே!- என்ற துணிச்சல் உடையவர்களைச் சேர்ந்தவர்கள்தான் இம்மாதிரிக் காரியங்களுக்குத் துணிய முடியும்!

யாராயிருந்தாலுஞ் சரி! வேண்டாம்! அம்மன், பாவம்! அழுகிறாள்! திருப்பிக் கொடுத்துவிடுங்கள்! தேவையானபோது கேட்டால் தருவாள்! நாமே போட்ட நகைதானே? நமக்கு ஆஸ்பத்திரி வேண்டும் என்று கேட்டால் கொடுக்கவாமாட்டாள்? நெஞ்சில் ஈரமேயில்லாத மாதுகூட தன் வீட்டில் நோய் என்றால் தன் நகையைக் கழற்றித் தருகிறோளே!

உலகளந்த பெருமாள் வீட்டு அம்மாவா தரமாட்டாள்? வேண்டாம்! திருடிப்போன தெய்வ பக்தர்களே! நகைகளைக் கொடுத்துவிடுங்கள்! போலீசாரிடம் “ரிப்போர்ட்” செய்திருக்கிறாளாம், என் தாயார்! திருட்டுக் கண்டுபிடிப்பதில் அவர்கள் திறமைதான் உங்களுக்குத் தெரியுமே! வேண்டாம்! கொடுத்து விடுங்கள்!

அம்மனுக்குக் கோபம் வருவதற்கு முன்பாகவே திருப்பிக் கொடுத்து விடுங்கள்! ஆஸ்திகத் திருடர்களே! உங்களுக்குத்தான் சொல்கிறேன்! திருப்பிக் கொடுத்துவிடுங்கள் பொதுச் சொத்தைத் தனி உடைமையாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்!

- குத்தூசி குருசாமி (25-7-50)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It