இந்தியாவில் பெரிய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் திராவிட சித்தாந்தத்தை பின்பற்றுகிறார்கள். நானும் அந்த சித்தாந்தத்தின் வாரிசுகளில் ஒருவன் என்பதால் தான் எனக்கு வாக்களித்து பதவியில் அமர்த்தியிருக்கிறார்கள். திராவிடக் கொள்கைகளையும், சித்தாந்தத்தையும் நான் பரப்ப வேண்டும் என்பது எங்கள் மக்களின் எதிர்ப்பார்ப்பு. திராவிட இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பில் நான் இருக்கிறேன், நான் இயங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய கொள்கைகள், திராவிட சித்தாந்தத்தின் அடிப்படையில் அமைந்தவை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளராகவும் பொறுப்பில் இருக்கிறேன். நான் பேசும் இக்கருத்துக்கள்,அரசியலமைப்பை உருவாக்கியவர்களால் முன்மொழியப்பட்டவை. மகத்தான திராவிடத் தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தமிழ்நாடு அரசின் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியலைப்புச் சட்டத்தை நாட்டுக்குத் தந்த டாக்டர் அம்பேத்கர் போன்ற என் முன்னோடிகளின் கருத்தைத்தான் நான் பேசுகிறேன்.udhayanithi stalin 640நான் இயங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இரண்டு கோடி பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்கள் நான் பேசும் சித்தாந்தத்தை உள்வாங்கி நம்புகிறவர்கள். எனக்கு எதிராக மனு செய்திருப்பவர், எங்கள் மாநிலத்தின் பெரும்பான்மையான மக்கள் நம்பக்கூடிய ஒரு சித்தாந்தத்தின் மீது அதற்கு நேரெதிரான கருத்துக்களை திணிக்க முயல்கிறார். எல்லா மதங்களின் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். இம்மண்ணில் நிலவும் எந்தவொரு நம்பிக்கையை குறைவாக மதிப்படவோ, அவமதிக்கவோ எனக்கு விருப்பமில்லை. அதே நேரத்தில் மதத்தின் பெயரால் சமூகத்தில் நிலவும் பகுத்தறிவற்ற மூட நம்பிக்கைகள், மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துவது போன்ற தீமைகளை எடுத்துரைப்பது எனது கடமை.

அரசியலமைப்புச் சட்டம் 25வது பிரிவின் படி பகுத்தறிவாளராகவும், நாத்திகராகவும் இருப்பதற்கான உரிமை எனக்கு உண்டு. 25வது பிரிவு ஆத்திகர்களுக்குக்கான பரப்புரை உரிமையை மட்டுமே தருகிறது என்று எனக்கெதிரான மனு போட்டவர் தவறாக புரிந்துகொண்டிருக்கிறார். நாத்திகத்தை ஏற்றுக்கொண்டவர்களும் அது குறித்து பரப்புரை செய்யும் உரிமையை இந்த பிரிவு வழங்குகிறது. இந்த நேர்மையான மன்றத்தில் ஆத்திகம் எதிர் நாத்திகம் விவாதம் தேவையற்றது. ஒரு நீதிமன்றம் தீர்ப்பளிக்ககூடிய பிரச்சனையும் இதுவல்ல.

தமிழ்நாடு என்பது 20ஆம் நூற்றாண்டில் சமூகநீதியின் குரலை சத்தமாய் ஒலித்த மாநிலம். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் தற்போது தமிழ்நாட்டை ஆண்டுக்கொண்டிருக்கும் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் போன்றோர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சாதிய மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடி சமூகநீதிப் புரட்சியில் தங்களைப் பிணைத்துக் கொண்டவர்கள். சமூக அநீதிகளைக் களைய இதே பணியை தேசியளவில் செய்தவர் டாக்டர் அம்பேத்கர். தன்னுடைய வீட்டிலோ அல்லது சமூகத்திலோ பெண்களுக்கு சமமான இடத்தை பாரம்பரியமான இந்து நம்பிக்கை வழங்கவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.

ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கு கல்வியிலோ, வேலைவாய்ப்பிலோ சம இடம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் பெண்களுக்கான சம உரிமை மற்றும் வாய்ப்புகள் குறித்த அக்கறையோடு சிந்திப்பது நான் சார்ந்த திராவிட இயக்கம். எனவே வேறெங்கும் இல்லாத அளவுக்கு இங்குதான் பெண்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கக் கூடிய எண்ணற்ற திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. பெண்களுக்கு மட்டுமல்ல; மூன்றாம் பாலினத்தவருக்கும் சம உரிமையும், சமூகத்தில் அவர்களுக்கான நியாயமான இடத்தையும் கொடுத்து சுயமரியாதையை முன்னெடுக்கிறது எங்கள் திராவிட சித்தாந்தம். இதுவும் கூட பாரம்பரியமான நம்பிக்கைகளின் அடிப்படையில் மறுக்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சனாதனம் குறித்து பேசிய வழக்கில் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.

Pin It