மேல்நாடுகளில் இது சமயம் வெகு தீவிரமாய் நடைபெற்று வரும் அறிவு இயக்கப் பிரசுரங்கள் பல என்பதும் அதுவே இந்தக் காலத்திய முக்கியமான காரியமாய் எங்கும் கருதப்படுகின்றது என்பதும் யாவருமறிந்த விஷயங்களாகும். அவற்றுள் ருஷியாவிலும், சைனாவிலும், ஜெர்மனியிலும், துருக்கியிலும், அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் நடப்பவைகள் மிகவும் தீவிரமாகவும், வேகமாகவும் நடைபெறுபவைகளாகும்.

periyar nagammai 350நிற்க, இவ்வியக்கங்கள் முழுவதும் மிகுதியும் மனித சமூகத்தின் அறிவு வளர்ச்சியிலும் சமரசத்திலுமே கவலை வைத்து நடத்தப்பட்டு வருகின்றவைகளாகும் என்பதில் யாருக்கும் ஆnக்ஷபனை இல்லை. இதில் கலந்து முக்கிய பங்கெடுத்து வேலை செய்து வருபவர்களும் பெரிதும் உலகினோரால் வீரர்கள் என்றும், அறிவாளிகள் என்றும் உண்மையாளர்கள் என்றும், மதிக்கப்படக் கூடியவர்களாகவே இருந்து வருவதும் யாவரும் அறிந்த விஷயமாகும்.

ஆகவே இவ்வறிஞர்களான பெரியோர்கள் மக்களுக்கு அறிவையும், சமத்துவ உணர்ச்சியையும் ஊட்டுவதற்காக முயற்சி செய்து வரப்படும் பிரசாரங்கள் பெரிதும் மனித சமூகத்தின் எல்லாவித கெட்ட காரியங்களுக் கும் ஆதாரமாய் முதலில் மதமும் மதத்தலைவர்கள் உபதேசமும் பிறகு கடவுளும் காரணமாய் ஏற்பட்டுவிட்டதாகக் கண்டுப்பிடிக்கப்பட்டு அவைகளைப் பற்றிய மக்கள் அபிப்பிராயங்களை அடியோடு தலைகீழாய் மாற்றுவதையே லக்ஷியமாய்க் கொள்ள வேண்டியதாகி அந்தப்படி பிரசாரம் செய்து கொண்டு வருகிறார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் கடவுள் என்பதான ஒரு பொருள் எவ்வித திணை பால் உடையதாக இல்லை என்கின்ற தத்துவத்தை அடிப்படையாக வைத்து அதன் அவசியத்தையும் மறுத்து காலத்திற்கும், இடத்திற்கும் தகுந்தபடி பிரசாரம் செய்து வருகின்றார்கள். இந்த உணர்ச்சியானது பொதுவாகவே அறிஞர்களாய் இருப்பவர்களுக்கு எவ்வித சுயநலமுமற்ற தன்மையோடும் விருப்பு, வெறுப்பும் காரணமாய் இல்லாமலும் மக்களை மக்கள் சுயநல காரணமாய் அறிவில்லாமற் செய்து ஆதிக்கம் செலுத்தி கொடுமைப்படுத்தி வருவதைக் கண்டு சகியாமலே உண்மையான ஜீவகாருண்யத்தின் மீதே ஏற்பட்டு நடைபெற்று வருகின்றன. இதற்காக அப்பெரியோர்களால் பல பல இடங்களில் பல இயக்கங்கள் தோற்றுவிக்கப் பட்டதுடன் பல புத்தகங்களும் எழுதப்பட்டு பல பத்திரிகைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

அவற்றில் ஒன்றான அதாவது லண்டனில் ஸ்தாபித்து நடைபெற்று வரும் “ரேஷனலிஸ்ட்டு பிரஸ் அசோசியேஷன்” (அறிவு ஆராய்ச்சியாளர்களின் அபிப்பிராய பதிப்பு சங்கம் லிமிடெட்) என்னும் சங்கத்தாரால் பல புத்தகங்கள் அச்சிட்டு அடக்கவிலைக்கு வினியோக்கப்பட்டு வருவதுடன் 1855-ஆம் வருஷம்­ முதல் அதாவது சென்ற 46 வருஷங்களாகவே ஒரு பத்திரிகையும், “லிட்டரரி கைய்ட்”(அறிவு விளக்கம் ) என்னும் பேரால் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த இயக்கத்திற்கு இந்தியாவில் அநேகர் அங்கத்தினர்களாக இருந்து வருகின்றார்கள். ஆகவே அதன் பிப்ரவரி பத்திரிகையில் “இந்தியாவில் அறிவு இயக்கம்” என்னும் தலைப்பில் ஒரு வியாசம் எழுதப்பட்டிருக்கின்றது. அவ்வியாசம் அவ்வியக்கத்தைச் சேர்ந்த இந்திய நண்பர் ஒருவராலேயே எழுதப்பட்டதாக விளங்குகின்றதானாலும், அது மேல் நாடுகளின் கவனத்தையும் இழுத்திருக்கின்றது என்பதில் ஐயமில்லை.

அதில் காணப்படுவதின் சுருக்கமாவது :-

“இந்திய சரித்திரத்தில் அதிசயக்கத்தகுந்தபடி இந்த 5 வருஷ காலத்தில் ஒரு பெரிய புத்துணர்ச்சிப் பிரவாகம் இருகரையும் புரண்டு போய்க் கொண்டிருக்கிறது. அதாவது சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒரு இயக்கம் ஐந்தாறு வருஷ காலத்திற்கு முந்தி சென்னை மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு மக்களால் வெகு காலமாக மரியாதை செய்யப்பட்டு வந்த அபிப்பிராயங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் அஸ்திவாரத்திலேயே ஆட்டம் ஏற்படும்படி செய்துவிட்டது. இந்த இயக்கமானது ஆரம்பத்தில் இந்துக்களில் 100க்கு 97 பேர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி மக்களை ஏமாற்றிப் பிழைத்து வந்த சோம்பேறிச் சுயநலப் பார்ப்பனீயத்தின் மீது பாய்ந்து அதைக் கண்டிப்பதின் மூலமாய் தொடங்கிப் பிறகு ஜாதி வித்தியாசத்தைக் கண்டிப்பதில் இறங்கி பிறகு விக்கிரக ஆராதனையையும், பூஜை, உற்சவம் முதலிய செலவுகளையும் கண்டித்துப் பிறகு இந்து மதத்தையும் கண்டித்து அதன் பிறகு மதங்கள் என்பவைகளையெல்லாம் பொதுவில் கண்டிக்கத் தொடங்கிவிட்டது. இந்த நிலையானது மேலும் மேலும் வளர்ந்து தானாகவே பிறகு ஆராய்ச்சித் துறையில் இறங்கி தயவு தாட்சியண்ணியின்றி பகுத்தறிவை உபயோகிக்கச் செய்து விட்டதால் இப்போது மனிதனுக்குக் கடவுள் என்பதும் அவசியமில்லாதது என்று கருதி அதையும் மறுக்கத் தொடங்கிவிட்டது. இந்த மாதிரி ஒரு இயக்கம் தோன்றி மூடநம்பிக்கையிலும், பிடிவாதத்திலும் குருட்டுப் பழக்க வழக்கங்களிலும் புதைபட்டு கடவுள் பேரால் தன்னறிவு கெட்டுக் கிடந்த மக்களுக்கு ஒரு புத்துணர்ச்சி உண்டாக்கியதானது இந்தியாவின் சரித்திரத்தில் இதுவே முதன்மையானது என்பது குறிப்பிடத் தகுந்ததாகும். இதுசமயம் இந்தியாவில் இந்த ஒரே ஒரு அறிவு இயக்கம் இருப்பதால் இந்த இயக்கமானது பயமற்ற தன்மையில் பூரண பகுத்தறிவையும் வலியுறுத்தி பிரசாரம் செய்ய வேண்டியதாகி விட்டதின் பயனாய் ஏராளமான எதிற்புகள் பயங்கரத்தன்மையோடு பல பக்கங்களில் இருந்து தோன்றி தொல்லைகள் விளைவிக்க வேண்டியவைகளாகி விட்டன.

ஆனால் இவ்வியக்கத்தலைவரும் இவ்வியக்கப் பிரசாரத்திற்கு ஆதாரமான ‘குடி அரசு’ என்னும் தமிழ் வாரப்பத்திரிகையின் பத்திராதிபருமானவர் சிறிதும் சளைக்காமலும் பயப்படாமலும் செய்து வந்த வேலையின் பயனாய் இவ்வியக்கக் கொள்கைகள் வாலிபர்களின் மனதைக் கவர்ந்து விட்டதால் அவர்கள் தங்கள் பகுத்தறிவு, காரணம் என்னும் ஆயுதங்களால் எதிரிகளான வைதீகர்களை தலையெடுக்க ஒட்டாதபடி செய்துவிட்டதுடன் எப்படிப்பட்டவர்களுடனும் வாதுக்கு நின்று தங்கள் கொள்கைகளை நிலை நிறுத்த வரிகட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த இயக்கத்தின் அநேக கொள்கைகளில் சமீபத்தில் வரும் ஜனகணிதத்தில் ஜாதிமதப் பெயர்கள் அறிவிக்கப்படக்கூடாது என்பதும் ஒன்றாகும். இதற்கு அரசாங்க முயற்சியும் உணர்ச்சியும் எதிராக இருந்த போதிலும் அனேகர் தங்கள் ஜாதி மதப் பெயர்களை கொடுப்பதில்லை என்றே முடிவுகட்டி இருக்கின்றார்கள். ஆகவே இந்த இயக்கம் இந்தியாவில் செய்துள்ள வேலையை அறிவதற்கு சமீபத்தில் வரும் ஜனகணிதம் ஒரு சாதனமாகும்”

என்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

(குடி அரசு - கட்டுரை - 22.02.1931)

Pin It