“கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை.

2005ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. ‘திராவிட இயக்கக் கருத்து நிலையின் இன்றைய பொருத்தப்பாடு’ என்ற தலைப்பில் பேராசிரியர் சிவத்தம்பி ஒரு நூலை எழுதினார். இவர் நா.கைலாசபதி போன்ற மார்க்சிய சிந்தனை கொண்ட தமிழறிஞர் களின் தொடர்ச்சியாகவும், தமிழ் ஆளுமை யாகவும், அறிஞராகவும் உலகம் முழுவதும் அறியப்பட்டவர். ஆனால் இவரைத்தான் உலகத் தமிழ் மாநாட்டில் அனுமதிக்காமல் விமானத்திலேயே வைத்து அப்படியே அனுப்பினார் ஜெயலலிதா.

அந்த நூலில் அவர் எழுதிய சில சொற்களை மட்டும் இங்கே குறிப்பிட வேண்டும். “தமிழ்நாட்டில் வாழும் பிராமணர் அல்லாத பாதிக் குடும்பங்களைச் சேர்ந்த வர்கள் தங்களின் சமூக நிலைமையையும், தங்களின் அசைவு இயக்கத்தையும் வரையறை செய்த பிராமண கருத்து நிலை தம்மீது திணித் ததென அவர்கள் கண்ட மேலாண்மைக்கு எதிரான போராட்டங்களினூடே மேற் கிளம்பியதும், அந்தப் போராட்டங்களை நியாயப்படுத்துவதற்கு பயன்பட்டதுமான சிந்தனை நிலைப்பாடே திராவிடக் கருத்து நிலையாகும். பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள் என்ற சமூக மேலாதிக்கத்தை எதிர்த்துக் கிளம்பியதுதான் திராவிடக் கருத்து நிலையாகும். அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தமிழ் பிரக்ஞை (தமிழைப் பற்றிய சிந்தனை) ஏற்படுவதற்கு அது தளமாக அமைந்தது. திராவிடம் என்பது ஆரியத்தின் எதிர்நிலையாகக் கருத்தில் கொள்ளப்பட்டது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்” என்று எழுதினார் சிவத்தம்பி.

4 மொழி பேசுபவர்களைக் கொண்டு திராவிடம் என்று குறிப்பிடவில்லை. ஆரிய ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு சொல்லாகத் தான் திராவிடம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை ஈழத்தைச் சேர்ந்த தமிழறிஞர் சிவத்தம்பி கூறுகிறார். இவர் எழுதிய மற்றொன்றையும் அறிய வேண்டும். “இலங்கை யின் தமிழ் தேசிய உணர்வு உருவாக்கத்திலும், எடுத்துரைப்பிலும் திராவிட இயக்கத்தின், பெரியாரின் செல்வாக்கு மிகக் கணிசமான தாகும்” என்கிறார். அதாவது, ஈழத்தில் விடுதலைப் போர் நடக்கிறது என்றால், தமிழ் தேசிய உணர்வு வந்திருக்கிறது என்றால் அதில் திராவிட இயக்கத்துக்கும், பெரியாருக் கும் கணிசமான பங்கு இருக்கிறது என்பதைத் தான் அவர் சொல்லுகிறார்.

இதில் திமுகவையும் சேர்த்துப் பேச வேண்டியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பின்னால், சிலவற்றை ஏன் செய்ய முடியாமல் போய்விட்டது என்பதையும் அவர் ஆய்வு செய்தார். “திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் பங்கெடுத்து வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தது. ஆனால் திராவிடக் கருத்து நிலையை ஏற்றுக் கொள்ளாத, இதைக் குரோத உணர்வுடன் நோக்கிய கருத்து நிலையாளர்களை பெரும் பாலும் கொண்டிருந்த உத்தியோகஸ்தர் குழுவினர் களாலேயே அப்போது ஆட்சி நிர்வாகம் நடத்தப் பட்டது” என்கிறார். இன்றைக்கு இருக்கிற கிரிஜா வைத்திய நாதன் போல அன்றைக்குப் பலர் இருந்திருக் கிறார்கள் என்பதைத் தான் அவர் சொல்லு கிறார். அதை மனதில் வைத்துக்கொண்டு திமுகவின் செயல்பாடுகளை எடை போடுங்கள் என்கிறார்.

திராவிடக் கட்சி ஆட்சிக்கு வந்தவுடனேயே நிறைய செய்திருக்கலாமே, ஏன் செய்யவில்லை என்று இப்போதும் கூட சொல்கிறார்கள். தீர்மானம் போட்டுவிட லாம், யார் அதை நடைமுறைப்படுத்துவது? பெண்கள் கல்வி பெற வேண்டும் என்பதற்காக திருமண உதவித் தொகைகளை கலைஞர் வழங்கினார். முதலில் 8ஆவது படித்தால் 5,000 ரூபாய் என அறிவித்தார். பிறகு அது 20,000 ரூபாய் வரை உயர்ந்தது. 2001ஆம் ஆண்டில் கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது திருமண உதவித் தொகையை ரூ.25,000ஆக உயர்த்தினார். ஒரு பெண் அப்போது திருமண உதவித் தொகைக்கு விண்ணப்பித்திருந்தார். அதிகாரிகள் அந்தப் பெண்ணுக்கு உதவித் தொகை இல்லையென்று மறுத்துவிட்டனர். 8ஆவது படித்திருந்தால்தான் உதவித் தொகை, நீ 10ஆவது படித்திருக்கிறாய். எனவே உனக்கு உதவித் தொகை இல்லையென்று திருப்பி அனுப்பிவிட்டார்கள். எட்டாவதா வது படிக்கட்டும் என்பதற்காகக் கொண்டு வந்த சட்டத்தை அதிகாரிகள் எப்படிப் புரிந்து கொண்டு செயல்படுகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது. அப்போது கலைஞர் ‘முரசொலி’யில் இதைச் சுட்டிக் காட்டி, “நான் எப்படி, யாரை வைத்து ஆட்சி செய்கிறேன் என்பதைக் கொஞ்சம் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று எழுதினார்.

இவர்களுக்காவது புரியவில்லை. ஆனால் தொடக்கத்தில் திராவிடக் கருத்தியலை எதிர்ப்பவர்கள், இதை ஒரு குரோத உணர்வோடு பார்த்தவர்கள் அதிகாரிகளாக இருந்த காலகட்டத்தில்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்தது. 1921ஆம் ஆண்டிலேயே நீதிக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் இட ஒதுக்கீட்டு ஆணை பிறப்பித்து இருக்கிறார்கள். 1922, 1923 என தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளிலும் ஆணை பிறப்பித்தார்கள். ஆனால் நடக்கவே இல்லை. என்னவென்று பார்த்தால் அப்போது தாலுகா அலுவலகத்தில் பணிக்கு ஆட்கள் தேவையென்றால் வட்டாட்சியரே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆட்கள் வேண்டு மென்றால் அவர்களே நியமித்துக் கொள்ள லாம். அப்போது பார்ப்பனர்கள்தான் அதிகாரிகளாக இருந்தனர். அதனால் பார்ப்பனர்களையே அவர்கள் நியமித்துக் கொண்டனர்.

எனவே அவரவர்க்கு தேவையானவர்களை நியமித்துக்கொள்ளும் சூழல்தான் நிலவியது. அதன்பிறகுதான் நீதிக்கட்சி Staff Selection Commission-ஐ உருவாக்கியது. எந்தவொரு அரசு அலுவலகத்திற்கும் ஆட்கள் தேவை யென்றால் எங்களுக்கு சொல்லுங்கள், நாங்கள் எடுத்து அனுப்புகிறோம் என்று நீதிக்கட்சி முடிவெடுத்து நடைமுறைப்படுத்தியது. இப்போது இருக்கிற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொடக்கம் அதுதான்.

நம்மீது அதிகாரம் செலுத்திய, நம்மை அடக்கி வைத்திருந்த, தமிழினத்தை வளர விடாத கூட்டம்தான் ஆரியக் கூட்டம். அதற்கு எதிராக எழுந்ததுதான் திராவிடம். ஆரியத்தின் ஆதிக்கத்துக்கு எதிரான சிந்தனை தான் திராவிடம் என்பதை ஈழத்தில் இருப்பவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இங்கேயே இருப்பவர்களுக்குத்தான் தெரிவ தில்லை.

அம்பேத்கரை ஏற்றுக்கொண்டவர்கள் என்று சொல்லிக்கொண்டு சிலர் தூய தமிழ் வாதம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பெங்களூர் குணா தொடங்கி பலர் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். திராவிடம்-ஆரியம் என்பதை அம்பேத்கர் ஏற்றுக் கொள்ளவே இல்லை என்பதையும் கொஞ்சம் பேர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். “தென்னாட்டில் இருக்கிற பார்ப்பனர்களும் திராவிடர்கள்தான். வட நாட்டில் இருக்கிற சமார்களும் (இங்கிருக்கிற அருந்ததியர் களைப் போல) ஆரியர்கள்தான்” என்றுதான் அம்பேத்கர் சொன்னார். இனக்கலப்பு எல்லா இடங்களிலும் ஏற்பட்டுவிட்டது என்பதைக் குறிக்கும் விதமாக அம்பேத்கர் இதைச் சொன்னார்.

பெரியாரும் இதையே சொல்லியிருக் கிறார். இங்கிருக்கிற ஆரியப் பார்ப்பனர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஆரியர்களின் நேரடி வாரிசுகள் என்று நான் சொல்ல வர வில்லை. இரத்தம் கலந்துவிட்டாலும், அவர்களுடைய ஆச்சாரம், அனுஸ்டானம் நம்மோடு கலந்துவிட்டதா என்பதைப் பார்த்துதான் அவர்களைப் பிரிக்கிறேனே தவிர இரத்தப் பரிசோதனை செய்து அவர்களைப் பிரிக்கவில்லை என்பதை மிகத் தெளிவாக பெரியார் சொல்லுகிறார்.

1946ஆம் ஆண்டு ‘சூத்திரர்கள் யார்’ என்ற நூலை அம்பேத்கர் எழுதினார். அதில் பிற்படுத்தப்பட்ட மக்களான சூத்திரர்கள் எவ்வாறு உருவானார்கள் என்று ஆய்வு செய்து எழுதியிருந்தார். அதற்குப் பிறகு 2 ஆண்டுகள் கழித்து 1948ஆம் ஆண்டில் ‘தீண்டாதார் யார்’ என்று ஒரு நூலை அம்பேத்கர் எழுதியிருக்கிறார். தாழ்த்தப்பட்ட மக்கள் மீது எப்படி தீண்டாமை வந்தது, அவர்கள் எப்படி தனி ஜாதி ஆனார்கள், எப்படி தீண்டாதவர்கள் ஆக்கப்பட்டார்கள் என்று இந்த நூலில் எழுதியிருக்கிறார்.

அதை தலித் எழில்மலை அவர்கள் ‘மண்ணின் மைந்தர்கள் மறைக்கப்பட்ட வரலாறு’ என்ற பெயரில் தலித் அகாடமி வழியாக தமிழில் வெளியிட்டிருந்தார்.

(தொடரும்)

தொகுப்பு: ர.பிரகாசு

Pin It