பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில் (09-02-2020) ஞாயிறு அன்று, கோவையில் நடத்தப்பட்ட நீலச்சட்டைப் பேரணியிலும் மாநாட்டிலும் தமிழகமெங்கும் உள்ள ஆதரவாளர்களும், பொதுமக்களும்,  கூட்டமைப்பின் உறுப்பு அமைப்பினரும் வந்து பெருந்திரளாய் ஊக்கத்தோடு பங்குபெற்ற நிகழ்ச்சி பேரெழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது; இது ஆக்கவழிப்பட்ட விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

nilasattai kovai 600இந்தமாநாடு தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் முகாமைத்துவம் (முக்கியத் துவம்) பெறுகிறது; ஒருங்கிணைப்புக்கான புதிய பாதைக்கு நம்பிக்கையை ஊட்டியிருக்கிறது.  தி.வி.க. தலைவர் தோழர் குளத்தூர் தா.செ .மணி பேரணிக்குத் தலைமையேற்க, ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் இரா.அதியமான்  பேரணியைத் தொடங்கி வைத்தார். பறையிசை முழக்கங்களோடு எழுச்சியாகத் தொடங்கிய பேரணியானது கோவை பாலசுந்தரம் சாலையே இடம் கொள்ளாத அளவிற்கு நீண்டிருந்தது; நீலக்கடலாய்க் காட்சியளித்தது.

பேரணியைப் போலவே மாநாடும், நிமிர்வு, நிகர் ஆகிய கலைக் குழுக்களின் எழுச்சியான பறையிசை முழக்கத்தோடு தொடங்கியது. இந்நிகழ்வில் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தைபெரியார், காரல்மார்க்சு, தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், புலே உள்ளிட்ட பல தலைவர்கள் குறித்து எழுச்சியான பாடல்கள் பாடப்பட்டன. மாநாட்டுத் தொடக்கத்தில் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் கட்சியின் தலைவர் குடந்தை அரசன் வரவேற்புரை யாற்றினார். கருத்துரை அமர்வில், தமிழக ஒடுக்கப் பட்டோர் விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலர் நிலவழகன் உரையாற்றினார்.

அடுத்ததாக, நீரோடை அமைப்பின் தலைவர் நிலவன், ஆதித்தமிழர் கட்சியின் தலைவர்  கு.ஜக்கை யன், தியாகி இமானுவேல் பேரவையின் தலைவர் பூ.சந்திரபோசு, தமிழக மக்கள் சனநாயகக் கட்சியின் தலைவர் செரீப் ஆகியோர் கருத்துரையாற்றினார். மாநாட்டுக்குத் தலைமையேற்ற தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் உரையாற்றினார். 

தமிழர் விடுதலைக்கழக சௌ.சுந்தரமூர்த்தி சிறப்புச் செய்தார். அடுத்ததாக, பார்ப்பனியம்.. சாதியம்.. வேரறு! எனும் நூலினைக் கூட்டமைப்பின் சார்பாக, மா.பெ.பொ.க. வாலாசா வல்லவன் வெளியிட, தமிழர் விடியல் கட்சி டைசன், திராவிடத் தமிழர் கட்சித் தலைவர் சி.வெண் மணி உள்ளிட்ட தலைவர்கள் நூலைப் பெற்றுக் கொண்டார்கள். சிறப்புரை அமர்வு: அடுத்ததாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தி.வேல்முருகன் சிறப்புரை யாற்றினார். இவருக்கு இரா.அதியமான் அவர்கள் சிறப்புச் செய்தார். சிறப்புரையாற்றிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.ஜவாகிருல்லாவுக்குத் மே 17இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சிறப்புச் செய்தார்.

மார்க்சியப் பெரியாரியப் பொது வுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் வே.ஆனைமுத்து தன் 95 ஆம் அகவையிலும் ஊக்கத்தோடு, வெள்ளம் போல் தமிழர் கூட்டம். என்று உரக்கச் சொல்லிப் பேசத் தொடங்கினார். அவருக்குத் தோழர் ஓவியா சிறப்புச் செய்தார். அடுத்துப் பேசிய காஞ்சி மக்கள் மன்றம் மகேசுக்கு, நாகை திருவள்ளுவன் சிறப்புச் செய்தார். நோக்கவுரையாற்றிய பொழிலன், தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் பெரியாரிய உணர் வாளர்கள் கூட்டமைப்பு வரலாற்றுத் தேவை குறித்தும் நோக்கங்கள் குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தார்.  அவருக்கு, மக்கள் அதிகாரம் அமைப்பின் சூர்யா, சிறப்புச் செய்தார். சிறப்புரையாற்றிய வழக்குரைஞர் கயல் (அங்கயற்கண்ணி) தோழருக்கு, மக்கள் விடுதலைமுன்னணியின் மாரிமுத்துவும் தொடக்க உரையாற்றிய தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர்  நாகை திருவள்ளுவனுக்கு தமிழ்வழிக்கல்வி இயக்க சின்னப்பத் தமிழரும் சிறப்புச் செய்தனர். தீர்மானங் களை முன்மொழிந்து பேசிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்திக்கு, தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கத்தின் பொறுப் பாளரான மதிவண்ணன் சிறப்புச் செய்தார்.

அடுத்து, போராட்ட அறிவிப்புத் தீர்மானம் முன் மொழியப்பட்டதைப் பல்லாயிரக்கணக்கில் அமர்ந் திருந்த பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்று முழக்கமிட்டனர்.

மாநாட்டு மேடையிலேயே திராவிடர் கழகத்தின் வீரமணி அவர்கள் இரு சாதி மறுப்பத் திருமணங்களை நடத்தி வைத்தார். முதலாவதாக, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் கழகத் தோழர் தபசிக் குமரனின் மகளுக்கும் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் ஈசுவரனின் மகனுக்கும் இரண்டாவதாக, நடைபெற விருக்கும் திருமண இணையர்களும் அவர் அமைப் பின் உறுப்பினர்கள் தாம். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ரம்யாவுக்கும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாசுக்கும் திருமணத்தை நடத்திவைத்துப் பேசு கையில், சாதி ஒழிப்பு மாநாட்டில் சாதிமறுப்புத் திருமணங்கள் நடைபெற்றிருப்பது சிறப்புக்குரியது; சிக்கனமான திருமணம் இது என்று சொல்லி, இணையர்களைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாகச் சிறப்புரையாற்றிய கி.வீரமணிச் திராவிடத் தமிழர் கட்சி சி.வெண்மணி சிறப்புச் செய்தார்.

சமூகநீதி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மாநாட்டிற் கான நன்கொடையாக 25,000 உருவாய் வழங்கினர். அடுத்ததாக உரையாற்றிய இந்திய-சமூக சனநாயகக் கட்சி (எசு.டீ.பி.ஐ) அமைப்பின் தமிழகத் தலைவர் தோழர் தெகலான் பாகவி அவர்களுக்கு, தமிழக மக்கள் முன்னணியின் தோழர் வழக்குரைஞர் பாவேந்தனும் ஓவியாவுக்கு, வழக்குரைஞர் பாலமுருகனும் சிறப்புச் செய்தனர். அடுத்து, தமிழ்த்தேச மக்கள் முன்னணி மீ.த.பாண்டியன் அவர்களுக்கு, பு.இ.மு. மலரவன் சிறப்புச் செய்தார்.

அடுத்துப் பேசிய திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் குளத்தூர் தா.செ.மணி அவர்களுக்கு, வெல்பேர் பார்ட்டி ஆப்இந்தியா' கட்சியின் அப்துல் ரகுமானும், சொல்லாய்வு அறிஞர் அருளியாருக்குத் தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சியின் தோழர் செல்வமணியம், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேர வையின் தலைவர் உ.தனியரசுக்கு, செங்கோட்டை யனும் ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் இரா.அதிய மானுக்குத் தமிழர் விடியல் கட்சி மா.டைசனும் சிறப்புச் செய்தனர்.

சிறப்புரை அமர்வில் நிறைவுரை ஆற்றிய வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு, தந்தை பெரியார் திராவிடர் கழக வெ. ஆறுச்சாமி சிறப்புச் செய்தார். அத்துடன், தோழர் ஆறுச்சாமி நன்றியுரை யாற்றினார்.

வரலாற்றுச் சிறப்புக்குரிய இந்நிகழ்விற்கான உழைப்பில் பங்கு பெற்றோர்க்கும், திராளக வந்திருந்து பேரணியிலும் மாநாட்டிலும்பங்குபெற்றோர்க்கும் உளமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வோம்.

இம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்களில் சில

கொள்கைத் தீர்மானங்கள் :

1) சாதிவெறி மதவெறியைத் தூண்டி மக்களிடையே ஒரு பக்கம் பகை உணர்வுகளை உருவாக்கிக் கொண்டி ருப்பதோடு ஒரே மக்கள், ஒரே சட்டம், ஒற்றைப் பண்பாடு, ஒற்றை அடையாளம் என்கிற வகையில் பார்ப்பனிய அதிகார வெறி கொண்டு இயங்குகிற இந்திய அரசு, இந்தியாவிற்குள் உள்ளடக்கப்பட்டுள்ள பல்வேறு மொழித் தேசங்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் அடையாளங்களையும் மறுக்கிறது. தமிழ் ஈழ ஏதிலியர் களுக்குக் குடியுரிமை வழங்க மறுப்பதோடு, மதச் சிறுபான்மை மக்களுக்கும் குடியுரிமை வழங்க மறுத்து இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றுகிற முயற்சி செய்கிற நோக்கில் உள்ள இந்திய அரசை இம் மாநாடு வன்மையாகக்  கண்டிக்கிறது. இந்நிலையில் மக்கள் தங்கள் இன அடையாள உரிமைகளையும், மொழித் தேச அளவில்  தங்களைத் தமிழர்கள் என்றே பதிந்து கொள்ளவும், தமிழக மக்களைக் குடியுரிமையோடு இங்கு வாழ வைக்கவும், மதச் சிறுபான்மை யினருக்கு எவ்வகை இடர்களும் ஏற்படாத வகையில் குடியுரிமை வழங்கவும் இம் மாநாடு வலியுறுத்துகிறது..

2) தமிழகத்தில், சாதி ஆணவப் படுகொலைகள் ஆண்டுக்கு ஆண்டு  அதிகமாகிக் கொண்டே வருகின்றன. சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்குச் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என உச்சநீதிமன்றமே வலியுறுத்தி உள்ளது. தவிரவும் இந்தியச் சட்ட ஆணையம் மற்றும் இந்திய மகளிர் ஆணையம் ஆகியவையும் சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் எனப் பரிந்துரைத் துள்ளன.இந்நிலையில் சாதித ஆணவப் படுகொலை கள் குறித்து இதுவரையில் தமிழகஅரசு ஏதும் கருத்தறி விக்காமல் இருப்பது சரியன்று.   எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டும், நடப்பு நிலையைக் கருத்தில் கொண்டும் சாதி ஆணவப் படுகொலையைத் தடுக்கச் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்  என்றும், சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்தவும், சாதி மறுப்புத் திருமணங்களை நடத்திவைக்கவும், சாதி மறுப்புத் தம்பதிகளுக்குச் சட்ட, சமூகப்பாதுகாப்பு வழங்கவும் அவர்களின் வாரிசுகளைச் சாதியற்றவர் களாகப் பதிவுசெய்து அவர்களுக்குச் சிறப்புரிமை வழங்கவும் சாதிமறுப்புத் திருமணப் பாதுகாப்பு  ஆணையம் என்கிற பெயரில், ஒரு தனி ஆணையம் அமைத்திட வேண்டும் எனவும் தமிழ்நாடு மற்றும் இந்திய அரசுகளை இம் மாநாடு வலியுறுத்துகிறது.

3) சாதி ஆணவப் படுகொலைகள் நடந்தால், அதற்கு மாவட்ட ஆட்சியரும், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரும் பொறுப்பு ஏற்க வேண்டும் என நீதிமன்றங்கள் வலியுறுத்தி உள்ளன. எனவே சாதி ஆணவப் படுகொலைகள் அதிகமாக நடக்கும் மாவட்டங்களில் அம் மாவட்ட ஆட்சியரும், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம் மாநாடு கோருகிறது.

4) சாதி,மத மறுப்புத் திருமணம் செய்யும் இணை யருக்குக் குறிப்பிட்ட காலம்வரை பாதுகாப்பு வழங்கப் பாதுகாப்பு இல்லங்களைப் பஞ்சாப் அரசு நிறுவி உள்ளது. அதைப் போன்ற பாதுகாப்பு இல்லங்களைத் தமிழக அரசு உருவாக்க வேண்டும் என இம்மாநாடு பரிந்துரைக்கிறது.

5) சாதி,மத மறுப்புத் திருமணம் செய்துகொண்ட இணையர்களை  நாட்டின் சிறந்த குடிமக்களாக அறிவிக்க வேண்டும். மேலும் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், காவல் உயரதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் பங்கேற்கும் அரசு விழாக்களில் அவர்களைப் பாராட்டிச் சிறப்பிக்க அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்றும், சாதிமறுப்புத் திருமணங் களை ஊக்கப்படுத்தவும், நெருங்கிய இரத்த உறவுத் திருமணங்கள் செய்வதைத் தவிர்க்கப் பொதுமக் களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்றும், குறிப்பாக நெருங்கிய இரத்த உறவுத் திருமணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு  ஏற்படும் மூளை மற்றும் உடலியல் குறைபாடுகள் குறித்து பொது மக்களுக்கு அறிவியல் அடிப்படையிலான விழிப்பு ணர்வை ஏற்படுத்த அரசு விளம்பரம் செய்ய வேண்டும்  என்றும் இம்மாநாடு  வலியுறுத்துகிறது.

6) சாதி மறுப்புத் திருமண இணையருக்கு இராசத் தான் அரசு ரூ.5 இலட்சம் உதவித் தொகை வழங்கு கிறது. பல மாநிலங்கள் குறைந்தது ஒரு இலட்சம் ரூபாய்வரை உதவித்தொகை வழங்குகின்றன. ஆனால் இந்தியாவிலேயே மிகக் குறைந்த உதவித் தொகையைத்தான் தமிழக அரசு வழங்கி வருகிறது. அதிலும் பட்டம் பெற்ற பெண்களுக்கு அதிக உதவித் தொகையும், பட்டம் பெறாத பெண்களுக்குக் குறைவான உதவித்தொகையும் வழங்குகிறது. எனவே இந்தப் பாகுபாட்டைக் களைந்து, சாதிமறுப்பு இணையருக்கு இராசத்தான் அரசு வழங்குவதுபோல்  ஐந்து இலட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்க வேண்டும் என இம்மாநாடு வேண்டுகிறது.

7) சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட இணையரின் குழந்தைகளுக்கு மருத்துவம். மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சிறப்பு இடங்களைத் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. ஆனால் 69 விழுக்காட்டிற்குமேல் இந்த இட ஒதுக்கீடு வருவதால், அதை வழங்கக் கூடாது என சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. ஆனால்  அந்த வழக்கு  நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. சாதிமறுப்புத் திருமண இணையரின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகையைப் பறிக்கும் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விரைவுபடுத்தி நீதியை மீட்டுத்தருமாறு இம் மாநாடு தமிழக அரசைக் கோருகிறது.

8) கல்வி நிலையங்களில் சாதியை வெளிப்படுத் தும்படி வண்ணக் கயிறுகளை அக் கல்வி நிலையங் களில் பயிலும் மாணவர்கள் கட்டி வரக் கூடாது என்ற தெளிவான ஆணையை வெளியிட வேண்டும் என இம் மாநாடு  தமிழக அரசைக் கோருகிறது.

போராட்ட அறிவிப்புத் தீர்மானம்:

சாதி ஆணவ வெறிகளுக்கு அடித்தளமாகவும், பார்ப்பனியக் கருத்தாக்கங்களின் தொகுப்பாகவும் மொத்த வெளிப்பாடாகவுமே மனுதர்மம்  எனும்    பார்ப்பனிய, சாதிவெறி பிடித்த நூல் உள்ளது என்பதைத் தமிழ் அறிஞர்கள் பலரும், தந்தைபெரியார் அவர்களும், அண்ணல் அம்பேத்கர் அவர்களும்   அடை யாளப்படுத்தியும், அதை மறுத்த செயல்பாடுகளை முன்னெடுத்தும் இருக்கின்றனர்.

அம்பேத்கரும், பெரியாரும்  அக் கருத்துக்கும், செயற்பாடுகளுக்கும் முன்னோட்டமாக மனுதர்மத்தைத் தீயிட்டுக் கொளுத்தியும் இருக்கின்றனர்.. அவர்களின் வழிகாட்டலில் வெறிபிடித்த பார்ப்பனிய சாதிய ஆணவ நூலான மனுநுலை எதிர்வரும் மே 20-ஆம் நாள் அதாவது அயேத்திதாசப் பண்டிதர்  பிறந்தநாளில்    தமிழகமெங்கும் தீயிட்டுக் கொளுத்தும் போராட்டத்தை முன்னெடுப்பது எனப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு, சாதி ஒழிப்பு மாநாட்டின்வழி  அறிவிக்கிறது.   

Pin It