இந்தியா பார்ப்பனர்-பனியாக்கள் பிடியில் தான் நீடித்துக் கொண்டிருக்கிறது. மோடி ஆட்சியில் இது மேலும் வலிமை பெற்று விட்டது. பெரியார் தொடங்கி வைத்த ‘சூத்திரர்கள்’ புரட்சி நடந்தாக வேண்டும் என்று சமூக இயல் ஆய்வாளரும் இந்துத்துவ பாசிச எதிர்ப்பாளரும் பேராசிரியருமான காஞ்சா அய்லய்யா அறைகூவல் விடுத்தார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் நடத்திய “கருத்துரிமை போற்றுதும் - எழுத்தாளர்கள் கலைஞர்களின் ஒன்றுகூடல்” - 2018 அக். 19 அன்று காமராசர் அரங்கில் காலை முதல் இரவு வரை நடந்தது. பேராசிரியர் காஞ்சா அய்லய்யா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார். பெரியாருக்கு வணக்கம்; அம்பேத்கருக்கு வணக்கம் என்று ஆங்கிலத்தில் உரையைத் தொடங்கிய அவர், இந்தியாவிலேயே மனுவாதி களுக்கு எதிராக சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் கல்வி நிலையங்களைத் திறந்த சாவித்திரி பாய் புலே, பெரியார் அம்பேத்கர், மார்க்ஸ் படங்கள் இதுபோன்ற மாநாடுகளில் இடம் பெற வேண்டும் என்று பலத்த கரவொலிகளுக் கிடையே தெரிவித்தார். மோடியின் ‘தேசியம்’ - தேசபக்தி மூன்று கோட்பாடுகளை முன்னிறுத்துகிறது. ஒன்று பசுப் பாதுகாப்பு; ஏன் என்று கேட்டால் பசு பால் தருகிறது; அது தாய்ப்பாலைவிட சிறந்தது என்கிறார்கள்; பசுவைவிட கோடானுகோடி மக்களுக்கு பால் வழங்குவது எருமைதான். எருமைப் பால் தான் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்தாக இருக்கிறது. பசு வெள்ளை; எனவே பசுவை புனிதம் என்கிறார்கள். எருமை கருப்பு; அது நமக்கான நிறம். அந்த எருமையின் நிறத்தைத்தான் பெரியார் சீருடையாக தனது தொண்டர்களுக்கு தேர்வு செய்தார்.
மோடியின் தேசியத்தின் மற்றொரு அடையாளம் சைவ உணவு. சைவ உணவை மட்டும் சாப்பிட்டால் நமது இராணுவத்தினர் கடும் குளிர் பிரதேசத்தில் தங்கி எல்லையைக் காப்பாற்ற முடியுமா? இவர்கள் தேசபக்திக்கு அடையாளமான தேசத்தைக் காப்பாற்றும் இராணுவ வீரர்களுக்கே அசைவ உணவும் மாட்டுக்கறியும்தான் தேவைப்படுகிறது. ஆனால் இவர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டால் அடித்துக் கொல்லுகிறார்கள். தேசபக்தி பேசும் இந்த பார்ப்பன-பனியாக்கள் ஏன் இராணுவத்தில் சேருவதில்லை? எல்லையில் சிப்பாய்களாக துப்பாக்கி ஏந்தி போராடுகிறவர்களாக வருவதில்லை?
இவர்கள் தேசியத்தின் மூன்றாவது அடையாளம் ‘யோகா’. யோகா செய்தால் நாட்டின் வேலை வாய்ப்பு, பொருளாதார நெருக்கடிகள் தீர்ந்து விடுமா? ஆட்சியின் தோல்விகளை மறைக்கவே ‘யோகா’வை பிரபலப்படுத்துகிறார்கள்.
இந்தியா பார்ப்பனர், பனியா, காயஸ்தா, கத்ரியா என்ற சமூகத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. மோடியும் அமீத்ஷாவும் பனியாக்கள். அவர்கள் வளர்த்துவிடும் தொழிலதிபர்கள் பனியாக்கள்தான். காமராசர் இப்போது உயிரோடிருந்தால் டெல்லியில் ஒரு பதவியைக்கூட பெற முடியாது. காரணம் அவர் ஒரு பார்ப்பனரோ பனியாவோ அல்ல; அவர் ஒரு ‘சூத்திரர்’.
இந்த சமூகத்தில் உழைப்பு சக்திகளாக பொருளாதார வளங்களைக் கொண்டு வந்து சேர்ப்பது எல்லாம் சூத்திரர்களும் தலித்துகளும் தான். நாட்டின் செல்வமும் வளமும் பார்ப்பன-பனியா காயஸ்தாக்களிடம்தான் குவிந்து கிடக்கிறது. சொத்துக்கள் பனியாக்களிடமும் கோயில்களிடமும் பார்ப்பன ஆதரவோடு எப்படி குவிந்தது என்பதை விளக்கி நான் ஒரு நூல் எழுதியுள்ளேன். அந்த நூலில் ‘சமூகத்தின் கடத்தல் தொழில்காரர்கள்’ (Social Smugglers) என்று இவர்களைக் குறிப்பிட்டிருந்தேன். இன்றைக்குத் தேவை - பெரியார் கூறிய சூத்திரர்களுக்கான உரிமைப் போராட்டம் தான்! சூத்திரர் - பஞ்சமர் இணைந்து போராட வேண்டும்.
“இந்தியும் சமஸ்கிருதமும் நமக்குப் பயன்படாத மொழிகள். அவற்றை ஜக்கி வாசுதேவ் போன்ற சாமியார்கள் பயன்படுத்திக் கொள்ளட்டும். காஞ்சா அய்லயா என்கிற என்னுடைய பெயரை இப்போது காஞ்சா அய்லய்யா ஷெப்பர்டு என்று நான் ஆங்கிலத்தில் மாற்றிக் கொண்டிருக்கிறேன். ஷெப்பர்டு என்று சொன்னால் ஆடுமேய்ப்பவன் என்று பொருள். ஆனால் அந்த ஷெப்பர்டு என்பது ஒடுக்கப்பட்டவர்களின் குறியீடாக உள்ளது. நான் ஷெப்பர்டு என்கிற பெயரை வைத்துக் கொண்டதும் எனக்கு ஏதாவது நேர்ந்தால் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று சொல் கிறார்கள். இதற்குக் காரணம் ஷெப்பர்டு என்பதன் பொருள் என்ன என்பதை அனைத்து நாடுகளும் அறிந்திருக்கின்றன. ஆங்கிலத்தில் அந்தப் பெயர் இருப்பதால் அவர்களுக்கு அதனுடைய பொருள் புரிகிறது. ஆனால் இங்கே இருக்கிற சதுர்வேதி, திரிவேதி, துவிவேதி என்கிற சமஸ்கிருத பார்ப்பனப் பெயர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் யாரும் அதைக் கண்டுகொள்ள மாட்டார்கள். ஏனென்றால் அதன் பொருள் யாருக்கும் புரியாது. அது இந்தியாவில் இருக்கிற ஒரு சில பேருக்கு மட்டுமே புரிந்த சொற்களாகவே உள்ளன. ஆங்கிலம் படிப்பது அவசியம் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
மேற்கு வங்கத்தில் இடதுசாரி ஆட்சி ஆங்கிலக் கல்வியை ஒழித்து தவறு செய்தது; அதனால் வங்காளப் பார்ப்பனர்கள் மட்டும் ஆங்கிலம் படித்து முன்னேறி விட்டார்கள்.
சபரிமலையில் எல்லா வயது பெண்களையும் அனுமதிக்கலாமா என்று மிகப் பெரிய சர்ச்சை நடக்கிறது. ஆனால் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மிகச் சரியான நிலை எடுத்து செயல்பட்டு வருகிறார். ஏனென்றால் அவர் கேரளாவில் பிறந்த சீர்திருத்தவாதியான நாராயணகுருவின் சீடராக செயல்படுகிறார். ஏற்கனவே ஆலயங்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் மிக முக்கியமான நடைமுறையை மேற்கொண்டவர். இதெல்லாம் அந்த மண்ணில் பிறந்த நாராயணகுரு போன்ற சீர்திருத்தவாதிகளின் செயல்பாட்டால் வருகின்ற விளைவுகள்தான். சபரிமலைக்குப் பெண்கள் செல்வதற்கு அவர்களின் மாதவிலக்கு தடையாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். இதே போன்று பருவ நிலையை எய்திய ஆண்களுக்கு விந்தணுக்கள் வெளிப்படுவதில்லையா? அதுமட்டும் ஐயப்பனுக்கு ஏற்புடையதா? இதைஎல்லாம் ஒரு அறிவியல் பார்வையோடுநாம் பார்க்க வேண்டும். அப்படி இல்லாதவர்கள் தான் இதைக் காரணம் காட்டி பெண்களை தடை செய்கிறார்கள்.
ஆண்களிடம் விந்தணுக்கள் ஏற்படாவிட்டால் பெண்களுக்கு கரு எப்படி உருவாகும்? இவர்களை யெல்லாம் எதிர்த்துப் போராட நாம் ஓரணியில் திரள வேண்டும்.தெலுங்கானாவில் நாங்கள் வெகுமக்கள் இயக்கம் ஒன்றைத் தொடங்கி இருக்கிறோம்.அது நல்ல பயனைத் தந்துள்ளது.அதன் மூலமாக நாங்கள் சோஷலிச நல்வாழ்வு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதே போன்ற ஒரு இயக்கம் இங்கேயும் தொடங்கப்படுவது அவசியம் என்று நான் கருதுகிறேன். வெகுமக்கள் இடதுசாரி இயக்கம் என்பதாக அது இருக்க வேண்டும். வெகுமக்களை ஒன்றிணைப்பதன் மூலம்தான் அரசியல் போராட்டத்தில் வெற்றி பெற முடியும்.இந்தத் தருணத்தில் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.
மாவோயிஸ்ட்டுகள் ஆயுதங்களைக் கைவிட்டு ஜனநாயக முறைக்கு திரும்ப வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். நேபாளத்தில் அவர்கள் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தினார்கள். இருப்பினும் ஆயுதப் புரட்சிக்கு பதிலாக ஜனநாயகபாதைக்கு திரும்பி வந்து ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள். அதுபோன்ற நிலையை இந்தியாவில் உருவாக்க ஆயுதங்களை கைவிட்டு மாவோயிஸ்ட்டுகள் ஜனநாயக முறைக்கு திரும்ப வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.மக்களுக்கு கல்வியறிவை அடிப்படை ஆதாரமாகக் கருதி அதற்கு முக்கியத்துவம் அளித்த சாவித்திரிபாய்,ஜோதிபா பூலே, பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் என்று ஆளுமைகளை நீங்கள் வரிசைப்படுத்தி வைக்க வேண்டும். சூத்திரர் - பஞ்சமர் உரிமைப் போராட்டத்தை சமூகக் கடத்தல்காரர்களான பார்ப்பன-பனியாக்களக்கு எதிராகத் தொடங்க வேண்டும்” என்றார், காஞ்சா அய்லய்யா.