தமிழ்நாட்டில் வேலை தேடி வரும் வடமாநிலத்தவர்கள் படுகொலைக்கு உள்ளாகிறார்கள்; திட்டமிட்டு தாக்கப்படுகிறார்கள் என்று சமூக வலைதளங்களில் வதந்தியைப் பரப்பினார்கள். இதனால் அச்சமடைந்த வடமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பத் தொடங்கினர். வதந்தியைத் திட்டமிட்டு பரப்பியவர்கள் பா.ஜ.க.வினர். தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு பீகார் முதல்வர் நிதிஷ்குமாரிடம் பேசி தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட நிலை ஏதும் இல்லை என்று விளக்கி வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்புகளை வழங்கி வருகிறது என்று விளக்கியுள்ளார்.

வதந்தியைப் பரப்பிய பா.ஜ.க.வைச் சார்ந்த பிரசாந்த் உமாரோ, சுபம் சுக்ளா, யுவராஜ் சிங்ராஜ்புட் ஆகியோர் மீதும் வடமாநில இந்தி பத்திரிகையான ‘தைனிக்’ ஆசிரியர் பாஸ்கர் மற்றும் ‘தன்வீர் போஸ்ட்’ பத்திரிகை ஆசிரியரான முகம்மது தன்வீர் ஆகியோர் மீதும் தமிழ்நாடு காவல்துறை வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. இவர்களைக் கைது செய்ய வடமாநிலங்களுக்கு தமிழகக் காவல்துறை தனிப் பிரிவு விரைந்துள்ளது.

தமிழ்நாட்டில் நீண்டகாலமாக வடநாட்டு தொழிலாளர்கள் மீது தி.மு.க. வெறுப்பை விதைத்து வருகிறது என்று அறிக்கை வெளியிட்ட தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழக காவல்துறை அதிகாரிகளும் மாவட்ட ஆட்சித் தலைவர்களும் உடனடியாகக் களமிறங்கி வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகமாகப் பணி செய்யும் பகுதிகளுக்கு நேரில் சென்று அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டியதோடு தமிழக அரசு உரிய பாதுகாப்புகளை வழங்கும் என்று உறுதியளித்துள்ளனர். இது மிக மிக பாராட்டத்தக்க நடவடிக்கையாகும்.

இலட்சக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் ஏன் தமிழ்நாட்டை நோக்கி வருகிறார்கள்? இந்தி பேசும் வடமாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி நடக்கும் மாநிலங்களில் வேலை வாய்ப்பு இல்லை என்பதால்தான். அந்த அவலத்தோடு தான் அங்கே ‘இந்துத்துவாவின்’ ஆட்சி நடக்கிறது. தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல் ஆட்சி’ இவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் நிலையில் முன்னேறி நிற்கிறது. திராவிடம் நாட்டைக் கெடுத்து விட்டது என்று புலம்புவோர் அடிப்படையாக இந்த உண்மையை ஏற்க வேண்டும். மாறாக, இதிலும் தி.மு.க. ஆட்சி மீது குறை கூறிக் கொண்டிருப்பது இவர்களின் நேர்மையற்ற சமூகப் பொறுப்பற்ற அரசியலையே வெளிப்படுத்துகிறது.

தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு அலுவலகங்களான வங்கிகள், விமான நிலையங்கள், அஞ்சலகங்கள், தொடர் வண்டித் துறைகள், பொதுத் துறை நிறுவனங்களில் வடநாட்டுக்காரர்களையே ஒன்றிய ஆட்சி குவித்து வருவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கே இந்த வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

அதே நேரத்தில் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்காக தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது மொழி இனவெறியோடு வெறுப்பைக் கக்குவது ‘பாசிச’ சிந்தனையே யாகும். தமிழ்நாட்டில் சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் வணிக நிறுவனங்கள், கட்டுமானத் தொழில் போன்ற துறைகளில் வடமாநிலத் தொழிலாளர்கள் ஏராளம் வேலை செய்கிறார்கள். இவர்களை வெளியேற்றுவது என்றால், இந்த சூழலில் தமிழ்நாட்டில் உழைப்புச் சந்தையில் கடும் நெருக்கடிகள் உருவாகி விடும். இவர்கள் குறைந்த ஊதியத்தில் கடுமையாக உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டிய அவசியமிருக்கிறது. தமிழக அரசைப் பொறுத்த வரையில் கொரானா 2ஆவது அலையின்போது சொந்த மாநிலங்களுக்கு திருப்பிச் செல்ல விரும்பிய தொழிலாளர்களுக்கு அவர்களுக்கான பல்வேறு உதவிகளை மனிதாபிமானத்துடன் வழங்கியதையும் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பார்ப்பனரல்லாதார் உரிமைக்காக சமூக, அரசியல், பண்பாட்டுத் தளங்களில் தொடர்ந்து போராடி வரும் திராவிடர் இயக்கம் பார்ப்பனர்கள் மீது எந்தத் தாக்குதலையும் நடத்திய வரலாறுகள் இல்லை. காந்தியார் கொலையின்போது சுட்டுக் கொன்ற கோட்சே ஒரு பார்ப்பனர் என்பதால் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பொது மக்களால் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர். அவர்கள் நிறுவனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. அந்த சூழ்நிலையை திராவிடர் கழகம் திராவிட இயக்கங்கள் நினைத்திருந்தால் தமிழ்நாட்டிலும் பார்ப்பனர்கள் மீதும் பெரும் தாக்குதலைத் தூண்டி விட்டிருக்க முடியும். மாறாக அமைதி காக்கச் சொன்னார் பெரியார். அண்ணாவும் அதே கருத்தை வலியுறுத்தினார். பார்ப்பனர்கள் பாதுகாப்பாகவே இருந்தனர். இப்போது பா.ஜ.க. நடத்தும் அற்பத்தனமான அரசியலை திராவிடர் இயக்கம் ஒரு போதும் கையில் எடுக்காது.

பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி, தமிழக முதல்வர் ஸ்டாலின் 70ஆவது பிறந்த நாள் விழாவில் பங்கேற்றார். பா.ஜ.க.வுக்கு எதிரான ஒரு அணியை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் பேசினார். அடுத்த நாளில் அவசரமாக வதந்தி கிளப்பி விடப்பட்டுள்ளது. பீகாரிகளுக்கும் தமிழர்களுக்கும் இடையே ஒரு பகைமையை உருவாக்கி மோடி எதிர்ப்பு அணியைக் குலைத்து விடலாம் என்ற சூழ்ச்சியோடு இந்த வதந்தி பரப்பப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தின் அதிகாரபூர்வ பா.ஜ.க. சமூக வலைத் தளங்கள் இந்த பொய்யைப் பரப்பியதோடு அம்மாநில பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர், பீகார் மக்களை அரசியலுக்காக காவு கொடுக்கிறார் தேஜஸ்வி என்றும் வெளிப்படையாகவே பேசினார்.

தமிழ்நாட்டில் சில வடமாநில சமூக விரோத கும்பல் வன்முறை, கொள்ளைகளில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தேவை என்பதில் நியாயம் இருக்கிறது. சமூக விரோத சக்திகளைக் கண்காணிப்பது வேறு; வடநாட்டிலிருந்து பிழைப்புக்காக தமிழகம் தேடி வந்தவர்களை விரட்டி அடிக்க வேண்டும் என்பது வேறு. பா.ஜ.க.வின் அற்பத்தனமான வெறுப்பு அரசியலை மக்களிடம் எடுத்துச் சொல்லி அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும். பா.ஜ.க. பார்ப்பனியம் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி மக்களை ஏமாற்றத் துடிக்கிறது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It