பத்தாண்டுகளாக இந்திய ஒன்றியத்தைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கும் பா.ஜ.கவின் குஜராத் மாடல் ஆட்சிக்கு மாற்றாகத் தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சி நாடெங்கும் புகழ் பெற்று வருகிறதே என்ற அச்சத்தில் ஒன்றிய பா.ஜ.க அரசு, தி.மு.கவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் பல்வேறு விசாரணை அமைப்புகளைத் தமிழ்நாட்டில் களமிறக்கி இருக்கிறது.

அமலாக்கத்துறை சட்டவிரோதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களைக் கைது செய்தது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை செய்ததுடன் அவரையும், அவரது மகனும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான பொன். கௌதமசிகாமணியையும் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளது. அத்துடன் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் இன்னும் பல அமைச்சர்கள் சிறை செல்வார்கள் என்று பா.ஜ.க மிரட்டி வருவதுடன், அக்கட்சியைச் சேர்ந்த ஹெச். ராஜா “அமலாக்கத்துறையின் அடுத்த சோதனை தூத்துக்குடி அல்லது திருச்சியில் நடைபெறும்” என்று வெளிப்படையாக ஊடகங்களில் கருத்து சொல்வது இந்தியாவில் நடைபெறுவது மக்களாட்சிதானா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.modi 576ஒன்றிய பா.ஜ.க அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் கூட்டம் பாட்னாவில் 23.06.2023 அன்று நடைபெற இருந்த நிலையில் 14.06.2023 அன்று அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதுபோல் எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூருவில் தொடங்கிய அதே நாளில் (17.07.2023) அமைச்சர் பொன்முடி இல்லத்தில் சோதனை நடைபெற்றது.

எதிர்க்கட்சிகளின் அணியை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் தி.மு.க தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாசிச பா.ஜ.க அச்சுறுத்திப் பின்வாங்கச் செய்ய நினைத்தது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழி வந்த தி.மு.க தலைவரோ “ஆளுநரும், அமலாக்கத்துறையும் எங்களுக்காகப் பிரச்சாரம் செய்து எங்கள் தேர்தல் பணியை சுலபமாக்கி இருக்கிறார்கள்” என்று துணிவுடன் அறிவித்து விட்டு பெங்களூரு கூட்டத்தில் பங்கேற்றார்.

Indian National Developmental Inclusive Alliance - INDIA என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பது என்று அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் தனிப்பட்ட முறையிலும், சித்தாந்த ரீதியாகவும் பா.ஜ.கவால் குறி வைத்துப் பழிவாங்கப் படுகின்றனர். தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என்று அவர்மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு இருந்தார். கொங்கு மண்டலத்தில் சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க பலவீனமாக இருந்த நிலையில் அப்பகுதிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவுடன் கடுமையாகக் களப்பணியாற்றி உள்ளாட்சித் தேர்தலிலும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தி.மு.கவுக்குப் பெருவெற்றியை ஈட்டித் தந்தார். எனவே அவரை நாடாளுமன்றத் தேர்தலில் பணி செய்ய விடாமல் தடுக்கவே இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்பை சிதைத்துக் காவிக் கூடாரமாக்க ஆக்க நினைக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இருப்பதாலும், ஆளுநரின் உளறல்களுக்கு அவ்வப்போது அவர் பதிலடி கொடுப்பதாலும் ஆளுநர் டெல்லி சென்று வந்த சில நாட்களில் அமைச்சர் பொன்முடி மீதான அமலாக்கத்துறை நடவடிக்கை அரங்கேறியிருக்கிறது. அமைச்சர் பொன்முடி பேராசிரியராக பணி புரிந்தகாலம் தொட்டே திராவிடக் கருத்தியலில் தீவிரமாக இருந்தவர் என்பதும் ஒன்றிய ஆட்சியாளர்களுக்குக் கிலியை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.கவுக்கு எதிரான INDIA கூட்டணியில் தி.மு.க “கர்நாடகா போன்ற மாநிலங்களில் பாஜக தோல்வி அடையக் காரணமான பெண்களுக்கு ரூ.1000, இலவச பஸ் போன்ற திட்டங்களை முன்மொழிந்தது, தமிழ்நாட்டில் உள்ள வெற்றிகரமான கூட்டணி யுக்தியை தேசிய அளவில் கொண்டு செல்வது, காங்கிரஸ் கட்சியுடன் மற்ற கட்சிகள் இணையப் பாலமாக இருபது, தேசிய அளவில் எப்படி கூட்டணி உருவாக்க வேண்டும் என்பதற்கான அடிப்படை கொள்கைகளை வழங்குவது, சமூக நீதி, இட ஒதுக்கீடு, மாநில சுயாட்சி உள்ளிட்ட கொள்கைகளைப் பல மாநிலங்களுக்கு பரப்புவது” எனக் கொள்கை ரீதியில் வலிமை சேர்க்கிறது.

அதனால் தான் தி.மு.கவினரைக் குறிவைத்து அமலாக்கத்துறை ஏவி விடப்பட்டிருக்கிறது. ஒன்றிய ஆட்சியாளர்களின் சுய லாபத்திற்கு ஏற்ப செயல்படுவதால்தான் அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு மூன்று முறை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதியரசர்கள் B.R.கவாய், விக்ரம் நாத், சஞ்சய் கரோல் அடங்கிய அமர்வு அவரது பதவி நீட்டிப்பை சட்டவிரோதம் என்று கூறியதுடன் 31.07.2023 அன்று அவர் பதவி விலக வேண்டுமென உத்தரவிட்டது. சட்டவிரோதமாகப் பதவி வகிக்கும் இயக்குநரின் கீழ் நடத்தப்படும் சோதனையும், விசாரணையும் எவ்வாறு நியாயமானதாக இருக்கும்.

அதேபோல் சட்டிஸ்கர் மதுபான அனுமதி முறைகேடு வழக்கில் நீதியரசர்கள் S.K.கவுல் மற்றும் சுதான்சு துலியா அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணையை மேற்கொள்ளத் தடை விதித்துள்ளது. பாரதி சிமெண்ட் முறைகேடு வழக்கில் தெலுங்கானா முதல்வர் ஜெகன்மோகன் மனைவி திருமதி. பாரதியின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியதை நீதியரசர்கள் அபய் S ஓகா மற்றும் சஞ்சய் கரோல் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு ரத்து செய்துள்ளது. தி.மு.கவும் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டப் போராட்டங்களை நெஞ்சுறுதியோடு நடத்தி வருகிறது.

பா.ஜ.க கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான கட்சிகள் அமலாக்கத்துறை நடவடிக்கைகள் மூலம் பா.ஜ.கவுடன் இணைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. வழக்குகளைக் காட்டி எதிர்கட்சிகளை வளைப்பது, ஒத்துழைக்க மறுத்தால் அந்தக் கட்சியை அழிப்பது என்ற பா.ஜ.கவின் திட்டம் தி.மு.கவின் முன் செல்லுபடி ஆகாது. தி.மு.கவின் மீதான இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையும், மக்கள் மன்றத்தில் பா.ஜ.கவும் தண்டிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

அறிவிக்கப்படாத அவசர நிலையை எதிர்கொள்வோம்!

பாசிச பா.ஜ.கவை நாடாளுமன்றத் தேர்தலில் வெல்வோம் !!

வழக்கறிஞர் இராம.வைரமுத்து

Pin It