கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவதை அண்ணாமலை வழக்கமாக வைத்திருக்கிறார். அது தவறு என்று மற்றவர்கள் சுட்டிக்காட்டினாலும் அதற்காக வருத்தம் தெரிவிப்பதும் கிடையாது. அந்த வகையில் சமீபத்தில் தமிழ்நாடு அரசின் கடன் ரூ.8.23 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது என்றும், இது வரலாறு காணாத உயர்வு என்றும் ஒவ்வொரு ரேசன் அட்டைக்கும் ரூ.3.8 லட்சம் கடன் இருக்கிறது என்றும் தமிழ்நாடு அரசை கடுமையாக சாடியுள்ளார். தமிழ்நாடு அரசின் கடன் நிலை குறித்து அண்ணாமலையின் விமர்சனம் ஒருபுறமிருக்க, எல்லா வளங்களையும், வரிகளையும் வாங்கி வைத்துக் கொண்டு மாநிலங்க ளை அல்லல்பட வைக்கும் ஒன்றிய அரசு எப்படி கடன் வாங்கியிருக்கிறது என்பதை அவர் வசதியாக மறந்து விட்டு மார்தட்டி அலைகிறார்.

சமீபத்தில் புயல், மழை, வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு ஒரு பைசாகூட கொடுப்ப தற்கு இன்றளவும் மோடி அரசாங்கம் முன் வரவில்லை. இதுதவிர, ஒவ்வொரு ஒன்றிய அரசின் திட்டத்திலும் மாநில அரசுகளை சிக்க வைத்து திண்டாட வைப்பதை மோடி அரசாங்கம் தனது கொள்கையாகவே வைத்துக் கொண்டிருக்கிறது. உதாரண மாக, பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம். பட்டியலின மற்றும் பழங்குடி மாணவர்க ளுக்கான 10ஆம் வகுப்பிற்கு பிந்தைய கல்வி உதவித் தொகை திட்டம். பிரதமர் கிராமப்புற வீடு கட்டும் திட்டம். பிரதமர் நகர்ப்புற வீடு கட்டும் திட்டம். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம்

தொடக்க காலம் முதல் 2016-17ஆம் ஆண்டு வரை இந்த திட்டத்தில் விவசாயி காப்பீட்டு நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய பிரிமியம் தொகையில் ஒன்றிய அரசு, மாநில அரசு, விவசாயி ஆகியோர் இடையே 49:49:2 என்கிற விகிதத்தில் பிரித்துக் கொண்டிருந்தது. 2017ம் ஆண்டிற்கு பிறகு ஒன்றிய மோடி அரசாங்கம் இந்த திட்டத்திற்கு 25 சதவிகிதத்திற்கு மேல் தர முடியாது என கைவிரித்து விட்டது. மீதமுள்ள 24 சதவிகிதத்தை விவசாயிகள் தலையில் கட்ட முடியாது என்பதால் மாநில அரசாங்கமே இதனை ஏற்றுக் கொண்டது. இப்போது இந்த விகிதத்தை ஒன்றிய அரசு 25, மாநில அரசு 73, விவசாயி 2 என்ற விகிதத்தில் செலுத்துகிறார்கள். இதன் காரணமாக 2016-17ஆம் ஆண்டில் ரூ.566 கோடியாக இருந்த மாநில அரசின் சுமை இப்போது கடந்தாண்டில் ரூ.2050 கோடி யாக அதிகரித்திருக்கிறது.

பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டம்

மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பட்டியல் மற்றும் பட்டியல் - பழங்குடியின மாணவர்களுக்கான 10ஆம் வகுப்பிற்கு பிந்தைய கல்வி உதவித் தொகையை 75 சதவிகிதத்தை ஒன்றிய அரசும், 25 சதவிகித்தை மாநில அரசும் கொடுத்து வந்தன. மோடி பதவியேற்ற பிறகு இரண்டு வரு டங்கள் அந்த திட்டத்தையே நிறுத்தி வைத்தார். பிறகு, அந்த திட்டத்தில் ஒன்றிய அரசாங்கம் 60 சதவிகிதம் மட்டுமே கொடுக்கும். மீதியை மாநில அரசாங்கம் கொடுக்க வேண்டும் என்று மாற்றிவிட்டார்கள். அந்த 60 சதவிகிதத்தையும் ஒழுங்காக கொடுப்பதில்லை என அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

பிரதமர் வீடு கட்டும் திட்டம்

கிராமப்புற வீடு கட்டும் திட்டத்திற்கு 1,20,000/-ரூபாய் என்று நிர்ணயித்துவிட்டு அதில் 60 சதவிகிதத்தை ஒன்றிய அரசு வழங்கும்; மீதி 40 சதவிகிதத்தை மாநில அரசு கொடுக்க வேண்டும் என்று வைத்திருக்கிறார்கள். 1,20,000 ரூபாயில் வீடு கட்ட முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு அரசாங்கம் கிராமப்புற வீடுகளுக்கு 2,40,000 ரூபாய் கொடுக்கிறது. இதில் 72,000 ரூபாய் மட்டுமே ஒன்றிய அரசின் பங்கு. ஆனால், கொஞ்சமும், கூச்ச நாச்சமின்றி இந்த வீடுகட்டும் திட்டத்தை ‘மோடி வீடு’ என்றே பாஜகவினர் அழைக்கிறார்கள்.

நகர்ப்புற வீடு கட்டும் திட்டம்

இத்திட்டத்திற்கு ரூ.2,40,000 என்று நிர்ணயித்து விட்டு ரூ.1,44,000 மட்டுமே ஒன்றிய அரசாங்கம் கொடுக்கும். இந்த திட்டத்திற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை மாநில அரசாங்கம் தனது நிதியிலிருந்து கொடுக்க வேண்டியிருக்கிறது.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்த நிலையில் மாநில அரசாங்கங்கள் தன் மாநில மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி யை காப்பாற்றுவதற்காக கடன் வாங்கி செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டி ருக்கிறார்கள். ஒருபக்கம் கூடுதலான சுமை யை சுமத்துவது. இன்னொரு பக்கம் மாநில மொத்த வரி வருவாயில் 3 சதவிகிதத்திற்கு மேல் கடன் வாங்கக் கூடாது என நிர்ப்பந்திப்பது ஒருவேளை கூடுதல் கடன் வாங்க வேண்டுமென்றால் மின்சாரத்தை விற்று விடு, பொதுத்துறை நிறுவனங்களை விற்று விடு என்று நிபந்தனை விதிப்பது என நெருக்கடியை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால், ஒன்றிய அரசுக்கு இப்படி எந்த கட்டுப்பாடும் இல்லாத நிலையே இருக்கிறது. ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய அவசியமில்லாத செஸ், சர்சார்ஜ் போன்ற வரிகள் வழியான வரவு 2011-12இல் 11 சதவிகிதம் அளவிற்கு இருந்தது. இப்போது அது 25 சதவிகித அளவிற்கு அதிகரித்திருக்கிறது. இதற்கு பிறகும் கூட ஒன்றிய அரசு தாறு மாறாக கடன் வாங்கியிருக்கிறது. (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

மோடி அரசின் ரூ.205 லட்சம் கோடி கடன்

1947ம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது முதல் 2014ம் ஆண்டு மோடி வருவதற்கு முன்பு வரை இந்திய அரசாங்கத்தின் உள்நாட்டு, வெளிநாட்டு கடன் எல்லாம் சேர்த்து அதிகபட்சமாக 2014ல் ரூ.55 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், பெட்ரோல் - டீசல் - சமையல் எரிவாயு கொள்ளை என்பது தொடங்கி ஒவ்வொன்றிலும் வழிப்பறி போன்று வரிச்சுமை ஏற்றிய ஒன்றிய அரசாங்கம் 9 வருட காலத்தில் கூடுதலாக 100 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியது. அடுத்த ஆறு மாத காலத்தில் இன்னும் 50 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்று கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் மொத்த கடன் ரூ.205 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது, அண்ணாமலை சொன்னது போல ஒவ்வொரு ரேசன் கார்டுக்கும் எவ்வளவு கடன் என கணக்கிட்டால் பாஜக ஆட்சிக்கு வரும் போது ஒவ்வொரு ரேசன் அட்டை மீதும் ரூ.1.86 லட்சமாக இருந்த கடன், கடந்தாண்டு மார்ச் மாதத்தில் ரூ.4.97 லட்சமாக அதிகரித்து கடந்தாண்டு செப் டம்பர் மாதத்தில் ரூ.6.37 லட்சமாக உயர்ந்திருக்கிறது. அவர் விமர்சிக்கும் தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ரேசன் அட்டைதாரருக்கும் 3.81 லட்சம் கடன் ஏற்றி விட்டது என்றால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை (குஜராத்துக்கும், உ.பி.க்கும் சேர்த்து) ஒவ்வொரு அட்டைதாரருக்கும் இதைப்போல ஏறத்தாழ 1.7 மடங்கு கடனை ஏற்றி வைத்திருக்கும் மோடி அரசை எப்படி விமர்சிப்பது?

அண்ணாமலை அடுத்தவர் கண்ணிலிருக்கிற துரும்பைக் கூட தெளிவாக பார்த்து அதை தூண் என்று துள்ளிக் குதிக்கிறார். ஆனால், விஸ்வகுரு என்று தனக்குத்தானே மார்தட்டிக் கொள்கிற மோடி மாநிலங்களுக்கு நிதியைக் குறைத்து ஒன்றிய அரசுக்கு மட்டும் வரும் வருவாயை அதிகரித்து மாநிலங்களை பட்டினி போட்டு, வரிகளையெல்லாம் அபகரித்துக் கொண்டும் பேரிடருக்கு கூட உதவாமல் வஞ்சனை செய்து கொண்டும் இருக்கும் போதே என்ன செலவிற்காக ஒவ்வொரு குடும்ப அட்டை மீதும் 6.37 லட்சம் சுமையை ஏற்றினார் என்று கேள்வி கேட்க வேண்டும். 67 வருடங்களில் ஒரு அட்டைக்கு சராசரி 1.86 லட்சம் கடனாக இருந்ததை 9 வருடங்களில் 4.51 லட்சம் கடனை அதிகரித்து, 6.37 லட்சம் கடனாக மாற்றியவர்களை என்ன செய்வது?.

சரியான விமர்சனங்களை முன்வைப்பது தவறில்லை. மாறாக, மாநில அரசை விமர்சிப்பதையே நேர்த்திக் கடனாக வைத்துக் கொண்டு இருப்பவரால் இப்படித்தான் நேர்த்தியற்று பேசத் தோன்றும்.

க.கனகராஜ்

(நன்றி : தீக்கதிர்)