இந்திய ஒன்றியத்தில் பல்வேறு தேசிய இனங்கள் உள்ளடங்கியுள்ளன. மொழிவழி மாநிலங்களாக அவை பிரிக்கப்பட்டுள்ளன. இது ஒரு பெரும் பிரிவு மட்டுமே. இன்னும் சில மாநிலங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்களை உள்ளடக்கி உள்ளன. அவை பல்வேறு மொழிகளைப் பேசுகின்றன. அதோடு பல்வேறு பொருளாதார, அரசியல், பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கி உள்ளன. பெரும்பான்மை மொழி வழி மாநிலங்கள் தங்களுக்கே உரிய பொருளாதார, அரசியல், பண்பாட்டுக் கூறுகள், இவற்றோடு இயற்கை மற்றும் மனித வளங்களை மேம்படுத்திக் கொள்ள, இராணுவக் கட்டமைப்பால் பாதுகாக்கப்படும், வளங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு புவிசார் ஒன்றியக் கூட்டாட்சியை ஏற்றுக் கொண்டன.

இந்தியாவின் ஒருமைப்பாடு என்பதே அதன் பன்மைத்துவத்தைப் பாதுகாத்து அங்கீகரிப்பதுதான். அதை மறந்து தேசிய ஒருமைப்பாட்டை ஒருமைத்துவத்தால் கட்ட முடியும் எனும் கற்பனையான நம்பிக்கையை ஆளும் ஒன்றிய அரசுகள் வளர்த்ததன் விளைவாக மாநில அரசுகளின் அதிகார எல்லைகளைச் சுருக்க விழைகின்றனர். கூட்டாட்சியை வளர்ச்சிக்கு எதிரானதாக அவர்கள் சித்தரிக்க முனைகின்றனர்.

குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது தன் மாநில உரிமைக்காக காங்கிரசு அரசிடம் மல்லுக் கட்டிய நரேந்திர மோடி, ஒரு வலுவான பெரும்பான்மை அரசை ஒன்றியத்தில் கைப்பற்றிய பின் மாநில உரிமைகளைப் பறிக்கும் வேலையில் இறங்கி உள்ளார். அல்லது அவரை இயக்கும் இந்துத்துவ சித்தாந்த அரசியலும் அதற்குத் துணை போகும் பார்ப்பனிய அதிகார வர்க்கமும் மாநில அரசுகளைப் பலவீனப்படுத்தும் முயற்சிகளை அவர் வழி வேகப்படுத்துகின்றன.

திட்ட ஆணையம், நிதி அயோக் என்று பெயர் சூட்டப்பட்டது. அது மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் வருவாயை 32%இல் இருந்து 42% ஆக உயர்த்தினாலும் நடைமுறையில் வருவாய்ப் பகிர்வு 30%-35%ஐ கடக்கவில்லை. பல ஆயிரம் கோடிகள் வருவாய்ப் பாக்கித் தொகைக்காக மாநிலங்கள் போராடும் சூழலே நிலவுகிறது.

அதிகார எல்லைகளிலும் மாநிலங்களைக் கைப்பாவை ஆக்கித் தங்கள் அரசியல் வளர்ச்சிக்கும் அதிகாரக் கட்டமைப்பிற்கும் பயன்படுத்த பா.ஜ.க திட்டமிடுகிறது. கலைஞர் ஆட்சி செய்த 2011 வரை, ஆளுநர் நியமனம் மாநில அரசின் கலந்துரையாடலோடுதான் நடந்துள்ளது. அதன் பின்னர் 2014 முதல் நடைபெற்ற நியமனங்கள் எதேச்சதிகாரமாக நடைபெறத் தொடங்கி உள்ளன. புதுச்சேரியில் ஆளுநராக நியமிக்கப்பட்ட கிரண்பேடி மாநில நிர்வாகத்தில் நித்தம் நித்தம் தலையீடு செய்ததும், இணை அரசாங்கமே நடத்தியதும் அதைத் தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பதவி இழந்ததும் நாம் அறிவோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசைக் கொச்சைப் படுத்தும் முயற்சி இது.

தமிழ்நாட்டில் புதிதாகப் பதவியேற்ற தி.மு.க அரசின் செயல்பாடுகளைப் பார்த்து விரலசைக்கக் கூட முடியாமல் இருந்த பன்வாரிலால் புரோகித்தை இடம் மாற்றி, புதிய ஆளுநரை நியமித்தது ஒன்றிய அரசு. அவரும் வந்த ஜோரில் சில அதிகாரத் தலையீடுகளைச் செய்து பார்த்தார். பின்னர் ஆளும் தி.மு.க அமைச்சரவையின் தன்மை உணர்ந்து வாலைச் சுருட்டிக் கொண்டார். ஒரு நல்ல ஆட்சியில் ஆளுநர் பதவி என்பது அலங்காரப் பதவி மட்டுமே என்பதைச் சொல்லாமல் சொன்னது ஆளும் தி.மு.க அரசு.

கடந்த மாதத்தில், பதவியேற்ற சில நாட்களிலேயே மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி. அவருடைய மாற்றலுக்கு எதிராக எழுந்த கண்டனக் குரல்களும், அவருடைய பிரிவு நாள் பேச்சும் அவர் தமிழ் மக்களை நேசிக்கத் தொடங்கி இருந்ததையும், அதனால் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் சேர்த்தே சொல்கின்றன. நீதிமன்றங்களும் தங்கள் கைப்பாவையாக இருக்கவே இந்த மாற்றல் ஆயுதங்களைக் கைக் கொள்கிறது ஒன்றிய அரசு.

புதிய கல்வித் திட்டம், உதய் மின் திட்டம், ஸ்வச் பாரத் எனும் தூய்மைப் பணி, உஜ்வாலா எரிவாயுத் திட்டம், ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டம் ஆகியத் திட்டங்களை நேரடியாக ஒன்றிய அரசு அறிவிப்பதும், அதற்காக உடனடியாக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுவதும், அதை பா.ஜ.கவின் அடிபொடிகள் சிரமேற்கொண்டு மக்களிடையே பரப்புவதும் மாநில சுயாட்சியின் கட்டமைப்பைச் சிதைத்து நேரிடையாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் அத் துறைகளைக் கொண்டு வரும் முயற்சிகளே!

மாநில மற்றும் கூட்டுப் பொறுப்பில் இருக்கும் விவசாயக் கொள்கை முடிவுகளை மாநிலங்களைக் கலக்காமல், விவாதத்துக்குக் கூட உட்படுத்தாமல் அவசர அவசரமாகத் திணித்தது; 10% இட ஒதுக்கீட்டைப் பின்பற்றச் சொல்லி மாநிலங்களுக்குப் புற வழியாக அழுத்தம் கொடுப்பது; அதிகாரக் கட்டமைப்பின் வழி நேர்மையற்றுப் புகுத்த முனைவது; புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஆகியவை, போராடிய விவசாயிகளின் மீது ஏறிய டிராக்டரைப் போன்று வன்மையானவை; அச்சுறுத்துபவை; மாநில அரசின் அதிகார மூச்சை நிறுத்திவிடும் துணிபு கொண்டவை.

முதலமைச்சர்களின் கூட்டம் என்றால் அதில் ஸ்டாலின் கண்டிப்பாக மாநில சுயாட்சி குறித்த கேள்விகளை எழுப்புவார் என ஊடகங்கள் எழுதித் தீர்க்கின்றன. அவைத் தலைவர்களின் மாநாட்டில் பங்கு பெற்ற தமிழ்நாடு பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள் ஆளுநரின் ஒப்புதலுக்குக் கால நிர்ணயமும், ஜனாதிபதியின் திருப்பி அனுப்பலுக்குக் காரணமும் கட்டாயமாக்கப் பட வேண்டும் என்றக் கோரிக்கையை வைக்கிறார்.

இது தமிழ்நாடு. விடுதலைக் குரலை சுயாட்சியின் குரலாக நாட்டின் ஒற்றுமை கருதி குறைத்துக் கொண்ட, தியாகத் தீரர்கள் பக்குவப் படுத்திய மண். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இரண்டாவது பெரிய மாநிலமாக தங்கள் உழைப்பையும் வரியையும் இன்னும் இயற்கை வளங்களையும் நாட்டின் வளர்ச்சிக்குக் கொட்டியும் விட்டும் கொடுக்கும் மாநிலம். சுயாட்சியின் குரல்வளையும் நெரிக்கப் படுவதை ஒரு போதும் நாம் பார்த்துக் கொண்டிருக்க இயலாது. 1969ல் பி.வி.ராஜமன்னார் குழு அமைத்து, 1974ல் மாநில சுயாட்சிக்கான வெள்ளை அறிக்கையைத் தாக்கல் செய்த ஆட்சி இது.

மீண்டும் ஒரு அடிமைத் தனத்தைப் புகுத்தி இந்த நாட்டை ஒற்றைத் துருவ அரசியல் பண்பாட்டுத் தேசமாக்க முனையும் பாரதிய ஜனதாவின் அரசியல், தமிழ்நாட்டின் சீரிய தலைமையின் கீழ் தவிடுபொடியாக்கப்படும்.

- சாரதாதேவி

Pin It