குரங்கு கைப் ப+மாலையாகத் தமிழ்நாட்டுக் குழந்தைகளின் கல்வி செயலலிதா கையில் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. பள்ளிகள் திறந்து இரண்டு மாதமாகியும் பாடப் புத்தகங்கள் இல்லாத கொடுமை முதன்முதலாக இப்போதுதான் நிகழ்ந்துள்ளது. கருணாநிதியின் பால் கொண்ட பகைமை உடனடிக் காரணம் என்றாலும், சமச்சீர் கல்விக்கு எதிரான பார்ப்பனியச் சிந்தனையே அடிப்படைக் காரணம்.

       சமச்சீர்மை இல்லாத சாதியச் சமூகம்தான் வரலாற்று வழியில் சமச்சீற்ற கல்விமுறைக்கு அடிப்படை. சமூகத்தில் நால்வருணம், கல்வித் திட்டங்களில் நால்வகை என்பது தற்செயல் ஒற்றுமை அன்று. சாதிய சமூகத்துக்கே உரிய கல்வியுரிமை மறுப்பின் இக்கால வெளிப்பாடுதான் வேறுவேறான கல்வித் திட்டங்கள்.

       தமிழ்நாட்டில் தமிழே கல்வி மொழியாக இருக்க வேண்டும் என்பதைத் தமிழ்ப் பற்று சார்ந்தும் சமூகநீதி சார்ந்தும் வலியுறுத்திய தமிழ் அமைப்புகள், தமிழ்த் தேசிய இயக்கங்கள், கல்வியாளர்களின் விடா முயற்சிக்குக் கிடைத்த வெற்றிதான் திமுக ஆட்சிக்காலத்தில் சமச்சீர் கல்விக் குழு அமைக்கப்பட்டதும், அதன் அறிக்கையைத் தொடர்ந்து பொதுப் பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதும் ஆகும்.

       பாடத்திட்டம் பொதுவானாலும், தமிழைப் பயில் மொழியாகக் கற்பதைக் கட்டாயமாக்கியிருப்பது சமச்சீர் கல்விக் குழு அறிக்கையில் ஒரு முன்னேற்றம். ஆனால் தமிழ் வழிக் கல்வியை அனைத்துப் பள்ளிகளுக்கும் கட்டாயமாக்க வில்லை என்பதும், ஆங்கில மொழிக் கல்வி எவ்வகுப்பு வரை கூடாது என வரையறுக்கவில்லை என்பதும் பெருங்குறைகள்.

       சமச்சீர் கல்விக் குழுவின் படிநிலைகளில் ஒன்றுதான் பொதுப் பாடத்திட்டம். சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதற்கான வேறு பல பரிந்துரைகளும் உள்ளன.மாநில அரசின் கீழ் உள்ள பள்ளிகள் மட்டுமல்ல, மையக் கல்வி வாரியப் பள்ளிகள், சர்வதேசப் பள்ளிகள் போன்றவையும் உள்ளன. இவற்றையும் சமச்சீர் கல்விக்குள் கொண்டுவர வேண்டும். இதற்காக இந்திய அரசுக்குள்ள கல்வித்துறை அதிகாரத்தைப் பறிக்க வேண்டும். அனைவர்க்கும் கல்வி, அனைத்தும் தமிழில் என்று ஈரோடு கல்வி மாநாட்டில் (2006) நாம் கொடுத்த முழக்கம் நிறைவேறும் வரை சமச்சீர் கல்விக்கான போராட்டம் தொடரவேண்டும்.

       சமச்சீர் கல்விக்கான போராட்டம் தமிழுக்கும் சமூகநீதிக்குமான போராட்டம் என்ற தொலைநோக்குப் பார்வை வேண்டும். சின்னஞ்சிறு வெற்றிகளில் மனம் மயங்கி ஓய்ந்து விடலாகாது.