எதிர்பார்த்ததைப் போலவே தமிழ்ப்புத்தாண்டு மீண்டும் சித்திரை முதல்நாளுக்கு மாறியிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களால் சித்திரை முதல் நாள் ‘கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு’ வந்த தமிழ்ப் புத்தாண்டு நாள் கடந்த தி.மு.க., ஆட்சியில் தமிழர் திருநாளான தை முதல் தேதிக்கு மாற்றப்பட்ட போதே பலருக்கும் அது உவப்பானதாக இல்லை. காலம் காலமாக கொண்டாடப்பட்ட தமிழ்ப் புத்தாண்டு தினத்தை எப்படி மாற்றலாம் என்று கேள்வி எழுப்பினார்கள்.

குறிப்பாக அ.தி.மு.க.,வால் இதனை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஜெயா டிவியில் சித்திரை முதல்நாளன்று தமிழ்ப் புத்தாண்டு தின சிறப்பு நிகழ்ச்கிகள் வழக்கம் போல் ஒளிபரப்பாயின. ஜெயா டிவி மட்டுமின்றி மற்ற டிவிக்களும் சிறப்பு நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒளிபரப்பியே வந்தன. தமிழ்நாட்டு மக்களுக்கு விழாக்களும் பண்டிகைகளும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குள் தொலைந்து போய் வெகுகாலமாகி விட்ட நிலையில் கலைஞர் டிவியும் இந்த வாய்ப்பை நழுவ விட விரும்பவில்லை. விடுமுறை தினத்தில் கிடைக்கும் விளம்பர வருவாயை இழக்க விரும்பாமல் தன் பங்குக்கு சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது. ஆனால் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் என்று குறிப்பிடாமல் சித்திரை திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் என்று கூறித் தன்னுடைய வணிக நோக்கத்தை நியாயப்படுத்திக் கொண்டது.

தேர்தலையடுத்து எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நிகழும் பல மாற்றங்களின் தொடர்ச்சியாக தமிழ்ப் புத்தாண்டு தினமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தை முதல் நாளுக்குப் பதிலாக சித்திரை முதல் நாளை இனி தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான மசோதா செவ்வாயன்று சட்டசபையில் ஒரு சில உறுப்பினர்களின் எதிர்ப்புடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சித்திரை முதல்நாள்தான் தமிழர்களின் புத்தாண்டு என்பதை ஜோதிடம் மற்றும் வான சாஸ்திர தகவல்களின் ஆதாரங்களுடன் சட்டசபையில் நிறுவினார் முதல்வர் ஜெயலலிதா.

தமிழ்ப் புத்தாண்டு நாளை முடிவு செய்வதில் ஊடாடும் அரசியலை ஒதுக்கிவிட்டு உண்மையில் தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டம் குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம். புதிய ஆண்டைக் கோலாகலமாகக் கொண்டாடும் பழக்கம் ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னர் நம்நாட்டில் அதிகரித்து வந்துள்ளது. என்றாலும் அதற்கு முன்னரே புத்தாண்டு கொண்டாடும் மனப்பாங்கு தமிழர்களுக்கு இருந்து வந்தே உள்ளது.

தை மாத முதல்நாளைப் பொங்கல் தினமாகக் கொண்டாடுவது தமிழர்களின் மரபு. விவசாயத்தை மையப்படுத்திய தமிழ்நாட்டில் பங்குனி மற்றும் தை மாதங்கள் அறுவடைக் காலம். அறுவடை என்பது விவசாயச் சமூகத்தில் மகிழ்ச்சியான ஒரு நிகழ்வு. ஆண்டு முழுவதும் வயலில் பட்ட கஷ்டங்களுக்கான பலன் கிடைக்கும் காலம்தான் அறுவடைக்காலம். எனவே இதன் அடையாளமாக தைப்பொங்கல் எனும் பெரும் விழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.

தற்போதும் விவசாயத்துக்குத் தொடர்பில்லாத பெருநகரங்களில் ஒரு நீண்ட மரபின் எச்சமாக பொங்கல் கொண்டாடப்பட்டே வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட விவசாய உற்பத்தி முறையை அடிப்படைப் பொருளாதாரமாகக் கொண்ட பல்வேறு மாநிலங்களில் அறுவடைத் திருநாள் என்பது கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்ற ஒன்று.

வயலில் முதலீடு செய்த செல்வம் மற்றும் உழைப்புக்குத் தகுந்த பலன் கிடைக்கும் மாதம் தை மாதம். இதனால் விவசாயச் சமூகங்களில் அறுவடைக் காலம் என்பது ஒரு மாற்றத்தின் அடையாளம். துன்பங்களும் கவலைகளும் நீங்கி அவர்களுக்கு மகிழ்ச்சிக்கான காலகட்டமாக இந்த அறுவடைக்காலம் விளங்கி வந்துள்ளது. எனவே அறுவடைக்காலத்தின் முதல் நாளை புதிய மாற்றத்துக்கான தொடக்க நாளாக அவர்கள் பார்த்து வந்துள்ளனர்.

எனவேதான் தமிழர்கள் அறுவடையின் தொடக்க நாளான தை முதல்நாளை பொங்கல் தினமாகக் கோலாகலமாகக் கொண்டாடியுள்ளனர். அந்த வகையில் பார்த்தால் தை முதல் நாளை புத்தாண்டு கொண்டாடும் உணர்வுடன்தான் கொண்டாடி வந்துள்ளனர்.

தைப்பொங்கலுக்கு முதல் நாளை போகிப் பண்டிகையாகக் கொண்டாடுவதும் தமிழர்களின் ஒரு மரபு. இந்த நாளில் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து அழிப்பது ஒரு முக்கியச் சடங்கு. அதாவது அந்த ஆண்டு முழுவதும் தங்களுடைய வாழ்வில் இருந்த துன்பங்களும் கவலைகளும் நீங்கும் நாளாக மார்கழி கடைசி நாளை போகி என்ற பெயரில் கொண்டாடியுள்ளனர்.

வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிப்பது அல்லது அழிப்பது என்பது ஒரு புதிய தொடக்கத்துக்கு தயாராகும் கொண்டாட்டமாகும். மார்கழி இறுதி நாளை ஒரு காலச் சுழற்சியின் கடைசி நாளாகவும் அதற்கடுத்த தை முதல்நாளை தொடக்க நாளாகவும் மக்கள் நம்பி வந்துள்ளனர்.

பொங்கலுக்கு முன்னர் வீட்டில் உள்ள பழையனவற்றை கழிப்பது மட்டுமின்றி வீட்டையே புதுப்பிப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. தை முதல் நாளுக்கு முன்னதாக வீட்டை சுத்தம் செய்து, வெள்ளையடித்து வைப்பது தமிழர்களின் வழக்கம். வீட்டை புதுப்பிப்பது புதிய மாற்றத்தை வரவேற்பதற்காகச் செய்யப்பட்ட சடங்குமுறை.

பொங்கல் என்பதே புதுமையை வரவேற்கும் திருநாள்தான். புத்தாடை அணிந்து, புதுப்பானையில் புது அரிசியை இட்டுப் பொங்கவைப்பது பொங்கல் நாளின் முக்கிய நிகழ்வு. அன்றைய தினத்தில் எல்லாமே புதிதாக இருக்க வேண்டும் என்பது தமிழர்களின் நம்பிக்கை சார்ந்த நடைமுறை.

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது தமிழ் மக்கள் வாழ்வில் ஒன்றிணைந்து விட்ட ஒரு வழக்கு. ஆங்கிலத்தில் புத்தாண்டு தினத்தன்று ‘ஹேப்பி நியூ இயர்’ என்று வாழ்த்துவது நம் எல்லோருக்கும் பழகி விட்ட ஒன்று. இந்த வாழ்த்துத் தொடரின் அர்த்தம் ‘பிறக்கப் போகும் புதிய ஆண்டு உன்னுடைய துன்பங்களை நீக்கி புதிய இன்பங்களைக் கொண்டு வரட்டும்’ என்பதே. 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்னும் தொடரிலும் இதே பொருண்மை அடங்கியிருக்கிறது. ‘இது வரை நீ பட்ட துன்பங்கள் எல்லாம் மறைந்து இந்த தை மாதம் பிறந்தால் உனக்கு புது வாழ்வுக்கான நல்ல வழி பிறக்கும்’ என்பதே அதன் பொருள். அந்த வகையில் பார்த்தால் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பதே ஒரு புத்தாண்டு வாழ்த்துதான். ஈழத்தமிழர்களும் தை முதல் நாளையே புத்தாண்டாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

சோழர்கள் காலத்தில் தமிழர்கள் சூரியனை வழிபட்டு அதன் அடிப்படையிலான நாட்காட்டியைப் பின்பற்றினர். சூரியன் நகருவதால் ஏற்படும் நிழலை அங்குலம் அங்குலமாகக் கணக்கிட்டே சோழர்கள் நாட்காட்டியை நிர்ணயித்தார்கள். சூரியன் வடக்கில் ஆறுமாத காலமும் தெற்கில் ஆறுமாத காலமும் வலசை செல்லும் தன்மை கொண்டது. தமிழ் இலக்கியங்கள் இதை வட செலவு, தென் செலவு என்று குறிப்பிடுகின்றன. அதன்படி மார்கழி மாதத்தின் அமாவாசை முடிந்த மூன்றாம் நாள் மாலை பிறை தெரியும். அதற்கு மறுநாள்தான் தை முதல் நாள். ராஜராஜ சோழன் சதயம் தொடங்கி பூசம் வரை 12 நாட்கள் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடினான். 12ஆம் நாள் முழு நிலவுடன் தைப்பூசத் திருவிழா நடைபெறும். அதன் பெயர் 'ஆட்டைத் திருவிழா'. இதற்கான ஆதாரங்கள் தஞ்சாவூர் பெரிய கோயில் ராஜராஜன் திருவாசல் கல்வெட்டிலேயே இருக்கின்றன.

சித்திரை முதல்நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுவது ஆரியர்களின் வழக்கம் என்பது பல ஆண்டுகளாக முன்மொழியப்பட்டு வந்துள்ள வாதம். ஆண்டுகளை 60 ஆகப் பிரித்து அவை ஒவ்வொன்றும் தொடங்கும் மாதமாக சித்திரை மாதத்தைக் குறிப்பிடுவது அவர்களின் மரபு. அதனால்தான் சித்திரை முதல்நாளை புத்தாண்டாகக் கொண்டாடும் வழக்கத்தை உண்டாக்கியுள்ளனர். தீபாவளி கொண்டாடுவதைப் போன்றே தமிழ் மக்களும் இதை ஏற்றுக் கொண்டு கொண்டாடி வந்துள்ளனர்.

பிரபவ, விபவ, சுக்கில என்று தொடங்கி அக்ஷய வரையிலான இந்த அறுபது ஆண்டுகளும் வடமொழிப் பெயர்களையே கொண்டுள்ளன. இந்த ஆண்டுகளின் பிறப்பு குறித்துச் சொல்லப்படும் புராணக்கதை மிகவும் ஆபாசமானது. இப்படி ஒரு கதை குறித்த ஆதாரம் பழமையான இலக்கியங்களில் எதுவும் இல்லை. அபிதான சிந்தாமணி எனும் வடமொழிச் சார்புடைய நூலில்தான் இந்தக் கதை கூறப்பட்டுள்ளது. ஆண்டுப் பெயர்கள் மட்டுமின்றி, சித்திரை முதல் பங்குனி வரையிலான மாதங்களின் பெயர்களும் (ஒன்றிரண்டைத் தவிர) வடமொழியிலேயே அமைந்துள்ளன. எனவே சித்திரை மாதமே ஆண்டின் தொடக்க மாதம் என்று கூறுவது தமிழ் மரபாக இருக்க முடியாது.

சித்திரை முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடும் வழக்கம் ஆரியர்கள் கொண்டு வந்தது. அதனை மக்களிடம் பழக்கப்படுத்தியவர்கள் நாயக்கர்கள். நாயக்கர் காலத்திற்குப் பின்னர்தான் சித்திரை மாதம் விழாக்களின் மாதமாக முக்கியத்துவப்படுத்தப் பட்டுள்ளது. அந்த வகையில் சித்திரை முதல் நாளில் புத்தாண்டு கொண்டாடும் பழக்கம் தமிழர்களிடம் திணிக்கப்பட்ட ஒன்று.

இதனை எதிர்த்து தை முதல்நாளை தமிழர்களின் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என்று மறைமலை அடிகள் உள்ளிட்ட பல்வேறு தமிழறிஞர்கள் ஆண்டாண்டு காலமாக குரல் கொடுத்து வந்துள்ளனர்.

'நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் கற்பித்ததே
அறிவுக் கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல்நாளே
தமிழ்ப் புத்தாண்டு'

என்றார் பாரதிதாசன். தை முதல்நாளைப் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த ஆட்சியின்போது எழுப்பப்பட்டு நிறைவேற்றப்பட்டதல்ல. ஆனால் தற்போதைய அரசு, கடந்த தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட ஒரே காரணத்துக்காக தமிழ்ப் புத்தாண்டை மீண்டும் சித்திரை முதல்நாளுக்கு மாற்றியுள்ளது. இனி அடுத்து தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மீண்டும் புத்தாண்டு தினம் மாற்றியமைக்கப்படும். ஆக, ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் வேறு வேறு தேதிகளில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட வேண்டிய நிலை உருவாகிவிட்டது.

அரசின் தற்போதைய அறிவிப்புக்கு கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரசியல் கட்சிகளும், அறிஞர்களும் தமிழ்ப் புத்தாண்டு மாற்ற அறிவிப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலவிதமான வாதங்களை முன்வைக்கின்றனர். ஆனால் தமிழ் மக்களுக்கு இந்த விசயத்தில் எந்தக் குழப்பமுமே இல்லை. இதைப் பற்றி அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. ஆண்டுதோறும் ‘ஹேப்பி நியூ இயர்’ சொல்ல அவர்களுக்கு ஜனவரி 1 இருப்பதால்...

Pin It