காந்தியுடன் பெரியார் உரையாடலை நடத்தினார். “இந்து மதத்தை திருத்தலாம் என்று கூறுகிறீர்கள். ஆனால், அதை பின் வருபவர்களும் செய்வார்களே, நீங்கள் அவர்களுக்கு (பார்ப்பனர்கள்) ஆதரவாக இருக்கும் வரை விட்டு வைத்திருக் கிறார்கள். கொஞ்சம் எதிராக திரும்பினாலும்கூட விட்டு வைக்க மாட்டார்கள்” என்று பெரியார் 1927இல் கூறினார். பின் அதுதான் நடந்தது. அப்படிப்பட்ட இந்து மதத்தின் மீது வருகிற கோபம், அதன் பின் வரும் காலங்களில் இந்து மதத்தின் தீமைகளை, சூழ்ச்சிகளை பதிவு செய்து வருகிறார். அரசியல் சட்டத்திலும் புகுந்து கொண்டதே என்றெல்லாம் கோபித்துக் கொண்டார். அதை யொட்டித்தான் சட்ட எரிப்புப் போராட்டத்தையே நடத்துகிறார். இதை காரணமாக வைத்து சிலர் அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் இடைவெளி ஏற்படுத்த முயலுகிறார்கள். “அம்பேத்கர் எழுதிய சட்டத்தை பெரியார் எப்படி எரிக்கலாம்” என்று கேட்கிறார்கள். அம்பேத்கரே எரிக்கப் போகிறேன் என்று 1953இல் கூறினார். பெரியார் 1957இல் எரித்தார். ஆந்திரா பிரிவினையின்போது விவாதம் நடைபெறுகிறது. அப்போது அம்பேத்கரைப் பார்த்து “நீ தானே எழுதினாய்” என்று பலர் கேட்கிறார்கள். அம்பேத்கர் அப்போது கூறினார் “ஆம் நான் தான் எழுதினேன். உங்களுக்கு இதே வழக்கமாகப் போய் விட்டது. அதை எரிக்கப்போகிற முதல் ஆளும் நான் தான்” என்று 1953 இல் மாநிலங்களவையில் பதிலளித்தார்.
1954 இரங்கூன் புத்த மாநாட்டின் போது பெரியாரிடம் அம்பேத்கர் கூறினார், “I was holding the pen, it was moved by the Brahmins” (நான் பேனாவை மட்டும் தான் பிடித்தேன், பார்ப்பனர்கள் தான் அசைத்தார்கள்) என்று கூறினார். தனது விருப்பத் துக்கு மாறாக எழுதப்பட்டதை தெரிவிக்கிறார்.
விருதுநகர் மாநாட்டை குறிப்பிட்டேன். அதில் தான் மத ஒழிப்பு தீர்மானத்தை கொண்டு வந்ததாக வும் கூறினேன். அதே மாநாட்டில் தான் “பழக்க வழக்கம்” என்ற சொல் இருக்கக் கூடாது என்பதையும் பெரியார் தீர்மானமாக கொண்டுவருகிறார். ஆனால் அப்போது சட்டம் எழுதப்படவில்லை. அப்போது காங்கிரஸ்காரர்கள் ‘பிரஜா உரிமை திட்டம்’ என்ற ஒன்றை எழுதினார்கள். மோதிலால் நேரு கமிட்டி எழுதியது. இறுதியாக 1931இல் நடைபெற்ற ‘கராச்சி காங்கிரஸ் மாநாடு’ அதை ஏற்றுக் கொண்டது. அதைப் பற்றி மூன்று தலையங்கங்கள் “கராச்சி மாநாடு” என்று ‘குடிஅரசு’ பத்திரிகையில் பெரியார் எழுதுகிறார். அதில், “ஒன்று பிறர் மனம் புண்படக் கூடாது, அடுத்து பழக்க வழக்கத்தை புகுத்தி விட்டான், மூன்றாவது சிறுபான்மை மக்களின் மொழியை கலாச்சாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்கிறான். இங்கே சிறுபான்மை மதம் என்று கூறவில்லை. சிறுபான்மை மக்கள் என்கிறான். சிறுபான்மை மக்கள் என்றால் பார்ப்பானை குறிக்கும்” என்கிறார் பெரியார்.
மூன்றாம் மாதம் கராச்சி மாநாட்டிற்கு மறுப்பு மாநாடாகத் தான் விருதுநகர் மாநாட்டை பெரியார் நடத்துகிறார். அரசியல் சட்டத்தில் இடம் பெற்றிருந்த அந்தப் பிரிவுகளைத் தான் 1957இல் எரித்தார். இன்று வரை அர்ச்சகர் உரிமைக்கு கூட பழக்க வழக்கம் என்பதைத் தான் கூறுகிறார்கள். பழக்க வழக்கம் என்பது, “எழுதப்பட்ட சட்டத்தை விட உயர்வானது” என்று எழுதியிருந்தது. இதைத் தான் எரித்தார். எனவே 1932க்குப் பிறகு இருவரும் தீவிரமாக மதத்தை விட்டு வெளியேறுவதை பேசுகிறார்கள். பெரியார் வேறொரு மதத்திற்கு செல்லும்போது இஸ்லாமை பரிந்துரைக்கிறார்.
பௌத்தம் என்பது ஏறக்குறைய இந்து மதம் போன்றே உள்ளது. அம்பேத்கர் மதம் மாறுவதாக அறிவித்த போது கூட “குறைவான ஆட்களுடன் செல்ல வேண்டாம். இலட்சம் பேருடனாவது செல்லுங்கள். அப்போது தான் மதிப்பார்கள்” என்று பெரியார் கூறினார். யாருக்காக மதமாற்றத்தை பரிந்துரைத்தார்? ஜாதிக் கொடுமைகளால், தீண்டாமைக்குள்ளாக்கப்பட்டு, தெருவில் நடக்க தடை விதிக்கப்பட்டிருப்பவர் களுக்கு இஸ்லாத்தை பரிந்துரைத்தார். கடவுள் மறுப்பையும் அந்த புள்ளியில் இருந்து தான் பார்க்கிறார். கடவுள் மறுப்பை மற்றவர்கள் பார்ப்பதற்கும் இவர் பார்த்தற்கும் வித்தியாசம் உண்டு. ஸ்டீபன் ஹாக்கின்ஸ் போன்ற விஞ்ஞானிகள் அறிவியல் ரீதியாக கடவுள்களை மறுத்தனர். ஆனால் பெரியார் அப்படி கூறவில்லை.
“மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது; கண்ணில் படக்கூடாது; தெருவில் நடக்கக் கூடாது; கோயிலுக்குள் போகக் கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்பதைப் போன்ற கொள்கைகள் தாண்டவமாடும் ஒரு நாட்டை பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலை யின் நெருப்புக் குழம்பால் எரிக்காமலோ; சமுத்திரத் தால் மூழ்கச் செய்யாமலோ, பூமிப் பிளவில் அமிழச் செய்யாமலோ விட்டிருப் பதைப் பார்த்த பிறகுங்கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் சர்வ தயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்” இவ்வளவு கொடுமைகளை பார்த்தும் கடவுள் என்பவர் இருக்கிறார் என்பதை எப்படி நம்ப முடியும் என்று தான் கேட்கிறார்.
இப்படித்தான் பெரியார் கேள்வி கேட்டார். இப்படிப்பட்ட கடவுள் மறுப்பைத் தான் பெரியார் பேசினார். சமூக சமத்துவத்திற்குத் தடையாக இருக்கிற கடவுளை மறுங்கள் என்பது தான் பெரியார் கூறியது. அப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் இங்கே இருக்கக்கூடிய மதம் ஜாதிக் கொடுமைகளை நிகழ்த்தாமல் இருந்திருந்தால் அவர் கடவுள் மறுப்பை பேசாமல் தான் இருந்திருப்பார் என்பது தான் எனது கருத்து. “ஜாதியும் மதமும் ஒன்றி விட்டது என்றால் இரண்டையும் தான் எரிப்பேன், இல்லை இல்லை மதம் கொடுமைகளை நிகழ்த்தவில்லை என்றால் பிரித்து விடுங்கள் ஜாதியை மட்டும் எரிக்கிறேன். இல்லை இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது என்றால் இரண்டையும் தான் எரிப்பேன் என்றார். இல்லை இல்லை மதம் சாஸ்திர, சம்பிரதாயங்களுடன் இணைந்தது என்றார்கள். அப்போ மதம், சாஸ்திரங்களை பிரித்துவிடு என்றார். இல்லை இல்லை மதம், சாஸ்திரம், ஜாதி அனைத்தும் பிரிக்க முடியாத அளவிற்கு இணைந்தே உள்ளது. என்றனர். அப்போது நான் என்ன செய்ய முடியும் நான் வைக்கும் தீயில் அதுவும் சேர்ந்து தான் எரியும் என்றார். இல்லை இல்லை கடவுளும் இதனுடன் இணைந்தவர் என்றனர். எனவே கடவுள் புனிதமானவர் என்றால் அவரையும் தனியாக பிரித்து விடு, ஜாதியுடன் பிரிக்க முடியாத வேதம், மதத்தை எரிக்கிறேன் என்றார். கடவுளும் இதனுடன் சேர்ந்திருந்தார் என்றால் அவரை சேர்த்து அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்றார்.
ஜாதி இருக்கும், நான் இழிவுபடுத்தப்படுவேன், அவருக்கு சக்தி உண்டு ஆனால் விருப்பமில்லை என்றால் அந்தக் கடவுள் எனக்கு எதற்கு? இப்படிப்பட்ட வாதங்களைத் தான் பெரியார் வைத்துக் கொண்டு வந்தார். இதில் அவருக்கு என்ன நோக்கம் இருந்திருக்க முடியும் ஜாதி ஒழிப்பைத் தவிர? பெரியாரின் இலட்சியமாக, ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, பொதுவுடமை, தனித்தமிழ்நாடு இவைகளைத்தான் நான் கூறுவேன். கடவுள் மறுப்பு அவரது இலட்சியமில்லை. ஜாதியை ஒழிக்க, சமத்துவத்தை நிலைநாட்ட கையில் எடுத்த ஆயுதங்களில் ஒன்று கடவுள் மறுப்பு. இப்படித்தான் கடவுள் மறுப்பை பெரியார் பேசினார். முதன்மையான நோக்கமோ, இலட்சியமோ அவருக்கு அது இல்லை.
பெண்ணுரிமையைப் பற்றி பெரியார் பேசுகிற போது, “ஜாதியைக் காப்பாற்றுவது பெண்ணடிமைத் தனம் தான்" என்று 1926இல் கூறுகிறார். அம்பேத்கர், இந்தியாவில் ஜாதிகள் என்ற நூலில் இதே கருத்தை 1916இல் கூறியிருக்கிறார். ஏன் பெண்ணை எரிக்கிறார்கள்? ஒரு ஆண் இறந்துவிட்டால், ஒரு பெண் அதிகமாக இருப்பார். ஒருவேலை அவர் வேறு ஜாதியில் திருமணம் செய்துவிடக் கூடாது என்பதற்காக. ஒருவர் கொல்வதற்கு மனமில்லை யென்றால் வீட்டில் அடைத்து வை. ‘நீ கெட்ட சகுனம் வெளியே செல்லக் கூடாது, சுவையில்லாத உணவை சாப்பிடு, நிறமில்லாத உடையை உடுத்திக் கொள், பாயில்லாத படுக்கையில் படு, வெளியே நடமாடாதே’ போன்று சிறையில் வைப்பது. அது மரண தண்டனை, இது ஆயுள் தண்டனை. ஒரு வேலை பெண் இறந்துவிட்டால், சமமான வயதில் பெண் கிடைக்கவில்லை என்றால், குழந்தையை திருமணம் செய்து வை, உன்னுடைய ஜாதியிலேயே செய்து வை. இதைத் தான் அம்பேத்கர், “உடன் கட்டை ஏறுதலானாலும், விதவைக் கொடுமை என்றாலும், குழந்தைத் திருமணம் என்றாலும் ஜாதியைப் பாதுகாக்கத்தான்” என்று அம்பேத்கர் 1916 இல் கூறினார். பெரியார் 1926 இல் தானே கூறினார். என்று கேட்பார்கள். அப்படிப் பார்க்க வேண்டாம் என்று நான் கருதுகிறேன். இருவரும் ஒரே சிந்தனையை கொண்டவர்கள். பாதையில் வேண்டு மானால் மாற்றம் இருந்திருக்கலாம். அது அவரவர் வாழ்ந்த சூழலைப் பொறுத்து மாறுபடும். காலம் தான் முடிவு செய்யும்.
இந்த புத்தகத்தில் நாடார்களைப் பற்றி ஒரு செய்தி சொல்கிறார். “ஒரு சமுதாயம் பூராவும் ஜாதி, மத, தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் என்று சொல்லும்படி இல்லை. தமிழ்நாட்டில் நாடார் சமூகத்தில் அநேகருக்கு ஜாதி, மத, தெய்வ நம்பிக்கை கிடையாது” என்கிறார். தற்போது நிலைமை அப்படியா இருக்கிறது. அவர் இந்த கருத்தை பேசுகிற காலத்தின் போது அப்படி இருந்தது. தற்போது இந்து முண்ணனி போன்ற இந்து அமைப்புகளில் நிறைய செயல்படுகிறார்கள். பேசப்படுகிற காலத்தின் சூழலைப் பொருத்திப் பார்க்க வேண்டும். பல செய்திகளில் தேதி குறிப்பிட மாட்டார்கள். அதனால் சூழல், காலத்தைப் பொருத்திப் பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டு விடுகிறது.
பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலில், பெரியார் முன்னுரையாக 1.1.1942 என்று இருக்கும். பல பேர் அந்த தேதியை வைத்து பெரியார் 1942இல் இதைப் பற்றி எழுதியிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டனர். ஆனால், அந்தப் புத்தகத்தில் இடம் பெற்ற கட்டுரைகளில், 1926 இல் முதல் கட்டுரை எழுதப்பட்டது. இறுதியான கட்டுரை 1931இல் முடிந்துவிட்டது. இந்த ஆண்டு களுக்குள் எழுதப்பட்டதுதான் ‘பெண் ஏன் அடிமையானாள்’.தேதி குறிப்பிடாத காரணத்தினால் 1942இல் தான் இது பெரியார் கருத்து என்று கருதிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளியிட்டபோது தேதியைக் குறிப்பிட்டு வெளியிட்டோம். கவிஞர் தம்பி வெளியிட்டபோதுகூட தேதியை குறிப்பிடுங்கள் என்று கூறினோம். இந்த காலகட்டங்களில் பெரியாரின் பார்வை இதுவாக இருந்தது என்று புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். அப்போது பெண் உரிமையை மட்டும் பேசுபவர்கள் இருந்திருப்பார்கள். இப்போது மானுட விடுதலை அதாவது பெண் விடுதலையையும் பேசுகிறோம்.
பெரியார் 1925இல் குடி அரசு ஏடு தொடங்குகிற போதே ஒன்றை எழுதினார். “இந்த குடி அரசு ஏடு தன் மதிப்பு, சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகளைக் கொண்டதாக நான் இந்த ஏட்டை நடத்துகிறேன்” என்று எழுதினார். பல பேர் கூறுவார்கள் தங்க பெருமாள் பிள்ளை தான் தலையங்கத்தை எழுதியதாகக் கூறுவார்கள். 1939இல் ‘நான் காயலாக இருந்த போது ஒரு தலையங்கத்தைத் தவிர மற்ற அனைத்தும் நான் தான் எழுதினேன்’ என்று பெரியார் குறிப்பிட்டிருக்கிறார். ‘தன் மதிப்பு’ என்பது அனைத்திலிருந்தும் விடுதலை என்பதாகப் பொருள் கொள்ள வேண்டும்.
தோழர் புனிதப் பாண்டியன் உரையின் போது, அம்பேத்கரின் சட்ட அறிமுக உரையைப் பற்றி குறிப்பிட்டார். அந்த உரையில் ஒரு செய்தியை அனைத்து இடங்களிலும் சொல்வதுண்டு, தற்போதும் குறப்பிட்டுவிட வேண்டும், அந்த உரை ‘We the people of India’ என்று தொடங்கும். ‘இந்திய மக்களாகிய நாம்’ என்று தான் தொடங்கும். ‘என்னுடைய அரசியல் நண்பர்கள், ஏன் இந்திய தேசத்தாராகிய நாம் என்று போடக்கூடாது?’ என்று என்னை கேட்டார்கள். நான் கூறினேன், “பல்லாயிரக்கணக்கான ஜாதிகளாக பிரிந்து கிடக்கிற நாம் எப்படி ஒரு தேசமாக முடியும் ? இனிமேல் தான் தேசமாகப் போகிறோம்” என்று கூறியதோடு அம்பேத்கர் நிறுத்தவில்லை. “Caste is Anti National” ‘ஜாதி தான் தேச விரோதமானது’ இந்திய நாடு ஒரு தேசமாக வேண்டுமென்றால் ஜாதி ஒழிய வேண்டும்”. அது இந்திய விடுதலைக்கும் பொருந்தும், தமிழ்நாட்டு விடுதலைக்கும் பொருந்தும்.
ஜாதியைப் பற்றிப் பேசாமலேயே பலர் தமிழ் தேசிய விடுதலையைப் பற்றிப் பேசுகிறார்கள். அப்படிப் பேச முடியாது, அப்படியே விடுதலை வந்தாலும் அது பயன்படவே பயன்படாது. தற்போதைய இந்திய விடுதலையைப் போலத்தான் இருக்கும். ஜாதி ஒழிப்பை இலக்காகக் கொள்ளாமல் நகரும் எந்த இயக்கமானாலும் அது வெகு மக்களுக்குப் பயன் தராது. நான் கூற வருவது என்னவென்றால் நான் கூறியது அனைத்தும் பட்டியலின மக்களுக்கு மட்டுமல்ல சூத்திர மக்களுக்கும் பொருந்தும். அனைவருக்கும் கோவில் நுழைவு இல்லை, கருவறை நுழைவு இல்லை. பெரியார் கூறுவார், ‘உனக்கும் அவனுக்கும் இரண்டு முழம் தான் வித்தியாசம். அவனை விட நீ இரண்டு முழம் தான் முன்னாடி நிற்கிறாய்’ என்பார். அதனால் தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமையைக் கேட்டார் பக்தனாவதற்கா அனைவரும் அர்ச்சகராகக் கேட்டார். சூத்திரனாக இருக்க மாட்டேன் என்ற மனித உரிமைக்காகக் கேட்டார். மதம் மாறச் சொல்வதும் அப்படித்தான் ‘மோட்சம் போகவா மதம் மாற சொல்கிறேன், இழிவு போக ஒரு பரிந்துரை’ என்று கூறுகிறார். அவர் விருப்ப மெல்லாம் மதமொழிந்த மதமற்ற மனிதர்களாக வாழ வேண்டும் என்பதுதான். சாத்தான்குளம் உரையில், "எல்லா மதமும் ஒழியும் போது இஸ்லாமும் ஒழிந்து போகும். அதுவரை தான் நான் கூறுகிறேன் அந்த மதத்திற்குப் போ' மதமற்ற சமுதாயத்தை பெரியார் விரும்பினார். ஆனால் மதாற்றத்தை பேசிக்கொண்டே செய்தார்.
ஒரு செயல்பாட்டாளனுக்கும் சிந்தனையாளனுக்கும் வேறுபாடு உண்டு. நான் சென்னைக்கு செல்ல வேண்டும் என்று செல்கிறவன். சென்னைக்கு செல்கிறவனை பார்த்து வேலூரில் ஏன் இருக்கிறாய் ? திருப்பெரும்பதூரில் ஏன் இருக்கிறாய் ? என்று கேட்பது சரியா ? சிந்தனையாளன் சென்னைக்கு செல்ல வேண்டும் என்று சிந்திக்கிறவன். செயல்பாட்டாளன் அதில் பயணிக்கிறவன். முதலில் வேலூர், பிறகு திருப்பெரும்பதூர் அதன் பிறகு தான் சென்னைக்கு செல்ல முடியும். அப்படியாகத் தான் பெரியாரின் மதமாற்றக் கருத்துக்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எதை செய்தாவது ஜாதியை ஒழித்து விட வேண்டும் என்று துடித்த தலைவர்கள் எதைச் சொல்லியாவது மக்களை நகர்த்திக் கொண்டே போனார்கள். இலட்சியத்தை சொல்லிவிட்டு அமைதியாக இருந்துவிடவில்லை. இலட்சியத்தை நோக்கி நம்மை நகர்த்திக் கொண்டே போனார்கள். அதில் ஒரு இடத்தை வைத்துக் கொண்டு பேசக்கூடாது. பலர் தற்போதும் மேடையில் ‘பெரியார் இன்றும் தேவைப்படு கிறார்’ என்று பேசுவார்கள். அப்படியென்றால் நாம் இன்னும் மதம், ஜாதி, பெண்ணடிமைத் தனத்தைப் பின்பற்றும் சமூகத்தில் தான் இருக்கிறோம். பெரியார் எதிர்பார்த்தார், ‘100 வருடம் கழித்து வரும் சமூகம் என்னை பிற்போக்குவாதி என்று கூற வேண்டும் என்று. இதையெல்லாம் பிரச்சாரம் செய்ய ஒரு கிழவன்இருந்திருக்கிறான் ' என்று கேலி பேசும் காலம் வரும் என்று எதிர்பார்த்தார். ஆனால் 100 ஆண்டு ஆகிவிட்டது. இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் அந்த காலம் வருமா என்று தெரியவில்லை. எனவே தேக்கமடைந்து இருக்கிறோம். அதைத் தான் இந்த புத்தகம் உணர்த்துகிறது.
நமது தலைவர்கள் என்ன வழியை கூறினார்கள் என்ற கடந்த காலத்தை இந்த புத்தகம் உணர்த்துகிறது. பெரியார் திருக்குறளைப் பற்றி கூறினார், 'திருக்குறளில் உள்ள அனைத்தும் சரி என்று நான் கூற வரவில்லை, ஒரு கடை இருக்கிறதென்றால் அதில் உனக்குத் தேவையானது உள்ளதே தவிர அனைத்து பொருளும் உனக்கு பயன்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை" என்று கூறுவார். அப்படி பெரியாரின் சிந்தனைகளை தொகுத்து அளித்திருக்கிறார்கள். அதை படிப்பதோடு நிறுத்தி விடாமல் அந்த சிந்தனையை நோக்கி நகருவதற்கோ, நகர்த்துவதற்கோ முன் வர வேண்டும் என்ற வேண்டுகோளோடு உரையை முடிக்கிறேன்.
- கொளத்தூர் மணி
(குடியாத்தம் நவம். 07, 2021இல் நடந்த நூல் ஆய்வுக் கூட்டத்தில் ஆற்றிய உரை)